Post No. 10,895
Date uploaded in London – – 27 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
26-4-22 சித்திரை சதய நன்னாள். அதையொட்டி ஞானமயம் சிறப்பு நிகழ்ச்சியை 24-4-22 அன்று நிகழ்த்தியது. அதில் ஆற்றிய உரை இது.
அப்பர் குரு பூஜைதினம் – 24-4-2022
உரை – பகுதி 1
ச.நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சைவ சமயம் உலகெலாம் தழைக்க வழி வகை செய்யும் சந்நிதானங்களே, பெரியோர்களே, அன்பர்களே, சந்தானம் நாகராஜன் அனைவருக்கும் வணக்கம்.
சித்திரை மாதம் சதய நக்ஷத்திர நன்னாள், அப்பர் பெருமானின் குரு பூஜை தினம். அதையொட்டி நடைபெறும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சைவ சமயம் தழைக்கச் செய்த அதிசய புருஷர்களுள் பெரும் நாவலராக 81 வயது வரை வாழ்ந்து அனைவருக்கும் நல்வழி காட்டிய சொல்லரசர் திருநாவுக்கரசர் ஆவார்.
16000 பதிகங்களை நாவுக்கரசர் பாடியிருப்பதாக உமாபதி சிவாசாரியார் குறிப்பிடுகிறார். ஆனால் நமக்குக் கிடைத்த நாவுக்கரசர் பொக்கிஷத்தில் 312 பதிகங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் உள்ள 3066 பாடல்கள் நம்மிடம் உள்ளன.
ஒவ்வொரு பாடலும் பல இரகசியங்களைத் தரும் பொக்கிஷம். அது மட்டுமல்ல, பெரும் அறிவாளிகளாலும் விடை தர முடியாத கேள்விகளுக்கு அவர் எளிதில் தனது பாடல்கள் மூலம் விடை தருகிறார்.
எந்தக் கேள்விக்கும் இதோ பதில் என்று அவர் தரும் பதில்களைப் பார்க்கும் போது அவர் எவ்வளவு பெரிய பேரருளாளர் என்பதும் தெரிகிறது; உலகில் பிறந்து உலகியலில் சிக்கி பல பிரச்சினைகளை எதிர் கொண்டு, மீள வழி தெரியாமல் தவிக்கும் சாமானியரின் மீது கருணை கொண்டு ரகசியங்களைப் பிட்டுப் பிட்டுத் தரும் அவரது கருணை உள்ளம் நம்மை மெய் சிலிரிக்க வைக்கிறது.
கேள்விகளும் பதில்களும்
உதாரணத்திற்கு சில சிக்கலான கேள்விகளைக் கேட்டு அதற்கு அவர் தரும் பதில்களைப் பார்ப்போம்.
1) ஞானம் எது? கல்வி எது?
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
2) நன்னெறி காட்டுவது எது? நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே
3) நமது வினைகள் ஓடிப் போக என்ன செய்ய வேண்டும்?
ஆடிப்பாடி அண்ணாமலை கை தொழ ஓடிப் போம் நமதுள்ள வினைகளே!
4) துன்பப் படுகிறேன், வினை விடவில்லை, பழைய வினைகள் படுத்துகின்றன, நான் என்ன செய்வது?
அல்லல் என் செயும்? அருவினை என் செயும்? தொல்லை வல்வினை தொந்தம் தான் என் செயும்? தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு எல்லை இல்லதோர் அடிமைப் பூண்டேனுக்கே
5) காக்கைக்கு உடலை இரையாக்குவார் யார்?
பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார் நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார் ஆக்கைக்கே இரை தேடி அலமந்து காக்கைக்கே இரையாகிக் கழிவரே
(ஆக்கை – உடல்)
6) இறைவனது திருவடி நீழல் எப்படி இருக்கும்/
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே!
7) சுவர்க்கம் செல்ல வழி என்ன?
துளக்கில் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும்
8) மெய்ந் நெறி ஞானம் என்றால் என்ன?
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானம் ஆகும்
9) நண்பன் யார்? அவனுக்கு என்ன கொடுப்பது?
கண் பனிக்கும்! கை கூப்பும்! கண் மூன்றும் உடை நண்பனுக்கு எனை நான் கொடுப்பன்!
10) நெஞ்சுக்கு உபதேசம் என்ன?
நக்கரையனை நாள்தொறும் நன்னெஞ்சே!
வக்கரை உறைவானை வணங்கு நீ!!
11) ஈசன் யார்க்கு எளியன்? யார்க்கு அரியன்? வஞ்சகர்க்கு அரியர் போலும், மருவினோர்க்கு எளியர் போலும்!
12) நன்நெறிக் கண் சேராதவர்கள் யார்? “துரிசு அறத் தொண்டு பட்டார்க்கு எளியானை, யாவர்க்கும் அரியான் தன்னை, இன்கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் தெளியானைத்,
திருநாகேச்சரத்து உளானைச் சேராதார் நன்நெறிக் கண் சேராதாரே!
13) கிரகமும், நட்சத்திரமும் சரி இல்லை, என்ன செய்வது?
“நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார், கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம்! குறிக்கொண்மினே!
(குறித்துக் கொள்ளுங்கள்)
14) இடர் தீர வழி? பொன் ஒத்த நிறத்தானும், பொருகடல் தன் ஒத்த நிறத்தானும் அறிகிலாப் புன்னைத் தாது பொழில் புகலூரரை ‘என் அத்தா’ என என் இடர் தீருமே!
