உலகின் உயரமான நாடு – நேபாளம்! (Post No.11,012)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,012

Date uploaded in London – –    14 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

  24-5-2022 தேதியிட்ட மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை

உலகின் உயரமான நாடு – நேபாளம்!

ச.நாகராஜன்

உயரமான நாடு

தெற்காசியாவில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் அமைந்திருப்பதோடு உலகின் உயரமான இடத்தில் உள்ள உயர் நாடு நேபாளம்.

பழம் பெரும் வரலாற்றையும் மிக்க பெருமையையும் கொண்ட நாடு இது.

இரு விதமான பயணங்கள் இந்த நாட்டை நோக்கி மேற்கொள்ளப்படுகின்றன.

ஒன்று ஆன்மீக யாத்திரை இன்னொன்று இயற்கை ஆர்வலர்களின் உற்சாகமான பயணம்.

உலகில் உள்ள நாடுகளில் ஒரே ஹிந்து நாடு இது தான் என்ற தனிப் பெரும் பழமையை சமீப காலம் வரை பெற்றிருந்தது நேபாளம். (நமது இந்தியா மதசார்பற்ற செகுலர் நாடு)

2015இலிருந்து அரசியல் சட்டம் காரணமாக இதுவும் செகுலர் நாடு என ஆயிற்று.

சிவ பெருமான் உறையும் இமயப் பகுதியில் உள்ள இந்த நாட்டில் சிவத் தலங்களுள் முக்கியமான ஒன்றான பசுபதிநாத் ஆலயம் அமைந்துள்ளது.

ஏராளமான முனிவர்களும் தபஸ்விகளும் உறையும் நாடு இது.

நேபாளம் – பெயர் காரணம்

நேபாளத்தின் தலை நகர் காத்மாண்டு. பண்டைய காலத்தில்  இந்தப் பகுதி பெரிய ஏரியாக இருந்தது. இதைப் பற்றிய புராண வரலாறு சுவையானது.

விஷ்ணு பகவான் தனது சக்கரப்படையை ஏவி இந்த மலைப்பகுதியை வெட்டி இரு பிளவுகளை உருவாக்கினார்.  இங்கிருந்த ஏரி நீர் வடித்து தரைப்ப்குதி வெளிப்பட்டது. வாங்மதி, (அல்லது பாக்மதி), விஷ்ணுமதி, ருத்ரமதி என மூன்று அழகிய ஆறுகள் ஓட ஆரம்பித்தன.

இந்த பகுதியின் தெய்வீகத் தன்மையைக் கண்டு நேவா என்னும் மஹரிஷி இங்கு வந்து நீண்ட நெடும் தவம் புரிய ஆரம்பித்தார். ஒரு நாளிரவு கனவில் அவர் பெரிய ஜோதி தரிசனத்தைக் கண்டார்.  அது என்ன என்று அவருக்குப் புலப்படவில்லை. அவர் வளர்த்த பால் பசு ஒன்று மாலையில் மேய்ச்சலிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து பால கொடுப்பதை நிறுத்தி விட்டது. பாலும் அதனிடம் இல்லை. அதன் காரணம் நேவா ரிஷிக்குப் புரியவில்லை.

ஆனால் ஒரு நாள் பகல் பொழுதில் அந்தப் பசு  ஓரிடத்தில் நின்று தானாகவே தன் மடியிலிருந்து பாலைப் பொழிந்து கொண்டிருந்தது. மஹரிஷி நேவா அந்த இடத்தின் மகிமையைக் காண விரைந்தார். பசு பால் பொழிந்த இடத்திலிருந்து ஒரு ஜோதி வெளிப்பட்டு பூமிக்குள் மறைந்தது. தான் கனவில் கண்ட ஜோதியே அது என்று உணர்ந்த நேவா தனக்கு ஜோதி தரிசனம் அருளிய இறைவனின் கருணையை நினைத்து ஆடிப்பாடி மகிழ்ந்தார். அங்கேயே எப்போதும் ஜோதி வடிவினனாக எழுந்தருளி மக்கள் அனைவருக்கும் அருள் புரிவாயாக என்று இறைவனை வேண்டினார். ‘அப்படியே ஆகுக’ என அசரீரி ஒலித்தது.

அந்த இடத்திலேயே நேவா முனிவர் பாதரஸத்தைக் கொண்டு ஒரு லிங்கத்தை ஸ்தாபித்தார். அந்த லிங்கத்தை எந்த உலோகத்தால் தொட்டாலும் அது பொன்னாயிற்று. அவருக்கு பாரஸ்நாதர் என்ற திருநாமம் ஏற்பட்டத்.

