WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,005
Date uploaded in London – – 20 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
“சூதாட்டப் போரை நடக்க விடாமல் நீ தடுத்திருக்கலாமே கிருஷ்ணா!” – உதங்கரின் கேள்வி!
ச.நாகராஜன்
மஹாபாரதப் போர் நடந்து முடிந்து விட்டது. கிருஷ்ணரின் இளமைப் பருவ நண்பரான உதங்கர் அவரைச் சந்தித்தார்.
கௌரவருக்கும் பாண்டவருக்கும் நடந்த போரில் ஏற்பட்ட இழப்பைக் கேட்டு வருந்தினார்.
கிருஷ்ணரிடம் அவர், “நீ உரிய காரணத்தைச் சொல்லவில்லை எனில் உன்னை சபிப்பேன்”, என்று சற்று கோபத்துடன் சொன்னார்.
கிருஷ்ணர் உடனே, “பெரும் தவத்தைச் செய்திருக்கிறீர். அனாவசியமாக என்னைச் சபித்து அதை வீணாக்க வேண்டாம்” என்று கூறியதோடு தாம் போரைத் தடுத்து நிறுத்த தூது சென்ற விவரத்தையும் கூறி, போர் தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது என்று விளக்கினார்.
விளக்கத்தைக் கேட்டு சாந்தமடைந்த உதங்கர் கிருஷ்ணரிடமிருந்து விடை பெற்றார்.
உதங்கர் நினைத்த இடத்தில் நீர் வருமாறு அவர் கேட்டபடி வரத்தையும் தந்தார் கிருஷ்ணர்.
அவதார காரியம் முடியும் சமயம்; கிருஷ்ணர் உதங்கரை அழைத்தார்.
தான் வந்த காரியம் முடிந்து விட்டது என்றும் புறப்படத் தயாராகி விட்டதாகவும் கூறிய கிருஷ்ணர் விடை பெறும் சமயம் உதங்கருக்கு ஏதேனும் தர விரும்புவதாகக் கூறினார்.
உதங்கருக்கு அற்புதமான கீதோபதேசம் ஒன்றை அவர் செய்தார்.
ஸ்ரீமத் பாகவதத்தில் பதினோறாம் ஸ்கந்தத்தில் இடம் பெறும் இந்த கீதை உத்தவ கீதை என அழியாப் பெயர் பெற்றது.
விடை பெற்றுச் ‘செல்லும்’ கிருஷ்ணரிடம் உதங்கர் சில கேள்விகளுக்கு மட்டும் விடை பெற வேண்டும் என்று விரும்பினார். கிருஷ்ணர் அவரைக் கேள்விகளைக் கேட்க அனுமதித்தார்.
“கிருஷ்ணா, நீ சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. மஹாபாரதம் என்ற நாடகத்தை அழகுற நடத்தி முடித்து விட்டாய். ‘செல்லவும்’ தயாராகி விட்டாய்! ஆனால் என் கேள்வி என்னவெனில் “யார் உண்மை நண்பன் என்பதே!” என்று உத்தவர் கேட்டார்.
அவர் என்ன கேட்க வருகிறார் என்பதை அறிந்த கிருஷ்ணர்,புன்சிரிப்பு தவழ, “தேவைப்படும் போது அழைக்கும் நண்பனுக்கு உதவுபவன் எவனோ, அவனைக் காப்பாற்றுபவன் எவனோ அவனே உண்மை நண்பன்” என்றார்.
