Post No. 11,003
Date uploaded in London – – 19 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
பிரஹேலிகா–பிரகேளிகை -பகுதி 2
Written By B.Kannan,Delhi
இந்தி மொழி இலக்கியத்தில் வழங்கும் சொல், பொருள் பிரகேளிகை ஒன்றிரண்டைப் பார்த்துவிட்டு மேலே செல்வோம்……
काली है पर काग नहीं, लंबी है पर नाग नहीं;
बलखाती है पर डोर नहीं, बांधते हैं पर डोर नहीं,
बताओ क्या?
கறுப்பு நிறம் ஆனால் காக்கை அல்ல, நீண்டு இருக்கும், பாம்பு அல்ல
சுருக்கம், செடுக்கை நீக்கலாம், நூல் இழை அல்ல
சுருட்டிக் கட்டி முடிக்கலாம், கயிறு அல்ல, அப்படியானால் நான் யார்?
விடை: சிகை, குடுமி, பின்னல் (அ) ஜடை= சோடீ என்று சொல்வது
छोटी सी छोकरी लालबाई नाम है;
पहने है घाघरा, एक पैसा दाम है।
சின்ன அழகிய பெண், செல்லமாக “சிவப்பி” எனக் கூப்பிடுவோம்
அணிந்திருப்பாள் ஒரு பைசா பெறுமானமுள்ளக் குட்டிப் பாவாடை!, அது யார்?
விடை: சிவப்பு மிளகாய் வற்றல்
தமிழகப் புலவர்களுள் மதுரை மேலூர் கொட்டம்பட்டி கருப்பையா பாவலர் பாடிய கடைச்சரக்குப் பெயர்கள், பாத்திரப் பெயர்கள் போன்றவை வரும் வண்ணம் இயற்றிய நாமாந்தரிதைப் பாடல்களும் குறிப்பிடத் தக்கவை. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்…..
கடைச்சரக்குப் பொருட்களின் பெயர்கள் அடங்கியப் பாடல்:
பலசரக்குப் பையெடுத்தான் வேளிராஉயப் புரியாள்
படந்தேனென் றாளரிசி வசம்போவென் றழுதாள்
மலர்சூடன் சாம்பிராணி யானேன்னென் றாணீ
வரக்காண மென்றழுதி துவரையெதிர் பார்த்தா
ளலைகடலை வைகின்றா ளென்னாமா யக்கா
யான்பிழைப்பே நென்றாள்பேச் சுக்குமதி மதுரா
கலமுத்துச் சாமீ ரகமிளகன் பக்கு
கடுகவா விதில்வெகு சகாயமுண்டு குணமே!
இதையே பதம் பிரித்து வேறுமாதிரியாகப் பார்த்தால் கிடைக்கும் அர்த்தமே வேறு.
பல சர குப்பை எடுத்தான் வேள்; இராய புரியாள்
பயந்தேன் என்றாள், அரி சிவ சம்போ என்று அழுதாள்
மலர்சூடன் சாம் பிராணி ஆனேன் என்றால்
வரக் காணம் என்று அழுது இதுவரை எதிர்பார்த்தாள்
அலைகடலை வைகின்றாள், “ஏன்னமாய் அக்கா
யான் பிழைப்பேன்?” என்றாள்-பேச்சுக்கும் அதிமதுரா
கல, முத்துச் சாமி! சீர், அகம், இளகு அன்பு ஆக்கு
கடுகவா, இதில்வெகு சகாயம் உண்டு, குணமே!
