Post No. 10,870
Date uploaded in London – – 21 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
மாலைமலர் 19-4-2022 தேதியிட்ட இதழில் ‘களைப்பு தட்டாத லண்டன்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரை!
ச.நாகராஜன்
வெல்ல முடியா லண்டன்
உலகில் வெல்ல முடியாத நகரம் எங்கள் நகரமே என்று லண்டன் மாநகர் வாழ் மக்கள் கூறினால் அது வரலாற்று உண்மையாகும்.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூலியஸ் சீஸரின் கண் லண்டன் மீது பதிந்தது. ஆனால் அவனால் லண்டனை வெற்றி கொள்ள முடியவில்லை.
அடுத்து மாவீரனான நெப்போலியன் தனது பார்வையை லண்டன் மீது பதித்தான். ஆனால் அவனாலும் லண்டனை வெல்ல முடியவில்லை.
அடுத்து மின்னல் தாக்குதல் நடத்தி சடசடவென நாடுகளை வீழ்த்திய ஹிட்லர் எப்படியாவது லண்டனை வென்றே தீருவது என்று உலகளாவிய அளவில் போரைத் துவங்கினான். அந்த இரண்டாம் உலகப் போரிலும் லண்டன் வெல்லப்படாத நகரமாகவே ஆயிற்று.
எங்களது வீரம், அறிவுத்திறன் அப்படிப்பட்டது என்று பெருமை பேசுவார்கள் இங்கிலாந்து மக்கள்.
இல்லை சூழ்ச்சித் திறன், வஞ்சகம், பிரிவினை ஏற்படுத்தி ஏமாற்றுவது தான் அவர்களின் குணம் என்பார்கள் உலகெங்கும் பிரிட்டனின் காலனியாக இருந்து அவதிப் பட்ட நாடுகளின் மக்கள்.
இரண்டும் இல்லை, காலம் செய்த ஜாலம், வெறும் அதிர்ஷ்டம் தான் என்பர் சிலர். எது எப்படியோ லண்டன் வெல்லப்படாத நகரம் என்பது உண்மையே.
உலகை ஆண்ட குட்டி நாடு!
நமது முன் நாளைய ஆந்திர பிரதேசத்தின் பரப்பளவையே கொண்டிருக்கும் ஒரு குட்டி தேசம் உலகெங்கும் உள்ள மாபெரும் நாடுகளை அடிமைப் படுத்தி காலனிகளாக ஆக்கி ஆள முடிந்திருக்கிறது என்றால் அதை என்னவென்று சொல்வது?
செலவு சற்று அதிகமானாலும் பரவாயில்லை, லண்டனுக்குப் பயணப்படுகிறோம் என்று கிளம்பியோர் முதலில் உலகின் அதிபரபரப்பான ஹீத்ரோ விமான நிலையத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு வியப்படைவர்.
டியூப் ரயில் நிலையங்கள்
பின்னர் லண்டன் நகரத்தினுள் நுழைந்தால் அவ்வளவு தான், வியப்பின் விளிம்பிற்கே செல்வர்.
சுமார் 400 கிலோமீட்டர் தூரப் பகுதிகளை இணைக்கும் 272 டியூப் ஸ்டேஷன்கள் அமைந்துள்ள லண்டன் மாநகரப் பகுதியில் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பயணத்திற்கான மேப், டூரிஸ்ட் அட்டைகள் (வழிகாட்டுதல்) உண்டு. அதை இலவசமாக எடுத்துக் கொண்டு நம் பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம்.
லண்டனைச் சுற்றிப் பார்க்க ஓபன் டாப் பஸ் வசதி உண்டு. அதில் நிமிடம் பிசகாமல் வண்டி திட்டமிட்ட படி ஓட நாம் செல்லும் இடங்கள் பற்றிய ரன்னிங் கமண்டரியும் உண்டு.
பார்க்க வேண்டிய சில முக்கிய இடங்களை மட்டும் இங்கு கோடிட்டுக் காட்ட முடியும். (நான் லண்டனில் இருந்ததும் மிக மிக குறுகிய காலமே!)
பிக் பென் கடிகாரம்
இது 320 அடி உயரமுள்ள மணிக்கூண்டு கோபுரம். அதில் மிகப் பெரிய கடிகாரம் மற்றும் 13 ½ டன் எடையுள்ள மணி உள்ளன. லண்டன் நகரின் மையப் பகுதியில் உள்ளது இது. இதற்கு அருகில் நாடாளுமன்ற கட்டிடம் உள்ளது.
