WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,932
Date uploaded in London – – 4 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ச.நாகராஜன்
மனம் வெளுக்க வழி இல்லையே, எங்கள் முத்துமாரியம்மா என்று பாடினார் மஹாகவி பாரதியார்.
இதே கருத்தைத் தாயுமானவரும் முன்னமேயே வலியுறுத்தி இருக்கிறார்.
மனத்தை நிலை நிறுத்தி நல்லனவற்றில் ஈடுபடச் செய்ய ஒரு வழி உண்டா?
உண்டு என்று சொல்கிறது இராமாயண இதிஹாஸம்.
துளஸிதாஸரின் ராமசரித மானஸத்தை விரிவாக விளக்கி உபந்யாசம் செய்த பெரியோருள் முராரி பாபு என்பவரும் ஒருவர்.
அவர் கல்கத்தாவில் 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி நிகழ்த்திய உரையில் இதைப் பற்றி அழகுற விளக்குகிறார்.
ராமர் யமுனை நதிக் கரையை அடைந்தவுடன் அவரைப் பார்க்க ஏராளமானோர் வந்தனர். அவர்களுள் தாபஸுக்களும் இருந்தனர்.
அதாவது தபஸ்விகள்.
தாபஸு என்றால் என்ன?
தா என்றால் தாளம், லயம், சந்தம் இவை ஒருங்கிணைந்தவர் என்று பொருள். அதாவது வாழ்க்கை முழுவதும் நேர்த்தியாக அமைந்த லய சுத்தமான கட்டுப்பாடு இருப்பதாகும்.
ப என்றால் பவித்ரதா அதாவது தூய்மையும் தெய்வீகமும் இணைந்த தன்மை
சு என்றால் சுந்தரதா. அதாவது தெய்வீக அழகு.
ஒரு குழந்தையின் முகத்தைப் பார்த்தாலேயே நாம் உத்வேகம் பெறுகிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். ஆக இந்த கள்ளம் கபடமில்லாத குழந்தையின் அழகு எப்படி வந்தது என்று வியந்து அந்தக் குழந்தையின் தாய், தந்தையைப் பார்க்கிறோம்.
சுந்தரம் அதாவது அழகின் தாய், தந்தை யார்?
சத்யம் சிவம் ஆகியவையே தாய் தந்தை. சத்யம் சுந்தரதின் தாய். சிவம் தந்தை.
ஆகவே தபஸ் என்பது தூய்மை, கள்ளங்கபடமற்ற தன்மை, அழகு, சத்யம், ஒளி பொருந்திய உள்ளார்ந்த வலிமை ஆகிய அனைத்தும் கொண்டதே ஆகும். தாபஸுக்கள் இவை அனைத்தும் கொண்டவர்கள்.
பொறாமை, பேராசை, கீழானவற்றில் ஈர்ப்பு உள்ளிட்ட பல அழுக்குகள் மனதைச் சுற்றி இருக்கும் போது அதை வெளுப்பது தான் எப்படி?
அதற்குத் தான் ஒரு வழியை துளஸிதாஸர் காட்டுகிறார்.
வினு சத்ஸங்க நஹி ஹரி கதா
தேஹி வினு மோஹ ந சாரா |
மோஹ கயே வினு ராமபத்
தோழி ந த்ருட அனுராக ||
சத்ஸங்கம் இல்லாமல் ஒருவரும் பாகவத கதையைக் கேட்க முடியாது. பாகவத கதை சொல்லும் மஹாத்மா இல்லாமல் ஒருவரும் ராமரின் சரணாரவிந்தத்தை அடைய முடியாது.
இதை அழகுற முராரி பாபு விளக்கி நல்ல ஒரு எடுத்துக்காட்டையும் கூறினார்.
மனதை ஒரு விமானத்துடன் அவர் ஒப்பிட்டார்.
ஒரு விமானம் பறக்க மூன்று நிலைகள் உண்டு.
சுத்தோகரண், ஊஞ்சிகரண், ரூபாந்தர்.
சுத்தோகரண் என்பது விமானத்தை நன்கு சுத்தமாக்கி அதன் ஒவ்வொரு பாகத்தையும் சரிபார்த்து சரியான ஒழுங்கில் வைத்திருப்பதாகும்.