உரை: வேள் சர குப்பை எடுத்தான்- மன்மதன் வலிய அம்புகளின் கூட்டத்தை மலர்க்கணைகளால் தலைவியின் மீது எய்வதற்காகக் கைகளில் எடுத்தான்
இராயபுரியாள் பயந்தேன் என்றாள்- இராயபுரி ஊரைச் சேர்ந்த தலைவி நான்
அஞ்சுகிறேன் என்றாள்
அரி சிவசம்போ என்று அழுதாள்- நாராயணா, சிவா சம்புவே என அரற்றினாள்
மலர் சூடன் சாம் பிராணி ஆனேன் என்றாள்- பூக்கள் சூடமாட்டேன், சாகும் நிலையிலிருக்கும் உயிரினமாக ஆகிவிட்டேன் எனப் புலம்பினாள்
நீ வரக்காணம் என்று அழுது இதுவரை எதிர்பார்த்தாள்- இந்நேரம் வரை உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்
அலை கடலை வைகின்றாள்- அலையோசை பிரிவுத் துயரை அதிகப்படுத்துவதால் அதைத் திட்டுகிறாள்
அக்கா யான் என்னமாய்ப் பிழைப்பேன் என்றாள்- தோழி! அதனால் எப்படி உயிர் வாழ்வேன் என ஏங்குகிறாள்
பேச்சுக்கும் அதிமதுரா- எண்ணம்,செயல் மட்டுமின்றி இனிமையாகவும் பேசுபவளே
முத்துச்சாமி- இந்த இயற்பெயருடையக் கந்தனே
சீர் அகம் இளகு- நல்லதையே எண்ணும் சிறந்த உள்ளத்தில் இரக்கம் காட்டு
அன்பு ஆக்கு- அன்பைப் பொழிவாய்
கடுகவா- விரைந்து வா, கல-அவளுடன் சேருவாயாக
இதில் வெகு சகாயமுண்டு- இதனால் உனக்குப் பல நன்மைகள் விளையும்
குணமே- இக் காரியம் சரியானதே ஆகும்.
இச்செய்யுளில் பலசரக்குப்பை, தேன், அரிசி, வசம்பு, சூடன்(கற்பூரம்), சாம்பிராணி, காணம்(கொள்ளு), துவரை, கடலை, சுக்கு, அதிமதுரம், சீரகம், மிளகு, பாக்கு,
கடுகு, காயம்(பெருங்காயம்) ஆகிய கடைச்சரக்குகளின் பெயர்கள் வேறு பொருளில் கையாளப்பட்டுள்ளன.
பட்சணங்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அவற்றை வைத்து வார்த்தை ஜாலம் காட்டுகிறார் கொட்டாம்பட்டியார்!
தேங்குழலப் பந்தோசை யித்தியமா வுடலிற்
றிகழ்வடையப் பழம்பணியா ரங்கெளலா நீத்தே
யோங்கியழு தலட்டுபல காரமுள வனைமார்க்
கொடிங்கிப்பா யசநிகர்த்த வுற்றார்க்கு மஞ்சி
வீங்கிபக்கோ டாமுலையிற் பூந்தினவு கொண்டுன்
விரகத்தி லதிரசமுற் றன்பிட்டு வந்தா
டாங்குதனின் கடன்செந்தில் வேலரசே யவணின்
றன்பாலா யடைதலெழில் தறுமுறுக்குத் தானே!
இச்செய்யுளைப் பதம் பிரித்துப் பொருள் கண்டோமானால் பிரமித்துப் போவோம்!
தேங்குழல் அ பந்தோ சைத்தியம் ஆ உடலில்
திகழ்வு அடை அ பழம் பணி ஆரங்கள் எலாம் நீத்தே
ஓங்கி அழுது அலட்டு பல காரம் உள அனைமார்க்கு
ஒடுங்கி பாய்அசம் நிகர்த்த உற்றார்க்கும் அஞ்சி
வீங்கி இப கோடு ஆம் முலையில் பூம் தினவு கொண்டுஉன்
விரகத்தில் அதி ரசம் உற்று அன்பு இட்டு வந்தாள்
தாங்குதல் நின் கடன், செந்தில் வேல் அரசே! அவள்நின்
தன்பாலாய் அடைதல் எழில் தரும் முறுக்குதான் ஏ!