நேவா முனிவர் தவம் புரிந்த இடம் நேவா பாலம் என்ற பெயரைப் பெற்றது. அது நாளடைவில் பெயர் மருவி நேபாளம் ஆயிற்று. நேவா, பாலம் என்றால் நேவ முனிவரால் உருவாக்கப்பட்டு பரிபாலனம் செய்யப்பட்டது என்று பொருள்.

புராணங்கள் இங்கு வந்து வழிபட்டு அருள் பெற்ற தேவர்களின் பெரும் பட்டியலைத் தருகிறது.

பசுபதிநாதர் ஆலயம்

உலக காரணனான பசுபதி நாதர் ஆலயம் காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் உள்ளது, இங்கு வந்து வழிபடுவோர் தொன்று தொட்டு இன்று வரை ஏராளம்.

ஆலயத்திற்கு முன்னால் ஓடும் வாங்மதி (பாக்மதி என்பது வழக்கில் உள்ள பெயர்) நதியில் நீராடி விட்டு பசுபதிநாதரை தரிசிப்பது மரபு.

ஆலயத்தின் கர்ப்பகிருகம் நான்கு வாயில்களைக் கொண்டுள்ளது. வெளி பிரகாரம் ஒன்று உண்டு. இரண்டாவது திருச்சுற்றில் மேலை சந்நிதி நீங்கலாக மூன்று புறமும் சுற்றி வரலாம். மரத்தால் அமைந்த கோவில் இது. ஏகமுக ருத்ராக்ஷம், தங்க முலாம் பூசப்பட்ட திரிசூலம்  என ஆலயத்தின் பெருமை சொல்லி மாளாது.

இந்தக் கோவிலில் பூஜை செய்வோர் கர்நாடகத்தில் உள்ள ஷிமோகாவைச் சேர்ந்த பட்டர்களே. கடந்த 350 ஆண்டுகளாக இவர்கள் வமிசாவளியினரே இங்கு பூஜை செய்கின்றனர்.

அருகில் மலையின் மீது ஏறிச் சென்றால் குஹ்யேஸ்வரி ஆலயத்தை அடையலாம். நேபாள நாட்டினர் ஏராளமானோர் வழி படும் கோவில் இது.

தர்பார் ஸ்குயர்

காத்மாண்டுவில் உள்ள யுனெஸ்கோவின் பண்பாட்டு மையங்கள் பட்டியலில் உள்ள தர்பார் ஸ்குயர்  ஹனுமான் தோகா தர்பார் ஸ்குயர் என்று அறியப்படுகிறது. ஏராளமான கோவில்கள் உள்ள பகுதி இது. சுமார் 500 வருடங்களுக்கு முந்தைய கலைப் படைப்புகளை இங்கு கண்டு மகிழலாம். குறிப்பாக மரத்திலான நுட்பமான சித்திர வேலைப்பாடுகள் பயணிகளைக் கவரும்.

புத்தர் அவதரித்த கபிலவாஸ்து

வைகாசி பௌர்ணமி புத்தர் அவதரித்த திருநாளாகும்.

உலகின் அறிவு ஜீவிகளும் ஏராளமான விஞ்ஞானிகளும் போற்றும் அவதாரமான புத்தர் அவதரித்த கபிலவாஸ்து நேபாளத்தில் தான் உள்ளது. ‘எதையும் நீயே அறிவால் அறிந்து உணர்ந்து உண்மையைக் காண்’ என்ற அவரது அறிவுபூர்வமான உபதேசம் உலகில் உள்ள அனைவரையும் கவர்கிறது. புத்தர் அவதரித்த லும்பினித் தோட்டமும் சித்தி அடைந்த குசிநாரா என்னும் காசியாவும் நேபாளத்தில் தான் உள்ளது.

லும்பினி கபிலவாஸ்துவிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவிலும், காத்மாண்டுவிலிருந்து 255 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. லும்பினியில் மட்டும் சுமார் 14 பௌத்த மடாலயங்கள் உள்ளன.

சீன யாத்ரீகனான ஃபாஹியானில் ஆரம்பித்து இன்றைய நாள் வரை இப்புனிதப் பகுதியில் வந்து வணங்காதோர் இல்லை.

மாமன்னன் அசோகன புத்தர் அவதரித்த தலத்திற்கு உபகுப்தனுடன் வந்து வணங்கி இருக்கிறான். தன் பரிவாரங்களுடன் வந்த அவன் ஏராளமான நறுமணப் பொருள்களையும் மலர்களையும் எடுத்து வந்து வழிபட்டான்.  அவன் தோட்டத்தை நெருங்கியதும் அவனுட்ன் வந்த உபகுப்தன் ஆவேசம் வந்த நிலையில்,  ஓ! மாமன்னா! இந்த இடத்தில் தான் சாக்கிய முனி அவதரித்துள்ளார். இங்கு அவர் நினைவாக ஒரு நினைவுச் சின்னம் அமைப்பாயாக” என்று கூறவே அதே போல் அசோக ஸ்தம்பம் ஒன்று இங்கு நிறுவப்பட்டது. அதன் உச்சியில் குதிரை உருவம் ஒன்றை அமைத்து வழிபட்டு அவன் தன் நாடு திரும்பினான்.

