இலக்கியத்தில் நையாண்டி, பரிகாசம்!- Part 2 (10,893)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 10,893

Date uploaded in London – –    26 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பாஸாவின் பிரஹஸன வசனங்களைப் படிக்குமுன் நாடகக் கதையைச் சற்று மேலோட்ட மாகத் தெரிந்து கொண்டால் அவர் செய்யும் கேலியை வெகுவாக ரசிக்க முடியும்……..

கௌசாம்பி நகர மன்னன் உதயணன் ஓர் உல்லாச விரும்பி. ஒருசமயம் வாசுகியின் சகோ தரன் வசுநேமியை ஓர் இக்கட்டிலிருந்து மீட்டதால், அதற்கு நன்றிக் கடனாகத் தன்னிடமிருந்த கோஷவதி எனும் மந்திர வீணையை வசுநேமி அரசனுக்களித்தான். அதை நேர்த்தியாக வாசிக் கவும் பயிற்சியளித்தான். அதன் இசையால் முரட்டுக் காட்டு யானைகளையும், மதம் பிடித்த மத்தகங்களையும் அடக்கி ஆளமுடியும். அந்த வித்தையிலும் உதயணன் கைதேர்ந்தவனாக விளங்கினான். பின்னாளில் வாஸவதத்தையைக் கவர்ந்துசெல்ல அவனுக்கு இது உதவப் போகிறது. இதற்கிடையே அவந்தி இளவரசி வாஸவதத்தயைப் பற்றிக் கேள்வியுற்றவன் அவள் மீது காதல் வயப்படுகிறான்.

தன் ஆளுகைக்கு உட்படாத உதயணைனை வீழ்த்திச் சிறைபிடிக்க அவந்தி அரசன் பிரத்யோதா எனும் சண்டமஹாசேனன் சூழ்ச்சி செய்கிறான். உதயணன் வேட்டையாட வரும் சமயம் தனது யானைக் கூட்டங்களுக்கு இடையே ஒரு பொம்மை மரயானைக்குள் வீரர்களை மறைத்து வைத்து (ட்ரோஜன் ஹார்ஸ் ஞாபகம் வருகிறதா?) அவனைப் பிடிக்க முனைகிறான்.கோஷவதி வீணையை மீட்டியவாறு வந்த உதயணன் “வீராதி வீரன், பூபால நாதன் ஊறெண்ணி மாற்றோர் சூதிட்ட வலையில்” சிக்கி சிறைபடுகிறான். இதைக் கேள்வியுற்ற வத்ஸராஜனின் மதியூகி மந்திரி யௌகந்தராயணன் உதயணனை விடுவிக்க மாறுவேடத்தில் தன் சகாக்களுடன்அவந்தி நகர் சென்று, ஒற்றர்களை எல்லாவிடத்திலும் புகுத்துகிறான். இளவரசியின் யானை பத்திரா வதியின் பாகன் ஆஷாடகனை தன்வயப்படுத்தி அவன் மூலமாகவே தன் ஒற்றன் காத்திர சேவகன் என்பவனை மாற்று மாவுத்தனாக அமர்த்துகிறான். “நிலவைக் கொள்ளும் பாம்பை, நிகர்வார் கையின் மீள, நலியா தரசைக் கொணர்வேன்” என்றும், “மை கொண்ட நீள்விழிக் குமரியை, மன்னனைக் கௌசாம்பி சேர்த்துவேன், நைகின்ற நிலை தீர்ப்பன், இன்றேல் நான் யௌகந்தராயணன் அன்றே!” என்றும் சூளுரைக்கிறான். இது எப்படிச் சாத்தியமாகிறது என்பதை விளக்குவதே மீதிக் கதையாகும்….

மாற்று மாவுத்தன் காத்திரசேவகன் அறிமுகமாகும் காட்சியிலிருந்துக் கேலியும், பரிகாசப் பேச் சுக்கும் கொஞ்சமும் குறைவில்லை. சாராயக் கடையில் மதுவை ருசித்தவாறு வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறான்.பாஸா அவனுக்கு வைத்துள்ளப் பெயரிலேயே நகைச்சுவை மிளிர் கிறது. காத்திரசேவகா= பார்க்கும் வேலையைப் புறக்கணித்து, தன் உடம்பைப் பராமரித்துக் கொள்பவன் என்று பொருள். அதைத் தான் அவன் செய்து கொண்டிருக்கிறான். இளவரசி வாஸ வதத்தை தன் யானை பத்திராவதியுடன் நீராட ஏரிக்குச் செல்லவிருந்ததால், சேனாவீரன் பாக னைத் தேடிச் சுற்றி அலைந்துவிட்டு முடிவில் அப்படிப்பட்டவர்கள் தஞ்சமடையும் அந்த மது சாலைக்கு வந்து சேருகிறான். கடையிலிருந்துத் தனக்குத் தானே பேசிக்கொண்டு வெளியே வருகிறான் காத்திரசேவகன்

