FOR PICTURES GO TO swamiindology.blogspot.com
WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,999
Date uploaded in London – – 18 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
17-5-2022 மாலைமலர் இதழில் மீண்டும் அமெரிக்கா செல்வோம் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரை!
லேக் டாஹோ, டைம் ஸ்குயர், க்ராண்ட் கான்யான் – அமெரிக்க டூர்!
ச.நாகராஜன்
பண பலம், பயணம் செய்து சுற்றிப் பார்க்க ஓய்வு நாட்கள், உடல் வலு, திட்டம் தீட்டவும் உதவவும் நண்பர்கள், உறவினர்கள் – இவை எந்த ஒரு பயணத்திற்கும் தேவை.
அதிர்ஷ்டவசமாக அமெரிக்காவில் சொந்தக் குடும்பமும், நண்பர்களும், உறவினர்களும் இருக்கவே அந்த சொர்க்கபுரியின் முக்கியமான இடங்களைப் பார்க்க முடிந்தது.
லேக் டாஹோ
அற்புதமான லேக் டாஹோ ஏரி வர்ணனைக்கு அப்பாற்பட்ட அழகிய ஏரி. சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து 200 மைல் தூரத்தில் உள்ள இந்த அழகிய இடத்தை, காரில் சென்றால் சுமார் மூன்றரை மணி நேரத்தில் அடைந்து விடலாம். வளைந்து நெளிந்து செல்லும் அழகிய பாதை. எங்கு பார்த்தாலும் பனி. சாலைகளில் பனி படர்ந்து வெள்ளையாக இருப்பதைப் பார்ப்பதே ஒரு தனி அனுபவம். இந்தப் பனிபடர்ந்த சாலையில் கார் வழுக்கி விடாதா? ஆங்காங்கே உள்ள பனிப்படலத்தை விசேஷ வாகனங்கள் அகற்றிக் கொண்டே இருக்கின்றன. இது தவிர கார்களில் இந்தச் சாலையில் செல்வதற்கெனவே விசேஷ டயர்கள் உள்ளன. அவற்றைக் காரில் பொருத்திக் கொள்ள வேண்டும். அப்போது பயப்படத் தேவை இல்லை.
இருமருங்கும் பனி. மலை, செடி, பாதை அனைத்தும் வெள்ளைவெளேரென இருப்பதைப் பார்த்தாலேயே மனதில் ஒரு உற்சாகம் ஏற்படும்.
டாஹோ ஏரியை அடைந்தாலோ பசுமையான காட்சிகள்! காலார நடக்கலாம்; உண்ணலாம்; ஓய்வெடுக்கலாம்.
டாஹோ ஏரி 22 மைல் நீளமும் 12 மைல் அகலமும் 72 மைல் நீளமுள்ள ஏரிக்கரையையும் 1640 அடி ஆழமும் கொண்ட பிரம்மாண்டமான அழகிய ஏரி. பைன் காடுகள் சுற்றி இருக்க அழகுக்கு அழகு செய்யும் இந்த இடத்திற்கு ஆண்டு முழுவதும் பயணிகள் வந்து கொண்டே இருக்கிறார்கள். என்றாலும் அங்கு செல்ல மார்ச் முதல் மே மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் மிகவும் உகந்த காலம்.
அங்குள்ள கேபிள் கார் விண்ணில் பயணிக்கும் ஒன்று. கண்ணாடியுடன் கூடிய ஒரு க்ளாஸ் கேபினில் 8 பேர் அமரலாம். 2.4 மைல் விண்ணில் செல்லும் இந்த கேபிள் கார் பயணம் மூச்சை நிறுத்திச் சிலிர்க்க வைக்கும் ஒரு பயணமாகும். இடையில் உள்ள ஸ்டேஷன் ஒன்றில் கேபிள் கார் நிற்கும். அங்கு இறங்கி, காட்சி காண்பதற்காக உள்ள இடத்தில் நின்று சுற்றுப்புறத்தைப் பார்த்தால் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சியைப் பார்க்கலாம்; வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. ஒரு கோடி டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விண் பயண வழி நம்மை 874 அடி உயரத்தில் பயணப்பட வைக்கிறது.