15) பிறந்தவர்கள் என்று யாரைச் சொல்லலாம்? வஞ்சர் சிந்தையுள் சேர்விலாதார், கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்தப் பெற்றார் பிறந்தவரே! மற்றுப் பிறந்தவர் பிறந்திலரே!!
16) துயர் கெட வழி? கந்த வார் பொழில் நாகைக்காரோணனைச் சிந்தை செய்யக் கெடும் துயர், திண்ணமே!
17) யாருடைய செல்வத்தை மதிக்கக் கூடாது? ஏன்? சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும், மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம், மாதவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்!
18) யாரைக் கடவுளாக வணங்கலாம்? ஏன்?
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய், ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும், கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளரே!
19) செத்துச் செத்துப் பிறப்பவர் யார்?
திருநாமம் அஞ்செழுத்து செப்பார் ஆகில் தீவண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில் ஒருகாலும் திருக்கோவில் சூழார் ஆகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில் அரு நோய்கள் கெட வெண்ணீறு அணியார் ஆகில் அளி அற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில் பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே!
20) குறை இல்லாமல் இருப்பது எதனால்? சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம், ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே!
இப்படி அள்ள அள்ள குறையாத பதில்கள் அப்பரின் பதிகங்கள் முழுவதும் நிரம்பியுள்ளன.
நம் கேள்விகளுக்கு உரிய பதில்கள் மட்டும் அல்ல அவை! அனைத்தும் அற்புதமான இரகசியங்கள்!
அப்பரின் சிரிப்பு
அப்பர் ஒரே ஒரு வேலையைத் தான், தன் முழு நேர வேலையாகக் கொண்டிருந்தார். அது தான் – இறைவனை அறிவது.
வால் அறிவனை அறிந்து விட்டால் மற்ற அறிவெல்லாம் வந்து விடாதா என்ன?
காட்டிலே, மேட்டிலே, கழனியிலே, கோவிலிலே என அங்கிங்கெனாதபடி கடவுளைத் தேடியவர் அவரைக் கண்டே விட்டார்.
எவ்வளவு உழைப்பு; எத்தனை காலம்!
கடவுளின் இருப்பிடத்தை அறிந்தவுடன் அவருக்கு சிரிப்புத் தான் வந்தது. அதை அப்படியே தமிழில் பாடலாகப் பதிவு செய்து விட்டார்.
பாடல் இது தான்:-
கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித் தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன் உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று வெள்கினேன் வெள்கி நானும் விலா இறச் சிரித்திட்டேனே!
கள்ளத் தொண்டில் நெடுங்காலத்தை அங்கும் இங்குமாய் அதிலும் இதிலுமாய்ப் போக்கினார் அப்பர். கள்ளத் தன்மை போய் தெளிவுற்றவன் ஆனார். அந்த நல்ல நிலையில் அவர் நாடியதைக் கண்டே விட்டார்.
நினைப்பவர்களில் உள்ளே இருந்து அவர்கள் நினைப்பதை எல்லாம் (உடனுக்குடன்) நீ அறிவாய் என்பதை கண்டு கொண்டேன் என்கிறார் அப்பர். இதை நினைத்தவுடன் அவருக்குச் சிரிப்பு தான் வந்தது. ஹஹ்ஹஹ்ஹாவென்று விலாப் புடைக்கச் சிரித்தாராம்.
உள்ளே இருப்பவனை வெளியில் தேடியதற்கு ஒரு சிரிப்பு; உள்ளே இருந்து ஒவ்வொரு கணமும் எண்ணுவதை அறிந்தவனை கள்ள மனத்துடன் யாரும் இதை அறிய மாட்டார்கள் என்று அனைத்தையும் செய்ததற்கு ஒரு சிரிப்பு…..
பாடலைப் படித்து சற்று சிந்தனையுடன் ஆழ்ந்து யோசித்தால் நாம் எதெற்கெல்லாம் சிரிக்க வேண்டும் என்று யோசித்தால் அதற்கே முதல் சிரிப்பு சிரிப்போம்.
நம் சிரிப்பின் வகை நூறையும் தாண்டி விடும்.
கஸ்தூரி மான் ஒன்று கஸ்தூரி வாசனை தன்னிடமிருந்தே வருகிறது என்பதை அறியாது வாசனையைத் தேடி ஒரு அடி முன்னே வைக்கும். அதன் உடலில் இருக்கும் வாசனையும் ஒரு அடி முன்னேறும். இப்படி அடி அடியாய்ப் பாய்ச்சல் பாய்ச்சலாய் அது கஸ்தூரியைத் தேடுமாம் – வாழ்நாள் முழுதும்!
அப்படி கஸ்தூரி மான் போல நெடுங்காலம் உத்தமனைத் தேடிய அப்பர், இறுதியில் இறைவன் அருளால் உள்ளேயே கண்டு கொண்டார் உத்தமனை! அப்போது தான் ஹஹ்ஹஹ்ஹா என்ற விலா எலும்பு ஒடியும்படியான சிரிப்பு வந்தது!
உடம்பு என்னும் மனை அகத்து உள்ளமே தகளி ஆக
மடம்படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பு அமர் காளை தந்தை கழல் அடி காணல் ஆமே
இதை விடத் தெளிவாக இறையைக் காணும் வழியை உரைக்க முடியுமா?
“உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையான உள்கினேன் நானும் காண்பான் உருகினேன்”
என்று நமக்காகத் தம் அனுபவத்தை அப்பர் இப்படி பதிவு செய்கிறார்.
உரையின் அடுத்த பகுதி தொடரும்
Tags-அப்பர் , திருநாவுக்கரசர்