“அப்படியானால் எனது அடுத்த கேள்வி இது தான். பாண்டவர்கள் உன்னை உற்ற நண்பனாக எண்ணினார்கள். உன்னை ஆபத்பாந்தவனாகக் கருதினார்கள். அப்படி இருக்கும் போது மூன்று காலமும் உணர்ந்த பெரிய ஞானியான நீ ஏன் தர்மபுத்திரர் சூதாட ஒப்புக் கொண்ட போதே சூதாடுவதைத் தடுக்கவில்லை? அப்படித் தடுத்திருந்தால் போர் நடக்க வாய்ப்பே ஏற்பட்டிருக்காதே” என்றார். மேலும் அவர் தொடர்ந்தார் :
“சரி அது போகட்டும் அவரை ஜெயிக்குமாறாவது நீ அருள் புரிந்திருக்கக் கூடாதா? சரி, அதுவும் இல்லையெனில் அவர் தன் தம்பிமாரைப் பணயம் வைக்கும் போதாவது சூதாட்ட களத்தில் நீ நுழைந்து தடுத்திருக்கலாம், அதையும் நீ செய்யவில்லை. திரௌபதியைப் பணயம் வைத்திருப்பதையாவது நீ தடுத்திருக்கக் கூடாதா? அவள் ஆடையை துச்சாதனன் அவிழ்க்கும் வரை பேசாமல் இருந்து விட்டாயே, பின்னர் அல்லவா நீ அவளைக் காப்பாற்றினாய், இது தான் ஏன் என எனக்கு விளங்கவில்லை. பதிலைச் சொல்லு” என்றார்.
இப்படிக் கேட்ட உத்தவர் அழத் தொடங்கினார்.
கிருஷ்ணர் அவரை தழுவி ஆறுதல் கூறினார். பின்னர் பதில் சொல்லத் தொடங்கினார்.
“உத்தவரே! உலக நியதி உமக்குத் தெரியாதா, என்ன? விவேகம் உள்ளவனே
எப்போதும் ஜெயிக்கிறான். ‘இது சரி, இது சரியில்லை’ என்பதை ஒருவன் எப்போதும் அறிந்த பின்னரே காரியத்தில் இறங்க வேண்டும். சூதாட்ட சமயத்தில் துரியோதனனுக்கு விவேகம் இருந்தது. அந்தச் சமயத்தில் தர்மபுத்திரருக்கு அது இல்லை.
ஏராளமான பணமும் பொருளும் இருந்தால் கூட துரியோதனனுக்கு சூதாட்டத்தில் எப்படி விளையாடுவது என்பது தெரியாது. தனக்குத் தெரியாது என்பது அவனுக்குத் தெரியும். ஆகவே அவன் விவேகத்துடன், “தன் பங்கிற்கு தனது மாமன் சகுனி ஆடுவான்” என்று சொல்லி பாண்டவரைச் சம்மதிக்க வைத்தான். ஆனால் அப்போது தர்மர் என்ன செய்திருக்க வேண்டும். சகுனியை எதிர்க்கத் தன்னால் முடியாது என்று அறிந்து, எங்கள் பங்கிற்கு எங்கள் கிருஷ்ணர் விளையாடுவார் என்று சொல்லி இருக்க வேண்டாமா?
நான் உருட்டிப் போடும் எனது பகடைக்காய்களின் எண்களை சகுனியால் எப்படியாவது அறிய முடியுமா என்ன, அல்லது அவன் உருட்டும் காய்களின் எண்களை என்னால் அறிய முடியாதா என்ன? ஒரு சில நிமிடங்களில் ஆட்டம் முடிந்து துரியோதனன் ஆட்டம் போடுவது முழுவதுமாக முடிந்திருக்குமே! ஆனால் விவேகம் இன்றி நான் சூதாட்ட அரங்கினுள் வரக்கூடாது என்றல்லவா தர்மன் எண்ணினான். அவன் விதி அவனை விடவில்லை. தனது பிரார்த்தனையால் என்னைக் கட்டிப் போட்டு அங்கு வர விடவில்லை. பீமன், அர்ஜுனன், நகுல, சகாதேவன் தோற்ற போது கூட அவர்கள் துரியோதனனைதத் திட்டுவதிலேயே குறியாக இருந்தார்களே தவிர என்னை அழைக்க யாருக்கும் தோன்றவில்லையே! திரௌபதி கூட துச்சாதனன் அவள் கேசத்தைப் பிடித்து இழுத்து வந்த போதோ ஆடையைத் துகில் உரிக்கத் தொட்ட போதோ என்னை அழைக்கவில்லை. அவன் துகில் உரிக்க ஆரம்பித்தவுடன் தன்னை மறந்து என்னைச் சரண் அடைந்தாள். அந்தக் கணமே நான் வஸ்த்ராவதாரம் எடுத்து அவள் மானத்தைக் காப்பாற்றினேன். ஒரு கணத்தில் ஓடி வந்தேனே”
கிருஷ்ணரின் இந்தப் பதிலைக் கேட்ட உத்தவர் பிரமித்துப் போனார்.
