WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,986
Date uploaded in London – – 15 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
வேதத்தை நன்கு அறிய இதிஹாஸ புராணங்களைப் படிக்க வேண்டும்!
ச.நாகராஜன்
வேதங்களை ஓதுதல் அந்தணர் கடமை. அதில் உள்ள நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்ள ஆன்றோர், ரிஷிகள், மஹான்கள் உதவி தேவை. அது மட்டுமல்லாமல் இதிஹாஸ புராணங்களை முறைப்படி பெரியோர் வாயிலாகக் கற்றுணர வேண்டும்.
வேதம் பிரதிக்ஞா ரூபமாக உள்ளது. இதில் பல மர்மங்கள் உள்ளன. இதை அறிய ஹேது, திருஷ்டாந்த ரூபமாக உள்ள ஸ்மிருதி, சூத்ர, இதிஹாஸ, புராண அறிவு தேவை.
அந்தணர் அல்லாதவர்க்காக இராமாயணம், மஹாபாரதம், புராணங்கள் இயற்றப்பட்டன என்று கூறுவது தவறு. பெண்களுக்காக (அவர்கள் வேதம் ஓத முடியாது என்பதால்) இவை இயற்றப்பட்டன என்று கூறுவதும் தவறு.
அனைவருக்குமானதே இதிஹாஸ புராணங்கள்.
பாதராயண முனிவர் என்னும் மஹரிஷி இப்படிக் கூறுகிறார்:
“எவன் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்து இதிஹாஸ புராணங்களைக் கற்றறிந்து கொள்ளவில்லையோ அந்த அல்ப ஆராய்ச்சி உடையவனிடம் வேதமானது, “அந்தோ! நம்மை இவன் தாறுமாறாய்க் கெடுத்து விடுவானே” என்று பயந்து நடுங்குகிறது.
‘இதிஹாஸ புராணங்களினால் வேதத்தை நிச்சயித்துக் கொள்க” என்பது ஆன்றோர் வாக்கு.
முற்காலத்தில் இப்படி ப்ரதிக்ஞா, ஹேது, திருஷ்டாந்தம் என்ற முறைப்படி அனைவரும் கற்று வந்தனர்.
தற்காலத்திலோ பாதி பாதியாய் ஸ்மிருதி அறிவு கொஞ்சம், சில புராணங்களின் சில பகுதிகள், ராமாயணம் கொஞ்சம், மஹாபாரதம் கொஞ்சம் என்று கற்று, நினைத்ததைச் சொல்ல ஆரம்பித்ததால் ஆஸ்திகர்களுக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது; நாஸ்திகர்களுக்கோ அது கொண்டாட்டமானது.
வேத ரிஷிகள் கட்டளைகளைச் சொல்லும் போது அறிவியல் பூர்வமான சோதனைச்சாலை பரிசோதனை முறைகளையும் அதன் முடிவுகளையும் ஏன் எடுத்துக்காட்டவில்லை என்பது அறிவு ஜீவிகளின் கேள்வி.
இவர்களால் அறிவியல் அறிஞர்கள் – விஞ்ஞானிகள் சொல்வதை உடனே நம்ப முடிகிறது. அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த கொள்கைகளை, ‘நாங்கள் நினைத்தது தவறு; இதோ இப்படித் தான் இன்றைய முடிவு இருக்கிறது’ என்று சொல்லும் போதெல்லாம் பகுத்தறிவுவாதிகள் கொண்டாடுகின்றனர்.
புதிய கொள்கை கண்டுபிடிக்கப்பட்டது என்று கொண்டாட்டம்; பழைய கொள்கைகளை ஏன் தவறாகச் சொன்னாய்; அதை நம்பி அல்லவோ இத்தனை நாங்கள் நடந்து வந்தோம் என்று எவரும் கேள்வி கேட்பதில்லை.
எடுத்துக்காட்டிற்கு ஆயிரமாயிரம் விஷயங்கள் இருந்தாலும் ஒரே ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.
வலது பக்க மூளை, இடது பக்க மூளை என்று இரு பகுதிகளாக மூளையைப் பிரித்து அதன் அடிப்படையில் செல்ஃப் இம்ப்ரூவ்மெண்ட் வகுப்புகளில் ஆயிரம் விஷயங்களைச் சொன்னோம். இன்றோ அதெல்லாம் ஒன்றுமில்லை, மூளை ஒன்று தான் என்று இன்றைய கொள்கை கிளம்புகிறது!
‘நியூட்டன் போய்விட்டார்; அவர் கொள்கையும் போனது; ஐன்ஸ்டீன் வந்து விட்டார், புதிய கொள்கை ஆனது’ என்று அறிவியல் கூறும் போது அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.
பிக் பேங் என்கிறார் ஒருவர்! அந்த பெரிய ஓட்டை கொள்கையில் ஒரு ஓட்டை இருக்கிறது என்கிறார் இன்னொரு விஞ்ஞானி.
ஒரு சிறு பையனுக்கு வியாதி வந்த போது என்ன செய்கிறோம்? பத்திய சாப்பாடு கொடுத்து மருந்தையும் கொடுக்கிறோம். அந்தச் சிறுவன் இதைச் சாப்பிட மறுத்தால் என்ன செய்கிறோம்.
அவனிடம் வாத, பித்த, ச்லேஷ்ம தத்துவங்களையோ மாத்திரையில் உள்ள பொருள்களை விவரித்து அது எப்படி உடலில் வேலை செய்கிறது என்றோ விளக்கமா கொடுக்கிறோம்? அது சாத்தியமா, அப்படியே செய்தாலும் சிறு வயதுச் சிறுவனுக்கு அது புரியுமா?
வற்புறுத்தி அதைக் கொடுக்கிறோம். அவன் குணமாகிறான். அவன் குணமாவது தான் மருந்தின் செயல்பாட்டிற்கான நிரூபணம். ப்ரூஃப்!
அதே போல மஹரிஷிகள் ஒவ்வொரு விஷயத்திற்கும் அது சாமான்யனின் புத்திக்கெட்டாமல் இருக்கும் போது யுக்தி, ஹேது ஆகியவற்றால் அவற்றை விளக்காமல் இதைச் செய்; நலம் பயக்கும் என்கின்றனர்.
இங்கு சிறுவனுக்கு மருந்து கொடுத்த வைத்யரின் அறிவுக்கும் சிறுவனின் அறிவுக்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளதோ அதே போலத் தான் ரிஷிகளுக்கும் அவர்கள் உபதேசத்தைக் கேட்போருக்கும் வேறுபாடு உள்ளது.
வேதத்தில் சொல்லப்பட்ட விஷயங்களையே மனு, ப்ருஹஸ்பதி, தக்ஷர், கௌதமர், யமர், அங்கிரஸ், யாக்ஞவல்க்யர், ப்ரசேதஸ், சாதாதபர், பராசரர், ஸம்வர்த்தர், உசநஸ், சங்கரர், லிகிதர், அத்ரி, விஷ்ணு, ஆபஸ்தம்பர், ஹாரிதர் ஆகிய பதினெட்டு மஹரிஷிகள் தாங்கள் இயற்றிய மூல ஸ்மிருதிகளில் சொல்லியுள்ளனர்; விளக்கியுள்ளனர்.
இன்னும் ஜாபாலி, நசிகேதஸ், ஸ்கந்தர், லோகாக்ஷி, கஸ்யபர், வியாஸர், ஸநத்குமாரர், சந்தனு, ஜனகர், வியாக்ரபாதர், காத்யாயனர், ஜாதுகர்ணர், கபிஞ்ஜலர், போதாயனர், கணாதர், விஸ்வாமித்ரர், பைடினஸி, கோபிலர், வஸிஷ்டர், நாரதர், ஸுமந்து, பிதாமஹர், பப்ரு, கராஷ்னாஜினி, ஸத்தியவ்ருதர், கார்க்கியர், தேவலர், ஜமதக்நி, பரத்வாஜர், புலஸ்தியர், க்ருது, ஆத்ரேயர், சாகலேயர், மரீசி, வத்ஸர், பாஸ்கரர், ருச்யஸ்ருங்கர், பைஜாவாபர் ஆகிய ரிஷிகள் இயற்றிய உபஸ்மிருதிகள் பல வேத விஷயங்களை எடுத்துக் கூறுகின்றன.
அடுத்து, ப்ராம்மம், பாத்மம், லிங்கம், வாராஹம், வாமனம், ஸ்காந்தம், ஆக்நேயம், ப்ரும்மவைவர்த்தம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீயம், பவிஷ்யத், மார்க்கண்டேயம், கௌர்மம், காருடம், ப்ரும்மாண்டம் ஆகிய பதினெட்டு புராணங்கள் வேத கொள்கைகளை விளக்குகின்றன.
இன்னும் ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரு இதிஹாஸங்களும், உசனர், காளீ, ஸநத்குமாரர், கபிலர் ஆகியோர் இயற்றிய உபபுராணங்களும் படிக்க உள்ளன.
இவை அனைத்தையும் அல்லவோ படிக்க வேண்டும், எதையும் கீழ்த்தரமாக விமரிசிப்பதற்கு முன்!
அரைகுறையாகப் படித்து கேள்விகளை முன் வைக்கும் நாத்திகர்களைப் பார்க்காதே; அவர்களுடன் பேசாதே; அவர்களுக்கு ஒன்றும் புரியாது; சிறுவனுக்கு மருந்து மஹிமை சொல்லி விளக்க முடியாத தன்மை போல அவர்களுக்கு அவர்களது மனப்பக்குவத்தில் விளக்கம் தர முடியாது; அனுபவத்தால் அவர்கள் உணர்வார்கள் என்பதே பெரியோர் தரும் அன்புரை; அறிவுரை!
ஆகவே வேதங்களை மதிப்போம்; வேதம் ஓதுவோரைப் போற்றுவோம்.
ஸ்மிருதி, சூத்ர, புராண, இதிஹாஸங்களை விளக்கும் பெரியோர்களை, உபந்யாசகர்களை ஆதரிப்போம்; உயர்வோமாக!
***