WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,830
Date uploaded in London – – 11 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
தமிழ் என்னும் விந்தை!
ஒரு பாடலில் ஏழு பாடல்கள்! (சப்தபங்கி)
ச.நாகராஜன்
ஒரு பாடலில் ஏழு பாடல்கள் வருமாறு ஒரு பாடலை இயற்றுவது எவ்வளவு கடினமான காரியம்!
இதைச் சாதித்துக் காட்டியவர் இராமச்சந்த்ர கவிராயர்!
இந்த வகைப் பாடலுக்கு சப்தபங்கி என்று பெயர்
திமிர மறாத புலாதிகளே தரு தேடரிதாய் மாருஞ்
செனனமகாமால் வசமேமதமுறு சிறுமையின் மதியாலே
குமரசிகாமணி யேகனிவாயருள் கூடெனவே கூறும்
குருபர கோலா கலனேவிதியொடு குறுகிய மிடிதீராய்
நமதுவிநாயக தேவச கோதர நாடொறுமே தேறும்
நவிமகள்சேர்வே டுவனேபுதுமண நறுமலர் புனைமார்பா
அமரர்பிரானருள் குஞ்சரிகோள்புண ராடவனே மீறும்
அரகரவேலா யுதனேமுதுமறை யறுமுக முருகோனே
திமிர மறாத புலாதிகளே தரு தேடரிதாய் மாருஞசெனன மகாமால் வசமே- மதமுறு- சிறுமையின்
மதியாலே
குமரசிகாமணி யேகனிவாயருள் கூடெனவே
கூறும் குருபர கோலா கலனே விதியொடு குறுகிய மிடிதீராய்
நமதுவிநாயக தேவச கோதர நாடொறுமே
தேறும் நவிமகள்சேர்வே டுவனே-புதுமண நறுமலர் புனை மார்பா
அமரர்பிரானருள் குஞ்சரிகோள்புணர் ஆடவனே
மீறும் அரகரவேலா யுதனேமுதுமறை யறுமுக முருகோனே
சப்தபங்கியின் புரிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
கட்டளைக் கலித்துறை
- திமிர மறாத புலாதிக ளேதரு தேடரிதாய்
குமர சிகாமணி யேகனி வாயருள் கூடெனவே
நமது விநாயக தேவச கோதர நாடொறுமே
அமரர் பிரானருள் குஞ்சரி தோள்புண ராடவனே.
கொச்சகம்
- தேடரிதாய் மாறுஞ் செனனமகா மால்வசமே
கூடெனவே கூறுங் குருபரகோ லாகலனே
நாடொறுமே தேறும் நவிமகள்சேர் வேடுவனே
ஆடவனே மீறும் மரகரவே லாயுதனே
கலி விருத்தம்
- மாறுஞ் செனன மகாமால் வசமே,
கூறுங் குருபர கோலா கலனே
தேறும் நவிம்கள் சேர்வே டுவனே,
மீறும் மரகர வேலா யுதனே
சிந்தடி வஞ்சி விருத்தம்
- மகமுறு சிறுமையின் மதியாலே,
விதியொடு குறுகிய மிடிதீராய்,
புதுமண நறுமலர் புனைமார்பா,
முதுமறை யறுமுக முருகோனே
குறளடி வஞ்சி விருத்தம்
- சிறுமையின் மதியாலே
குறுகிய மிடிதீராய்,
நறுமலர் புனைமார்பா,
அறுமுக முருகோனே
வெண்பா
- தேடரிய தாய்மாறுஞ் சென்னமகா மால்வசமே
நாடொறுமே தேறு நவிமகள் சேர் – வேடுவனே
ஆடவனே மீறு மரகரவே லாயுதனே
கூடெனவே கூறுங் குரு
இப்படி ஒரு பாடலே ஏழு வகையாகப் பிரிக்கப்பட்டு ஏழு பாடலாய் அமைவதால் இது சப்தபங்கி (சத்தபங்கி) எனப் படுகிறது.
பாடலின் பொருளைப் பார்ப்போம்:
குமர – குமரக் கடவுளே
சிகாமணியே – யாவருக்கும் சிரோ ரத்தினமே
கனிவாய் – பரிவு கொண்டு
அருள் கூடு என கூறும் – திருவருளைப் பெறக் கடவாயாக என்று சொல்லுகின்ற
குருபர – குரு சிரேஷ்டனே
கோலாகலனே- சம்பிரமமுடையவனே
நமது விநாயக தேவ சகோதர – நமது விநாயகருக்குத் தம்பியே
நாள் தோறும் தேறும் – தினந்தோறும் சராசரங்களைத் தேர்ந்தறிந்த
நவ்விமகள் – மான் மகளாகிய வள்ளிநாயகியை
சேர் – புணர்ந்த
வேடுவனே – வேடனே
புதுமணம் – புதிய வாசனையுள்ள
நறுமலர் – நறுவிய புஷ்பமாலைகளை அணிந்த
மார்பா – திருமார்பை உடையவனே
அமரர் பிரான் அருள் – தேவேந்திரன் பெற்ற
குஞ்சரி – தெய்வயானையின்
தோள் புணர் – தோள்களைத் தழுவிய
ஆடவனே – மஹா புருஷனே
மீறும் அர அர – உயர்ந்த அரனுக்கு அரனே
வேலாயுதனே – வேற்படையை உடையவனே
முதுமறை – பழைமையாகிய வேதப்ரதிபாத்தியனாகியுள்ள
அறுமுக – ஆறுமுகனே
முருகோனே – முருகக் கடவுளே
திமிரமறாத – அஞ்ஞான இருள் நீங்காத’
புலாதிகள் – ஐம்புலன் முதலியவைகள்
தரு – தந்த
தேடு அரிது ஆய் – தேடிக் கண்டு கொள்ள அருமையாகிய
மாறும் – மாறி மாறி வருகின்ற
செனனம் – பிறவிகளில் உண்டாகிய
மகா மால் வசம் – பெரிய மயக்கத்தின் வசப்பட்டு
மதம் உறு – மதம் மிகுந்த
சிறுமையின் மதியாலே – சிற்றறிவால் உளதாகிய
விதியொடு – ஊழினால்
குறுகிய – நேர்ந்த
மிடி – வறுமையை
தீராய் – நீக்கி அருள்வாயாக!
இதே பொருள் ஏழு பாடலுக்கும் பொருந்தும் அருமையைக் கண்டு மகிழலாம்.
இப்படி ஒரு பாடலில் ஏழு பாடல்கள் ஏழு வித யாப்பு வகைகளில் அமையப் பெறுவது எவ்வளவு கடினம்?!
அதைப் பொருளொடு அமைக்கும் வகையில் உள்ள தமிழின் இனிய தன்மையைத் தான் எப்படிப் புகழ்வது!
***
tags- ஒரு பாடல், ஏழு பாடல்கள், சப்தபங்கி, இராமச்சந்த்ர கவிராயர்!