WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,942
Date uploaded in London – – 6 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
மனிதர்களை மரம் போல நினை!
ச.நாகராஜன்
மரங்கள் அடர்ந்த காட்டிற்குள் நுழையும் போது விதவிதமான மரங்களை அங்கு காண்கிறோம்.
எல்லா மரங்களையும் நாம் பார்த்து மகிழ்கிறோம்; விரும்புகிறோம்.
ஒரு மரம் உயரமாக இருக்கிறது; இன்னொன்று குட்டையாக இருக்கிறது.
ஒரு மரம் வளைந்து இருக்கிறது; ஒரு மரம் நிமிர்ந்து செல்கிறது.
ஒரு மரம் பசுமையாக இருக்கிறது; இன்னொரு மரம் வாடி இருக்கிறது.
ஒரு மரம் கனிகளுடன் இருக்கிறது; இன்னொன்று பட்டுப் போய் இருக்கிறது.
அனைத்து மரங்களையும் அதன் வடிவத்தின் படியும், அது எப்படி இருக்கிறதோ அதே நிலையின் படியும் ஏற்றுக் கொள்கிறோம்; மகிழ்கிறோம்.
ஆனால் மனிதர்களுடன் பழகும் போது மட்டும் நாம் வேறு படுகிறோம்.
ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். நீ இப்படி இருக்கிறாய்; நீ அப்படி இருக்கிறாய் என்று தொடர்ந்து விமர்சனம் செய்கிறோம்.
இந்தப் பழக்கத்தை விட்டு விட்டு மரங்களைப் பார்க்கும் போது அடையும் மகிழ்ச்சியைக் கொள்வது போல, ஒவ்வொருவரையும் அவரவர் நிலையில் அப்படியே ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைதல் வேண்டும்.
விமர்சனத்தை விட்டு விட வேண்டும்.
அனைவருடனும் அன்பு பாராட்டி நடந்தால் உலகமே சொர்க்கமாகி விடும், அப்படி நடப்பவருக்கு!
*
புத்த பிட்சு ஒருவர் அந்தி நேரத்தில் இருள் படரத் தொடங்கிய நேரத்தில் நடந்து கொண்டிருந்தார்.
ஏதோ ஒன்றின் மேல் கால் வைத்த போது சடக் என்று சத்தம் கேட்டது.
இருட்டில் கீழே பார்த்தார். அது ஒரு சூல் கொண்ட தவளை.
அதன் மேல் கால் வைத்ததால் அது நசுங்கி விட்டது.
பிட்சு மனம் நொந்தார். ஒரு உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்பது அல்லவா புத்தமதம் கூறும் எட்டு கொள்கைகளுள் ஒன்று.
இப்படிச் செய்து விட்டோமே என்று அவர் நொந்து படுக்கப் போனார்.
அவர் கனவில் ஆயிரக்கணக்கான தவளைகள் தோன்றி அவரை வதைத்தன.
காலையில் எழுந்து தான் வந்த வழியில் சென்று பார்த்தார் – தான் கொன்ற தவளையை ஒரு பார்வை பார்க்க!
என்ன ஆச்சரியம் அது தவளையே இல்லை. அது ஒரு சிறு மரக் கொட்டை.
அது பிதுங்கி இருந்தது. அது தான் சடக் என்ற சப்தத்தைப் போட்டிருக்கிறது.
There is no objective world – புற உலகம் என்று ஒன்று இல்லை என்ற புத்தரின் போதனையை அவர் இப்போது புரிந்து கொண்டார்.
மனதில் ஏற்படும் அக உலகத்தால் தான் அனைத்தும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட அவர் மகிழ்ச்சி அடைந்தார்.
*
புத்தரைப் பார்க்க வந்த பெரியவர் ஒருவர் அவரிடம், “ஐயனே! வார்த்தைகளே வேண்டாம். வார்த்தைகள் பயனற்றவை. வார்த்தைகள் இல்லாமல் உங்கள் உபதேசத்தை அருளுங்களேன்” என்றார்.
புத்தர் அவரைக் கருணையுடன் பார்த்தார்.
ஒன்றுமே பேசவில்லை.
பெரியவர் புத்தரின் கருணைப் பார்வையையே பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்னர் சற்று நேரம் கழித்து, “ஐயனே! உங்கள் அன்பு மழையில் நனைந்து விட்டேன். எனக்கு எல்லாம் புரிந்து விட்டது. அன்பு ஒன்று தான் எல்லாம். பேச்சுக்கே இடமில்லை. நான் வருகிறேன்” என்று கிளம்பினார்.
அவர் சென்ற பிறகு புத்தர் கூறினார்: “ஒரு நல்ல குதிரை சவுக்கின் நிழலைப் பார்த்தால் கூடப் பறக்கும்”
**
tags- மரம், புத்தர் , தவளை , பிட்சு