Post No. 10,873
Date uploaded in London – – 21 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
பொருள் மாறிய சொற்கள்- எண்ணெய், மை , செம்பு, பிள்ளை, சேரி, ஊர்தி
சொல் ஆராய்ச்சி மிகவும் சுவையான விஷயம் ஆகும். உலகிலுள்ள பல மொழிகளிலும் காலப்போக்கில் சில சொற்களுக்கு புதிய பொருள் கற்பிக்கப்படும். அதே சொல்லை வேறு சில பொருள்களுக்கும் பயன்படுத்துவர். தோற்றத்திலோ உபயோகத்திலோ ஒற்றுமை இருப்பதால் இப்படிச் செய்கின்றனர்..
சில தமிழ்ச் சொற்களை ஆராய்வோம். ‘மை’ என்றால் கருப்பு நிறப் பொருள்.; கண்ணுக்கு இடும் அழகு சாதனப் பொருள். ஆனால் பிற் காலத்தில் கருப்பு மை , சிவப்பு மை , பச்சை மை என்று சொல்லத் துவங்கி விட்டோம்
எண்ணெய் என்பதைப் பிரித்தால் எள் +நெய் என்று பிரிக்கலாம். முதலில் எள் நெய்க்கு மட்டும் இருந்த பெயர் பின்னர் எல்லா தாவர எண்ணெய்களுக்கும் பரவிவிட்டது.
விளக்கு எண்ணெய்
மண் எண்ணெய்
கடலை எண்ணெய்
வேப்ப எண்ணெய்
xxx
ஆங்கிலத்தில் இப்பொழுது எண்ணெய் (OLI) என்று பத்திரிகையில் படித்தால் அது பெட்ரோலிய எண்ணெய் பற்றியதாகவே இருக்கும்!
உயிர் வாழக்கூடிய பிராணிகள், தாவரங்களில், இளம் நிலையிலுள்ளவற்றுக்கு ‘பிள்ளை’ என்று பெயர்.கீ ழேயுள்ள சொற்களில் இந்த இளமைப் பொருளைக் காணலாம்
தென்னம் பிள்ளை , கிளிப் பிள்ளை, அணில் பிள்ளை , கீரிப் பிள்ளை என்று சொன்னோம்; அதற்குப் பின்னர் ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்று சொன்னோம். பின்னர் ஆண்களுக்கு மட்டுமே ‘பிள்ளை’ என்பது ஒட்டிக்கொண்டது. பின்னர் அது ஒரு ஜாதியிலும் ஒட்டிக்கொண்டது
பேரப்பிள்ளை , மாப் பிள்ளை , பிள்ளையார் என்று பெருகியதோடு இளம் பிள்ளைவாதம் என்ற நோய்களுடனும் சேர்ந்துவிட்டது
தொல்காப்பிய சூத்திரப்படி , அந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு ‘குழவி’ என்ற சொல் மட்டுமே இருந்தது பின்னர்தான் அது மனிதர்களுக்குப் பயன்படுத்தப் பட்டது.
xxx
சேரி என்ற சொல்லை இன்று கீழ் ஜாதி மக்கள் வசிக்கும் பகுதியாகக் கருதுகிறோம். பழங்காலத்தில் அந்தணர் வசித்த பகுதிகளுக்கும் கூட ‘சேரி’ என்றே சொன்னார்கள் . அதாவது ஒரு குறிப்பிட்ட ஜாதியினரோ அல்லது குறிப்பிட்ட தொழில் செய்வோரோ வசிக்கும் பகுதியை சேரி என்ற சொல்லோடு சேர்த்துச் சொன்னார்கள்
புதுச் சேரி , தலைச் சேரி என்ற ஊர்ப் பெயர்களிலும் இதைக் கானலாம்
பெருங்கதை என்னும் நூலில் யவனச் சேரி, அந்தணர் சேரி, தமிழச் சேரி, அமைச்சர் சேரி என்று இருப்பதைக் காணலாம். இப்போது பறைச் சேரி என்ற சொல்லில் மட்டுமே இதை பயன்படுத்துகிறோம். அதையம் கூட பொது இடங்களில் சொல்ல விரும்பாதோர் ஹரிஜன காலனி என்று ஸம்ஸ்க்ருதமும் ஆங்கிலமும் கலந்த சொல்லை பிரயோகிப்பர்.
செம்பு என்றால் தாமிரம் (Copper) என்னும் உலோகம் ஆகும்,
பின்னர் எந்த உலோகத்தினால் ஆன பாத்திரத்துக்கும் சொம்பு என்று சொல்லத் துவங்கிவிட்டனர் பித்தளைச் சொம்பு, வெள்ளிச் சொம்பு, தங்கச் சொம்பு, ஈயச் சொம்பு என்பதெல்லாம் இப்போது புழக்கத்துக்கு வந்துவிட்டது .
ஊர்தல் என்பது தான் மிகவும் சுவையான மாறுதல் அடைந்த சொல். நிலத்தில் ஊறும் பாம்பு, புழுப் பூச்சிகளுக்கு மட்டும் ஊர்வன என்ற சொல் இருந்தது. பின்னர் நிலத்தில் ஊர்ந்த வண்டிகளை ஊர்தி என்கிறோம். 2000 \ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த புறநானூற்றுப் புலவர் விமானத்துக்கு ஊர்தி என்ற சொல்லைச் சேர்த்து வான ஊர்தி என்று பாடி விட்டார். வலவன் ஏவா வான ஊர்தி என்ற சொல்லை புறநானூற்றில் காணலாம்.
—subham —-
Tags—பொருள், சொற்கள், எண்ணெய், மை , செம்பு, பிள்ளை, சேரி, ஊர்தி,