WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,975
Date uploaded in London – – 13 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ஹெல்த்கேர் மே 2022 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
அலங்காரம் செய்து கொண்டு உடலைப் பேணுங்கள்!
ச.நாகராஜன்
புராதனமான பாரதத்தில் பெண்கள் தனியொரு முக்கியத்துவத்தைக் கொண்டு வாழ்க்கையில் பிரதானமான பங்கு வகித்து வந்தார்கள் என்பதை நமது இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
பெண்கள் சிறு வயது முதல் உடலைப் பேணிப் பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கு எத்தனை வழிகள் உண்டோ அத்தனையையும் நமது நூல்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன.
பெண்களுக்கு 16 வித அலங்காரங்கள் உண்டு.
இவற்றைச் செய்து கொண்டு உடலைப் பேணிப் பாதுகாத்து தன் கணவன், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தாரையும், அண்டை அயலாரையும் தனது அன்பான நடை, உடை, பாவனைகளால் மகிழ்விக்க வேண்டும் என்பது அடிப்படையான வாழ்க்கை நெறியாக அமைந்து இருந்தது.
16 வித அலங்காரங்களைப் பற்றி வல்லப தேவர் தனது சுபாஷிதாவளி என்ற நூலில் விவரமாகக் குறிப்பிடுகிறார்.
அவையாவன:
1) ஸ்நானம்
2) அழகிய ஆடை
3) திலகம்
4) கண்ணுக்கு மை
5) காதணி
6) மூக்குத்தி
7) கூந்தல் அலங்காரம்
8) ரவிக்கை (மார்க்கச்சு)
9) சிலம்பணி (நூபுரம்)
10) நறுமணம் (உடல் முழுவதும் வீசும் சுகந்த மணம்)
11) வளையல்
12) பாத அழகு (கொலுசு உள்ளிட்டவை)
13) மேகலை
14) தாம்பூலம்
15) மோதிரம்
16) அலங்காரம் செய்யும் திறமை
இதே போல இந்த 16 வகைகளை ரஸ கௌமுதி என்ற நூலும் மிக விவரமாகக் குறிப்பிடுகிறது.
இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்படும் (கதா) நாயகிகளின் அழகை இந்தப் பதினாறையும் சொல்லி விவரிப்பது இலக்கிய மரபாக இருந்தது.
ஶ்ரீ ரூப கோஸ்வாமி தனது ஶ்ரீ ராதா ப்ரகரணம் என்ற நூலில் ராதையை இந்த பதினாறையும் சொல்லி வர்ணிக்கிறார்.
கேஸ அலங்காரம் என்று எடுத்துக் கொண்டால் கூந்தலை எப்படிப் பேணிப் பாதுகாத்து வளர்ப்பது என்று ஒரு பெரிய நூலையே எழுதி விடலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை சாந்து, கண் மை உள்ளிட்டவற்றை ஆங்காங்கே உள்ள பெண்மணிகள் கூடி ஒருங்கிணைந்து தாமே செய்து கொள்வதை அனைவரும் அறிவோம்.
நதிகளில் குளிப்பது ஒரு விதமான மூலிகைக் குளியலாக அமைந்து உடலில் இருக்கும் அனைத்து ரத்த நாளங்களையும் ஊக்குவித்து, தோலையும் அழுக்கற்றதாக்கி மேனியைப் பளபளப்பாக்கி வந்தது.
நோயில்லா நெறி என்ற தஞ்சை சரஸ்வதி மஹால் வெளியீட்டில் காவிரி, தாமிரபரணி, வைகை உள்ளிட்ட ஆறுகளின் நீர் எந்த விதமான அருமையான தன்மைகளைக் கொண்டு நன்மைகளைத் தருகிறது என்பதை விளக்கிக் கூறுகிறது.
இவ்வளவு அலங்கார பூஷிதையாக இருக்கும் பெண்மணிக்குத் திருஷ்டிப் பொட்டு வைப்பதும் ஒரு வித கலையாக இருந்தது.