இன்று அந்த ஸ்தம்பத்தின் கீழ் தேவியின் திருவுருவமும் விநாயகர் திருவுருவமும் அமைக்கப்பட்டுள்ளன. தேவியின் பெயர் கும்மிந்தேவ் அல்லது ரூபந்தேகி பகவதி. இந்த ரும்மிந்தேவ்யில் (லும்பினித் தோட்டம்) புத்தருடைய தாய் மாயாதேவி பிரசவத்துக்கு முன் குளித்த குட்டை இருக்கிறாது. அதன் கரையில் உள்ள அத்திம்ரத்தின் பழத்தை அவள் உண்டாள் என்று கர்ண பரம்பரைச் செய்தி கூறுகிறது. ஏராளமான

 பௌத்தர்களும் இந்துக்களும் வந்து வணங்கும் தலம் இது.

காத்மாண்டுவில் உள்ள ஸ்வயம்புநாத் ஆலயத்திற்கு அருகில் உள்ள அமிதேவ புத்தர் பார்க்கில் 67 அடி உயரமுள்ள புத்தரின் சிலையைப் பார்த்து வியக்கலாம்.

பதான் ஸ்தூபங்கள்

பதான் நகரின் நாற்புறமும் உள்ள நான்கு ஸ்தூபங்கள் பெரிதளவும் வியக்கப்பட்டு பேசப்படுபவை. கிழக்கு திசையில் உள்ள ஸ்தூபத்தின் சுற்றளவு மட்டும் 75.83 மீட்டர். உயரம் 10.4 மீட்டர்.

ஜைன மத ஆசாரியர்கள்

ஜைன மத ஆசாரியர்களான சம்புதறாயர்,  பத்ரபாகு ஆகியோரும் பாடலிபுரத்தில் இருந்தனர். ஆக ஜைனர்கள் போற்றும் நாடாகவும் நேபாளம் அமைகிறது.

நேபாளத்தின் கொடி

நேபாளத்தின் பரப்பளவு 56,827 சதுர மைல்கள். இதன் ஜனத்தொகை மூன்று கோடியே ஒரு லட்சம்.

நேபாளத்தின் கொடி ஒரு மகத்தான சிறப்பைக் கொண்டுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளின் கொடிகள் செவ்வக வடிவில் இருக்கும் போது இதன் கொடி மட்டும் வேறு அமைப்பைக் கொண்டுள்ளது. இது சுமார் 2000 ஆண்டுகளாக இருந்து வரும் பழம் பெரும் கொடி என்று வரலாறு கூறுகிறது.

நேபாளத்தில் சுதந்திர தினமே கொண்டாடுப்படுவதில்லை. ஏனெனில் இது ஒரு போதும் அன்னியரின் ஆட்சிக்கு உட்பட்டதில்லை. பழம் பெரும் நாடான இதை யாரும் ஆக்கிரமிக்கவே இல்லை. ஆகவே விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த நாட்டின் கூர்க்கா படையின்ரின் வீரம் உலகம் அறிந்த ஒன்று.

பசுவை வதை செய்தால் 12 வருட சிறைவாசம் நிச்சயம்.

வெவ்வேறு 80 இனங்களைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழும் இந்த நாட்டில் 123 மொழிக்ள் பேசப்படுகின்றன!

நேபாளத்தின் மொத்த ரயில் பாதையின் நீளமே 59 கிலோமீட்டர் தான். ஒரு நாள் போதும், இதில் பயணிக்க!

காத்மாண்டு நகரின் தெருக்கள் குறுகியவை. மர வேலைப்பாடுகள் நிறைந்த வீடுகள் இங்கு அதிகம்.

சங்கு நாராயணன் கோவில்

தவளகிரி மலைப் பகுதியில்  காத்மாண்டு நகரின் கிழக்கில் இருபது கிலோ மீட்டர் தொலைவில் சங்கு என்ற கிராமத்தில் மனோகரா ஆற்றின் அருகே அமைந்துள்ளது திருமால் கோவிலான சங்கு நாராயணன் கோவில்.

இயற்கை வளம் மிக்க இமயமலைப் பகுதி

இமயமலைப் பகுதி என்பதால் இங்கு வியக்க வைக்கும் இயற்கை காட்சிகளுக்குப் பஞ்சமே இல்லை.

