WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,867
Date uploaded in London – – 20 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
அகஸ்தியர் இட்ட சாபம்!
ச.நாகராஜன்
மாபெரும் முனிவரான அகஸ்தியரின் வாழ்வில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. அவற்றில் ஒரு சம்பவம் இது.
ஒரு காலத்தில் அகஸ்தியர் ஏராளமான பறவைகள் வாழ்கின்ற, அழகான சோலைகளுடன் விளங்கிய யமுனா நதிக் கரையில் உக்கிரமான தவத்தை மேற்கொண்டிருந்தார்.
ஒரு சமயம் குபேரன் தேவர்களின் சபை கூடப் போகும் இடமகிய குசஸ்தலி என்னும் இடத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தான். அவனுடன் அவனுடைய தோழனாகிய மணிமான் என்ற ராக்ஷஸ தலைவனும் யக்ஷர்கள் கூட்டங்களுடன் போய்க் கொண்டிருந்தான்.
அப்போது அகஸ்தியர் உயரத் தூக்கிய கைகளுடன் சூரியனை நோக்கி உட்கார்ந்திருப்பதை அவர்கள் அனைவரும் பார்த்தார்கள்.
அப்போது மணிமான் அகங்காரத்தினாலும், மூடத்தனத்தினாலும் அகஸ்திய மஹரிஷியின் தலையில் ஜலவிஸர்ஜனம் செய்தான்.
உடனே அகஸ்தியர் மிகுந்த கோபம் கொண்டார்.
அவனை எரிப்பவர் போலப் பார்த்து, குபேரனை நோக்கி, “ஓ! குபேரா! நீ எதிரில் இருக்கும் போதே இந்த மணிமான் என்னை இப்படி அவமதித்து இருக்கிறான். எனது கோபத்தினால் இந்த மணிமான் உனது சைன்யங்களுடன் ஒரு மனிதனின் கையால் நாசத்தை அடைவான். அட, துராத்மாவே! நீயும் உனது சேனைகளும் அழிந்து போன காரணத்தினால் அந்த மனிதனைக் காண்பதினால் உன்னுடைய பாவங்களினால் விடுபடுவாய். இந்த சாபமானது இந்த சேனைகளுக்கு மட்டும் விதிப்பட்ட சாபம் தான்; ஆகவே இந்த சேனைகளின் புத்திரர்கள் உன் உத்தரவுப் படி போர் புரிந்தால் அவர்களை இந்த சாபம் கட்டுப்படுத்தாது” என்றார்.
குபேரன் பெரிதும் வருத்தமடைந்தான்.
காலம் உருண்டோடியது.
ஒரு காலத்தில் பாண்டவர்கள் வன வாசம் செய்யும் போது கந்தமாதனமலைக்கு வந்து அங்கு வசிக்கலாயினர்.
அப்போது பீமசேனன் மலையின் உச்சிக்குச் சென்று அங்கே இருந்த குபேரனுடைய சேனைகளான யக்ஷர்களையும், ராக்ஷஸர்களையும் போரிட்டு ஜெயித்தான். அவர்களில் ஏராளமானோரைக் கொன்றதோடு ராக்ஷஸர்களின் தலைவனான மணிமானையும் கொன்றான்.
இப்படியாக அகஸ்தியரின் சாபம் நிறைவேறியது.
மஹாபாரதம் அநுசாஸன பர்வம் தரும் சுவையான இன்னொரு வரலாறு இது:
ஒரு சமயம் தேவர்கள் அசுரர்களால் அழிக்கப்பட்டு தங்களுடைய சுகங்களை இழந்து பூலோகத்தில் அலைய ஆரம்பித்தனர்,,
யாகங்களில் தேவர்களின் பொருட்டுத் தரப்பட்ட யாக அவிர்பாகங்களையும் பிதிர்களுக்குப் படைக்கும் அன்னங்களையும் ராக்ஷஸர்கள் பலாத்காரமாய் அபகரித்துக் கொண்டு தாமே எடுத்துக் கொண்டனர்.
மனிதர்களின் நற்செயல்கள் அனைத்தும் ராக்ஷஸர்களால் செய்ய விடாமல் தடுக்கப்பட்டன.
மிகவும் வருத்தமுற்ற தேவர்கள் சூரியன் போல ஜொலிக்கும் அகஸ்திய மஹரிஷியைக் கண்டு தங்கள் குறைகளைக் கூறி வருந்தினர்.
அகஸ்தியர் அவர்களது பரிதாபமான நிலையைக் கண்டு ராக்ஷர்களின் மீது கோபம் கொண்டார்.
தனது தவசக்தியினால் அண்டங்களை எல்லாம் எரிக்கும் அக்னி போல ஜொலிக்க ஆரம்பித்தார்.
அவரது தேகத்திலிருந்து உருவான பிரகாசமான கிரணங்களினால் தாக்குண்டு ஆயிரக்கணக்கான ராக்ஷஸர்கள் மாண்டனர். இவ்வாறு எரிக்கப்பட்ட தானவர்கள் பூமியையும் சுவர்க்கத்தையும் விட்டு தெற்கில் இருந்த பிரதேசங்களை நோக்கி ஓடினர்.
அப்போது தானவராஜனாகிய பலி என்பவன் பாதாள லோகத்தில் அஸ்வமேத யாகம் செய்து கொண்டிருந்தான். அவனுடன் பாதாள லோகத்தில் இருந்த அசுரர்களும், பூமிக்குள் ஒளிந்து கொண்டிருந்த அசுரர்களும் மட்டுமே உயிர் தப்பினர்.
தங்களுடைய எதிரிகளான ராக்ஷஸர்கள் அழிக்கப்பட்டதால் ஆனந்தம் கொண்ட தேவர்கள் பாவம் நீங்கி, முன் போலவே தங்களது லோகங்களை அடைந்து சுகமாய் இருக்க ஆரம்பித்தனர்.
அவர்கள் அகஸ்தியரை வணங்கி, பூமிக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அசுரர்களையும் அழிக்குமாறு வேண்டினர்.
ஆனால் அகஸ்தியரோ, அவர்களை எரிக்க தன்னால் முடியும் என்றாலும் அப்படிச் செய்தால் தனது தவசக்தி வெகுவாகக் குறைந்து விடும், அது தகுதியற்றது என்றும் கூறினார். இப்படிக் கூறி, தேவர்கள் கூறியதை அவர் ஏற்கவில்லை.
அகஸ்தியர் இன்றும் தெற்குத் திசையில் வசித்து வருகிறார்.
***
TAGS – அகஸ்தியர் ,தெற்குத் திசை, குபேரன்,