WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,899
Date uploaded in London – – 28 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
அப்பர் குரு பூஜைதினம் – 24-4-2022
உரை – பகுதி 2
ச.நாகராஜன்
நாவுக்கரசர் நாவுக்கு மட்டும் அரசர் அல்ல; தமிழுக்கும் அரசர் அவரே! அற்புதமான அருள் பாக்களைப் பாடியவர் புரட்சிகரமான ஏராளமான கருத்துக்களையும் தேவாரத்தில் ஆங்காங்கே அள்ளித் தெளித்திருப்பதைப் பார்க்கலாம்.
எல்லோரும் மனிதப் பிறவியே வேண்டாம் என்று பாடி இருக்கும் போது அதற்கு மாறாக பூவுலகில் மனிதப் பிறவியும் வேண்டுகின்ற ஒன்று தான் என்று அவர் புரட்சிகரமாகக் கூறுகிறார். ஆனால் அதற்கான நிபந்தனை ஒன்றையும் அவர் விதிப்பதை அறியும் போது எவ்வளவு பெரிய பேரருளாளர் அவர், எவ்வளவு பெரிய சிவ பக்தர் அவர் என்பதை அறிய முடிகிறது.
புரட்சிக்கரசர்
சிதம்பர தரிசனம்
கோயில் என்றாலே அது சிதம்பர ஸ்தலத்தைத் தான் குறிக்கிறது.
ஆடல் வல்லானின் அற்புத தரிசனத்தைக் கண்ணுற்ற அப்பர் பாடுகிறார்:-
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே
என்ன ஒரு அற்புதமான தெய்வீகத் திரு உரு! வளைந்த புருவம், கொவ்வைச் செவ்வாய், அதில் முகிழ்கின்ற குமிண் சிரிப்பு, பவளம் போன்ற மேனி, அதில் தீட்டப்பட்டிருக்கும் அழகிய திருநீறு, இனித்தமுடைய அருள் தரும் பாதங்கள்!
ஆஹா! என்ன ஒரு அற்புதக் காட்சி!
இதைக் கண்டாலே முக்தி நிச்சயம்!
ஆக, இந்தக் காட்சியைக் கண்டு முக்தி பெற்று மீண்டும் மீண்டும் அவன் அருளால் பிறப்பு எடுப்போம். முக்தி பெறுவோம்.
அவன் ஆடல் விளையாட்டை நடத்தட்டும்; நாம் பிறந்து பிறந்து ஆடல் வல்லானின் தரிசனத்தைக் கண்டு கண்டு முக்தி அடைந்து அடைந்து மீண்டும் பிறந்து பிறந்து…..
என்ன ஒரு அற்புதமான கருத்து!
திருப்பாதிரிப்புலியூர் பதிகத்தில் புழுவாகப் பிறந்தாலும் உன் திருவடி மறவாதிருக்க வரம் தா என வேண்டுகிறார்:-
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே.
எல்லாப் பாடல்களிலும் அடிப்படைக் கருத்தாக இழை ஓடுவது சிவ சிந்தனையே!
‘ஒரு முறை அவனை நினைத்தாலே சிவ லோகம் நிச்சயம்;
ஆக அந்த நினைப்பு இருந்தாலே போதும்;
அதிலும் பிறக்கும் பொதெல்லாம் அவனை மறக்காமல், பிறந்து பிறந்து அவனை நினைந்து நினைந்து அவனைத் தரிசனம் செய்யும் சிவ மயமான சுகத்தை இன்னும் அதிகம் பெற வேண்டும்’ என்பது தான் அவரது பாடலின் அடி நாதக் கருத்து!
அடுத்து அவர் பாடல்களில் ஏனையோரின் பாடலில் காண முடியாத மாற்று யோசனைக் கருத்துகளை ஏராளம் காணலாம்.
எடுத்துக்காட்டிற்கு ஒன்று பார்ப்போம்.
காலன் மட்டும் அறிந்த கழலடி!
தரும தேவதையாகத் திகழும் யமனைக் கண்டால் எல்லோருக்கும் ஒரு வெறுப்பு. பயம். கவிஞர்களுக்கோ சொல்லவே வேண்டாம்.
பாரதியார் உட்பட அனைவருமே காலா என்னருகே வாடா, உன்னைக் காலால் சற்றே எட்டி மிதிக்கிறேன் என்ற அளவில் தான் பாடுவர்.