பாகன் : யார் என்னை இப்படிக் கூவிக் கூவி அழைப்பது? என்னைப் பார்த்து விட்டமாமனாரோ? இப்போதுதானே அவர் தொட்டுக் கொள்ள மிளகுப் பொடி,உப்பு, நெய் கலந்த மாமிச உருண்டை யைக் கொடுத்துவிட்டுச் சென்றார். டேய், காத்திரசேவகா, நீ குடித்தால் மனையாட்டி குதூகலிக் கிறாள்! ஆனால் மாமியாரோ தடியெடுத்து அடிக்க வருகிறாள், என்ன செய்வது? பிறர் சொல் கேட்டுக் குடிக்காமல் இருப்பவர்கள் அடி முட்டாள்கள்!

  நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது அதிர்ஷ்டமே

  மதுவில் சொட்டச்சொட்ட நனைந்து குடிப்பது ஆனந்தமே

  மதுவில் மூழ்கிக் குளிப்பது பரமானந்தமே 

  மதுவைக் குடித்துத் திக்குமுக்காடுவது எல்லாவற்றுக்கும் மேல் பேரானந்தமே என்று பாடுகிறான்.

வீரன் : ஐயகோ! இதோ வருகிறானே காத்திரசேவகன், குடித்ததால் கண்கள் அடர்ந்தச் செந்நிறச் செம்பருத்திப் பூக்கள் போன்று சிவப்பாய் இருக்கின்றனவே! அடேய் மாவுத்தா உன்னை எங்கெல்லாம் தேடுவது,பத்திராவதியையும் காணவில்லை. இளவரசியார் நீராடப் போகணும், சீக்கிரம் கிளம்பு!

பாகன் : அப்பனே! இதோ பார். சொர்க்க பூமியில் நீயும் நானும் மட்டுமா குடிக்கிறோம், எல்லாரும் குடித்துக் கொண்டு இருக்கிறார்கள். சந்தோஷம், எங்கும் சந்தோஷம்!

வீரன் : இருக்கட்டும்,இருக்கட்டும். பத்திராவதியை அரண்மனைக்கு அழைத்துச் செல்லாமல் இங்கே ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறாய், சொல்!

பாகன் : சுற்றிக் கொண்டு இருக்கிறேனா, நானா? மாமனார் கொடுத்த ‘ஊறுகாயு’டன் மதுவை சுவைக்கிறேன். நண்பனே கோபப்படாதே! இப்போது என்ன செய்யணும், சொல்!

வீரன் : போதும், உன் பிதற்றலை நிறுத்து. உன்னிடமிருந்து வீசும் சாராய வாடை எனக்குக் குமட்டுகிறது. உடனே பத்திராவதியை அழைத்துக் கொண்டு வா!

பாகன் : அப்படியா? வா,வா, ஓடி வா பத்திராவதி, நீராடப் போகலாம்! ஆனால், ஐயோ அவளை எப்படி அங்குசம் இல்லாமல் அடக்கி அழைத்துச் செல்ல முடியும்? அதைத்தான் அடகு வைத்து மது ரசம் குடித்து விட்டேனே! என்ன செய்வது?

வீரன் : அட என்னப்பா? பத்திராவதியே சாது. அதுக்கு ஏன் அங்குசமெல்லாம், தேவையே இல்லை. நேரம் கடத்தாமல் அவளைக் கூப்பிடு, ஓடி வருவாள்!

பாகன் : சரி, சரி இதோ கூப்பிடுகிறேன். வா, அம்மா பத்திராவதி, இளவரசியார் கூப்பிடு கிறாராம் போகலாம் வா! அட, சே! போதை தலைக்கேறியதில் மறந்து விட்டேனே! அவளைப் பிணைக்கும் இரும்புச் சங்கிலியையும் அடகு வைத்து விட்டேனே, என்ன செய்வது?

(அட, இப்படியும் ஒரு வழி இருக்கா, “டாஸ்மாக்” கில் ‘ட்ரை’ பண்ணலாமா?–தமிழகக் குடிமக னின் மூளையில் “பல்ப்” எரிந்தது!)

