
Post No. 10,997
Date uploaded in London – – 17 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
பிரஹேலிகா–பிரகேளிகை
Written By B.Kannan,Delhi
அன்புடைய தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்
பிரபலக் கவிஞர்கள் தாங்கள் எடுத்துரைக்க விரும்பும் பொருளை, படிப்பவர்கள் நேரடியாகப் புரிந்துகொள்ள வைக்காமல் மறைத்து வைத்து, அதே சமயம் வெளிப்படையாக வேறு பொருள் படக் கூறுவது ஓர் இலக்கியப் பாணியாகும். இவ்வுத்தியைச் சம்ஸ்கிருதத்தில் “பிரஹேலிகா” “பிரேளிகை”(புதிர்) என்பர். (புரை (=சிக்கல்) + எளி (=சுளுவாகு) + கை = புரேளிகை > பிரேளிகை = சுளுவாக்கப்படும் சிக்கல் எனப்படும். “பிரகேளிகை”( புதிர் விளையாட்டு) என்றும், தமிழில் “விடுகவி” எனவும் அழைப்பர். வாசகரின் உய்த்துணர் திறனுக்கும், சிந்தனையாற்றலுக்கும் தூண்டுகோலாகவும் சவாலாகவும. இருக்கவல்லது. மேலும்,
இவ்வகை இலக்கியம் கவியின் கற்பனாசக்திக்கும்,சொற்களைச் சரியாகக் கையாளும் அவர்களது திறமைக்கும் எடுத்துக் காட்டாக விளங்குகிறது. இயல்பான எழுத்து அல்லது இயல்பு நவிற்சிக்கு மாறாக வார்த்தை அலங்கார அணியில் எழுதும் முறையான வக்ரோக்தியும் மற்றொன்று. வக்ர + உக்தி எனப் பிரிவுபட்டுக் கோணற்கூற்றுமுறை, மறைமுகக்கூற்று, எனப் பொருள்படும். அதாவது எதையும் நேராகப் பேச்சு வழக்கிலுள்ளது அல்லது அறிவுநூல்களில் உள்ளது போன்ற முறையில் அல்லாமல் சுற்றி வளைத்து அழகுபடுத்திக் கூறுதல் என்பதாகும்.இதுவும் ஏறக்குறைய இவ்வகையைச் சேர்ந்ததே.
இவை சொற்பிரேளிகை, பொருட்பிரேளிகை என இருவகையில் அறியப்படுகிறது. சித்திரக் கவியின் ஓர் அங்கமாகும் இவ்வணி அலங்காரம்.
சொற்பிரேளிகை. கிட்டத்தட்ட விடுகதை போல்தான். ஒரு சொல் மறைந்திருக்கும், கண்டு பிடிக்க வேண்டும். வீட்டில் பாட்டிமார்கள் இருந்தால் “மரக்கால்” கணக்கில் இப்படிக் கேட்டி ருக்கக் கூடும்!
முதலில் தமிழில் பார்ப்போம்……. (இணையத்தில் கண்டெடுத்தது)
விதையிருக்கும் ஆனாலோ கனியு மன்று
வீச்சிருக்கும் அரிவாளோ இல்லை, உள்ளே
பதமுடைய பண்கொஞ்சும் குயிலோ இல்லை
பாவாணர்க் குறவாகும், ஆனால் அஃதோ
இதமுடைய எழுத்தாணி தானு மன்று
இடைவிட்டுக் கதைசொல்லும் , பாட்டி யன்று
எதுவெனவே நீர்கணித்துச் சொல்க, இன்றேல்
இதிலிரண்டால் உமைக்கடித்துக் குதற வைப்பேன்.
விடை –கவிதை
இடையெழுத்து வி போனால் கதை என்றாகும்
இதிலிரண்டு- கவி கவி அதாவது குரங்கு . குரங்கை ஏவிக் கடிக்க வைப்பேன் என்பது பொருள்.