உரை: செந்தில் வேல் அரசே- திருச்செந்தூரில் கோயில் கொண்டுள்ள வேலாயுதப் பெருமானே
தேன்குழல்- மணம் வீசும் கூந்தலையுடையப் பெண்
அ பந்தோ-பார்வையில்படும் பந்துகள் (மிருதுவான அப்பம்) போன்ற ஸ்தனங்களில் மட்டுமின்றி பிற உறுப்புகளிலும்
சைத்தியம் ஆ உடலில் நிகழ்வு அடை-குளிர்ச்சியான உடலில் அழகுபெற்று விளங்குகின்ற
அ பழம் பணி ஆரங்கள் எலாம் நீத்து- பழைய அணிகலன்கள், முத்துமாலை ஆகியவற்றைக் களைந்து
ஓங்கி அழுது………..அனைமார்க்கு ஒடுங்கி- மேன்மேலும் அழுது புலம்புகிறவர்களும், தன்மேல் கோபம் கொண்டவர்களும்,செவிலித்தாய், நற்றாய் பார்வையில் படாமல் பதுங்கி
பாய் அசம்………..உற்றார்க்கும் அஞ்சி-கடாப்போரில் வீறுகொண்டு சண்டையிடும் கிடாக்கள் போன்ற உறவினர்களுக்குப் பயந்து
வீங்கு இப……….முலையில்- வளர்ந்துக் கொண்டே இருப்பதும், யானைத் தந்தங்களைப் போன்று கூறிய மார்பகங்களில்
பூம் நினைவு கொண்டு- இனிய நமைச்சலைப் பெற்று
உன் விரகத்தில்…….உற்று- உன்மீதுள்ளக் காதலில் மிகுந்த சுவையைப் பெற்று
அன்பு இட்டு வந்தாள்- நேசம் கொண்டு வந்திருக்கிறாள்
தாங்குதல் நின் கடன்- அவளை ஏற்றுக் காப்பது உன் கடமையாகும்
அவள் நின்தன்……அடைதல்-அம்மங்கை உன்னிடம் சேரும் இச்செயல்
எழில் தரும் முறுக்குதான் ஏ- இழிவு ஏதுமில்லை, அழகியக் கம்பீரமானதாகும்.
இப்பாடலில் தேங்குழல், அப்பம், தோசை, வடை, அப்பழ(ள)ம், பணியாரங்கள் லட்டு, பலகாரம், பாயசம், பக்கோடா, பூந்தி அதிரசம், பிட்டு, அடை, முறுக்கு எனும் தின்பண்டங்களின் பெயர்க ளும், பழம், பால் சொற்களும், உணவுப் பொருட்களின் பெயராக அமையாமல்,வெவ்வேறு பொருள்களில் எடுத்தாளப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
இதைப்போல் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஈழக் கவிஞர் மயிலிட்டி மயில் வாகனப் பிள்ளை அவர்கள் இவ்வணியில் பல ருசிகரமானப் பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில் ஓரிரண்டை இப்போது ரசிப்போம்….
எழுத்துகள், எண்களாக மறைதல்:
ஆறுடனே சிகரமுதற் றளிக ளன்றி
யணிநகுலை நகரிடத்து மமரு மீசா
வீ று றுமெண் பானைந்து வடிவ மாகி
மிளிருமிரு பானைந்து வடிவ மாகிக்
கூறுமவை யிரண்டொடுகால் வடிவ மாகிக்
குலவுமர பன்னைந்து வடிவ மாகி
நாறுமுடற் சுமைநீக்கி நயந்த பேறு
நமக்கருள்வ தென்றுகொன்மெய்ஞ் ஞான தேவே!
தளி= கோயில் / க்ஷேத்திரம். இங்குச் சொல்லப்பட்டுள்ள தமிழ் எண்கள்– ஆறு=௬=கா, இதனுடன் சிகரத்தின் முதல் எழுத்து சேர்ந்தால்=காசி
எண்பானைந்து=85=அ+ரு=அருவடிவம், இருபானைந்து=25=உ+ரு=உருவடிவம், இரண்டொடு கால்= அரு+உரு(முதலிரண்டு)+வ(1/4)=அருவுருவ வடிவம்,
பன்னைந்து=15=க+ரு= கருவடிவம் (கருப்பை)
உரை: ஆறுடனே……..தளிகள் அன்றி–காசி முதலிய தலங்களுடன் கூட,
அணி நகுலை……..ஈசா–அழகிய நகுலேச்சரத்தும் உறையும் ஈஸ்வரனே
வீறு உறும் எண்பான ஐந்து வடிவம் ஆகி– பெருமை மிக்க அருவடிவமாகியும்,
மிளிரும் இருபானைந்து வடிவமாகி– பிரகாசிக்கும் உருவடிவமாகியும்,
கூறும் அவை…..குலவும் அர– அருவுருவ வடிவமாகவும் திகழ்கின்ற ஈசனே,
மெய் ஞான தேவே– மெய்ஞ்ஞானக் கடவுளே
பன்னைந்து வடிவமாகி……சுமை நீக்கி– கருவடிவமாய்த் தோன்றும் சரீர பாரத்தைக் களைந்து
நயந்த பேறு……..அருள்வது என்று கொன்?– நமக்கு நல்ல பேற்றை அளிப்பது எப்போது?
