Post No. 10,944
Date uploaded in London – – 6 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
மூலக வரிசையில் பலேடியம் (PALLADIUM) என்னும் உலோகம் முக்கியமான ஒன்றாகும். இது தங்கத்தை விட விலை உயர்ந்தது. இதையும் தங்கத்தையும் கலந்து பல் கட்டப் பயன்படுத்துகிறார்கள். வெள்ளி போன்ற பள பளப்பு உடையதால் நகைத்தொழிலும் பயன்படுகிறது. தங்கம், பிளாட்டினம் நாணயங்களை வாங்கி, எதிர்காலத்தில் விலை உயரும் என்று எண்ணி, முதலீடு செய்வோர் பலேடியம் நாணயங்களை வாங்கி விலா லாக்கருக்குள் (Lockers) வைக்கின்றனர். இந்தக் கட்டுரை எழுதும் நாளில் (மே , 2022) ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1900 டாலர் என்றால் பலேடியத்தின் விலை 2500 டாலர் ஆகும்.
தங் கத்தின் விலையை விடக் கூடுதல் விலை கொண்ட பலேடியம் பற்றிய சுவையான செய்திகளைக் காண்போம். ஒருகாலத்தில் இதை உதவாக்கரை தங்கம் (Useless Gold) என்று பெயரிட்டனர். பெரும்பாலும் தங்கம் வெட்டி எடுக்கும்போது அதனுடன் சேர்ந்து வெள்ளி நிற உலோகம் கொண்ட இந்த உலோகமும் கிடைத்தது. அப்போது இது ஒரு தனி மூலகம்/தனிமம் (Element) என்பது உலகிற்குத் தெரியாது . சரஸ்வதி போல, கிரேக்க நாட்டில் அறிவுத் தெய்வமாக வழிபட்ட தெய்வம் அதீனா(Athena) ; அவளுக்கு அடைமொழி பல்லாஸ் அதீனா(Pallas Athena) . அதாவது பல்லேடியும் என்னும் ஊரில் குடிகொண்ட தெய்வம். அங்கிருந்து கிரேக்க வீரன் ஆடிசியஸ் (Odysseus) என்பவன் பலேடியம் சிலைகளைத் திருடுவதை இன்றும் பழங்கால கிரேக்க பானைகளில் காணலாம். ஒருகாலத்தில் நாம் துர்க்கையை போருக்கு முன் வழிபடுவது போல கிரேக்கர்களும் ரோமானியர்க்ளும் போரில் இந்திச் சிலையை எடுத்துச் சென்றனர். கோட்டைகளை முற்றுகை இட்டால் பல்லேடியும் தேவதைகளை கோட்டையைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்வர். அதன் அர்த்தம் – பாதுகாப்பு (Security and Protection) ; துர்கம் என்றாலும் கோட்டை; அதாவது நமக்கு பாதுகாப்பு தருபவள் துர்க்கை.
அந்தக் காலத்த்தில் போருக்கு உதவிய பலேடியம் இப்பொழுது பொருளாதாரத்தில் உதவுகிறது; அதாவது முதலீடு (Investment) செய்தால் பாதுகாப்பு தருகிறது. தங்க நாணயங்களை வெளியிடுவது போல கனடா போன்ற பல நாடுகள் அவ்வப்போது ஒரு அவுன்ஸ் பலேடிய நாணயங்களையும் வெளியிடுகின்றன.
xxx
உடலுக்கு உதவுமா?
நமது மனித உடலில் பலேடியம் மிகச் சிறிய அளவே திசுக்களில்(Tissues) காணப்டுகிறது. ஆகையால் இதற்கு ஒரு உபயோகமும் இல்லை. ஆயினும் இது எளிதில் கரையாதது , அரிக்க முடியாதது; ஆகையால் பல் கட்ட தங்கத்துக்கும் வெள்ளிக்கும் மாற்றாக அல்லது அவற்றுடன் சேர்ந்து இந்த உலோகத்தைப் பயன்படுத்துகின்றனர்.
xxx
முக்கிய உபயோகம்
காரிலிருந்தும் சாலையில் செல்லும் வாகனங்களில் இருந்தும் வரும் விஷப்புகையை தூய்மைப்படுத்த உதவும் (Catalytic Convertors) கருவிகளில் இது அதிகமாகப் பயன்படுகிறது. நகைகள் செய்யவும் இதை உபயோகிக்கின்றனர். பல மின்சார சாதனங்களிலும் இதன் பூச்சு இருக்கும் .
நகைத் தொழிலில் இதற்கு வெள்ளைத் தங்கம் (White Gold) என்று பெயர் பாலியஸ்டர் , கண்ணாடி, பாட்டில் தொழில்களிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள்
xxx
கிடைக்கும் இடங்கள்
தென் ஆப்பிரிக்கா , அமெரிக்கா , கனடா ரஷியா , ஜிம்பாப்வே , பிரேசில் முதலிய நாடுகளில் இந்த உலோகம் கிடைக்கிறது
இதன் வரலாறு மிகவும் சுவையானது . ஒரு கிறிஸ்தவ மதப் பிரசாரகருக்கு (Clergyman) 14 குழந்தைகள். அவர்களில் ஒருவர் பெயர் வில்லியம் ஹைட் உல்லாஸ்ட்டன் Wiiliam Hyde Wollaston 1766- 1828) . அவர் படித்தது மருத்துவப் படிப்பு ; கொஞ்ச காலம் டாக்டராகப் பணியாற்றிவிட்டு ரசாயனப் பொருட்களின் ஆராய்ச்சியில் இறங்கினார். அவருடன் ஸ்மித்சன் டென்னன்ட் (Smithson Tennant) என்பவரும் சேர்ந்து கொண்டார்.