“ஐயனே! அப்படியானால் எப்போதும் நீ அழைத்தால் தான் வருவாயா? நீயாக உனக்கு உற்றவரிடம் வர மாட்டாயா? எனக்கு பதிலைச் சொல்லு” என்று கேட்டார்.
கிருஷ்ணர் சிரித்தவாறே, “உத்தவரே! இந்தப் பூவுலகில் ஒவ்வொருவரும் அவரது கர்மாவின் படியே வாழ்க்கையை நடத்துவர். நான் எதையும் நடத்துவதுமில்லை. எவர் காரியத்திலும் புகுவதுமில்லை. நான் சாட்சி பூதமாக மட்டுமே விளங்குகிறேன். புரிந்து கொள்ளும்” என்றார்.
உத்தவர் உடனே, “அப்படியானால் நீ எங்கள் அருகிலேயே சாட்சியாய் இருப்பாய். ஆனால் நாங்கள் பாவம் செய்தாலும் அதைச் செய்து கொண்டே இருக்க விடுவாயா, என்ன? இப்படிப் பாவச் சுமையைக் கூட்டி நாங்கள் துன்பப்படுவதைத் தான் நீ அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்.
“உத்தவரே! உமது வார்த்தைகளை நன்கு கவனியும்! நான் சாட்சியாய் உங்கள் அருகே இருக்கும் போது, அதை நீங்கள் உணரும் போது, எப்படி நீங்கள் தப்பு செய்ய முடியும்? என்னை மறந்து தன்னால் செய்ய முடியும் என்று நினைக்கும் போது தான் பிரச்சினையே ஆரம்பமாகிறது. தர்மராஜர் எனக்குத் தெரியாமல் தானே விளையாடி ஜெயிக்க முடியும் என்று எண்ணியதில் தான் அபாயம் ஆரம்பித்தது. சாட்சியாய் நான் அருகில் இருப்பதாக அவர் எண்ணியிருந்தால் சூதாட்டத்தின் முடிவு வேறாக அல்லவா இருந்திருக்கும்” என்று முடித்தார் கிருஷ்ணர்.
உத்தவர் பிரமித்து நின்றார். நன்கு சிந்திக்கத் தொடங்கினார்!
மஹாபாரதப் போரிலே கூட கிருஷ்ணர் சண்டையிடவில்லை. அர்ஜுனனையே போரிடச் செய்தார்.
சாட்சியாக எல்லோரிடமும் இருக்கும் கிருஷ்ணரிடம் நமது சர்வத்தையும் அர்ப்பணித்து பயனை எண்ணாமல் காரியங்களைச் செய்து கொண்டே போனால் பொறுப்பு அவனுடையது அல்லவா?
உத்தவருக்கு சர்வமும் புரிந்தது! கிருஷ்ணருக்கு விடை கொடுத்தார்.
உத்தவருக்கு கிருஷ்ணர் உபதேசித்த கீதை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று! ஏனெனில் அது தான் கிருஷ்ண பகவானின் கடைசி உபதேசம்!
கிருஷ்ணர் அர்ஜுனனனுக்கு உபதேசித்த பகவத் கீதை அனைவரும் அறிந்த ஒன்றே!
பகவத் கீதையின் சாரத்தை பாரதியார் இரு வரிகளில் இப்படித் தருகிறார்:
“பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்
பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்”
“மாம் அனுஸ்மர, யுத்த ச” (என்னை நினை; யுத்தம் செய்)
வாழ்க்கை என்னும் போரில் வெல்வதற்கு ‘மாம் அனுஸ்மர’ என்பதே கண்ணன் கொடுத்த சரியான ஆயுதமாகும்!
***
tags– மஹாபாரதப் போர், . கிருஷ்ணன், உதங்கர் , கீதை