WRITTEN BY B KANNAN, DELHI
Post No. 10,889
Date uploaded in London – – 25 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
இலக்கியத்தில் நையாண்டி, பரிகாசம்!- 1
Written By B.Kannan,Delhi
அன்புடைய தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.
இப்பதிவில் தமிழ், சம்ஸ்க்ருதம், இந்தி மொழிகளில் கவிஞர்கள் சிலர் குறும்பு, குசும்பு, நக்கல், கேலி, பரிகாசம், நையாண்டி கலந்தத் தொனியில் தங்கள் புலமையைப் பாக்கள் மூலம் எப்படி வெளிக்காட்டி இருக்கிறார்கள் என்பதைக் காண்போம்………
முதல் ஏழு வள்ளல்களில் ஒருவனாகிய நளனது வரலாற்றைக் கூறும் நூல்கள் தமிழில் இரண்டுள்ளன. அவற்றுள் தலையாயது நளவெண்பா. மற்றொன்று நைடதம் என்னும் நற்காவி யமாகும். ‘வெண்பாவிற் புகழேந்தி’ என்று புலவரெல்லாம் வியந்து போற்றும் சிறந்த கவிஞரா கிய புகழேந்தியார் நளவெண்பா நூலை இயற்றினார். ‘நைடதம் புலவர்க்கு ஒளடதம்’ என்று நாவலர் நயந்து போற்றும் நைடதக் காவியத்தை நற்றமிழ் வல்ல சிற்றரசனாகிய அதிவீரராம பாண்டியன் ஆக்கினான்.
புகழேந்தியார் தன்னை ஆதரித்த குறுநில மன்னனாகிய சந்திரன் சுவர்க்கியின் அன்பான வேண் டுகோளுக்கு இணங்கியே நளவெண்பாவை யாத்தனர் என்பர். ஆதலின் செய்ந்நன்றி மறவாச் செந்தமிழ்ப் புலவராகிய புகழேந்தியார், தம் நூலில் அம்மன்னனைத் தக்கவாறு போற்றிப் பரவு கின்றார், மனுமுறை தவறாது செங்கோல் செலுத்திய அம் மன்னனே ‘மாமனு நூல் வாழ வரு சந்திரன் சுவர்க்கி’ என்று வாழ்த்தினார். அவனது வளம் பொருந்திய மள்ளுவ நாட்டைச் சொல் லும்போது, ‘வண்டார் வள வயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான் – தண்டார் புனை சந்திரன் சுவர்க்கி’ என்றும் போற்றினார். அவனது கொடை நலத்தைக் கொண்டாடும் புலவர்,‘தாருவெனப் பார்மேல் தருசந்திரன் சுவர்க்கி’ என்றும், ‘சங்கநிதிபோல் தருசந்திரன் சுவர்க்கி’ என்றும் குறிப்பி டுகிறார்.
கொடை வள்ளலாகிய சந்திரன் சுவர்க்கியின் அரசவையில் புகழேந்தியார் தம் நளவெண்பா நூலை அரங்கேற்றினர். அப்போது அந்திப் பொழுதின் வருணனையைக் குறிக்கும் அழகியப் பாடலொன்றைப் பாடிப் புலவர் விளக்கினார். மேற்கே செக்கர் வானம் பட்டுக்கம்பளம் விரித்துக் கொண்டிருந்தது. இயற்கை எனும் சூரியன் மெல்லச் சாயும் அந்திப் பொழுதும் வந்தது. புகழேந் திப் புலவர் அதனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். மல்லிகைப் பூவின் நறுமணம்அவரை இழுத்தது. மெல்லத் திரும்பி முல்லைப் பந்தரின் அருகே இருந்த மல்லிகைச் செடியைப் பார்த் தார். அச்செடியில் தேன் பருக வந்த வண்டு வட்டமடித்து மல்லிகையில் அமர்ந்து ரீங்காரம் செய்வதைக் கண்டார்.
புகழேந்திப் புலவரின் கவி உள்ளத்தின் நெஞ்சிலே – ‘பகல் முழுவதும் பல வண்ண மலர்களில் தேனருந்திய வண்டல்லவா அது! மல்லிகை, முல்லை வெண்மலர்கள் விரிந்து மணம் கமழ, அந்தி மாலைப் பொழுது அரச கம்பீரத்துடன் மெல்ல நடந்து செல்கிறதே’ என்ற உணர்வலை கள் அலை மோதின. அவற்றின் வெளிப்பாடாய்ப் பிறந்ததே இந்த வெண்பா.
“மல்லிகையே வெண்சங்கா வண்டூத, வான்கரும்பு
வில்லி கணை தெரிந்து மெய்காப்ப,-முல்லையெனும்
மென் மாலை தோளசைய, மெல்ல நடந்ததே
புன் மாலை அந்திப் பொழுது.” (நளவெண்பா: 106)
‘மல்லிகைப் பூவை வெண்ணிறச் சங்காய் தேன் வண்டு ஊதி முழங்க, வெண்கரும்பு வில்லை உடைய மன்மதன் ( வால்=வெண்மை + கரும்பு = வான்கரும்பு எனப்புணரும். கரும்பின் மேல்
வெண்சாம்பல் இருப்பதால் வான்கரும்பு என்பர்). அம்புகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு,வசந்தம் மெய்காப்பாளனாகப் பக்கத்தில் வர, மென்மையான முல்லை மாலை தோளில் அசைய, சிறு பொழுதாகிய மாலைக்கால (புன்மாலை) அந்திப்பொழுது மெல்ல நடந்து செல்கிறதே’ என்கிறார்.