பலேடியம் , ரோடியம் , ஆஸ்மியம், இரிடியம் ஆகியன ஒரே (same group) அணியைச் சேர்ந்த மூலகங்கள். ஆயினும் பலேடியம் ஒரு மூலகம் என்பதை உலகிற்கு முறையாக எடுத்த்துரைத்தவர் உல்லாஸ்ட்டன் தான் . முதலில் இதை புதிய வெள்ளி (New Silver) என்ற பெயரில் லண்டன் சோஹோ (Soho, London) மார்க்கெட்டில் விற்றனர்.அப்போது தங்கத்தை விட அது ஆறுமடங்கு விலை அதிகமானது. அதை விலைக்கு வாங்கிய ரசாயன நிபுணர் ரிச்சர்ட் செனிவிக்ஸ் (Richard Chenevix) அது புதிய உலோகம் அல்ல; பிளாட்டினம்,- பாதரசத்தின் கலப்பு உலோகமே என்று விஞ்ஞானிகள் கூட்டத்தில் அறிவித்தார். உடனே நிக்கல்சன் ஜர்னல் என்ற பத்திரிக்கையில் உல்லாஸ்ட்டன் சவால் விட்டார். வேறு எவரேனும் வேறு ஒரு உலோகத்தில் இருந்து பலேடியத்தை எடுத்துக்காட்டினால் நான் 20 பவுன் தருகிறேன் என்று விளம்பரம் செய்தார்! தற்காலத்தில் 20 பவுனின் மதிப்பு 2000 பவுனுக்கு மேல்.
அவர் விட்ட சவாலை யாரும் ஏற்க வில்லை. பின்னர் தானே விஞ்ஞானிகள் கூட்டத்தில் அதை முறையாக அறிவித்தார். தான் இதை ரகசியமாக வைத்திருந்ததாகவும் தனது கண்டுபிடிப்பின் முழுப் பலனும் தனக்கே கிடைக்க இப்படிச் செய்ததாகவும் உரையாற்றினார்
xxx
ரசாயன குணங்கள்
தனிமத்தின் குறியீடு – பி டி (Pd)
அணு எண் – 46
உருகு நிலை – 1552 டிகிரி C சி
கொதி நிலை 3140 டிகிரி C சி
பலேடியம் வெள்ளை நிற உலோகம். இதைத் தங்கம், வெள்ளி போல மெல்லிய தகடுகளாகச் செய்யமுடியும் ; மூலக அட்டவணையில் 10 என்னும் அணியைச் சேர்ந்தது. அதில் விலை உயர்ந்த பிளாட்டினமும் உளது. இதற்கு ஆறு ஐசடோப்புகள் (Isotopes) உண்டு; அவற்றில் எதற்கும் கதிரியக்கம் இல்லை.
xxx
சர்ப்ரைஸ் அறிவிப்பு
பலேடியத்தின் ஒரு அதிசய குணம் அது தன் அளவைப்போல 900 மடங்கு ஹைட்ரஜனை (Hydrogen) எடுத்துக்கொள்ளும் .உலோகத்தில் ஊடுருவிப் பரவவும் செய்யும். இதனால் காற்றிலிருந்து ஹைட்ரஜன் வாயுவைப் பிரித்தெடுக்க இதை பயன்படுத்தினர்.1989-ல் இருவர்( MARTIN FLEISCHMANN & STANLEY PONS ) ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தைக் கூட்டி பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டனர் பலேடியம், லித்தியம் கூட்டுப்பொருளை/ உப்பைப் பயன்படுத்தி மின்சாரம் உண்டாக்க முடியும் என்று காட்டினார்கள். அப்போது நடக்கும் ரசாயன நிகழ்வு ‘சாதாரண வெப்ப நிலையில் அணுக்கள் இணைப்பு’ (COLD FUSION) போன்றது என்றனர். இதன் விளைவாக வெப்பமும் ஹீலியமும் கிடைக்கும் என்றனர்; வெப்பம் உருவாக அணு இணைப்பு காரணம் (Fusion) இல்லை; மேலும் இது செலவுமிக்க சோதனை என்று மற்றவர் கூற அந்த பரபரப்பு அடங்கிப்போனது.
(இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்தால் பிரமாண்டமான ஹைட்ரஜன் குண்டு வெடித்து ஹீலியம் உருவாகும்; இதற்கு பிரம்மாண்ட வெப்பம் தேவை; இப்படி ஒவ்வொரு நொடியிலும் சூரியனுக்குள் கோடிக்கணக்கான ஹைட்ரஜன் குண்டுகள் வெடிப்பதால்தான் சூரியன் நமக்கு ஒளியையும், வெப்பத்தையும் தருகிறது )
–சுபம் —
TAGS— பலேடியம் ,PALLADIUM, பல் கட்ட , உதவும்,