இந்தப் பகுதி மூன்றில் இரு பங்கு கலிபோர்னியா மாநிலத்திலும் ஒரு பங்கு நெவேடா மாநிலத்திலும் அமைந்துள்ளது. மாநிலங்களைப் பிரிக்கும் எல்லைக் கோடு அருகே நின்று கொண்டு ஒரு நிமிடத்தில் அங்குமிங்குமாகச் சென்று நான் இரு மாநிலங்களில் இருக்கிறேன் என்று வேடிக்கையாகக் கூவலாம்.
க்ராண்ட் கான்யான்
அரிஜோனா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள மகன் விடுத்த அழைப்பால் அந்தப் பகுதிக்குச் சென்ற போது க்ராண்ட் கான்யான் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
அரிஜோனா அருகில் உள்ள 277 மைல் பரந்து விரிந்துள்ள க்ராண்ட் கான்யான் பள்ளத்தாக்கு வியப்பூட்டும் இயற்கைக் காட்சிகளை அளிக்கும் ஒரு பகுதி. 6000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கையும் மலைப்பகுதியையும் பார்க்க வசதியாக பார்வை இடங்கள் உள்ளன.
அங்கிருந்து பார்க்கும் போது ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யாராய்-ப்ரசாந்த் நடனமாடும் எனக்கே எனக்கா பாடலில் ஷூட் செய்யப்பட்ட க்ராண்ட் கான்யானைப் பார்த்து பிரமிக்கலாம். தள்ளி இருக்கும் வட்டமான பகுதியைச் சுற்றி கிடு கிடு பள்ளம்; அங்கு எப்படி அவர்கள் சென்று தைரியமாக ஆடினார்கள்; ஹெலிகாப்டரின் உதவி இல்லாமல் அங்கு இதை சாதிக்க முடியாதே; இயக்குநர் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும்; ஒளிப்பதிவாளர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்றெல்லாம் பேசிக் கொண்டே மேலும் கீழுமாக படிக்கட்டுகளில் சென்றவாறு பரவசம் அடைந்தோம்; ஏராளமான வீடியோ காட்சிகள் பயணிகளால் எடுக்கப்படுகின்றன. நாங்களும் எடுத்தோம்.
சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் காரில் ஏறிப் புறப்பட்டு அரை மணி நேரம் பயணப்பட்ட பின்னர் வீடியோ கேமரா எங்கே என்று கேட்ட போது தான் விவரம் தெரிந்தது; அது க்ராண்ட் கான்யான் மேடையிலேயே விடப்பட்டிருக்கிறது என்று. மிகவும் விலை உயர்ந்த வீடியோ கேமரா! உடனடியாக காரைத் திருப்பி மீண்டும் அதே இடத்திற்கு வந்து அந்த மேடைக்குச் சென்று பார்த்தால் ….. அந்த கேமரா அப்படியே இருந்தது. அது தான் அமெரிக்கா! எவரும் அதை எடுத்துச் செல்லவில்லை. மிக்க மகிழ்ச்சியுடன் கான்யானை வாழ்த்தி விட்டுப் புறப்பட்டோம்.
9/11 தாக்குதல்
அடுத்து உள்ளத்தை நெகிழ வைத்த ஒரு இடத்தில் மன வருத்தத்துடன் நிற்க வேண்டியதாயிற்று.
2001 செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க்கில் அல்கொய்தாவினால் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமும் அதில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டு ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டதையும் உலகம் என்றும் மறக்காது. இதைப் பற்றிய 9/11 மெமொரியல் ம்யூஸியம் இங்கு உள்ளது. உயிரிழந்தோரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட வெங்கலத்தகடுகள் இருக்க அங்கு நின்று எங்கள் அஞ்சலியைச் செலுத்தினோம்.
