WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,851
Date uploaded in London – – 16 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
தமிழ் என்னும் விந்தை!
நிரோட்டம் – 2
ச.நாகராஜன்
சாரறநீள் சத்திரங்கள் தண்ணியசா ரற்றிகிரி
நீர்நிறைநற் காரளக்கர் நேயநலச் – சீரடியார்
தண்டே னிறையலர்க்கா சால்கீ ரிநாகநகர்
கண்டாரே நற்கதியர் காண்
இது ஒரு உதடு ஒட்டா நிரோட்டப் பாடல்.இது நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து நூலில் 96 வது பாடலாக அமைகிறது.
ஒட்டியம்
நிரோட்டத்திற்கு நேர் எதிராக அமைவது ஒட்டியம். அதாவது உதடு ஒட்டும்படி பாடலை அமைப்பது.
மாறனலங்காரம் தரும் சூத்திரம் இது:
இதழ்குவிந்தியைந்தியல்வதுவேயோட்டியம்.
உதடும் உதடும் குவிந்து ஒட்டி நடப்பது தான் ஓட்டியம்.
எடுத்துக் காட்டு:
குருகுகுருகுகுருகொடுகூடு
குருகுகுருகூருளுறூகோ
இந்தப் பாடல் இதழ் குவிந்தவோட்டியப் பாடலாகும்.
பாடலின் பொருள்:
மனனே! சங்கு சங்கொடுங் குருகென்ற பறவைகள் குருகளோடும் திரண்டு அங்கும் இங்கும் குருகாபுரியுட்கோவை நினை என்று கூறியவாறு அமைகிறது.
பாடலின் இலக்கண விளக்கம் இது:
மூன்றாம் உருபின் மேல் உம்மை தொக்கு விரிந்தன.
ஓடு இடைநிலைத் தீபகம்.
கோவை என்னும் இரணாவது இறுதியில் தொக்கது.
உறு என்றது நினையென்றாயிற்று.
மனனே என்னும் எழுவாய் உருபு முன்னிலை எச்சமாயிற்று.
பா – குறள் வெண்பா.
துறை – கடவுள் வாழ்த்து.
அடுத்து இன்னொரு இதழியைந்தவோட்டியப் பாடல் இது:
பம்மும்பம்மும்பம்முமம்மம்மமைமாமை
பம்முமம்மமும்மேமம்பரம்
இந்தப் பாடலின் பொருள்:-
மை பம்மும் – (வலவனே உனது தேரைப் பின்னிட்டு விரைந்த) மேகம்
(இதன் முன் சென்று தேர் வரும் வழி மேல் விழி வைத்த இல்லக் கிழத்தி இருந்த நகரின் கண்) படியும்
பம்மும் பம்மும் – அதனால், வான்மீன்கணங்களும் மறையும் (இருள் செய்யும் என்றபடி)
அங்ஙனம் இருள் செய்யுமிடத்து,
அம்மம்ம – ஐயோ! ஐயோ!!
மாமைபம்முமம்மமும்மேமம்பரம் – அழகிய முலை பசலை தழைவதாம் என்றவாறு
எனவே என் சத்திய வசனம் என்னாம் என்பது பயனிலை.
இதில் அடுக்கு அவலப் பொருணிலைக் கண் வந்தன.
பகுதி – பொருள் வயிற்பிரிதல்
துறை – வலவனொடு கூறல்
இன்னொரு பாடல் இது:
குருகுமடுவூடுகுழுமுகுருகூரு
ளொருபெருமானோவாமையூறு – முருகொழுகு
பூமாதுவாழும் புவிமாது மேவுமொரு
கோமானுவா வோதுகோ.
இறைவன் திருவடிகளே கதி என்பது பயனிலை.
துறை – கடவுள் வணக்கம்.
ஓட்டிய நிரோட்டியம்
இருமையுமொன்றினுளிருவகைத்தாயுறும்
பெருமிதமோட்டியநிரோட்டியமெனப்பெறும்
என்பது ஓட்டியநிரோட்டியகளுக்கு ஒர் சிறப்பு விதியைக் கூறுகின்றது.
ஓட்டியம், நிரோட்டியம் என்னும் இரண்டு தன்மையும் ஒரு செய்யுளில் இரண்டு கூறுபாட்டானடைதல் பெறுதல் உறும் பெருமை உடையது ஓட்டிய நிரோட்டியம் என்ற பெயரைப் பெறும்.
இரண்டு கூறுபாட்டானென்னும் அவை வரும்.
மதிமடவார்வேலைவேய்மாரவேள்சோலை
பதிகுயிலோடேவன்பகைகூர் – விதியுங்
குறிதோநாகூராகுறிதுளவக்கோதை
முறிகூயருளேமுற
இந்தப் பாடல் ஓட்டியமும் நிரோட்டியமும் முறை தடுமாறாது முறையே வந்து அமைந்த ஓட்டியநிரோட்டியம்.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை
துறை – துயர் அறிவுறுத்தல்
இன்னொரு பாடல்:
வதுவையொருபோதுவழுவாதுவாழும்
புதுவைவருமாதுருவம்பூணு – முதுமைபெறு
நாதனரங்கனையேநன்றறிந்தார்க்கேயடியேன்
றாதனென நெஞ்சே தரி
இந்தப் பாடலில் முதல் இரண்டு அடிகள் ஓட்டியமும் பின் இரண்டு அடிகள் நிரோட்டியமுமாக அமைந்து வந்திருக்கும் பாடலாகும்.
திணை – பாடாண்
துறை – சமய வணக்கம்
இதே போல நிரோட்டியவோட்டியப் பாடலும் உள்ளன.
எடுத்துக் காட்டு:-
கற்றைச்சடையார்கயிலைக்கிரிகளைந்தான்
செற்றைகரங்கள் சிரங்கணிறைந் – தற்றழிய
வேவேவுமெவ்வுளுறுமேமமுறுபூமாது
கோவேமுழுதுமுறுகோ
இந்தப் பாடலில் முதல் இரண்டு அடிகளும் அதன் பின்னே வரும் தனிச் சொல்லும் நிரோட்டியம்,
பின் இரண்டு அடிகள் ஓட்டியம்.
ஆக இது நிரோட்டியவோட்டியப் பாடல் ஆகும்.
துறை – கடவுள் வாழ்த்து.
இப்படி பல்வகைப் பாடல்களில் உதடு ஒட்டியும் உதடு ஒட்டாமலும், உதடு ஒட்டியும் ஒட்டாமலும் வரும் பாடல்கள் ஏராளம் உள்ளன.
தொகுப்பின் பெருகும்.
ஆனால் எவரேனும் ஒருவர் தொகுத்தால் நல்லது.
அது ஒரு களஞ்சியமாக அமையும்.
***
tags- ஒட்டியம் நிரோட்டியம், நிரோட்டம், உதடு ஒட்டா