இந்த கடிகாரம் நான்கு முகங்களைக் கொண்டது. ஒவ்வொன்றும் 20 அடி விட்டமுடையது. பெண்டுலம் மட்டுமே 13 அடி நீளம் கொண்டது. கடிகாரத்தில் மணியைக் குறிக்கும் ஒவ்வொரு எழுத்தும் 20 அங்குல உயரம் இருக்கும்.
இரண்டாம் உலகப் போரின் போது லண்டன் மீது எதிரி நாட்டின் குண்டு மழை பொழிந்த போதும் எந்த வித சேதமும் இல்லாமல் தப்பிப் பிழைத்த அதிர்ஷ்ட மணிக் கூண்டு இது. இதன் உச்சிக்குச் செல்ல 324 படிகள் உள்ளன.
நேரம் தப்பாத பிக் பென்னைப் பார்த்து வியந்து நம் பொன் போன்ற நேரத்தை வீணடிக்காது அடுத்த இடத்திற்கு விரைந்து போக வேண்டும்.
பார்லிமெண்ட் கட்டிடம்
பிக் பென் அருகில் உள்ளது பார்லிமெண்ட். பார்லிமெண்டுகளின் தாய் என்ற புகழைப் பெற்றது பிரிட்டன். இங்கிருந்து நடந்தே சென்றால் 10,டவுனிங் ஸ்ட்ரீட் உள்ளது. இது தான் பிரிட்டனின் பிரதமரின் இல்லம். வீட்டு வாயிலில் நின்று புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளலாம்.
பக்கிங்ஹாம் அரண்மனை
எலிசபெத் மஹாராணியாரின் இருப்பிடமான இதைப் பார்க்கவென்றே தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு பாதுகாப்புச் சேவகர்கள் மாறுவது ஒரு கண்கொள்ளாக் காட்சி. இதைப் பார்க்கவும் கூட்டம் இருக்கும்
பிரிட்டிஷ் மியூசியம்
இந்த அருங்காட்சியகத்தில் எகிப்திய மம்மிகள், சிந்து சமவெளி நாகரீகச் சின்னங்கள், கிரேக்க, சுமேரிய, பாபிலோனிய நாகரிகம் பற்றிய பொக்கிஷங்களைக் காணலாம். நுழைவுக் கட்டணம் இல்லை.
விக்டோரியா ஆல்பர்ட் மியூசியம்
இந்த மியூசியத்தில் திப்பு சுல்தானின் இயந்திரப் புலி உள்ளிட்ட அரிய பொருள்களைக் காணலாம். நுழைவுக் கட்டணம் இல்லை.
இயற்கை வரலாற்று மியூசியத்தில் டைனோசர் எலும்புக்கூடு, அறிவியல் அருங்காட்சியகத்தில் ராக்கட், லேஸர் உள்ளிட்டவை என்று பார்க்க வேண்டியது பற்றிய பிரம்மாண்ட லிஸ்ட் உண்டு.
கிட்டத்தட்ட 30 மியூஸியங்கள் இருப்பதால் அவரவர் விருப்பத்தேர்வின் படி தங்கள் தங்கள் ஆர்வத்திற்குத் தக உள்ள மியூஸியத்திற்குச் சென்று பார்த்து மகிழலாம்.
தேம்ஸ் நதி சவாரி
தேம்ஸ் நதியில் படகு சவாரி செய்ய முடியும்.40 நிமிட டூர் ஒன்றும் உண்டு. 11 பவுண்ட் கட்டணம். (ஒரு பிரிட்டிஷ் பவுண்டு என்பது இந்திய ரூபாயில் 99.70 மதிப்பு கொண்டது). சொகுசு கப்பல் சவாரிப் பயணம் இது.
ஆங்காங்கே நின்று போட்டோ எடுத்துக் கொள்வோரின் மகிழ்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லை.
பேகர் ஸ்ட்ரீட்
ஷெர்லாக் ஹோம்ஸ் நாவலைப் படித்தவர்கள் அவர் வசித்த கற்பனை வீடான 200, பேகர் ஸ்ட்ரீட்டை மறக்க மாட்டார்கள். இங்கும் ஒரு மியூசியம் உள்ளது.
இதைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை,
பேகர் ஸ்ட்ரீட் வாசலில் உள்ள மெழுகு பொம்மை கண்காட்சியைப் பார்க்காமல் வந்தால் லண்டன் பார்த்ததாகவே ஆகாது.