அப்பர் பிரான் சிவனின் காலால் யமன் எட்டி உதைக்கப்பட்ட சம்பவத்தை பற்பல பாடல்களில் எடுத்துக் கூறுவார்.
ஆனால் அவரே யமனின் அதி புத்திசாலித்தனத்தைப் பாராட்டி மகிழும் பாடலும் ஒன்று உண்டு.
யமன் எப்படி புத்திசாலித்தனமாக நடந்து கொண்டான்?
சிவனின் முடியைத் தேடி அலைந்த பிரம்மாவால் அதைக் கண்டுபிடிக்க முடிந்ததா? இல்லை. தோல்வி தான் மிச்சம்.
சிவனின் அடியைத் தேடிச் சென்ற விஷ்ணுவால் அடியைக் காண முடிந்ததா? இல்லை. தோல்வி தான் மிச்சம்.
ஆனானப்பட்ட பிரம்மா, விஷ்ணுவால் செய்ய முடியாத காரியத்தை எப்படிச் செய்வது?
யமன் யோசித்தான்.
மாற்றி யோசித்தான். ஒரு சின்ன தந்திரம் செய்தான்.
Alternative Thinking!!
அதன் விளைவாக சிவ பக்தனான மார்க்கண்டேயன் மீது ‘துணிந்து’ பாசக் கயிறை வீசினான்.
விளைவு, யாருமே பார்க்க முடியாத சிவனின் காலால் உதையுண்டான். சிவன் தரிசனம் சாத்தியமானது.
அந்தக் கழலடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் என்று சொல்லவும் வேண்டுமா?
பாடினார் அப்பரி:-
“மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று, கீழ் இடத்து
மாலும் அறிந்திலன் மால் உற்றதே வழிபாடு செய்யும்
பாலன்மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக்
காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழல் அடியே”
(ஆறாம் திருமுறை – தனித் திரு விருத்தம்- பவளவரைத் தடம் போலும் என்று தொடங்கும் பதிகத்தில் பதினொன்றாம் பாடல்)
காலன் மட்டும் அறிந்த கழலடி சிவனது அடி!
அறிதற்கு அறியா கழல் அடியை யமன் மட்டும் அறிந்ததை அப்பர் இப்படிப் பாராட்டுகிறார்.
இப்படி சுவை ததும்பும் 3066 பாடல்களை முறைப்படி ஓதி, பொருளை ஊன்றி உற்றுக் கவனித்து ஆய்ந்து ஓர்ந்து உணர்ந்தால் அப்படிப்பட்டவர் வேறு ஒரு நூலையும் படிக்க வேண்டிய அவசியமே இல்லை.
4,5,6 ஆகிய மூன்று திருமுறைகளை ஓதுவார், தமிழை அறிவார்; தமிழ் கூறும் தெய்வமான சிவனை அறிவார். அவனை அறிந்த அடியார் தம் பெருமையை அறிவார்.
சேக்கிழார் போற்றும் அப்பர்!
திருநாவுக்கரசு சுவாமிகள் புராணத்தை அற்புதமாகச் சித்தரிக்கும் சேக்கிழார் பெருமான் அவரது வரலாற்றை முடிக்கும் போது கூறும் இரு பாடல்கள் நம்மை நெகிழ வைக்கும்.
மண் முதலாம் உலகேத்த மன்னு திருத் தாண்டகத்தைப்
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று
நண்ணரிய சிவானந்த ஞானவடி வேயாகி
அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார்.
வானவர்கள் மலர்மாரி மண்ணிறைய விண்ணுலகின்
மேனிறைந்த ஐந்து பேரியவொலியும் விரிஞ்சை முதல்
யோனிகளாயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி
தானிறைந்த சித்திரையிற் சதயமாம் திருநாளில்.
இந்த சுபகிருது வருட சித்திரை சதய நன்னாள் விழாவில்
நாவுக்கரசர் காட்டிய வழியைச் சிந்திப்போம். அவ்வழியில் நடப்போம். உயர்வோம். உய்வோம்.
இந்த நல்வாய்ப்பினை எனக்கு நல்கிய லண்டன் திரு கல்யாண்ஜி அவர்களுக்கும் ஆகப் பெரிய அறிஞர்களுக்கும் சிவானந்தத்தில் எப்போதும் திளைக்கும் சிவானுபூதிச் செல்வர்களுக்கும் என் நன்றியைக் கூறி விடை பெறுகிறேன்.
நன்றி வணக்கம்.
***