இதோ இன்னுமொன்று:
வாரணமாய் முழங்கிடனும் யானை யன்று
வான்கிளர் நீர் த் தெனி னுமொரு பறவை யன்று
சீரிய தாய் வரும்போங்கா லுடைய தன்று
செந்நாவா யுறி னுமுண வண்ப தன்று
மாரிபெயச் செய்திடினுந் தேவு மன்று
வண்மகர ராசியுறு மங்கு லன்று
தேருமெவர் தோய்ந்திடினும் வேசை யன்று
தென்னகுலை யூருளதென் செப்பு வீரே -( மயில்வாகனப் பிள்ளை- நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து)
பெரிதாகப் பிளிறினாலும் யானை இல்லை
வானை நோக்கி எழுந்தாலும், பறவையல்ல
வந்துகொண்டே இருக்கும் ஆனால் அழிவில்லை,
நாவும், வாயும் இருந்தாலும் உண்பதற்கு அல்ல
மழை பெய்ய வைத்தாலும் தேவனல்ல
மகரராசியானாலும் வானத்தில் அல்ல
வெப்பத்தால் சிவந்தாலும் (சிவப்புச் சாயம் கலந்தாலும்) செம்பருத்திப் பூவல்ல
தென்னங்குலையும் என் மேல் உருளும்,நான் யார் சொல்லுங்கள்!
நீர்த்து–தன்மை உடையது / நீரை உடையது
நாவாய்– நாவும், வாயும் / மரக்கலம்
மகரராசி– 12 ராசிகளுள் ஒன்று / சுறாக் கூட்டம்
விடை–கடல் / சமுத்திரம்
சம்ஸ்கிருதத்தில்…
वृक्षाग्रवासी न च पक्षिराजः
त्रिणेत्रधारी न च शूलपाणिः ।
त्वग्वस्त्रधारी न च सिद्धयोगी
जलं च बिभ्रन्न घटो न मेघः ॥
மரத்தின் மேல் குடியிருப்பேன், ஆனால் பறவை அல்ல,
மூன்று கண்கள் உண்டு, ஆனால் பரமசிவன் அல்ல
மரவுரி தரித்திருப்பேன், ஆனால் துறவி அல்ல
சுற்றி வளைத்து நீர் தேக்கியிருப்பேன், ஆனால் குடுவையோ, மேகமோ அல்ல
அப்படியென்றால் நான் யார்? —-தேங்காய் / இளநீர்
XXXX
பொருட்பிரேளிகை
ஒரே விடைதான் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் பொருள் ஒத்துப்போக வேண்டும்.
கோ தினகு லேச்சரத்தே கொங்கைப் பற்றி வாய்ப்புகுத்திச்
சாதிவய தோடுபயஞ் சார்முறைநா-ணீதியின்றி
யெல்லினும்யார் நின்றாலு மெவ்வுறுப்புந் தொட்டுநகைத்
தல்லசொலிக் கொஞ்சுவரே யார்? ( மயில்வாகனப் பிள்ளை- நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து)
இதுவே எளிய தமிழில்…….
கொங்கை பிடித்திழுப்பான், கூடவே வாய்புதைப்பான்
எங்கேயும் முத்த-இதம் பெறுவான் – சங்கையின்றி
ஆடையும் இன்றி அலைவான், இதைப்பார்த்துப்
பீடையெனத் திட்டப் பெறான்
விடை
ஆண்குழந்தை, பாலன் என்றும் சொல்லலாம், பாலகன் என்னலாம்.
ஆனால் பொருள் ஒன்றுதான். எனவே இது பொருட்பிரேளிகை.
दन्तैर्हीनः शिलाभक्षी निर्जीवो बहुभाषकः ।
गुणस्यूतिसमृद्धोऽपि परपादेन गच्छति ॥
பற்கள் கிடையாது ஆனால் கடிப்பேன், கற்களைச் சாப்பிடுவேன், உயிர் இல்லை ஆனால் உரக்கச் சத்தம் போட்டுப் ‘பேசுவேன்’ பல குணாதிசயங்கள் என்னிடமுண்டு, பிறர் உதவியால் நடப்பேன், நான் யார்?
விடை: பாதேயம், செருப்பு, ஜோடு (புதுச் செருப்பு கடிக்கும், சரக், புரக் என்று தேய்த்துச் சத்தமிடும், சடக் சடக் என்று குதிகாலில் அடித்துக் கொள்ளும்)
சரி விளையாடியது போதும், தீவிரமாகத் தலைப்புப் பொருளுக்குள் போவோமா?