ஒஸாமா பின் லேடனை அமெரிக்கா எப்படி பிடித்து தண்டித்தது என்பதைச் சித்தரிக்கும் 2012இல் வெளியான படமான ‘ஜீரோ டார்க் தர்ட்டி’யை யாரும் மறக்க முடியாது. இதில் வரும் பெண்மணியான மாயாவைப் பாராட்டாதவரே இல்லை. ஐந்து அகாடமி அவார்டுகளுக்காக நாமினேஷன் செய்யப்பட்ட படம் இது. இந்த நினைவிடத்திற்கு வருவோர் தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்ற மன உறுதியுடன் அதை வெறுத்து ஒதுக்கப் பாடுபடுவர் என்பது உறுதி!
டைம் ஸ்குயர்
நியூயார்க்கின் இதயத் துடிப்பை டைம்ஸ்குயரில் காணலாம். நியான் ஒளி விளக்குகள் மின்ன திரைப்பட விளம்பரங்கள் என்ன, இதர மனதை ஈர்க்கும் வணிக விளம்பரங்கள் என்ன என்று அமர்க்களப்படும் இப்பகுதியில் அங்குமிங்குமாக சிறிது நேரம் உலவினாலே போதும் நியூயார்க்கின் இதயத்தை அறிந்தவர்களாவோம். பிராட்வே- செவந்த் அவென்யூ சந்திப்பு குறிப்பிடத்தகுந்த ஒரு பகுதி. தினமும் 3,30,000 பேர்கள் இங்கு வருகின்றனர் என்பது இதன் முக்கியத்துவத்தையும் கவர்ச்சியையும் காண்பிக்கிறது!
எம்பயர் ஸ்டேட் பில்டிங்
அமெரிக்காவின் அதி முக்கிய இடமான எம்பயர் ஸ்டேட் பில்டிங்கைப் பார்க்காமல் நியூயார்க்கிலிருந்து திரும்ப முடியாது. 1054 அடி உயரமுள்ள இதில் பார்க்க வேண்டிய அம்சங்கள் ஏராளம் உண்டு. 86வது மாடியில் ஏறி 360 டிகிரி சுழல் பார்வையில் நாம் பார்க்கும் பார்வை அமெரிக்காவையே பார்த்து விட்ட ஒரு பிரமையை ஏற்படுத்தும்.
லிபர்டி தேவதையின் சிலை
305 அடி உயரமுள்ள சுதந்திர தேவதையின் சிலை அமெரிக்காவின் சுதந்திர சிந்தனையைப் பெருமிதத்துடன் சுட்டிக் காட்டும் அற்புதமாகும்.
இங்கு 60 நிமிட படகு சவாரியை மேற்கொள்ளலாம். லிபர்டி தேவதையின் கையில் ஒரு டார்ச் உள்ளது. இது சுதந்திரத்தைக் குறிக்கும் ஒளி விளக்கு. லிபர்டி ஐலேண்டில் உள்ள இதைச் சென்று பார்க்க அனுமதி உண்டு.
இங்குள்ள எல்லிஸ் ஐலேண்ட் அமெரிக்க சரித்திரத்தின் ஒரு முக்கியமான இடமாகும்.
இங்கு உள்ள மியூஸியத்தில் சென்று மெதுவாக சுற்றிப் பார்த்தால் அமெரிக்க சரித்திரத்தை முற்றிலுமாக அறிந்து கொள்ளலாம்.
சீறிப் பாயும் காளை
நியூயார்க்கில் உள்ள அமெரிக்காவின் முக்கிய அடையாளமான வால் ஸ்ட்ரீட் பற்றி அறியாதோர் இருக்க முடியாது. உலகின் பிரபலமான ஸ்டாக் எக்ஸ்சேஞ்ஜ் இங்கு தான் உள்ளது. இங்குள்ள சீறிப்பாயும் காளையைப் பார்த்து மகிழ்வதோடு போட்டோவும் எடுத்துக் கொள்ளலாம்.
லிங்கன் மெமோரியல் செண்டர்
அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாக இருந்தவரும் உலக மக்கள் அனைவரின் உள்ளத்திலும் இடம் பிடித்தவருமான ஆப்ரஹாம் லிங்கனுக்கான நினைவிட மையம் அமெரிக்க தலை நகரான வாஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ளது. அற்புதமான மையத்தில் 19 அடி உயரமுள்ள சலவைக் கல்லினாலான மாமனிதர் லிங்கனின் கம்பீரமான அழகு சிலையைப் பார்த்து மகிழலாம்.
நீண்ட நெடும் பாதையில் காலார நடந்து சென்று மகிழ்வதோடு அங்கு இருந்து அமெரிக்க ஜனாதிபதியின் ஒய்ட் ஹவுஸையும் தூரத்திலிருந்து பார்த்து மகிழலாம்.
பெரும் சரித்திரத்தையும் ஒரு மகத்தான மனிதரின் நினைவையும் ஊட்டும் லிங்கன் மெமோரியல் செண்டரைப் பார்க்காமல் அமெரிக்க பயணம் முடிவுறாது.
சிலிகான் வேலி
உலகின் கணினி தொழில்நுட்பத்திற்கான அறிவு மையமாக இருந்து தொழில்நுட்ப அற்புதங்களை வழங்கும் சிலிகான் வேலி சான்பிரான்ஸிஸ்கோவின் தென் பகுதியில் அமைந்துள்ளது.
இங்குள்ள (பே ஏரியா என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ள) ஆப்பிள், சிஸ்கோ, கூகிள், ஆரக்கிள், ஹெச்பி, இண்டெல் உள்ளிட்ட கம்பெனிகளில் ஏராளமான இந்தியர்களைப் பார்க்கலாம். இவர்களின் அறிவுத்திறனை அமெரிக்கா பாராட்ட, இவர்கள் இந்தியாவிற்குப் பெருமை தேடித் தருவதற்காக இவர்களை நாம் பாராட்டலாம்.
டிரைவர்லெஸ் கார்!
சான்பிரான்ஸிஸ்கோவில் ஏராளமான அதிசயங்களைக் கண்டும் அனுபவித்தும் மகிழ முடியும்.
திடீரென்று சாலையில் ஓடும் ஒரு காரை அனைவரும் அதிசயமாகப் பார்க்கவே நானும் பார்த்தேன். ஆம், அது டிரைவர் இல்லாமல் தானாகவே ஒடும் கார்!
சோதனை ஓட்டத்தில், சாலை சந்திப்பில் சிவப்பு விளக்கு எரிய அது நின்று கொண்டிருந்ததைப் பார்த்தோம். பச்சை விளக்கு எரிந்தவுடன் அது கிளம்பியது.
நாளைய உலகின் மாற்றத்தை அந்த நாற்சந்தியில் பார்த்து பிரமிக்க முடிந்தது.
சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால்!
அங்குள்ள தியேட்டர்கள் நம்மவர்களை ஈர்க்கும் ஒன்று.
சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் என்றவுடன் ஒரே மகிழ்ச்சி அலை பொங்கும். படம் திரையிடப்பட ஒரு மணி நேரம் முன்னதாகவே தியேட்டருக்கு குடும்ப சகிதம் அனைவரும் வந்து கார் பார்க்கிங்கில் இடம் கண்டு பிடித்து நிறுத்தி விட்டு கை நிறைய கொரிப்பதற்கான ஸ்நாக்குகளையும் ஐஸ்கிரீமையும் வாங்கி கூடி இருக்கும் நண்பர்களுடன் அளவளாவி மகிழ்வர். தியேட்டருக்குள் விளம்பரங்கள் முடிந்து படம் கணீரென்று ஆரம்பிக்க சூப்பர் ஸ்டார் தோன்றும் காட்சியில் தியேட்டரே சற்று உயரக் குதிக்கும். ஒரே ஆரவாரம், விசிலும் உண்டு. சூப்பர்ஸ்டாரே மாறு வேடத்தில் அங்கு வந்து அமர்ந்தாலும் அவர் தோன்றும் காட்சியில் அவராலும் கை தட்டாமல் இருக்க முடியாது. அப்படி ஒரு உற்சாகம், அப்படி ஒரு மகிழ்ச்..ச்..சி! (அட, இது கூட சூப்பர் ஸ்டார் வார்த்தையாக வந்து விட்டதே!) 3D படங்களை இங்கு பார்ப்பதே ஒரு தனி அனுபவம் தான்!
