
Post No. 11,018
Date uploaded in London – – 16 JUNE 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
தீபாவளி என்றவுடன் புத்தாடை, இனிப்புகள், பட்டாஸ்- வெடி-மத்தாப்பு, எண்ணெய்க் குளியல் , நரகாசுர வதம் மட்டுமே நமக்கு நினைவுக்கு வரும் .
இது தவிர ராமர் அயோத்தி மாநகருக்குத் திரும்பியது , மற்றும் சீக்கியர்களும் ஜைனர்களும் ஏன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் என்றெல்லாம் படித்திருப்போம். ஆனால் கந்த புராணம் முதலிய நூல்களில் உள்ள தீபாவளி தகவல்கள் பெரும்பாலோருக்குத் தெரிந்திராது.
வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை நான்கு நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. தன திரயோதசி முதல் பலி ப்ரதிபதா என்ற நிகழ்வு வரை 4 நாட்களுக்குக் கொண்டாடுகிறார்கள்.
இது தவிர மேலும் இரண்டு நாட்களும் முக்கியத்துவம் பெறுகிறது. அவை கோவத்ஸ துவாதசி, யமத்விதீயா என்ற 2 நாட்கள் ஆகும்.
வட இந்தியர் கணக்குப்படி ஐப்பசி மாதத்தின் (கிருஷ்ண பக்ஷம்) இருண்ட பகுதியும், கார்த்திகை மாதத்தின் ஒளிமிக்க பகுதியும் (சுக்ல பக்ஷமும்) தீபாவளிப் பண்டிகை ஆகும் . அதாவது தமஸோ மா ஜ்யோதிர் கமய = இருளில் இருந்து ஒளிக்குச் செல்வோமாக.
நாட்டின் பல பகுதிகளில் அமாவாசை முதல் அடுத்த மாதம் துவங்கிவிடுவதால் ஐப்பசி-கார்த்திகை தீபாவளி மாதம் ஆகும்.. தமிழர்கள் நரக சதுர்தசியில் தீபாவளியைத் துவக்கி அமாவாசையன்று முடித்துவிடுவார்கள் .
தீபாவளியில் கொண்டாடப்படும் கடவுளர்- கிருஷ்ணர், யமன், பலி,, பசு மாடு / கோமாதா
XXX
கோ வத்ஸ துவாதசி
இது தீபாவளிக்கு முன்னர் வரும். கோ என்றால் பசு, வத்ஸ என்றால் கன்றுக்குட்டி. அதாவது 12ஆவது நாள்= துவாதசி
யம த்விதீயா
எம த்விதீயா என்பது தீபாவளிக்குப் பின்னர் வரும்; யமன் பற்றி அறியாதோர் இல்லை. 500 கோடி மக்களின் ஜாதகத்தை வைத்துக்கொண்டு கால்குலேட்டர், கம்ப் யூட்டர் இல்லாமேயே நம் கணக்கை கச்சிதமாக முடித்துவைக்கிறார். இந்த நாளுக்கு ‘பையா தூஜ்’ என்றும் பெயர். சகோதர்கள், அவர்களுடைய சகோதரி வீடுகளுக்குச் செல்வர். அங்குள்ள பெண்கள் தீப ஆரத்தியுடன் அண்ணன் , தம்பிகளை வரவேற்பார்கள்.
பலி ப்ரதிபதா என்னும் நாள், பலி என்னும் அசுரனை,வாமன அவதாரம் மூலம் விஷ்ணு விரட்டி அடித்த நாள் ஆகும். ஓணம் என்ற நாளாக மலையாளிகள் இதை வேறு ஒரு மாதம் கொண்டாடுவர்.
நரக சதுர்தசி
சதுர்தஸி என்றால் 14ஆவது நாள்; அதாவது அமாவாசைக்கு முந்திய நாள்; தமிழர்களைப் போலவே எண்ணெய் ஸ்நானத்துடன் வட இந்தியர்களும் இந்த நாளை அனுஷ்டிக்கிறார்கள் நரகாசுரன் என்ற அசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நாள் இது. அன்றைய நாள் செல்வத் திருமகளை – லட்சுமியை வழிபடுவது மரபு. சில சமயம் இரண்டு திதிகளும் ஒரே நாளில் வரக்கூடும். அப்போது சூரிய உதயத்துக்கு முன்னால் எண்ணெய்க் குளியலும், பின்னர் லட்சுமி வழிபாடும் நடக்கும் .
தன திரயோதசி
திரயோதசி என்றால் 13-ஆவது நாள்; அதாவது நரக சதுர்தசிக்கு முந்திய நாள். அப்போது
கடலிலிருந்து அமிர்த கலசத்தை ஏந்திவந்த தன்வந்திரியை வழிபடுவது வழக்கம். அவர்தான் மருத்துவத்தின் தந்தை.
இவை எல்லாம் காலப்போக்கில் மாறியும் கலந்தும்போய் ஆறுநாள் தீபாவளி 2 அல்லது 4 நாள் தீபாவளி ஆக சுருங்கிவிட்டது . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளியைக் கொண்டாடியது போல நாம் இன்று கொண்டாடவில்லை.
XXX
ஆறு நாள் தீபாவளி
கோ வத்ஸ துவாதசி
தன திரயோதசி
நரக சதுர்தசி
அமாவாசை/ லட்சுமி பூஜை
பலி ப்ரதிபதா / புத்தாண்டு துவக்கம்
யம த்விதீயா
XXX
கோ வத்ஸ துவாதசியில்தான் தீபாவளி துவங்கும். இதன் சிறப்பு கந்த புராணத்தில் உள்ளது.பசுமாடுகள் வீடு திரும்பும் மாலைக் காலத்தில் இந்த வழிபாடு துவங்கும்.
மாடு (பசு, காளை , கோ, வத்ஸ) என்ற தமிழ்ச் சொல்லுக்கு செல்வம் என்று பொருள்.
பசுமாட்டின் சாணமும் மூத்திரமும் கலந்த தூசி உடலுக்கு நல்லது. பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்க இது உதவும். இதை ரகுவம்சத்தில் காளிதாச மகா கவி சுட்டிக்காட்டுகிறார். அதையும் கூட ஆல மரம் அல்லது அரச மரத்தின் கீழ் செய்வார்கள். இதனால்தான் அரச மரத்தைச் சுற்றினால் பிள்ளை பிறக்கும் என்ற நம்பிக்கை எழுந்தது. வட சாவித்ரி என்னும் விரதமும் ஆல மரத்தைக் கொண்டாடும் . தாவர இயல் விஞ்ஞானப்படி ஆல் , அரசு , அத்தி (FICUS) மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தனவே. இதை அறிந்த இந்துமத விஞ்ஞானிகள் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கூட இந்த மூன்று மரங்களையும் விஷ்ணுவின் நாமாக்களாகச் சேர்த்துள்ளனர்.
பசுமாடுகளுக்கு தீப ஆரத்தி எடுப்பர்
ஒன்பது திரி கொண்ட விளக்குகளை ஏற்றி அவைகளை வடக்கு நோக்கி எரியும் படி வைப்பார்கள் . தீப சுவாலை கிழக்குப்பக்கம் சாய்ந்தால் சுபச் செய்திகள் வரும். மேற்கு நோக்கிச் சாய்ந்து எரிந்தால் நல்ல சகுனம் இல்லை என்பது மக்களின் நம்பிக்கை.
(மதுரையில் சித்திரைத் திருவிழாவின்போது கள்ளழகர் என்ன நிற பட்டு அணிந்து வருகிறார் என்பதைப் பொறுத்து ஆரூடம் சொல்வது போன்ற நம்பிக்கைகள் உலகம் முழுதும் உள்ளன)
கந்த புராணத்தில் 2-4-9 விளக்கு பற்றிய ஸ்லோகமும் உள்ளது –
“ஓ தீபங்களே ! நீங்கள் சூரியனின் குடும்பத்தில் பிறந்தவர்கள் ; நீங்கள் எங்களுக்கு சுபம், அசுபம் பற்றி அறிவிப்பீர்களாகுக” .
இதே போல தன திரயோதசியன்று ஏற்றப்படும் தீபத்துக்கு ‘யம தீபம்’ என்று பெயர். அகால மரணம் வரக்கூடாது என்ற பிரார்த்தனையுடன் அன்று யமனை வழிபடுவது வழக்கம்
நரக சதுர்தசியன்று தமிழ் நாட்டைப்போலவே நாடு முழுதும் இந்துக்கள் எண்ணெய்க் குளியல் எடுக்கிறார்கள் . அப்போது எண்ணையில் லட்சுமியும், தண்ணீரில் கங்கா தேவியும் வசிப்பார்கள் என்பது ஐதீகம். இதனால் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று விசாரிப்பர்.
பாதிக் குளியலில் அபாமார்க்க (ACHARANTHES ASPERA) என்ற மூலிகையைக் கொண்டு தலையைச் சுற்றுவர். குளித்து முடித்த பின்னர் யமனுடைய இரண்டு புதல்வர்களான ‘ஸ்யாம’, ‘சபல’ என்போருக்கு இரண்டு விளக்குகளை ஏற்றிவைப்பர். உளுந்து இலைகளை (BLACKGRAM LEAVES BROTH) கொதிக்க வைத்து சாப்பிடுவர். அமாவாசை அன்று லட்சுமி பூஜை செய்வர்.
லட்சுமி பூஜையன்று நகரம் எங்கும் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். (தமிழர்கள், கார்த்திகை பெளர்ணமி அன்று இப்படிச் செய்வார்கள் . வடக்கத்திய கணக்குப்படியும் அமாவாசை அன்று கார்த்திகை மாதம் துவங்கி விடும் )
ORIGIN OF CHRISTMAS TREE
பலி , நரக என்ற அசுரர்களின் வதமும் , விளக்கு ஏற்றலும் பொதுவான விஷயங்கள்; கந்த புராணம் தீப வ்ருக்ஷம் (Tree of Lights) பற்றியும் பேசுகிறது . இந்த வழக்கம்தான் கிறிஸ்தவ மாதத்தில் ‘கிறிஸ்ட்மஸ் ட்ரீ’ CHRISTMAS TREE-யாக மாறி து என்றால் அது மிகையாகாது.
லட்சுமி பூஜைக்குப் பின்னர் ‘மூதேவி விரட்டலும்’ சில மாநிலங்களில் நடைபெறும். அப்போது சாணத்தால் அசுரர் உருவம் செய்து அதை எரிப்பார்கள். இதுவே பிற்காலத்தில் சொக்கப்பனை கொளுத்தும் வழக்கமாக மாறிவிட்டது போலும்! கோவர்த்தன பூஜை எனப்படும் மலை வழிபாடும் நடைபெறும். கண்ணபிரான் கோவர்த்தன மலையைத் தூக்கிப்பிடித்து பசுக்களையும் இடையர்களையும் பாதுகாத்தது எல்லோரும் அறிந்த கதையே .
சில பகுதிகளில் கயிறு இழுக்கும் போட்டியும் (Tug of War) நடைபெறும். அதில் அரச குலத்தவர் ஒருபக்கமும், நாட்டு மக்கள் மறு புறமும் நின்று இழுப்பர். அதில் அரச குலம் வெற்றி அடைய வேண்டும் என்பது சம்பிரதாயம். அப்போதுதான் நல்லாட்சி கிடைக்கும்; சுபிட்சம் நிலவும்.
கடைசி நாள் யம த்விதீயா; அன்றைய தினம் அத்தி மரத்துக்கு (Ficus Glomerata) அடியில் ஒரு வட்டம் போட்டு அதற்குள் பிரம்மா , விஷ்ணு, சிவனை வைத்து வழிபடுவர்.அதே நாளில் யமன், சரஸ்வதி, யமனின் சகோதரி யமுனை நதி ஆகியவற்றையும் வணங்குவர் . இதை எல்லாம் செய்ய முடியாதோர் பசு அல்லது நீர் நிலை முன்னர் உணவு அருந்த வேண்டும் என்று கந்த புராணம் (2-4-11; 2-4-15/30) சொல்லும்.
இந்தக் காலங்களில் சூதாட்டம், தாயக்கட்டம் விளையாடுவதையும் பத்ம புராணம், பவிஷ்ய புராணம் குறிப்பிடுகின்றன.
ஒளி உமிழும் விளக்குகள் ஏற்றுவதோடு காலப்போக்கில் பட்டாசு, மத்தாப்பும் சேர்ந்து கொண்டன என்றே நம்ப வேண்டியுள்ளது.
வாழ்க தீபாவளி! வளர்க சம்பிரதாய நம்பிக்கைகள்!!
Source book:- GLIMPSES OF PURANIC MYTH AND CULTURE, SADASHIV A.DANGE; YEAR 1987
–SUBHAM–
tags- tags- தீபாவளி ,புத்தாடை, இனிப்புகள், பட்டாஸ்- வெடி-மத்தாப்பு, எண்ணெய்க் குளியல் , நரகாசுர வதம் ,அறியாத விஷயங்கள்