பாட்டையும் விளக்கத்தையும் கேட்ட புலவரெல்லாம் உள்ளங் கிளர்ந்து முகமலர்ந்துத் தலை யசைத்தனர். ஒரு புலவர் மட்டும் எழுந்து, இந்த உவமான வர்ணனையில் தவறுள்ளதெனத் தடை கூறினார். சங்கினை ஊதுபவன் அதன் அடிப்புறத்திலன்றோ வாய்வைத்து ஊதுதல் மரபு; அவ்வாறிருக்க,மலரின் மேற்புறத்திலிருந்து ஊதும் வண்டு சங்கூதுவானை யொப்பதுஎங்ஙனம் ? ஆதலின் இக்கற்பனை தவறுடையதாகும் என்று புகழேந்தியார் கருத்தை மறுத்துரைத்தார். இங்குப் புகழேந்தியாரின் புலமை வெளிப்பட்டது.
அது கேட்ட புகழேந்தியார் மகிழ்வோடு அப்புலவரை நோக்கினார். “நீர் கூறிய கருத்துப் பொருத் தமுடையதே; ஆயினும் கள்ளுண்டவனின் நிலைமை எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பது யாவரும் அறிந்த ஒன்று! அவன் கண்களுக்கு அனைத்தும் தலைகீழாய்த்தான் தெரியுமல்லவா? களிமயக்குடன் சங்கை ஊதுவான், அதன் பின்பக்கம் முன்பக்கங்களை அவனால்கண்டுகொள்ள முடியுமா? ஆதலால் பகல் முழுவதும் பறந்துபறந்து மலர்களில் மதுவருந்திய மயக்கத்தில் இருந்த வண்டும் அந்தி வேளையில் களிகொண்டு பூவின் மேல் அமர்ந்து ஊதிற்று; இதில் ஏதும் ஐயமுண்டோ?” என்று அவையிலிருந்தப் புலவரெல்லாம் வியக்குமாறு விடையிறுத்து மேற் சென்றார். மறுப்புரைக் கூறிய புலவர் வாயடைத்து வாளா அமர்ந்தார்
இந்நிகழ்ச்சி, புகழேந்தியாரின் நிகரிலாப் புலமை நயத்தையும், சமத்காரத் திறனையும் விளக்குவதாக அமைந்துள்ளது., அல்லவா?
—————————————————-
இப்போது, சம்ஸ்க்ருதக் காவியத்தில் பொதிந்துள்ள, கேலி, பரிகாசம், நையாண்டி கலந்து வெளிப்படும் நகைச்சுவையைக் காண்போம். கவி ஜயதேவர் குறிப்பிடுவது போல் ‘கவிதை மூலம் சிரிக்க வைப்பவர் மகாகவி பாஸா’ (भासो हस:) ஆவார். கவி குணாட்யா (6 C.E) பைசாசி மொழியில் எழுதிய ‘பிரஹத்கதா’ (நெடுங்கதை) தொகுப்பில் இடம் பெறுகிறது வீரசாகசங்கள் புரியும் வத்ஸராஜன், கௌசாம்பி நகர அரசன் உதயணனின் சரித்திரம். அதன் பின்னணியில் முழுக்க முழுக்க அரசியலைப் பிரதானமாக வைத்து, நான்கு அங்கங்களுடன் ‘பிரதிக்ஞா யௌகந்தராயணம் राप्रतिज्ञायौगन्धरायणम्य), யௌகந்தராயணின் சபதம், என்ற ஒரு சிறு காவிய நாடகத்தை இயற்றினார். இதில் வரும் ஒரு சம்பவத்தில் தான் அவர் நம்மைக் கவிதை மூலம் சிரிக்க வைக்கிறார். அது ஒரு பிரஹஸன (கேலி, பரிகாசம்) சம்பாஷணையாகும். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் எழுதிய முழு நையாண்டி நாடகம் ‘மத்தவிலாஸ (மதுபானப் பிரியர்களின் களியாட்டம்) பிரஹஸனம்’ போல் இல்லாவிட்டாலும் இங்கு வெகு நன்றாகவே அந்த யுக்தியைக் கையாண்டிருக்கிறார்.
இதன் மூன்றாம் அங்கத்தில் மதுக்கடையைச் சுற்றி விவரிக்கப்படும் சம்பவங்கள் ‘மத்த விலாச”த்தில் வருவது போலவே நகைச்சுவையுடன் களியாட்டக் கூத்தாக அமைக்கப் பட்டுள்ளன. பல்லவ மன்னன், கபாலிகன், புத்த பிக்கு, ஒரு மொடாக்குடி யாசிப்பவன் ஆகியோரைப் பரிகசிக்கும் போது, கவி பாஸா, ஒற்றன், மதுபானப் பிரியனானப் பைத்தி யக்காரன், புத்த பிக்கு ஆகிய மூவரை வைத்துக் கொண்டு நையாண்டி செய்கிறார்.
இதுதான் அக்காலக்கட்டத்தில் பரவலாக நடைமுறையில் இருந்த வழக்கம், போலும்!
இதைப் படிக்கும் போது இன்றையத் தமிழகக் குடிமகன்களின் செயல்பாடுகளும், ‘டாஸ்மாக்’ கடைகளின் முன் நடக்கும் களேபரங்களும் நினைவுக்கு வந்தால் நாம் என்ன செய்வது?!
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, இந்நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளது.
TO BE CONTINUED ……………………………
TAGS- நையாண்டி, பரிகாசம், ,மகேந்திரவர்மன் ‘மத்தவிலாஸ பிரஹஸனம், மதுபானப் பிரியர்,