முத்துக்குமாரசேகரர் என்ற இயற்பெயரைக் கொண்ட முத்துக்குமார கவிராயர் அம்பல வாணப்பிள்ளைக்கும் சிங்க விதானையார் மகளுக்கும் மகனாக யாழ்ப்பாணம், உடுவிலில் பிறந்தார். சிறு வயது முதல் தந்தையரிடம் தமிழ் கற்று புலமை பெற்றார் என்பர். இவர் கவிபாடும் வன்மையில் மிகச் சிறந்தவர். இவர் கவிகளைக் கேட்டுணர்த்த கற்றோர் இவரைக் கவிராசர் என்று அழைத்தனர். சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் இவருக்கு பேரர்.ஆவார். சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் இவரும் ஆறுமுக நாவலரும் மற்றும் சங்கரபண்டி தரும் யாழ்ப்பாணத்தில் கிறித்து மதத்தினரின் போலிப் பிரசாரத்துக்கு, மக்களை மயங்கி வருந்தாது தடுத்தனர் என்றும் இவர்களின் கண்டனங்களால் கிறித்துவ மதக் கொள்கைகள் வலியிழந்து தடுமாறியது என்று பின்வருஞ் செய்யுளில் மதுரை வித்துவான் சபாபதி முதலியார் கூறியுள்ளார்…
முத்துக் குமார கவிராசா சேகரன் மொய்யமரிற்
றத்தித் தட்க்குண்டு நாவலர் தாவச் சவிமடித்து
சித்தங் கெடவுட றாமொத ரேந்தரன் சிதைந்தபைபிள்
செத்துக் கிடக்குது பார்சிவ சங்கரன் றெம்முனைக்கே,
இவர் தனிப்பாடல்கள் பல இயற்றியிருந்த போதிலும் அவை அச்சு வடிவில் வெளிவரவில்லை என்பது மனவருத்தத்தையே அளிக்கிறது. எல்லாமே செவிவழி வந்ததாகவே உள்ளன. இவரது பேரர் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் “முத்தக பஞ்ச விஞ்சதி” என்னும் பெயரில் 25 செய்யுட் கள் அடங்கிய நூலாக வெளியிட்டார். இவை தில்லை நடராசர், நல்லூர் முருகன் மற்றும் மாவை எனும் மாவிட்டபுரம் முருகன் மீது பாடப்பட்டவை ஆகும். அவையெல்லாம் பிரேளி கையின் உப்பிரிவாகக் கருதப்படும் “நாமாந்தரிதை” அலங்கார அணியைச் சேர்ந்ததாகும்.
நாமாந்தரிதை என்பது கருதியபொருளை வேறு பெயர்களில் மறைத்து வைப்பதாகும். தமிழி லக்கியச் சோலையில் இவ்வகையில் அமைந்த மனங்கவரும் மலரையொத்தப் பாக்கள் பல உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த கொட்டம்பட்டி கருப்பையா நாவலர், ஈழம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கவிஞர்கள் முத்துக்குமார கவிராயர், சேனாதிராயர் முதலியார், க. மயில்வாகனப் புல வர் ஆகியோர் இயற்றியுள்ளச் சில நாமாந்தரிதைப் பாடல்களைப் பார்க்கப் போகிறோம்….
பாத்திரப் பெயர்கள்:
பன்னி ரண்டு கரகந் தனையெட்டு
பானை யைத்துண் டதரக் குயவனை
முன்னி ரண்டு குடங்கையி லேந்தியை
முட்டி முட்டிமல் லார்மாவச் சாடியைப்
பொன்இ ரண்டு பெறும்பெருஞ் செட்டியைப்
போற்று வீர்புல வீர்சக ரந்தனை
முன்னர் வைத்த கலசம்பத் தும்பெறீஇ
முதன்மை சால்பெரு வாழ்வுறன் மெய்ம்மையே
(சுன்னாகம் முத்துக்குமார கவிராயர், தனிப்பாடல்)
உரை: பன்னிரண்டு கர கந்தனை– 12 கைகளையுடைய கந்தசாமியை,
எள், துப்பு, ஆனைஐ துண்டம், அதரம் குயம் அனை முன் இரண்டு குடங்கையில் ஏந்தியை–எள் பூ, பவளம், யானையையும் முறையே நிகர்த்த மூக்கு, அதரம், முலை முதலியவற்றை உடைய உமையம்மையால்
முன்பே உள்ளங்கை இரண்டினாலும் ஏந்தி வளர்ந்தருளப் பட்டவரை,
முட்டி முட்டி மல்லார் மாவைச் சாடியை– பலமுறை எதிர்த்துப் போராடி வலி நிறைந்த மாமர வடிவாய் நின்ற சூரபத்மனைச் சம்ஹாரம் செய்தருளியவரை,
பொன் இரண்டு பெறும் பெரும் செட்டியை– தெய்வானை, வள்ளி ஆகிய இருவரையும் தேவியராகப் பெற்றுக்கொண்ட பெரியச் செட்டியை,
புலவீர் போற்றூவீர்– புலவர்களே போற்றுங்கள்,
சகரந்தனை முன்னர் வைத்த கலசம் பத்தும் பெறீ இ– சகல சம்பத்துக்களையும் பெற்று,
முதன்மை சால் பெருவாழ்வுறன் மெய்ம்மையே– முதன்மை நிறைந்த பெருவாழ்வினை அடைவது நிச்சயம்.