புலவர் மயில்வாகனப் பிள்ளை, தமிழ்த் தோகை விரித்து ஆனந்த நடனமாடுவதை என்னென்பது! அவரது உடுப்பிலிருந்துப் பிரிந்து விழுந்த மற்றொரு மயிற்தோகை இதோ….
அவர் வாழ்ந்தக் காலகட்டத்தில் சாதி பாகுபாடு மிகுந்திருந்தது. அதைக் கருத்தில் கொண்டு, சாதிஜனத்தின் பெயரில் வேறு பொருளை மறைத்து வைத்து ஓர் அழகான நாமாந்தரிதைப் பாடலை ஶ்ரீநகுலேச்சரர் மீது இயற்றியுள்ளார்.
செம்மான்கைக் கொண்டவ னம்பட்டன் வண்ணான் செலுத்துமள்ளன்
றம்மான் குயவன்பி னான்கச் சிடையன் றபக்கரையா
னம்மாண் டுடிநற் பறையணொர் வேட னணிநகுலைப்
பெம்மா னெனத்துதி யாய்நமைப் பார்ப்பான் பெரி துவந்தே
உரை: செம்மான் கைக்கொண்டவன்–சிறந்த சிவப்பு மானைத் திருகரத்தில் ஏந்தியவர்,
அம் பட்டன்– அழகிய பட்டு ஆடையைத் தரித்தவர்,
வண ஆன் செலுத்து மள்ளன்–அழகிய ரிஷப வாகனத்தின் மீதேறி வருபவர், (காளைமாட்டை வைத்திருக்கும் உழவர்)
தம் மான் குய அன்பினான்– தமது தேவியின் தனங்களிடத்தே அன்புடையவர்,
கச்சு இடையன்– இடையில் உடையணிந்தவர்,
தபக் கரையான்– தீவிரத் தவத்தில் ஆழ்ந்திருப்பவர்,
அம் மாண் துடி நல் பறையன்– அழகிய மாட்சிமைப் பொருந்திய நீள உடுக்கையாகிய வாத்தியக் கருவியை உடையவர்,
வேடன்- வேடங்களைத் தாங்குபவர்,
அணி நகுலைப்…….துதியாய்– அழகிய நகுலேச்சரத்துப் பெருமான் எனப் போற்றித் துதிப்பாயாக,
பெரிது உவந்து நமைப் பார்ப்பான்– ஈசன் மிகவும் மகிழ்ந்து நம்மைப் பார்த்துத் தன் அருட் பார்வையை வீசுவார்.
செம்மான்–சக்கிலியன், மள்ளன்– உழவர், விவசாயி குயவன்-மண்பாண்டம் செய்பவர், கரையான்–நீர்நிலைக்கருகில் வாழும் வலைஞன் (செம்படவர்)
இந்தப் புலவர்கள் ரொம்ப எமகாதகப் பேர்வழிகள். தமிழ் மொழியைத் தான் எப்படியெல்லாம் தங்கள் இஷ்டத்துக்குச் சாதுரியமாக வளைத்துக் கொள்கிறார்கள்?
அவர்களால் தமிழ் புடமிட்டத் தங்கம் போல் ஆகிறதா அல்லது நேர்மாறாகவா? எப்படியிருந்தால் என்ன, நம் கண்ணுக்கும், கருத்துக்கும் ஒரு சிறந்த “விலையில்லா”
அருமையான “சப்பன்போக்”, கல்யாணச் சமையலையே அளித்து விடுகிறார்கள், அல்லவா?
*************************************************
Tags- பிரஹேலிகா–பிரகேளிகை -பகுதி 2