வீரன் : உனக்கு இது கூடத் தெரியாதா? அவளை மலர்ச் சரங்களாலேயே கட்டி விடலாம், சங்கிலி எதுக்கு வீணாக? போ, உடனே போ!

பாகன் : அப்படியென்றால் சரிதான்! அம்மா பத்திராவதி, கன்றுக்குட்டி போல் துள்ளிக் குதித்து ஓடி வா, பார்க்கலாம்! வா, வா சீக்கிரம் வந்துவிடு! ஐயோ, என்ன ஞாபக மறதி! அவளுடைய கழுத்து கண்டாமணியையும் அல்லவா விற்றுக் குடித்து விட்டேன்!

வீரன் :  நீராடத்தானே போகப் போகிறாள்? அதுக்கு எதற்கு கழுத்தில் மணி அணியணும், அநாவசியம். சீக்கிரம் அவளை அழைத்து வா!

பாகன் : சரி! அம்மாடி, பத்திராவதி ஓடி வந்துவிடு மா! என்னைச் சோதிக்காதே! ஆனால், அச்சச்சோ! சாட்டையையும் விற்றுத் தொலைத்து விட்டேனே, என்ன செய்வது?

வீரன் :  சாட்டையை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்துவிட முடியும்? அது இல்லாமலிருப்பதும் சரியே! சீக்கிரம். இளவரசியார் கோபிப்பார்கள். ஓடு உடனே!

பாகன் : பத்திராவதி, என் செல்லமே, அசைந்து, அசைந்து ஓடி வா பார்க்கலாம்….ஐய்யையோ, நான்…நான்…

வீரன் :  இப்போ என்ன செய்து விட்டாய், சொல்லு!

பாகன் : ஹையோ! பத்திரா…பத்திராவதி.. அதை எப்படிச் சொல்வேன்? பத்திரா, ஹோ, பத்திரா!

வீரன் :  என்னவாயிற்று, இளவரசியின் செல்ல பத்திராவதிக்கு, சொல்

பாகன் : நான் ஒரு மடையன். மது போதையில் என்ன செய்தேன் என்றே புரியவில்லை! மேன்மேலும் குடிக்கும் ஆர்வத்தில் பத்திராவதியையும் அடகு வைத்து விட்டேனே! ராஜ சமூகத்துக்கு என்ன பதில் சொல்வேன்?

வீரன் :  பரவாயில்லை அது உன் குற்றமில்லை! தான் கொடுத்த சாராயத்துக்கு ஈடாக ராஜாங் கத்து யானையைக் கூட குதுவை (அடைமானம்) வைத்துக் கொள்ளும் துணிவு பெற்ற மது சாலைத் தலைவன் மீதே குற்றம், கவலைப்படாதே. அவை திரும்ப வந்துவிடும்.

(சபாஷ்! “டாஸ்மாக்”  சட்டத்தில் இந்த விதிமுறையையும் சேர்த்துக் கொள்ளச் சொன்னால் அது நமக்கு நல்லதா,கெடுதலா, ஆராயச் சொல்லணும்!– குடிமகனின் ‘மைண்ட் வாய்ஸ்!’)

பாகன் : ஐயோ! உன் முதலுக்கு வரவேண்டிய வட்டியை இழக்காதே என்று அவனுக்குச் சொன்னேனே!

வீரன் :  அடேய், உன் புலம்பலை நிறுத்தித் தொலை! அது என்ன பெரும் சத்தம், கேட்கிறதா?

பாகன் : அப்பனே அது என்னவென்று எனக்குத் தெரியும். சாராயக் கடையிலிருந்துப் பிளிறிக் கொண்டு தெறித்து பத்திராவதி ஓடுகிறாள்! வா, நாமும் ஓடுவோம்!…….

இத்துடன் உதயணனும் வாஸவதத்தையைக் கவர்ந்து பட்டத்து யானை நளாகிரியுடனும், யௌகந்தராயணனின் யுக்தியாலும் தப்பித்துச் சென்றுவிடுகிறான். நாடகத்தின் இப்பகுதி  மிகச் சுவாரசியமானது.

நினைத்துப் பாருங்கள், அன்றையப் பண்டமாற்று முறை இன்றும் புழக்கத்தில் இருந்தால் குடி மகன்களின் வீட்டுச் சாமான்கள் எல்லாம் “டாஸ்மாக்” கடைகளில் தான் தஞ்சம் புகுந்திருக்கும்!

அடுத்து ஹிந்தி இலக்கிய வானில் சஞ்சரிப்போம், வாருங்கள்……………தொடரும்

                   ————————————————————————–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: