WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,838
Date uploaded in London – – 13 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
12-4-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
அந்தமானைப் பாருங்கள் அழகு!
ச.நாகராஜன்
குறைந்த பட்ஜெட்டுக்கு ஒரு இடம்!
பல லக்ஷம் ரூபாய் செலவில்லாமல், விசா போன்ற கெடுபிடிகள் இல்லாமல் இயற்கை கொஞ்சும் இடம் ஒன்றைச் சொல்ல முடியாதா என்று கேட்பவர்களுக்கான பதில், முடியுமே என்பது தான்!
அந்தமானைப் பாருங்கள், அழகு என்பது தான் பதில்!
குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த மகிழ்ச்சி!
ஒரு இரண்டு மணி நேரத்தில் சென்னையிலிருந்து “பறந்து” அந்தமானின் தலைநகரான போர்ட் ப்ளேயரை அடைந்து விடலாம்.
ஹீத்ரூ, ஃப்ராங்பர்ட் போன்ற விமானநிலையங்களைக் கண்டவர்கள், போர்ட் ப்ளேயரில் உள்ள வீரசவர்க்கார் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டைப் பார்த்தால் வியப்படைவார்கள். அவ்வளவு சிறிய விமானநிலையம் இது.
சிறிய தீவு என்பதால் ஆட்டோ ரிக்ஷாவிலோ அல்லது டாக்ஸியிலோ குறுகிய நேரத்தில் ஒரு ரவுண்ட் அடித்து விடலாம்.
தங்குவதற்கு ஏராளமான ஹோட்டல்கள் உள்ளன.
ஒரு லக்ஷம் மக்கள் ஜனத்தொகை கொண்ட இந்தத் தீவில் பூர்வ குடியினர் சுமார் 500 பேர் மட்டுமே. அவர்களும் இதர மக்களுடன் கலந்து பேச மாட்டார்கள்.
வங்காளம், தமிழ்,ஹிந்தி, தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உரையாடி இங்கு போக வேண்டிய இடங்களுக்குப் போகலாம்.
விசாகப்பட்டினம், கொல்கட்டா, சென்னை ஆகிய் இடங்களிலிருந்து கப்பலிலும் கூட அந்தமானுக்குச் செல்லலாம்.
572 அற்புத தீவுகள்
அந்தமான் என்பது மலாய் மொழியிலிருந்து வந்த சொல், அது ஹனுமானைக் குறிக்கிறது. நிகோபார் என்றால் நிர்வாணமாக இருப்பவரின் தேசம் என்று பொருள்.
8349 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இது. நமது நாட்டின் யூனியன் பிரதேசமாக அமைகிறது. 572 அற்புதமான தீவுகள் கொண்ட தொகுதியில் 544 அந்தமானிலும் 28 நிகோபரிலும் உள்ளன. ஆனால் 36 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர்.
ஹாவ்லாக் ஐலேண்ட்
இந்த ஆயிரம் ஆண்டு எனப்படும் மில்லென்னியத்தில் முதல் சூரியோதயத்தைக் கண்ட இடம் அந்தமானே. சூரிய உதயம் சூரிய அஸ்தமனம் இதைக் கண்டு களிக்காதோர் இருக்க மாட்டார்கள். இதற்கான இடம் ஹாவ்லாக் ஐலேண்ட் தான்.
அருமையான ராதாநகர் கடற்கரை. எலிஃபண்ட் கடற்கரை இவற்றை பார்க்காமல் விட்டு விட முடியாது. ஸ்கூபா டைவிங், ட்ரெக்கிங் ஆகிய சாகஸ செயல்களில் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய இடம் இது.
ஜாலி பாய்
ஜாலி பாய் செல்லுங்கள் என்று அனைவரும் கூறவே ஜாலி பாய்க்கு ஜாலியாகப் புறப்பட்டாகி விட்டது. அருமையான படகு சவாரி. அந்த தீவில் இறக்கி விடும் போது ஒரு அறிவிப்பு. இந்தப் படகு மீண்டும் இந்த இடத்திற்கு வரும் போது நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இல்லையேல் படகு நகர்ந்து விடும்.
இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் உள்ளே போன போது தான் தெரிந்தது, அந்த இடம் யாரும் இல்லாத ஒரு தீவு என்று. பயத்துடன் அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்து அருகில் இருந்த மூங்கிலால் அமைக்கப்பட்ட ஒரு டவரின் மீது கஷ்டப்பட்டு ஏறிப் பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் கடல் தான்; கப்பலைக் காணோம்.
செதுக்கப்பட்ட பாறைகள் ஒய்யாரமாக இருக்க அதன் அடியில் தலை முட்டும் படி நின்று கடல் அலைகளையும் இயற்கை காட்சிகளையும் சற்று பயத்துடன் காணலாம். (படகு எப்போது வரும் என்பதில் மனம் லயித்திருக்குமே)
தலையை முட்டும் மலைப் பாறையிலிருந்து சுமார் மூன்று அடி தூரத்தில் கடல் அலை ஆர்ப்பரிக்கிறது. எதிரே அற்புதமான காட்சி விரிகிறது.
இவை கை புனைந்தியற்றாக் கவின் பெறு காட்சி!
நல்ல வேளையாக ஒரு அமெரிக்க இளம் தம்பதி கடலில் ‘நீர் விளையாட்டு’ ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் தான் சற்று நிம்மதி வந்தது.
பாம்! பாம்!! அவ்வளவு தான் கப்பலின் சத்தம் கேட்டு அந்த அமெரிக்க தம்பதி அலறி கரைக்கு ஓடி வர நானும் ஓடி ஒருவழியாக கப்பல் வந்து நிற்கும் இடத்திற்குச் சென்றேன். ஆக இங்கு துணையோடு செல்வது நல்லது.
இங்குள்ள பவழப் பாறைகளைப் பார்க்க நிச்சயம் ஒரு முறை போக வேண்டியது தான்.
படகில் கீழே கண்ணாடி அமைப்பு இருக்க அதன் வழியே பவழப் பாறைகளைப் பார்க்கலாம்!
இது சுற்றுப்புறச் சூழலைக் காப்பதற்காக பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட இடம். பிளாஸ்டிக் பைகளே கூடாது!
செல்லுலர் ஜெயில்
இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர்களை பிரிட்டிஷ் அரசு கைது செய்து சித்திரவதை செய்த இடம் தான் செல்லுலர் ஜெயில். இங்கு சென்று அவர்களின் தியாகத்திற்கு உள்ளார்ந்த நன்றி சொல்ல வேண்டியது நமது கடமை.
செல்லுலர் ஜெயில் போர்ட் ப்ளேரிலேயே உள்ளது. இதற்கு காலா பானி (கறுப்பு நீர்) என்ற இன்னொரு பெயரும் உண்டு.
1857ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப் போரின் போதே இந்த தீவு பிரிட்டிஷாரின் சிறையாகவே இருந்தது.
1906இல் இது அமைக்கப்பட்டு செல்லுலர் ஜெயில் என்ற பெயரைச் சூட்டியது. செல்லுலர் என்றால் ஒவ்வொரு கைதிக்கும் ஒரு சிறிய செல்; 13.5 அடி உயரம் 7 அடி அகலம். சொல்லில் அடங்காக் கொடுமைகள் நமது தியாகிகளுக்கு இழைக்கப்பட்டன. வீர சவர்க்கார் 1911இல் சிறைப்படுத்தப்பட்டு இங்கு தான் கொடுமைப் படுத்தப்பட்டார். ஏழு பகுதிகளாக அமைக்கப்பட்டிருந்த இதில் இப்போது உள்ளவை மூன்று பகுதிகளே!
இங்கு மரண தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டன.
செல்லுலர் ஜெயிலில் காண்பிக்கப்படும் ஒலி-ஒளி காட்சியைப் பார்க்காமல் வர முடியாது. ஆர்ட் காலரி, நேதாஜி காலரி என பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.
இங்கு பஸ், டாக்ஸி, ஆட்டொ எதில் வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் போய்ப் பார்க்க வேண்டியது அவசியம்!
நேதாஜி கொடி ஏற்றிய இடம்
ஜப்பான் சிறிது காலம் அந்தமான நிகோபாரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் தீவை ஒப்படைத்தது. முதன் முதலாக சுதந்திரம் பெற்ற இந்தப் பகுதியில் கொடி ஏற்றுவதாகக் குறிப்பிட்டு நேதாஜி இங்கு இந்தியக் கொடியை ஏற்றினார்.
இப்படி பல வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட இடம் அந்தமான் நிகோபார்.
லிட்டில் அந்தமான் ஐலேண்ட்
பச்சைப் பசேலென உள்ள காட்சி. நீர் வீழ்ச்சி, அருமையான கடற்கரை. எலிபண்ட் சபாரியும் செய்ய முடியும். நான்காவது பெரிய தீவு இது.
இன்னும் பாரடாங் ஐலேண்ட் உள்ளிட்ட இடங்கள் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே நம்மைக் கொண்டு சென்று விடும்.
சத்தம் சா மில்
போர்ட் ப்ளேயர் பஸ் நிலையத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சத்தம் சா மில் என்ற இடம். ஒரு பாலத்தைக் கடந்து இங்கு செல்ல வேண்டும். இது ஆசியாவிலேயே மிகப் பழமையான மரம் அறுக்கும் ஆலையாகும். இங்கு உள்ள ஃபாரஸ்ட் ம்யூஸியமும் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படும் இடமாக அமைகிறது.
ஃபாரஸ்ட் ம்யூஸியம்
போர்ட் ப்ளேயரில் உள்ள ஃபாரஸ்ட் மியூஸியத்தில் அரிய அந்தமானின் வன வளத்தைப் பற்றிய அனைத்தையும் அறியலாம். இயற்கை ஆர்வலர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இடம் இது.
ரோஸ் ஐலேண்ட்
பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான இடம் இது. பிரிட்டிஷார் அரசாண்ட காலத்தில் இது காலனியாக இருந்தது. இப்போது சிதிலமடைந்த வரலாற்றுச் சின்னம் மட்டுமே. சிறிய குன்று. தைரியமாக ஒரு புறம் ஆரம்பித்து குன்றின் உச்சி சென்று மறு புறம் இறங்கலாம். அற்புதமான கடற்கரை (மிகச் சிறிய அளவே கடற்கரை பகுதி)யில் சிறிது நேரம் இருந்து விட்டு ரசித்துத் திரும்பலாம். (நான் அப்படியே ஒரு தீவை வலம் வருவது போல வந்து புறப்பட்ட இடம் வந்து சேர்ந்தேன்) குன்றின் மீது ஏறுவதில் பயமே இல்லை.
இந்த ரோஸ் ஐலேண்ட் தான் சுனாமியின் போது பெரும் சேதத்தை இப்பகுதியில் ஏற்படுத்தவிடாமல் தடுத்தது.
அருகி வரும் கடல் பசு இனம்!
உலகின் மிக அரிதான வகை ஆமை இங்கு ஆயிரக்கணக்கில் வருகின்றன. வணிகத்திற்காக மீன் பிடிப்பது தடைப்படுத்தப்பட்டுள்ளது. மீன்கள் தங்கள் முழுவாழ்வையும் வாழும் இடம் இது தான்!
அந்தமானின் அதிகாரபூர்வமான மாநில விலங்கு கடல் பசு ஆகும். அருகி வரும் இந்த இனத்தின் மொத்த தொகை உலகிலேயே சுமார் 250 தான். இதில் அறுபதுக்கும் மேற்பட்ட கடல் பசுக்கள் அந்தமான் கடல் பகுதியில் உள்ளன.
அதிர்ஷ்டமுள்ளவர்கள் இதை இங்குள்ள சில தீவுகளின் அருகே உள்ள கடலில் பார்க்க முடியும். இவற்றைப் பாதுகாக்க அரசு ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஏராளமான பட்டாம்பூச்சிகள் இங்கு பறந்து கொண்டே இருப்பதால் இதை வண்ணத்துப்பூச்சி தீவு என்றே கூறலாம்.
உள்ளங்கையில் அந்தமான்!
அந்தமானை உங்கள் உள்ளங்கையிலேயே வைத்துக் கொள்ளலாம் என்றால் ஆச்சரியப்படுவீர்கள். ஆமாம் நமது இருபது ரூபாய் நோட் டிஸைன் ஒன்றில் காந்திஜி புன்முறுவல் பூத்து ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் இருப்பது அந்தமான் நிகோபாரின் அழகிய காட்சி தான்! அதை உள்ளங்கையில் வைத்துக் கொள்ளுங்கள்; அழகை ரசியுங்கள்!
இங்கு செல்வதற்கான அருமையான காலம் அக்டோபர் முதல் மே முடிய உள்ள காலம்!
ஹெலிகாப்டரில் சென்று கடல் தீவுக் காட்சிகளைப் பார்க்க வேண்டுமா? கடல் மீது நடந்து பார்க்க வேண்டுமா? பாரா செய்லிங் செய்ய வேண்டுமா? இயற்கை தோப்புகளுக்கு இடையே படகில் சவாரி செய்ய வேண்டுமா? ட்ரெக்கிங் செய்ய ஆசையா? பலவிதமான அருங்காட்சியகங்களைப் பார்க்க வேண்டுமா? சவர்கார், நேதாஜி போன்ற பெரும் தலைவர்களுடன் தொடர்பு கொண்ட இடங்களைப் பார்க்க வேண்டுமா? டால்பின்களையும் கடல் பசுக்களையும் இயற்கைச் சூழலில் பார்க்க வேண்டுமா? படகின் கீழே கண்ணாடி பொருத்தப்பட்டிருக்க அதன் வழியே பவழப்பாறைகள் உள்ளிட்ட கடலுக்கு அடியில் உள்ள காட்சிகளை ரசித்துப் பார்க்க வேண்டுமா?
இன்ன பிற கேள்விகளுக்கு ஒரே பதில் அந்தமானுக்குச் செல்லுங்கள் என்பதே தான்!
அங்கு செல்லும் அனுபவஸ்தர்கள் கூறுவது:
அந்தமானைப் பாருங்கள் அழகு! அங்கு அடிக்கடி பயணப்பட பழகு!
***
tags- அந்தமான்