WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,883
Date uploaded in London – – 24 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
மஹரிஷி அகஸ்தியர் சரித்திரம்!
அகஸ்தியர் கடல் நீரைக் குடித்த வரலாறு!
ச.நாகராஜன்
அகஸ்திய மஹரிஷி பற்றிய வியத்தகு வரலாறுகளில் அவர் கடல் நீரைக் குடித்ததும் ஒன்று.
மஹாபாரதம் வன பர்வம் இந்த வரலாற்றைச் சுவைபடத் தருகிறது.
முன்னொரு காலத்தில் காலகேயர்கள் என்னும் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் கொடிய யுத்தம் நடந்தது. காலகேயர்கள் இந்த உலகத்திற்கு மிகுந்த கொடுமைகளைப் புரிந்தனர், தேவேந்திரன் அவர்களது தலைவனான விருத்திராசுரனைக் கொன்ற பிறகு அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு சமுத்திரத்தின் அடியில் சென்று ஒளிந்து கொண்டார்கள்.
அங்கிருந்தவாறே தவம் புரியும் முனிவர்களை இரவில் கொல்ல ஆரம்பித்தனர். இன்ன பிற கொடுமைகளை அவர்கள் இழைத்து வர அதைத் தாங்க முடியாத தேவர்கள் வைகுண்டம் சென்று நாராயணனிடம் முறையிட்டனர்.
அவர் தேவர்கள் பால் இரக்கமுற்றார்.
“நீங்கள் ஜெயிக்க வேண்டுமெனில் சமுத்திர ஜலம் வற்ற வேண்டும். ஆனால் அந்தக் காரியம் எளிதல்ல. இதைச் செய்யக்கூடியவர் அகஸ்திய முனிவர் ஒருவரே தான். ஆகவே அவரைச் சரணடையுங்கள்” என்று கூறி அருள் பாலித்தார்.
தேவர்களும் அகஸ்திய மா முனிவரை தரிசித்து அவரைச் சரணடைந்து சமுத்திரத்தில் உள்ள ஜலம் வற்றச் செய்யும் படி வேண்டினர்.
அவரும் அதற்கு இணங்கினார்.
தேவர்கள், ரிஷிகள், மனிதர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், நாகர்கள் புடை சூழ அவர் கடலை நோக்கிச் சென்றார்.
அங்கே அனைவரும் சந்தோஷம் கொள்ளும்படி அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கோபத்துடன் சமுத்திர ஜலத்தைக் கையால் அள்ளிக் குடிக்கலானார்.
இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் இந்தச் செய்கையால் ஆச்சரியமுற்றனர்.
அவர்கள் அவரை நோக்கிக் கீழ்க்கண்டவாறு துதிக்கலாயினர்:
“தாங்களே எங்களுக்கு ரக்ஷகர்.
தாங்களே உலகத்திற்கு சிருஷ்டிகர்த்தா.
தங்களுடைய அருளினால் இந்த உலகமும் தேவர்களும் மிகப் பெரும் அபாயத்திலிருந்து காப்பாற்றப்படுகிறோம்.”
அவரைச் சுற்றி தேவ கோஷம் முழங்கியது.
தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தனர்.
மிகப் பெரும் கடலானது நீரின்றி வற்றிப் போகும்படி அவர் செய்தார்.
தேவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் அஸ்திர சஸ்திரங்களை எடுத்து தைரியத்துடன் அசுரர்களை எதிர் கொண்டனர்.
ரிஷிகளின் சாபத்தினால் ஏற்கனவே தங்கள் பலத்தை இழந்திருந்த அசுரர்கள் தேவர்களின் தாக்குதலைக் கொஞ்ச நேரம் கூட சமாளிக்க முடியாமல் தோற்றனர். அவர்கள் அனைவரும் வதைக்கப்படலாயினர். சில காலகேயரோ பூமியைப் பிளந்து கொண்டு பாதாள லோகத்தின் அடியில் சென்று ஒளிந்து கொண்டனர்.
தேவர்கள் வெற்றி அடைந்தவுடன் அகஸ்தியரை நோக்கி அவர்கள் புகழ் மொழிகளால் அவரைத் துதித்தனர்:
“ஓ! மஹா முனிவரே! தங்களுடைய தயவினால் மனிதர்கள் பெரும் வாழ்வையும் சந்தோஷத்தையும் அடைந்திருக்கின்றனர். தங்களுடைய சக்தியினால் பராக்கிரமசாலிகளான காலகேயர்கள் கொல்லப்பட்டனர். ஓ! பிரம்மாவுக்கு நிகரானவரே! தாங்கள் அருந்திய ஜலத்தை மீண்டும் சமுத்திரத்திற்குத் தந்து அதை நிரம்பச் செய்யுங்கள்”.
இப்படி தேவர்கள் அவரை நோக்கி வேண்ட உடனே அகஸ்தியர், “ தேவர்களே! நான் அருந்திய ஜலம் அனைத்தும் என்னால் ஜீரணிக்கப்பட்டு விட்டது. ஆகவே சமுத்திர ஜலம் நிரம்புவதற்கு வேறு ஏதேனும் ஒரு வழியைத் தேடுங்கள்” என்று கூறினார்.
அதைக் கேட்ட தேவர்கள் ஆச்சரியமும், துக்கமும் அடைந்தனர். அவர்கள் அகஸ்தியரை வணங்கி அவரிடமிருந்து உத்தரவு பெற்று அங்கிருந்து அகன்றனர்.
நேராக பிரம்மாவிடம் சென்ற தேவர்கள், கடலில் மறுபடியும் ஜலம் உண்டாக வேண்டும் என்று அவரை வேண்டினர்.
பிரம்மா, “தேவர்க்ளே, சமுத்திரமானது முன் போல ஜலத்துடன் நிரம்ப வெகு காலம் ஆகும். அவ்வாறு உண்டாவதற்கு பகீரத மஹாராஜனுடைய முன்னோர்களான அறுபதினாயிரம் சகரர்கள் காரணஸ்தர்களாக ஏற்படுவார்கள்” என்றார்.
தேவர்களும் தங்கள் இடம் சென்று அப்படி ஒரு காலத்தை எதிர் நோக்கியவாறே காத்திருக்கலாயினர்.
காலம் சென்றது.
சகரர்கள், பகீரதன் வரலாறு உருவானது.
கடல் மீண்டும் நிரம்பியது.
இப்படி அகஸ்தியர் கடல் நீரைக் குடித்த வரலாறு ஏராளமான புராணங்களிலும், மஹாபாரதத்திலும் இடம் பெற்றது.
***
Tags- கடல், அகஸ்திய , மஹரிஷி, காலகேயர்கள்,