நோய்களைக் குணமாக்கும் பகவத் கீதை ஸ்லோகங்கள்! (Post No.11,002)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,002

Date uploaded in London – –     19 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நோய்களைக் குணமாக்கும் பகவத் கீதை ஸ்லோகங்கள்!

ச.நாகராஜன்;

மஹாபாரதத்தில் வரும் பகவத் கீதை 18 அத்தியாயங்களைக் கொண்டது. கீதையில் 700 ஸ்லோகங்கள் உள்ளன. இதில் திருதராஷ்டிரன் கூறிய ஸ்லோகம் 1; ஸ்ரீ கிருஷ்ணர் கூறிய ஸ்லோகங்கள் 569; அர்ஜுனன் கூறிய ஸ்லோகங்கள் 89; ஸஞ்ஜயன் கூறிய ஸ்லோகங்கள் 41.

கீதை அபாரமான சக்தி கொண்ட அதிசய திவ்ய நூல். இதில் உள்ள 18 அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனைத் தரும். பத்ம புராணத்தில் உத்தரகண்டத்தில் 176வது அத்தியாயத்தில் கீதையின் பலனைக் காணலாம். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு சம்பவம் விவரிக்கப்படுகிறது; அதன் அபூர்வ பலனும் கதை மூலம் விளக்கப்படுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்தையும் பாராயணம் செய்து வர இறுதிப் பலனாக மோக்ஷம் சித்திக்கும் என்பது தான் திரண்ட சாரம்.

எந்த விதத் தீங்கும் கீதை பாராயணம் செய்பவரை அண்டாது; எப்படி குளத்தில் இருந்தாலும் தாமரை மலர் நீரினால் தொடப்படாமல் இருக்கிறதோ அது போல அவனை எந்த விதத் தீமையும் அண்டாது என்று கூறுகிறது வராஹ புராணம்.

கீதை 1500 பதிப்புகளைக் கண்டு 40க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 2 கோடி பிரதிகளுக்கும் மேலாக இந்தியாவில் மட்டும் விற்கப்பட்டுள்ளது என்றால் உலகெங்கும் இது எத்தனை மொழிகளில் எத்தனை கோடி பிரதிகள் விற்கப்பட்டிருக்கும் என்பதை ஊகித்து அறிந்து கொள்ளலாம்!

2  

கீதை ஓதுவதால் பரலோகத்தில் முக்தி கிடைப்பது ஒரு புறம் இருக்கட்டும்; இகலோகத்தில் என்ன பயன் என்று கேட்போருக்கு, செல்வம் சேரும் ; நோய்கள் தீரும்; இன்னும் நன்மை அனைத்தும் சேரும் என்று சொல்லி விடலாம்.

பக்தி யோகம், ஞான யோகம், கர்ம யோகம் என யோகங்களைக் கூறும் யோக நூலான கீதையின் ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு வித பலனைத் தர வல்லது.

பல்வேறு நோய்களைத் தீர்க்க வல்ல கீதா ஸ்லோகங்கள் 66ஐத் தன் ஆய்வின் மூலம் கண்டு, அவற்றை விளக்கி டாக்டர் டி.ஆர். சேஷாத்ரி, ‘தி க்யூரேடிவ் ஃபவர்ஸ் ஆஃப் தி ஹோலி கீதா’ (The Curative Powers of Holy Gita) என்ற நூலை வெளியிட்டுள்ளார். (1997ஆம் ஆண்டு வெளியீடு)

அதில் உள்ள சில ஸ்லோகங்களின் பயனை இங்கே காணலாம்:

இரண்டாம் அத்தியாயம் இரண்டாம் ஸ்லோகம்:

 குதஸ்த்வா  கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம் |

அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்த்திகரமார்ஜுன ||

இதைக் கூறினால் இரத்த அழுத்தம் சீராகும்; மனக் கோளாறுகள் நீங்கும்; மனக் கட்டுப்பாடு அதிகரிக்கும்; மன இறுக்கம் போகும்.

*

இரண்டாம் அத்தியாயம் பதிநான்காம் ஸ்லோகம்:

மாத்ராஸ்பர்ஸாஸ்து கௌந்தேய சீதோஷ்ண சுக துக்கதா |

ஆகமாபாயிநோநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத ||

மது மற்றும் போதை மருந்துப் பழக்கத்திலிருந்து விடுபடலாம், ஜூரம் தீரும், ஆண்மைக் குறைவு நீங்கும், செக்ஸ் உறவு சீர்படும், செக்ஸ் சம்பந்தமான நோய்கள் தீரும்.

*

மூன்றாம் அத்தியாயம் 21ஆம் ஸ்லோகம்

யத்யதாசரதி ஸ்ரேஷ்டஸ்தத்தததேவேதரோ ஜந: |

ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்த்ததே ||

இதைக் கூறி வந்தால் போதைப் பழக்கம் நீங்கும்; கான்ஸர் தீரும்; தீராத நோய்கள் தீரும்.