இதில் குறிக்கப்பட்டுள்ள நாமங்களான கரகம்,பானை, குடம், முட்டி, சாடி, கலசம், சால் என்பவை பாத்திரப் பெயர்கள்
துப்பு=பவளம், துண்டம்=மூக்கு, குயம்=ஸ்தனம், அனை=அன்னை, குடங்கை=உள்ளங்கை
கரகத்தைப் பானையைச் சாடியைச் சட்டியைத் துதித்தால்(ஆறுமுகன்) 16பேறும் பெற்றுச் சுகமுடன் வாழலாம் எனப் பொருள் கொள்க.
வேறொரு சான்று. இதில் 12 ராசிப் பெயர்களின் மூலம் சொல்ல வேண்டிய விஷயம் சொல்லப்படுகிறது.
மேடமுகைப் பவன்றாதை யிடப மேறி
மிதுனவடி கடகமுழந் தாள்கொள் சிங்கா த்
தேடுனெழிற் கன்னி துலா நிகர்த்த நீதி
சிறந்தயன்றன் செய்யவிருச் சிக்கங் கொய்தா
னாடுநலத் தன்னை தனு நிகர்கொ ணொற்றி
நவின் மகரக் குழைக்கும்ப முலைசேன் மீனங்
கூடுவிழி யுடையவடன் கொழுநன் யாரே ற்
குலவுமெழி னகுலைநகர் க் கோயி லானே — ( புலவர் மயில்வாகனப் பிள்ளை பாடல்)
மேடம் உகைப்பவன் தாதை– ஆட்டுக்கிடா வாகனத்தை மிக விரும்பும் கந்தவேளின் தந்தை
இடப மேறி– ரிஷப வாகனம் ஏறும்
மிதுன அடி- உபய பாதம், இரு கால்களும்
கடக முழந்தாள் கொள்–நண்டு போன்ற முழ்ந்தாள்
சிங்காத் தேடு எழிற் கன்னி–குறையில்லா அழகுடையப் பெண்
துலா நிகர்த்த நீதி சிறந்த என்றன்– தராசுமுள் போல் இடம் பெயராமல் சிறந்த நீதி வழங்கும்
செய் அவிர் உச்சிக் கம் கொய்தான்– செவ்விய, பிரகாசமான உச்சித் தலையை அறுத்த வயிரவர்
நாடு நலத் தன்னை–பூமியை ரக்ஷிக்க
தனு நிகர் ஒற்றி–வில்லின் உதவியால்
நவின் மகரக்குழை– அழகான சுறாமீன் போன்ற காதணியைத் தரித்தவள்
கும்ப முலைசேன்–கலசம் (அ)யானையின் மத்தகம் போன்ற ஸ்தனங்களையுடைய
மீன கூடுவிழி யுடையவடன் கொழுநன் யாரே– மீனின் அழகியக் கண்களை உடைய உமையவளின் பதியே
குலவு எழின் குலைநகர்க் கோயிலானே- எழில் நிறைந்த நகுலை நகரில் கோயில் கொண்டுள்ள நகுலேச்சுரரே!
ஈழத்துத் தமிழ்க் கவிஞர்களின் கைவண்ணம் இப்படியென்றால், நம் தமிழகப் புலவர்களின் ”நாமாந்தரிதை” திறமை அவர்களுக்குச் சிறிதும் குறைந்ததில்லை என்பதை அடுத்துக் காண இருக்கிறோம்….. (தொடரும்)
TAGS- சொற்பிரேளிகை, பொருட்பிரேளிகை, கவிதைகள், பிரஹேலிகா