Post No. 10,878
Date uploaded in London – – 23 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ச.நாகராஜன்
ஒரு பாடலில் ஒரே ஒரு எழுத்து வர்க்கமே வருமாறு பாடலை அமைப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். பொருள் பொதிந்த சொற்களுடன் அவை அமைந்திருக்கும் போது அதைப் படிப்பவர்களின் ஆனந்தமே தனி.
இப்படிப்பட்ட பாடல்கள் பல தமிழில் உள்ளன.
எடுத்துக்காட்டாக, சில பாடல்களை இங்கே காணலாம்.
ககர வர்க்கத்தில் வரும் இந்தப் பாடலை காளமேகப் புலவர் பாடி இருக்கிறார்.
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கைக்கைக்கா கா
காக்கைக்குக் கைக்கைக்கா கா
பாடலின் பொருள் :
கூகை காக்கைக்கு ஆகா – கூகை (பகல் காலத்தில் காக்கைக்கு எதிர் நிற்றல் கூடாது
காக்கை கூகைக்கு ஆகா – காக்கை (இரவு நேரத்தில்) கூகைக்கு எதிர் நிற்றல் கூடாது
காக்கு ஐக்கு – கற்பகத் தருச் சோலைக்கு இறைவனாகிய இந்திரனுக்கும்
கைக்கைக்கு ஆகா – (காலமில்லாத காலத்தில்) பகைவரைக் கொல்வதற்கு இயலாது
கோக்கு – (ஆகவே) அரசனுக்கு
கூ – பூமியை
காக்கைக்கு – பாதுகாக்கவும்
கைக்கைக்கு – பகைவரைக் களையவும்
கொக்கு ஒக்க – கொக்கு ஒக்க காலம் வாய்க்குமளவும் கொக்கைப் போல அடங்கி இருக்கக் கடவன்.
இதே பாடலை யாப்பருங்கலவிருத்தி இப்படித் தருகிறது:
“காக்கைக் காகா காக்கைக் காகா
காக்கைக் காகா காக்கைக் காகா
காக்கைக் காக்குக் ககாக்குக்குக் கூக்கக்
கூகூகைக் காகக்க காக்கைக்குக் கக்கை”
தகர வர்க்கத்தில் காளமேகப் புலவர் பாடிய பாடல் இது:
தாதீதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்திதத் தூததே – தாதொத்த
துத்திதத் தாதேது தித்துத்தேத் தோத்தீதூ
தித்தத்த தோதித் திதி
இந்தப் பாடலின் பொருள்:
தாதி – தொழியினுடைய
தூதோ – தூதோ
தீது – குற்றமுள்ளது
தத்தை – கிளியானது
தூது ஓதாது – தூது சொல்லாது
தூதி – தூதியே
தூது – உன் தூதானது
ஒத்த – (என் மனதுடன்) பொருந்தி
இதம் – நன்மையான
தூததே – தூதாகும்
தாது ஒத்த – (ஆதலால்) பொன்னை நிகர்த்த
துத்தி – தேமல்
தத்தாதே – படராத வண்ணம்
துதித்து – (அவரை) தோத்திரம் செய்து
ஒத்து – (அவருடன்) ஒத்து
தேத்து – (அவர் மனதைத்) தேற்று
இது – இந்தச் செய்தி
தித்தித்தது – (என் மனதுக்கு) இனித்தது
ஓதி – (இதை அவருடன்) சொல்லி
திதி – என்னைக் காப்பாற்று
தாதியும் கிளியும் என் தூதுக்கு இசைவாரில்லை. தூதியே, நீ தலைவரிடம் சென்று அவர் மனம் இரங்கும் படி செய்ய வேண்டும் என்பது பாடலின் திரண்ட பொருள்.
இதே பாடலை யாப்பருங்கலவிருத்தி இப்படித் தருகிறது:
தீத்தித் தாதூது தீதாதூதித் தத்துதீ
துத்ததை திதுத்து தைத்தா தூது
தித்தித் தித்தித் தாதூது தீதுத்
தாத்தெத் தாதோ தித்தித் தாது
இனி இன்னொரு அருமையான பாடலையும் இங்கு பார்க்கலாம்.வில்லிப்புத்தூரார் வாதுக்கு அழைத்து அவரிடம் தோல்வி கண்ட புலவரின் காதை குறும்பி அளவாக் குடைந்து தோண்டி அறுப்பாரம்.
அருணகிரிநாதருக்கும் அவருக்கும் நடந்த வாதின் போது அருணகிரிநாதர் ஒரு பாடலைப் பாட வில்லிப்புத்தூரார் திகைத்துத் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். அன்றிலிருந்து அவர் தோல்வி கண்ட புலவர் காதை அறுக்கும் கொடிய பழக்கமும் நின்றது.
அருணகிரிநாதர் ஒரேழுத்து வர்க்கப் பாடல் ஒன்றைத் தான் பாடி வில்லிபுத்தூராரை வெற்றி கொண்டார்.
அது கந்தர் அந்தாதியில் 54வது பாடலாக அமைகிறது.
பாடல் :-
“திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”
கடினமான இந்தப் பாடலின் பொருளைக் காண முதலில் பாடலை இப்படிப் பிரித்துக் கொள்ள வேண்டும்:
திதத்தத் தத்தித்த திதி தாதை தாத துத்தி தத்தி
(தா) தித தத்து அத்தி ததி தித்தித்ததே து துதித்து இதத்து
(ஆ) தி தத்தத்து அத்தி தத்தை தாத திதே துதை தாது அதத்து
(உ) தி தத்து அத்து அத்தி தித்தி தீ தீ திதி துதி தீ தொத்ததே.
பாடலின் பொருள் :
திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,
திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுடைய
தத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதென்று
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத – தொண்டனே!
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – மரணத்தோடும்
உதி – ஜனனத்தோடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்ததே – உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்
பாடலின் திரண்ட கருத்து இது:
நடராஜ மூர்த்தியாகிய சிவபெருமானும் பிரம்மனும் இடைச்சேரியில் தயிர் உண்டு பாற்கடலையும் ஆதிசேஷனையும் பாயாலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆனந்த முதலே, தேவயானையின் தாசனே, ஜனன மரணத்திற்கு இடமாய் சப்த தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை தீயினால் தகிக்கப்படும் பொழுது உன்னை துதித்து வந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும்.
தமிழில் அமைந்துள்ள ஒரேழுத்து வர்க்கப் பாடல் பல உள்ளன.
அனைத்துமே அருமையான பாடல்களே
***
TAGS– ஒரேழுத்து ,வர்க்கப் பாடல், அருணகிரிநாதர், காளமேகப் புலவர், பாடல்