அடுத்து ஊஞ்சிகரண் என்பது விமானம் பறக்கும் நிலை.
அதற்கு தூய்மைப்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தேவை.
அடுத்து ரூபாந்தர் என்ற நிலை. முதல் இரண்டும் சரியாக இருப்பின் விமானம் ஆகாயத்தில் தனது இலக்கை நோக்கி வேகமாக ஒரு வித தடையுமின்றிச் செல்கிறது.
இங்கு பக்தனும் தனது மனம், உடல், ஆன்மாவைச் சுத்தப்படுத்தி ஒழுங்கு படுத்தி ஸத்ஸங்கம் தரும் ஸத்கதாவை எரிபொருளாகக் கொண்டு பறக்க ஆரம்பித்தால் அவன் கிருபையினால் நிரப்பப்பட்டு அவனது லக்ஷியத்தை நோக்கி அடையுமாறு செய்யப்படுவான்.
ஸத்ஸங்கம் என்ன செய்யும்?
பர்த்ருஹரி நீதி சதகத்தில் அழகுற இப்படி விளக்குகிறார்:
ஸத்ஸங்கம் எதைத் தான் செய்யாது?
ஜாட்யம் தியோ ஹரதி ஸிஞ்சதி வாசி ஸத்யம்
மாநோந்நதிம் திஸதி பாபமபாகரோதி |
சேத: ப்ரஸாதயதி திக்ஷூ தநோதி கீர்திம்
ஸத்ஸங்கதி: கதய கிம் ந கரோதி பும்ஸாம் ||
இதன் பொருள்:
பும்ஸாம் – மனிதர்களுக்கு
ஸத்ஸங்கதி: – நல்லோர்களின் சேர்க்கையானது
கிம் ந கரோதி – எதைத் தான் செய்யாது
கதய – சொல்
திய: – புத்தியின்
ஜாட்யம் – மந்தத்தை
ஹரதி – போக்குகிறது
வாசி – வாக்கில்
ஸத்யம் – ஸத்யத்தை
ஸிஞ்சதி – ஊற்றுகிறது
மானோந்நதிம் – உயர்ந்த கௌரவத்தை
திசதி – கொடுக்கிறது
பாபம் – பாபத்தை
அபாகரோதி – போக்கடிக்கிறது
சேத: – மனதை
ப்ரஸாதயதி – தெளிவாக்குகிறது
திக்ஷூ – நான்கு திக்கிலும்
கீர்த்திம் – கீர்த்தியை
தநோதி – பரவச் செய்கிறது.
நல்லோரின் சேர்க்கை புத்தியினுடைய மூடத்தனத்தை நீக்கி விடுகிறது. பேச்சில் சத்தியத்தைத் தருகிறது. சம்மானத்தில் உண்டாகும் அதிக பெருமையை (அதிக கௌரவத்தை) கொடுக்கிறது. பாபத்தைப் போக்கடிக்கிறது. மனதைத் தெளிவாக்குகிறது. நான்கு திசைகளிலும் புகழைப் பரவச் செய்கிறது. மனிதர்களுக்கு ஸத் ஸங்கம் எந்த நன்மையைத் தான் செய்யவில்லை (ஓ, தோழனே நீ சொல்!)
ஸத்ஸங்கம் அடைந்தவுடன் மனம் சொல்கிறது :
நஷ்ட மோஹ: கத சந்தேஹ:
மோகம் ஒழிந்தது; சந்தேகம் அகன்றது.
ஆதி சங்கரர மோக்ஷம் என்பதற்கான விளக்கத்தை அழகுறச் சொல்கிறார்:
மோ என்றா மோஹம் க்ஷ என்றால் க்ஷயம் அதாவது நாசமடைவது.
மோஹம் அகல்வதே மோக்ஷம் ஆகும்.
இதைத் தருவது ஸத்ஸங்கமே!
துளஸிதாசர் வழியே இதை அறியும் போது ஆனந்தம் ஏற்படுகிறதல்லவா?
***
tags- துளஸிதாசர், மனம் , வழி!