மேடம் துஸாட்ஸ் மெழுகு பொம்மை கண்காட்சி
இந்த மெழுகு பொம்மை கண்காட்சி நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு இடம்.
உலகத் தலைவர்கள், எழுத்தாளர்கள், பெயர் பெற்ற விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் தத்ரூபமான உருவத்தை மெழுகினால் செய்து வைத்திருப்பதைக் கண்டு அதிசயப்படாமல் இருக்க முடியாது. அவர்களுடன் (அதாவது மெழுகு பொம்மைகளுடன்) சேர்ந்து நின்று போட்டோவும் எடுத்துக் கொள்ளலாம்.
டவர் ப்ரிட்ஜ்
லண்டன் செல்பவர்கள் அதி அற்புதமான டவர் ப்ரிட்ஜ் என்னும் அழகிய பாலத்தைப் பார்க்காமல் இருக்க முடியாது. கப்பல் வரும் நேரத்தில் பாலம் இரண்டாகப் பிரிந்து தேம்ஸ் நதியில் கப்பல் செல்ல வழி விடும். இது நமது பாம்பன் பாலத்தை நினைவூட்டும். இங்குள்ள கோட்டைக்குள் உள்ள காட்சிக்கூடத்தில் கோஹினூர் வைரம் உள்ளிட்ட பல கிரீடங்கள் உள்ளன. பார்த்து மகிழலாம்.
லண்டன் ஐ
தேம்ஸ் நதிக்கரையில் உள்ள இராட்சத ராட்டினம் தான் லண்டன் ஐ. இதில் ஏறி அமர்ந்து உச்சிக்குச் செல்லும் போது லண்டனைப் பார்ப்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
135 மீட்டர் உயரம் உள்ள இதன் உச்சிக்குச் சென்றால் 25 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் விரிந்து பரந்த காட்சி கண்ணுக்குக் குளுமையாகத் தென்படும். இதில் ஒரு சுற்று சுற்ற 30 நிமிடம் ஆகும்.
எந்த இடத்திற்குப் போனாலும் கட்டணம் 30 பவுண்டிலிருந்து 40, 50 என்று ஏறிக் கொண்டே போகும். ஆகவே முதலில் பட்ஜெட்டுக்குத் தக பார்க்க வேண்டிய இடங்களை நிர்ணயித்துக் கொள்வது அவசியம்.
காலார நடந்தும் செல்லலாம்
ஆக்ஸ்போர்ட் ஸ்ட்ரீட் என்பது பஜார் தெரு. இங்கு காலார நடந்து செல்லலாம். டாட்டன்ஹாம் கோர்ட் ஸ்டேஷனில் இறங்கி ஆக்ஸ்போர்ட் சர்க்கஸ், பாண்ட் ஸ்ட்ரீட் மார்பிள் ஆர்ச் ஸ்டேஷன் வரை நடந்தே போக இரண்டு மணி நேரம் ஆகும். இங்குள்ள செல்ப்ரிட்ஜ் ஸ்டோர் புகழ் பெற்ற ஷாப்பிங்கிற்கான இடம்.
பிரிட்டனின் உயரமான கட்டிடம் ஷார்ட்ஸ்
310 மீட்டர் உயரமுள்ள 75 மாடிக் கட்டிடம் இது. இதற்கும் நுழைவுக் கட்டணம் உண்டு.
விளையாட்டு ரசிகர்கள் பார்க்க விரும்பும் இடங்கள்
கிரிக்கட் ஆர்வலர்கள் லார்ட்ஸ், ஓவல் கிரிக்கட் மைதானங்களைப் பார்க்கலாம். விம்பிள்டன் டென்னிஸ் பிரியர்களுக்குப் புனிதமான இடம்.
கோவில்களுக்குச் செல்ல வேண்டுமா?
தமிழர்களுக்காகவே 25 கோவில்கள் உள்ளன. இந்தியர் நிர்வாகத்தில் உள்ள மகாலெட்சுமி கோவில் ஈஸ்ட் ஹாம் ஸ்டேஷன் அருகில் உள்ளது. இங்குள்ள முருகன் கோவிலும் மிக்க புகழ் வாய்ந்த ஒன்று.
ஸ்டான்லி கிப்பன்ஸ் கடை
எனக்கு தபால்தலை சேகரிப்பது ஒரு பொழுது போக்கு என்பதால் ஸ்டான்லி கிப்பன்ஸ் கடைக்குச் சென்றேன். சிறியது தான் என்றாலும் கீர்த்தி மிக்கது. உலகில் எந்த நாடு எந்த தபால்தலையை வெளியிட்டாலும் சரி, அதைப் பற்றிய விவரங்களை அறிய முடியும் இங்கு.