*

எட்டாம் அத்தியாயம் எட்டாம் ஸ்லோகம்

அப்யாஸயோகயுக்தேந சேதஸா நாந்யகாமிநா |

பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்த்தானுசிந்தயந் ||

இதைக் கூறி வந்தால் இரத்த அழுத்தம் சீராகும்; மூளைக் கோளாறுகள் நீங்கும்; மனத்தளர்ச்சி போகும்; மனக் கட்டுப்பாடு வரும்; பக்கவாதம் தீரும்.

*

பத்தாம் அத்தியாயம் 32வது ஸ்லோகம்

ஸர்காணாமாதிரந்தஸ்ச மத்யம் சைவாஹமர்ஜுந |

அத்யாத்மவித்யா வித்யாநாம் வாத: ப்ரவததாமஹம் ||

இதைக் கூறினால்  இருமல், ஆஸ்த்மா போகும்;  செவிட்டுத் தன்மை நீங்கும்; திக்கித் திக்கிப் பேசுவது (திக்கு வாய்) போகும்; தொடர் இருமல் நிற்கும்; டான்ஸில் போகும்.

*

பத்தாம் அத்தியாயம் 34வது ஸ்லோகம்

ம்ருத்யு: ஸர்வஹரஸ்சாஹமுத்பவஸ்ச பவிஷ்யதாம் |

கீர்த்தி: ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர் மேதா த்ருதி: க்ஷமா ||

இதைக் கூறி வந்தால் பிள்ளைப் பேறு சுகமாகக் கிடைக்கும்; கர்ப்ப சம்பந்தமான நோய்கள் தீரும்; மாதவிலக்கு சம்பந்தமான சங்கடங்கள் தீரும்; கர்ப்பம் உண்டாகும்.

*

பதினேழாவது அத்தியாயம் எட்டாம் ஸ்லோகம்

ஆயு: ஸத்வபலாரோக்ய சுகப்ரீதி விவர்தநா: |

ரஸ்யா: ஸ்நிக்தா ஸ்திரா ஹ்ருத்யா ஆஹாரா: ஸாத்விகப்ரியா: ||

இதைக் கூறி வந்தால் அஜீரணம், அமிலத்தன்மை, கல்லீரல் கோளாறுகள், டயரியா, மூலம், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். நீரிழிவு நோய் போகும். அல்ஸர் போகும்.

3

ஸ்ரீ தேசிகனின் கீதார்த்த சங்கிரகத்தில் பலச்ருதியாக வருகிறது இந்தப் பாடல் :

வன்பற்றறுக்கும் மருந்தென்று மாயவன் தான் உரைத்த

இன்பக் கடல் அமுதாம் என நின்ற இக்கீதை தனை

அன்பர்க்குரைப்பவர் கேட்பவர் ஆதரித்தோதுமவர்

துன்பக் கடலுள் துலங்குகை நீங்கித் துலங்குவரே

பொருள் : சம்சார பந்தத்தை விடுவிக்கும் மருந்தாக மாயவனான கிருஷ்ணன் தானே உரைத்தது இந்தக் கீதை; இது பாரதமாகிய பாற்கடலில் எழுந்தது. இதை உபதேசிக்கும் ஆசாரியர், அதைக் கேட்போர், படிப்போர் உள்ளிட்ட அனைவரும் துன்பக் கடலில் துயர் உறுவது நீங்கி இன்பமடைவர்.

கீதையின் பெருமையைக் கூறும் ஸ்லோகங்கள் ஆயிரமாயிரம் உண்டு. அவற்றில் சுபாஷித ஸ்லோகம் ஒன்று கீதையின் பெருமையை இப்படிக் கூறுகிறது:

கீதா சுகீதா கர்தவ்யா கிமன்யை: சாஸ்த்ரசிந்ததே:   |

யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத்யாத் வினி:ஸ்ருதா:  ||

இதன் பொருள்:- கீதை திருப்பித் திருப்பி நன்றாகப் படிக்கப் பட வேண்டும். மற்ற சாஸ்திரங்களை எண்ணி என்ன பிரயோஜனம்? ஏனெனில் இது பதமநாபனின்  முக கமலத்தினின்றே வந்த ஒன்றல்லவா?

ஆதி சங்கரர் பகவத் கீதா ; கிஞ்சித தீதா – கீதையைக் கொஞ்சமாவது படியுங்கள் – என பஜகோவிந்தத்தில் கூறி அருள்கிறார்.

நம்பிக்கையுடன் கீதையை ஓதுவோருக்கு இகபரசௌபாக்யம் கைகூடுவது இயல்பு தானே!

***

Tags — நோய், குணம், பகவத் கீதை, ஸ்லோகங்கள்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: