
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,017
Date uploaded in London – – 16 JUNE 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
31-5-2022 மாலைமலர் நாளிதழில் வெளியான கட்டுரை!
அலோஹா, ஹவாய், அலோஹா!
ச.நாகராஜன்
இந்தக் கட்டுரை சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து எழுதப்படுகிறது.
பிக் ஐலண்ட்
சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து ஐந்தரை மணி நேர விமானப் பயணம் மேற்கொண்டு ஹவாயில் உள்ள பிக் ஐலேண்டிற்கு (பெரிய தீவு) வந்து சேர்ந்தோம், உற்சாகமாக.
விமான நிலையத்திலிருந்து நேராக வால்மார்ட்டிற்குச் சென்று சமையலுக்குத் தேவையான எண்ணெய், புளி, வெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களை வாங்கிக் கொண்டு தங்க வேண்டிய இடத்திற்குச் சென்று ‘செக் இன்’ செய்தோம்.
கடற்கரை ஓரத்தில் உள்ள அற்புதமான அந்த தனி வீட்டில் நீண்ட ஹால், சமையலறை, படுக்கை அறைகள், – வாரண்டா உள்ளிட்ட இடங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டிருந்தன.
சுத்த சைவம் என்பதால் தேவையான பொருள்களைக் கொண்டு போயிருந்ததால் சாப்பாட்டிற்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. இனி ஹவாயை ஹாயாகச் சுற்றிப் பார்க்கத் தடை ஏதும் இல்லை அல்லவா!
ஆண்டு தோறும் பல லட்சம் மக்களைக் கவர்ந்து ஈர்த்து வருகை புரியச் செய்யும் ஹவாய் உலகின் தனிப்பெரும் மகிழ்ச்சித் தொகுப்பு!
137 தீவுகளின் தொகுதி
ஹவாய் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் ஒன்று. இது 137 தீவுகளின் தொகுதி ஆகும். ஆனால் ஹவாய், மௌவி, லனாய், நீஹா உள்ளிட்ட எட்டு தீவுகள் தான் முக்கியமான தீவுகளாக உள்ளன.
ஹவாய் என்ற பெயர் எப்படி வந்தது? இந்தத் தீவை முதலில் கண்டுபிடித்தவர் ஹவாய் லோவா. அவர் பெயரால் இது ஹவாய் என அழைக்கப்படுகிறது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் உள்ளிருந்து எரிமலை பொங்கி வெடிக்க அது ஆறாக ஓடி ஒருவாறாகப் பல்லாயிரம் ஆண்டுகளில் குளிர்ந்து ஹவாய் பகுதியாக பரிமளித்தது.
உலகின் மிக நீண்ட தீவுகளின் சங்கிலித் தொடர் ஹவாய் தான்!
ஹவாயின் செல்லப் பெயர் அலோஹா!
அலோஹா என்றால் ஹலோ (வணக்கம்) என்றும் பொருள்; பை, பை (சென்று வருகிறேன்) என்றும் பொருள். ஹவாயில் வணக்கம் தெரிவிக்கவும், சென்று வருகிறேன் என்று சொல்லவும் நாம் சொல்ல வேண்டிய ஒரே சொல் ‘அலோஹா’ தான்!
ஹவாயில் உள்ள தீவுகளில் பெரிதான பெரிய தீவு -பிக் ஐலேண்ட் – 4028 சதுர மைல் பரப்புடையது. 92 மைல் நீளமும் 76 மைல் அகலமும் கொண்ட இந்தத் தீவின் ஜனத்தொகை சுமார் இரண்டு லட்சம். வெப்ப நிலை சராசரியாக 21 முதல் 25 டிகிரி செல்ஸியஸ்.
உலகத்தின் ஜனநடமாட்டம் உள்ள கடைக்கோடி
அமெரிக்காவின் தெற்கில் மனித நடமாட்டமுள்ள கடைசி இடம் ஹவாய் தான். ஹவாய்க்குப் பின்னர் தென் துருவம் – அண்டார்டிகா தான்!
இதை அறிவிக்கும் ஒரு சிறு போர்டு இருந்தது. எங்குமே போட்டோ எடுத்துக் கொள்வதில் விருப்பமில்லாத நான் அங்கு ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன். ‘உலகின் ஜனநடமாட்டம் உள்ள கடைசிக் கோடியை பார்த்த ஆள் ஐயா நான்’ என்று ஆதாரத்துடன் சொல்லிக் கொள்ளலாம் இல்லையா!
ஹவாய்க்கும் அண்டார்டிகாவுக்கும் இடைப்பட்ட தூரம் 7598 மைல்கள். மனித நடமாட்டமே இல்லாத பகுதி இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது!
ஹவாயிலிருந்து ஒரு நிலப் பகுதிக்கு நீங்கள் செல்ல வேண்டுமென்று விரும்பினால் குறைந்தபட்சம் 2000 மைல்களைக் கடக்க வேண்டும்!
கடற்கரைத் தீவு
ஹவாயை கடற்கரைகளின் மாநிலம் என்று சொல்லலாம். ஐந்து மைலுக்கு ஒரு கடற்கரை என்று சொல்லும் படி ஏராளமான கடற்கரைகள். ஒவ்வொரு கடற்கரையும் ஒவ்வொரு விதம்.
ஒரு கடற்கரையில் நெடிதாக வளரும் தென்னை மரம் கிடைமட்டமாக நீண்டிருக்க அதில் ஏறி பாதி தூரத்தில் அமர்ந்தோம். கீழே ஆர்ப்பரித்து அலை மோதும் கடல். மேலே தென்னை மரத்தில் நாங்கள்.
நம் தமிழ் திரைப்பட இயக்குநர்களும் கேமராமேன்களும் இந்த இடத்தைப் பார்த்தால் சும்மா விடுவார்களா என்ன?
இன்னொரு கடற்கரையில் அபாய அறிவிப்பு : இங்கே ஆழம் அதிகம். இறங்கவே இறங்காதீர்கள்.
இன்னொரு கடற்கரையில் அழகிய மரத்தினால் ஆன உணவு விடுதி. அனைவரும் ஆனந்தமாக அங்கு அமர்ந்து கொரிக்கவும் காபியை அருந்தவும் செய்கின்றனர்.
இன்னொரு கடற்கரையிலோ நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் மிகக் குறைந்த ஆடையுடனும் வாலிபர்கள் திறந்த மார்புடனும் – சன் பாத் – சூரியக் குளியலை அநுபவித்துக் கொண்டு இருக்கின்றனர். நீச்சல், படகு, சர்ஃபிங் என்று ஏக அமர்க்களம்.
ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே போனால் ஒரு நாள் ஓடி விடும்.
கடலில் காலையில் சூரியன் உதிப்பதையும் மாலையில் சூரியன் மறைவதையும் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடுவதைப் பார்க்கலாம். ஒரே ஒரு கணத்தில் கடலிலிருந்து செக்கச் செவேலென சூரியன் உதிப்பதை காத்திருந்து பார்ப்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி!
இதே போல நீர் வீழ்ச்சிகளைப் பார்க்கலாம், அங்கு பாறைகளில் அமரலாம். வெப்ப மண்டல மழைக் காடுகளில் உள்ளே சென்று காட்டின் அனுபவத்தை அநுபவிக்கலாம்.
இங்கு இளநீரைச் சாப்பிடாதவர்கள் ஹவாய் பயணத்தை சரியாக மேற்கொள்ளவில்லை என்று அர்த்தம். உலகின் மிகச் சிறந்த இளநீரை இங்கு குடிக்கவில்லை என்றால் வேறு எங்கு தான் குடிக்க முடியும்!
மாநில மலரான மஞ்சள் ஹிபிஸ்கஸ் பூத்துக் குலுங்குவதைப் பார்ப்பதே ஒரு அழகு தான்!
ஹவாயில் காபி அருந்துவது ஒரு காபியின் உண்மையான சுவையையும் மணத்தையும் தெரிந்து கொள்வதற்கான வழியாகும். அப்படி ஒரு மணம், சுவை.
டால்பின்களைப் பார்த்து மகிழ்வது இன்னொரு அநுபவம். அதற்கு எதையும் உணவாக அளிக்கக்கூடாது என்ற கண்டிப்பான எச்சரிக்கையும் உண்டு.
இங்கு பாம்புகளைப் பிடித்தால் அபராதம் எவ்வளவு தெரியுமா? இரண்டு லட்சம் டாலர் அபராதம்! அத்தோடு பல ஆண்டு சிறைவாசமும் உண்டு
எரிமலைக் குழம்பும் எரிமலைகளும்
ரம்யமான கடற்கரை மற்றும் நீர்வீழ்ச்சிக் காட்சிகளைப் பார்த்து மகிழ்வதோடு மட்டும் ஹவாய் பயணம் முடிந்து விடாது.
எரிமலையின் தாயகமான ஹவாயில் எரிமலைக் குழம்பைப் பார்த்து பிரமித்து, திகைத்து, பயப்படவும் வேண்டும்.
பிக் ஐலேண்டில் உயரமான மலைப் பகுதியில் ஏறும் போதே ஆக்ஸிஜன் குறைந்த இடம் ஆகவே, ஜாக்கிரதை என்ற அறிவிப்பு பலகையைப் பார்த்து பயப்படாமல் இருக்க முடியாது.
ஆனால் சீனாவைச் சேர்ந்த ஒரு வயதான மூதாட்டி தைரியமாக மலை ஏறுவதைக் கண்ட நாங்களும் எரிமலைக் குழம்பைப் பார்க்கப் போனோம்.
பிக் ஐலேண்டில் உள்ள எரிமலை தேசியப் பூங்காவில் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.
நான்கு அடிக்கு நான்கு அடி உள்ள ஒரு சிறிய சதுரக் குழி!
அதில் எட்டிப் பார்த்தால் எரிமலைக் குழம்பு. கொதிக்கிறது. இது ஒரு சாம்பிள். இப்படிப்பட்ட பூமி இது என்று கட்டியம் கூறுகிறார்கள். பின்னர் சற்றுத் தள்ளி ஓரமாகச் சென்று பார்த்தால் அப்பப்பா! தொலை தூரத்தில் ஆழமான பள்ளத்தாக்கில் லாவா எனப்படும் எரிமலைக் குழம்பு ஆறாகப் பாய்வதைக் கண்டு திடுக்கிடலாம்.
இன்னொரு இடத்தில் சுமார் அரை கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு இருட்டு குகை இருக்கிறது. 20 நிமிடத்தில் கடக்கக் கூடிய இந்த ‘லாவா டியூபில்’ பக் பக் என்ற பதைபதைப்புடன் நடந்து சென்று வெளியே வருவது இன்னொரு அனுபவம்.
எரிமலை காட்டுப் பகுதியில் உச்சியில் உள்ள ஒரு காட்சியகத்தில் அவ்வப்பொழுது குறிப்பிட்ட நேரத்தில் சிறிய திரைப்படக் காட்சியும் உண்டு.
அதில் ஹவாயின் தோற்றம், பூர்வகுடியினரின் வாழ்க்கை முறை, அவர்களின் ராணியை அவர்கள் போற்றும் விதம், எரிமலை, கடற்கரை அழகுகள் அனைத்தையும் சிறிது நேரத்தில் படம் பிடித்துக் காட்டி மகிழ்விக்கின்றனர்.
பல கோடி வருடங்களாக எரிமலை பொங்கி அந்த பிக் ஐலேண்ட் பகுதியை உருவாக்கி இருக்கிறது.
சமீபத்தில் 2018இல் மே மாதம் 6.9 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட ஒரு எரிமலை வெடிப்பால் 2000 பேர்கள் இடம் பெயர்ந்து செல்ல வேண்டியதாயிற்று ஏராளமானோர் இறந்தனர்.
நாங்கள் சென்ற பகுதி இது தான் என்று நினைக்கும் போது திக்கென்று இருந்தது. ஐந்து தனித் தனியான எரிமலைகளில் இன்னும் மூன்று எரிமலைகள் “ஜீவனுடன்” உள்ளன. எப்போது பொங்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.
.
ஆகவே ஹவாய் செல்வதற்கு முன்னர் அங்குள்ள தட்பவெப்ப நிலையைப் பற்றி நன்கு அறிந்து கொண்ட பின்னர் தான் டிக்கட்டையே பதிவு செய்ய வேண்டும்.
ஜுராஸிக் பார்க்
மிக பிரம்மாண்டமான ஹாலிவுட் படமான ஜுராஸிக் பார்க் படத்தைப் பார்க்காதவர்களே இருக்க முடியாது. அந்தப் படம் ஹவாய் பகுதியில் தான் எடுக்கப்பட்டது. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பெர்ல் ஹார்பரில் நடந்த தாக்குதல் பற்றிய பெர்ல் ஹார்பர் படமும் இங்கு எடுக்கப்பட்டது தான். உலகின் மிக பிரம்மாண்டமான புகழ் பெற்ற ஹாலிவுட் படங்களில் தலையாய இருபது படங்கள் எடுக்கப்பட்ட இடம் ஹவாய் தான்.
இங்கு திரைப்படங்களை எடுக்கவென்றே ஒரு தயாரிப்பு யூனிட் உண்டு.
ஷாப்பிங் மையங்கள்
ஹவாய்க்குச் சென்றோர் ஏராளமான ஷாப்பிங் மையங்களைப் பார்க்க முடியும். ஹவாய்க்கே உரித்தான சித்திர வேலைப்பாடுள்ள ஆடைகள், ப்ரிண்டட் ஃபேப்ரிக், வித விதமான அழகிய மாலைகள், கைவினைப் பொருள்கள், ஹவாயின் விசேஷ மரமான கோவா மரத்திலிருந்து செய்யப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட பொருள்கள், பசிபிக் மா கடலிலிருந்து எடுக்கப்பட்ட அழகிய பெரிய பெரிய ஒரிஜினல் முத்துக்கள், இசைப் பிரியர் என்றால் உகுலேலே எனப்படும் ஹவாய் கிதார்கள் என மிக நீண்ட பட்டியல் உண்டு. பட்ஜெட்டுக்கும் தேவைக்கும் தக சிலவற்றையாவது வாங்காமல் திரும்ப முடியாது!
அலோஹா! அலோஹா!!
அது சரி, உலகில் ஹவாய் பகுதியில் உள்ள தீவுகளையும் ஜேம்ஸ் பாண்ட் ஓட்டிய பழைய சப்மரீன் காரையும் வாங்கி மலைச் சிகரங்களில் பிரம்மாண்டமான கடிகாரங்களையும் அமைப்பது இலான் மஸ்க், ஜெஃப் பெஜோஸ் மட்டும் தான்!
ஏன் சார், அவர்களால் மட்டும் ஹவாய் தீவுகளில் சிலவற்றை வாங்க முடிகிறது?!
சிம்பிளான பதில் : உலகின் ஆகப் பெரிய பணக்காரர்களான அவர்களிடம் ‘வக்கு’ இருக்கிறது. நம்மிடம் இல்லை.
ஆமாம், இந்தத் தீவுத் தொகுதியில் சிறிய ஒன்றை வாங்க வேண்டும் என்றாலும் பல பில்லியன் டாலர்களைத் தர வேண்டும். (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி; ஒரு டாலரின் இந்திய மதிப்பு 77.53 ரூபாய்)
நம்மால் முடிந்த அளவு, எண்ணிலடங்கா போட்டோக்களை எடுத்து வந்து, மலரும் நினைவுகளை வாழ்நாள் முழுவதும் நாம் பார்த்து மகிழலாம்.
அத்தோடு நினைவுச் சின்னமாக நான் அங்கிருந்து பயத்துடன் எடுத்துக் கொண்டு வந்தது சுண்டைக்காய் அளவுள்ள ஒரு எரிமலைக் கல்லைத் தான். அது வெடித்துச் சிதறி விடக் கூடாதே என்ற அனாவசிய பயமும் கூடவே இருந்தது!
ஹவாயிலிருந்து பிரியா விடை கொடுத்து விமான நிலையம் வரும் போது யாரானாலும் அவர் கூறுவது :
அலோஹா அகு நோ, அலோஹா மை நோ (நான் உன்னை நேசிக்கிறேன்; பதிலுக்கு நீ என்னை நேசிப்பாயாக!)
ஹவாய்! ஹவாய்!! ஹே ஹவாய்!
அலோஹா (போய் வருகிறேன், பை, பை!)
மஹாலோ!! (நன்றி)