ட்ரபால்கர் ஸ்குயர்
இந்தச் சதுக்கத்தில் உள்ள நீரூற்று மிகவும் புகழ் பெற்றது. இதன் அருகில் உள்ள நேஷனல் ஆர்ட் காலரியில் உலகப் புகழ் பெற்ற ஓவியங்கள் உள்ளன.
இங்கு நுழையக் கட்டணம் ஏதும் இல்லை.
லண்டனில் உள்ள ஏராளமான பூங்காக்களை லண்டனின் நுரையீரல் என்று புகழ்வர்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம், லண்டனைப் பற்றி! ஆனால் முடிப்பதற்கு முன்னர் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்ல வேண்டுமில்லையா?
ஹராட்ஸ் ஷாப்பிங் மால்
லண்டன் சென்று திரும்பியதற்கான அடையாளத்துடன் நீங்கள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் இல்லையா!
அதற்கான ஒரு இடம் தான் – ஹராட்ஸ் ஷாப்பிங் மால்!
க்னைட்ஸ்பிரிட்ஜ் என்னும் இடத்தில் உள்ள இங்கு செல்லாமல் திரும்பினால் – இங்கிருந்து எதையாவது வாங்காமல் திரும்பினால் – உங்களைப் பார்த்து உங்கள் வீட்டார் சிரிப்பார்கள்.
பிரம்மாண்டமான இது 1849ஆம் ஆண்டிலிருந்து இயங்குகிறது. இங்கு விற்கப்படாத எதுவுமே உலகில் இல்லை என்ற பெருமையை இது ஒரு காலத்தில் கொண்டிருந்தது. ஆமாம், யானை, புலி, சிங்கம், முதலை கூட ஒரு காலத்தில் இங்கு விலைக்குக் கிடைத்தது. ஆனால் அந்தக் காலம் மலையேறி விட்டது.
இங்குள்ள 330 டிபார்மெண்ட் கடைகளில் நவீன காலத்திற்கேற்ப தேவையானது எது வேண்டுமானாலும் கிடைக்கும். இங்கு வராத சினிமா நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் இருக்கவே மாட்டார்கள். அப்படி ஒரு கவர்ச்சியான மால் இது.
இதையும் முடித்து விட்டால் லண்டன் பயணம் முடிந்த மாதிரி தான்!
ஓய்வெடுக்க ஒரு நகரம்
லண்டனில் நடந்து கொண்டே இருப்பது தான் சிறந்த ஓய்வு என்று சொல்வார்கள்.
லண்டனில் இருந்து களைத்து விட்டேன் என்று ஒருவர் சொன்னால் அவர் உலகத்தில் இருந்தே களைத்து விட்டார் என்பது அர்த்தமாம்.
சூரிய அஸ்தமனமே இல்லாத நாடு என்று பெருமைப்பட்ட நாடு பிரிட்டன். ஆம், அதனுடைய காலனி ஆதிக்க நாடுகளில் ஏதாவது ஒன்றில் சூரியன் ஒளியுடன் பிரகாசமாக இருந்து கொண்டே இருப்பான்.
ஆனால் அது இப்போது இல்லை என்றாலும் பழம் பெருமையுடன் கர்வமாக இருக்கிறார்கள் பிரிட்டன் மக்கள்.
இங்கு இப்போதும் 300 மொழிகளைப் பேசுவோர் வசித்து வருகின்றனர். இவர்கள் உலகளாவிய 270 இனங்களைச் சேர்ந்தவர்கள்.
ஆகவே இவர்கள் பெருமைப்படுவதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்ற நினைப்புடன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்தால், இதோ, சென்னை கிளம்ப இருக்கும் விமானம் புறப்படத் தயாராக இருக்கிறது. 13 மணி நேரம் பயணித்தால் சென்னை வந்து விடும்!
மகிழ்ச்சியுடன் ஏராளமான நினைவுகளை உள்ளத்தில் ஏந்தித் திரும்ப வேண்டியது தானே!
***
TAGS– லண்டன், ஹீத்ரோ, டவர் ப்ரிட்ஜ், விக்டோரியா ஆல்பர்ட் மியூசியம், தேம்ஸ் நதி, பக்கிங்ஹாம் அரண்மனை, பிக் பென் ,கடிகாரம்