லிவர்மூர் கோவில்
என்ன கோவிலைச் சொல்லவில்லையே என்று நினைக்க வேண்டாம்.
அற்புதமான பல கோவில்கள் பல ஊர்களிலும் நெடுக உள்ளன.
பல இடங்களில் நாமே சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாம். வரிசையாக நின்று பயபக்தியுடன் நடக்கும் இந்த வழிபாடு அனைவருக்கும் ஆன்ம பலத்தைத் தரும் ஒன்று. சான்பிரான்ஸிஸ்கோவில் சாயிபாபா கோவில் உண்டு. லிவர்மூரில் உள்ள பிரம்மாண்டமான கோவிலுக்கு அனைவரும் அடிக்கடி, குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில், வந்து வழிபடுவது வழக்கம்.
நமது ஊர் பிரஸாதம் போலவே இறைவனின் பிரஸாதமும் உண்டு; அருளாசியும் உண்டு.
யாதும் ஊரே, யாவரும் கேளிர் – தமிழ் முழக்கம்!
சுமார் ஆயிரம் மைல் கார் பயணத்தை மேற்கொண்டு, எனது மகன் காரை ஓட்ட குடும்பம் முழுவதும் அமெரிக்காவில் போக முடிந்தது என்றால் அது அங்குள்ள கட்டமைப்புகளையும் வசதிகளையும் பயமின்மையையும் குறிக்கிறது.
தூரம் அதிகமுள்ள இடத்திற்கு விமானப் பயணம் மேற்கொண்டு விமான நிலையத்திலிருந்தே வாடகைக்கு காரை நாம் அமர்த்திக் கொள்ளலாம். காரில் பெட்ரோல் முழுவதுமாக நிரப்பப்படும். எல்லா இடங்களுக்கும் சென்று முடித்த பின்னர் காரை எத்தனை நாள் பயன்படுத்தினோமோ அதற்கான கட்டணத்தைச் செலுத்துவதோடு டாங்கில் பெட்ரோலை முழுவதுமாக நிரப்பித் தந்து விட வேண்டும்.
சான்பிரான்ஸிஸ்கோ, நியூ ஜெர்ஸி உள்ளிட்ட பல நகரங்களில் நம்மூர் போல சரவணா, கோமள விலாஸ் ஹோட்டல்களும் உண்டு. சுவையும் மணமும் தனி தான்!
என்ன, அமெரிக்கா கிளம்ப ஆசையா! வாருங்கள் உலகை வலம் வருவோம்.
வெளி நாட்டுப் பயணம் மேற்கொள்வதால் என்ன பயன்? நம்மைச் சுற்றிச் சுழலும் மத, இன, மொழி, அந்தஸ்து, பூகோள, அடிப்படையிலான குறுகிய் வேறுபாடுகள் அகலும்; மனம் செம்மையுற்று, நாம் அனைவரும் மனிதர் என்ற ஒரே உன்னத நோக்கில் நம் பார்வை மாறும்! அதனால் நாமும் செழிப்போம், உலகமும் செழிக்கும்!
அது மட்டுமல்ல, சங்கத் தமிழில் கணியன் பூங்குன்றனார் தந்த, “யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா” (புறநானூறு, பாடல் 192) என்ற தமிழ் முழக்கத்தை உலகெங்கும் பரப்ப முனைந்தவர்களாவோம்!
***
tags- லேக் டாஹோ, டைம் ஸ்குயர், க்ராண்ட் கான்யான், அமெரிக்க டூர்,