WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,904
Date uploaded in London – – 29 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
யோக வாசிஷ்டம் கூறும் மனம் பற்றிய ரகசியங்கள்!
ச.நாகராஜன்
உலகின் எந்த நூலும் தராத மனம் பற்றிய அதிசயமான ரகசியங்களை யோக வாசிஷ்டம் தருகிறது
எப்படி ஒரு நடிகன் வெவ்வேறு பாத்திரங்களாக ஆகிறானோ அதே போல மனமும் வெவ்வேறு வேலைகளைச் செய்கிறது; வெவ்வேறு பெயர்களைப் பெறுகிறது.
விதவிதமான கடமைகளை ஒரு மனிதன் செய்யும் போது எப்படி வெவ்வேறு பெயர்களை எடுத்துச் செய்கிறானோ அதே போல மனமும் அதன் வெவ்வேறு செயல்பாடுகளால் வெவ்வேறு பெயர்களைக் கொள்கிறது.
ஒரு மனிதன் எப்படி குளித்தல், கொடுத்தல், வாங்குதல் போன்ற பல்வேறு வேலைகளைச் செய்கிறானோ அதே போல மனமும் வெவ்வேறு விதமான குணாதிசயங்களைக் கொண்டு செயல்படுகிறது.
வெவ்வேறு வேலைகளினால் வெவ்வேறு பெயர்களுடன் காரியகர்த்தாவாக வேலைகளைச் செய்ய வேண்டியதாகி இருக்கிறது. அப்படி அந்த வேலைகளைச் செய்யும் போது மனமானது ஜீவன் (தனிப்பட்ட பிரக்ஞை), ஆசை, செயல் என்ற பல பெயர்களால் விவரிக்கப்படுகிறது.
மனதிற்கான வெவ்வேறு பெயர்களை யோகவாசிஷ்டம் இப்படித் தருகிறது.
- மனம் : முழு பிரக்ஞையுடன் இருப்பது.
- புத்தி: ஒரு கருத்தை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் முடிவைப் பெறுவதால் இது புத்தி எனப்படுகிறது.
- அஹங்காரம் : “நான்” என்ற ஒரு எண்ணம் உள்ளே இருப்பதால் இது அஹங்காரம் எனப்படுகிறது.
- சித்தம் : (எண்ணம்) ஆராய்வதை விட்டு விட்டு ஒரு குழந்தை போல இருக்கும் போது இது சித்தம் எனப்படுகிறது.
- கர்ம : (செயல்) : ஒரு இயக்கமும் அந்த இயக்கத்தின் விளைவும் காரணமாக ஆகி செயல்படுவதால் இது கர்ம எனப்படுகிறது.
- கல்பனா : காகதாலீய நியாயம் என்று ஒன்று உண்டு.காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்தாற் போல என்று சொல்லுவோம். தானாகவே ஒன்றைக் கற்பனை செய்து கொள்வதால் இது கல்பனா என்ற பெயரைப் பெறுகிறது.
- ஸ்மிருதி (நினைவாற்றல்) ஒரு செயலை முன்னமே செய்தது போல காணும் போது அது ஸ்மிருதி எனப்படுகிறது.
- வாஸனா : (ஆசை அல்லது மனப்பதிவு) ஒரு ஆசை அல்லது மனப்பதிவு நுட்பமான ஒன்றாக அது மறைந்த போதிலும் மனப்பதிவாக இருக்கிறது. வார்த்தைகள் அவற்றின் அர்த்தம் அதன் சக்தி ஆகியவை எப்படி நுட்பமாக ஆகாயத்தில் கலந்து இருக்கிறதோ, மற்ற செயல்பாடுகள் இல்லாமல் போகிறதோ, அப்போது அது ஆசை எனப்படுகிறது.
- அவித்யா : (அறியாமை) ஆத்மனின் இயல்பான இயற்கை சுத்தமானது. இதை அறியாமல் இருக்கும் இன்னொரு நிலை தான் அவித்யா
- மலம் : (அசுத்தம்) ஆத்மனை அழிக்கும் ஒன்றாக அமைவதே மலம். தனது இயல்பான சுயத் தன்மையை மறக்கடிப்பதே மலம்.
- மாயா (மாயை) என்றுமுள்ள சத்தை அசத்தாயும், அழியா ஆத்மனை அழியும் ஜீவனாகவும் காண்பிப்பதால் இது மாயா எனப்படுகிறது.
- ப்ரக்ருதி (இயற்கை) : பார்ப்பதை எல்லாம் ப்ரக்ருதத்வமாகக் காண்பிப்பதால் இது இயற்கை எனப்படும் ப்ரக்ருதி எனப்படுகிறது.
- ப்ரஹ்மோத்யாதி (ப்ரஹ்மா இத்யாதி) நுட்பமான எண்ண வடிவில் இருக்கும் உடலானதாக அமைவதால் ப்ரஹ்மா எனப்படுகிறது.
- ஜீவ: (ஜீவன்) ஜீவனாக இலங்குவதால் இது (தனிப்பட்ட ஆத்மா) ஜீவன் எனப்படுகிறது.
- ஆதிவாஹிகதேஹ: ( நுட்பமான எண்ண வடிவிலான சரீரம்) இந்த மனோமயமான எண்ணம் ஒரு ஆரம்பத்தையும் முடிவையும் கொண்டது. உருவமில்லாதது. ஒரு குறையுமில்லாதது. ஆகவே இது ஆதிவாஹிகதேஹம் எனப்படுகிறது.
- இந்திரியம் : (புலன்கள்) இது ஆன்மாவை ஆளும் இந்திரனை மகிழ்ச்சி கொள்ளச் செய்வதால் இது இந்திரியம் எனப்படுகிறது.
- புர்யஷ்டகம் ( எட்டு வித நகரம்) ஐந்து நுட்பமான பூதங்கள் (பஞ்ச பூதங்கள்) ஓசை, தொடுதல், வடிவம் , சுவை, வாசனை ஆகியவற்றை மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றுடன் சேர்ந்து எண்ணங்களின் சேர்க்கையாக இருப்பதால் இது புர்யாஷ்டகம் எனப்படுகிறது.
- தேஹபதார்த்தி : இது உடல் என நினைப்பதால் உடலாகிறது. குடம் என நினைப்பதால் அந்தப் பொருளாக ஆகிறது. ஆகவே இது தேஹபதார்த்தி எனப்படுகிறது.
- தர்சனானந்தரை சஹ மத பேத: (மற்ற கொள்கைகளுடன் வேறுபடுதல்)
ஓ! ராமா! அஹங்காரம், மனம், புத்தி என இப்படி என்னால் உரைக்கப்பட்டது அனைத்தும் அவற்றின் இயற்கை குறித்து என்னால் உருவாக்கப்பட்ட வடிவங்களே. தர்க்கவாதிகளால் இது வேறு வகையாகவும் சொல்லப்படுகிறது. சாங்கிய கொள்கையாளரால் வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. சார்வாகர்களால் (நாத்திகவாதிகளால்) இன்னும் வேறு விதமாகச் சொல்லப்படுகிறது.
என்று இப்படி மனம் பற்றிய ரகசியங்களை வசிஷ்ட மஹாமுனிவர் ராமருக்கு எடுத்துக் கூறுகிறார்.
இந்தப் பகுதியை நன்கு ஊன்றிப் படித்து மனதின் பல்வேறு இயல்புகளை அறிந்து கொள்ளலாம்.
***
TAGS– யோக வாசிஷ்டம், மனம், ரகசியங்கள்!