காதம்பரி, சாகுந்தலம், ருது சம்ஹாரம் உள்ளிட்ட நூல்களை பெண்களும் ஆண்களும் ஒரு முறையேனும் படித்தால் நம் பண்டைய மரபில் அழகு எப்படிப் பேணிப் பாதுகாக்கப்பட்டு போற்றப்பட்டு வந்தது என்பதை அறியலாம்.
சிலப்பதிகாரத்தில் கண்ணகியை வர்ணிக்கும் இளங்கோ அடிகள் “வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்” என்கிறார்.
பூமா தேவியே கண்ணகியின் வண்ணச் சீறடியை – பாதங்களைப் பார்த்ததில்லையாம்.
அப்படி இல்லத்திலேயே போற்றி வளர்க்கப்பட்டவள் அவள்.
திருமணத்திற்கு முன் தினம் ‘மெஹந்தி கி ராத்’ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் கூட ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெண்கள் மெஹந்தி அலங்காரம் செய்து கொள்வதை அனைவரும் அறிவோம்.
ஆக நமது இன்றைய நாளில் மகளிர் அனைவரும், கன்னியராக இருந்தாலும் சரி, மணம் முடித்தவராக இருந்தாலும் சரி உடலை அக்கறையோடு பாதுகாத்து இயல்பான அழகுக்கு மெருகூட்டும் விதத்தில் 16 வகையான அலங்கார வகைகளைச் செய்து இன்னும் கொஞ்சம் அழகைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
உலகளாவிய விதத்தில் நவீன நாகரிக நாரீமணிகள் அலங்காரத்தை மேற்கொள்வது வியக்க வைக்கும் ஒரு பெரிய வணிகமாக ஆகி விட்டது.
உலக ஃபேஷன் தொழிலின் மொத்த மதிப்பு இன்று : 3000 பில்லியன் டாலர்கள் ( ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி; ஒரு டாலரின் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 76 ரூபாய்! மொத்த மதிப்பை நீங்களே இந்திய ரூபாயில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!)
இதில் பெண்களுக்கான ஆடை அணி அலங்காரம் மட்டும் 621 பில்லியன் டாலர்கள்!
மணப் பெண்களில் அலங்கார ஆடைகள் மட்டும் 57 பில்லியன் டாலர்கள்!
அடிப்படையான ஃபேஷியல் வகைகள் 7.
7 வகையான அடிப்படை முகங்களில் தாங்கள் எந்த வகை என்பதைப் பெண்மணிகள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
மேனியின் பளபளப்பைத் திகைக்க வைக்கும் அளவு கூட்டும் பொருள்கள் இன்றைய சந்தையில் உள்ளன.
லோஷன், சீரம், மாய்ஸ்சரைஸர் என்று இந்தப் பட்டியல் மிக நீண்ட ஒன்று.
நமக்குத் தேவையானவற்றை உடலுக்கு ஏற்றபடி தேர்ந்தெடுக்க வேண்டும்.
பழைய காலத்தில் (கிராமங்களில் பெண்மணிகள் கூடி) இதற்கென நேரம் ஒதுக்கியது போல இன்றைய அவசர – சாஃப்ட்வேர் – கணினி யுகத்திலும் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும்.
இதனால் தனக்கு தீவிரமான வியாதிகள் வராமல் தடுப்பதோடு தானும் ஆரோக்கியமாக இருந்து தான் உருவாக்கும் சந்ததியரும் ஆரோக்கியமானவர்களாக இருக்க ஒவ்வொரு பெண்மணியும் உதவி செய்யலாம்.
அழகு என்றால் என்ன?
பார்க்கும் ஒவ்வொரு தடவையும் ஒரு நுட்பமான நூதன உணர்வை பார்ப்பவரின் மனதில் ஏற்படுத்துவது தான் அழகு!
அனைவரும் சற்று அழகாகத் தான் இருப்போமே!
***
tags- அலங்காரம், அழகு, பெண்மணிகள்