பாரா க்ளைடிங், மலை ஏறுதல் உள்ளிட்ட விதவிதமான விளையாட்டுக்களுக்கு உகந்த இடம் இது என்பதால் இதில் ஆர்வமுள்ள வெளிநாட்டோர் இங்கு வருகை புரிகின்றனர்.

நேபாளத்தின் வருவாயில் 25 விழுக்காடு சுற்றுலாப் பயணிகளாலேயே வருகிறது என்பது ஒரு சுவையான செய்தி.

இங்கு நெட் வசதி இல்லை என்பது ஒரு சிறிய குறை.

உலகில் உள்ள மிக உயரமான மலை சிகரங்கள் மொத்தம் பத்து. அவற்றில் எட்டு சிகரங்கள் நேபாளத்தில் தான் உள்ளன. இதில் உலகிலேயே மிக மிக உயரமான 29029 அடி உயரமுள்ள மவுண்ட் எவரெஸ்டும் ஒன்று.

நேபாள பனி மனிதன்

யேடி என்று அழைக்கப்படும் இமயமலை பனி மனிதனைப் நேபாள மலைப் பகுதிகளில் பார்த்ததாக பல சுவையான செய்திகள் உண்டு. யேடி என்பது ஒரு ஷெர்பா வார்த்தை, யே என்றால் பாறை; டி என்றால் விலங்கு என்று பொருள்.

ஆக யேடி என்றால் மலைவாழ் மிருகம் என்று பொருள். யேடி மனிதன் போலத் தோற்றமளிப்பதாக ஒரு செய்தி உண்டு. எரிக் ஷிப்டன், ஃப்ராங்க் ஸ்மித், ஜான் ஹண்ட் போன்ற மலையேறும் நிபுணர்கள் பெரிய பாதச் சுவடுகளைக் கண்டதாக அறிவிக்கின்றனர். கர்னல் சி.கே. ஹோவர்ட் மற்றும் டான் வில்லன்ஸ் தாங்கள் கறுப்பாக மனிதன் போன்ற ஒரு உருவத்தைப் பார்த்ததாக தெளிவாகக் கூறுகின்றனர். இந்தப் பனி மனிதன் மர்மம் பற்றிய  செய்திகள் இன்று வரை அடிக்கடி வெளி வருவதால் நேபாளம் என்றவுடன் யேடியின் ஞாபகமும் அனைவருக்கும் வருவதில் வியப்பில்லை.

அன்னபூர்ணா மலைச் சுற்று

உடல் வலு உள்ள பக்தர்களும் இயற்கை ஆர்வலர்களும் மேற்கொள்ளும் ஒரு கிரி வலம் அன்னபூர்ணா மலைச் சுற்று. 17 முதல் 21 நாட்கள் வரை இதற்கு ஆகும்.

போகரா சாந்தி ஸ்தூபம்

காத்மாண்டுவிற்குப் பிறகு அடுத்த பெரு நகரம் போகரா.அன்னபூர்ணா மலைச் சுற்று மேற்கொள்வோர் இங்குள்ள அழகிய மலைப் பகுதியைப் பார்க்காமல் போக முடியாது. இங்குள்ள சாந்தி ஸ்தூபம் அனைவரையும் ஈர்க்கும் ஒன்று.

சூரியோதயம் மற்றும் சூர்யாஸ்தமனம் பார்ப்பது மலை ஏறுவது என பல்வேறு அம்சங்களால் அனைவரையும் கவர்வது போகரா.

இந்தியாவின் வடக்குப் பகுதியிலிருந்து நேபாளத்திற்குப் பயணம் மேற்கொள்வது சுலபம். விசா கெடுபிடிகள் கிடையாது என்பது இன்னொரு செய்தி. விசாவை பயணம் மேற்கொள்ளும் முன்பேயும் பெறலாம். அங்கே சென்ற பின்னர் அங்கேயும் பெற்றுக் கொள்ளலாம்..

நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் உள்ள தொடர்பு இமயமலை போன்றது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை.

மொத்தத்தில் ஆன்மீகத்தையும் அன்றாட வாழ்வியலில் பார்க்க வேண்டிய இயற்கையையும் இணைக்கும் உயரமான நாடு நேபாளம்.

ஒருவரியில் நேபாளத்தைச் சொல்வதென்றால்,

உலகின் மிக மிக உயரமான சிகரம் மவுண்ட் எவரெஸ்டைக் கொண்ட நாடு நேபாளம் என்று சொல்லி முடிக்கலாம்!

***

TAGS- நேபாளம், கபிலவாஸ்து, பசுபதிநாதர் ஆலயம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: