WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,021
Date uploaded in London – – 17 JUNE 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
மனித வாழ்வில் பிரச்சினைகள தீர ருத்ராட்சம் அணிக!
மாலைமலர் (6-6-22) இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ச.நாகராஜன்
நான்கு பேறுகளையும் நல்கும் ருத்ராட்சம்
மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நீண்ட நெடிய வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினை தோன்றுவது இயல்பே.
இதை உணர்ந்திருந்த நம் முன்னோர்கள், அருளாளர்கள், ரிஷிகள் அதற்கான தீர்வுகளையும் பல்வேறு விதங்களில் கூறி அருளியிருக்கின்றனர்.
அவற்றில் ஒன்று ருத்ராட்சத்தைப் பயன்படுத்துவதாகும்.
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பெரும் பேறுகளில் வீடு என்ற கடைசிப் பேற்றை நல்கும் ஆன்மீக சாதனமான ருத்ராட்சம் முதல் மூன்று பேறுகளையும்யும் கூட அதை அணிந்தோர்க்கு நல்க வல்லது என்பதை நமது நூற்றுக்கணக்கான அற நூல்கள் வலியுறுத்துகின்றன.
பொதுவாக அனைத்து ருத்ராட்சங்களுமே கீழ்க்கண்ட நற்பலன்களைத் தருவதற்கானவையாகும்.
இறையருள் பெற ஏற்றது,
சகல தோஷங்களையும் போக்க வல்லது
பெரும் செல்வம் சேர்க்கச் செய்வது
ஆரோக்கியத்தையும் நல்ல புத்தியையும் அருள்வது
சிறந்த ஞானம் ஏற்பட வழி வகுப்பது
நவ சக்திகள் நம்மிடம் உருவாக வைப்பது
சுப காரியங்களைத் தடையின்றி நிறைவேற்றி வைப்பது
காம தேவனின் அருள் சித்திப்பது
ருத்ராட்ச மணிகள் மின்காப்புப் பொருளாக (DI ELECTRIC) ஆக உள்ளது் அதாவது மின் சக்தியை தன் உள் சேமித்து வைக்கும் தன்மை உள்ளது.
இந்த தன்மையினால் இதயத் துடிப்பு சீராகிறது.
உடலை எப்பொழுதும் சீராக இயங்க உதவுகிறது.
ருத்ராட்சத்திற்கு காந்த சக்தியின் ( MAGNETIC) குணமும் உண்டு.
மேற்கண்ட குணாதிசயங்களினால், ரத்த ஓட்டம் சீராகிறது
“மூளை”எப்போதும் வேலை செய்யும் நிலைக்கு ஆட்படுகிறது.
நரம்பு மண்டலம் எப்போதும் சீராகவும் , துடிப்பாகவும் வேலை
செய்கிறது.
ஆயுர்வேதத்தில் மூட்டுவலி உள்ளிட்ட பல வியாதிகளுக்கு ருத்ராட்சப் பயன்பாடு அறிவுறுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தில் நிபுணரான ஒருவர் வழியே இதைக் கேட்டு அறியலாம்.
இப்படி மனித வாழ்வில் ஒருவன் எதை எதைப் பெற விரும்புகிறானோ அதைப் பெற வைப்பது ருத்ராட்சமே. இதை அணிவது என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம் என்பது குறிப்பிடத் தகுந்தது.
குறிப்பிட்ட பிரச்சினைகள் உள்ளோர் அதைத் தீர்ப்பதற்கு முனைதல் அவசியம். எந்த பிரச்சினை தீர எந்த வகை ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பது முக்கியம்.
அறிவியல் சோதனையில் ருத்ராட்சம்
சுபாஷ் ராய் என்ற காசி பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த பேராசிரியர் புராதன ரகசிய அறிவை நவீன அறிவியலால் உரசிப் பார்த்து அவற்றின் உண்மைகளை அறிய முயன்றார். ருத்ராட்சம் பற்றி சிவ புராணம், பத்ம புராணம் போன்ற நூல்கள் மிக்க ஆன்மிக உயர்வு, மருத்துவ குணநலன்கள் ஆகியவற்றைத் தரும் என மேன்மையாகக் கூறியதை நவீன அறிவியல் உபகரணங்களைக் கொண்டு ஆராய ஆரம்பித்தார். விளைவு – ருத்ராட்சம் உடலில் படும் போது டை – எலக்ட்ரிக் பொருளாகப் பயன்பட்டு வெவ்வேறு முகங்களுடைய ருத்ராட்சங்கள் வெவ்வேறு விதமான ‘கபாசிடர்’ களாக இயங்கி புராணங்கள் கூறும் பயன்களைத் தருவதைக் கண்டுபிடித்தார்! கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் இணைய வைத்து இடையில் ருத்ராட்ச மாலை உபயோகப் படுத்தப்படும் போது மனம் ஒருமுகப் படுத்தப்பட்டு மூளை அலைகள் சமன் படுத்தப்படுகின்றன என்பது அவரது ஆய்வின் முடிவில் தெரிந்தது. ஒவ்வொரு விரலுக்கான மின்சக்தியையும், அது கட்டை விரலுடன் இணையும் போது ஏற்படும் அற்புத ஆற்றலையும் விஞ்ஞான ரீதியான படங்களுடனும் புள்ளி விவரங்களுடனும், (Frequency versus inductance for Rudraksha) அவர் விளக்கும் போது அறிவியல் ரீதியாக ருத்ராட்ச மகிமையை உணர முடிகிறது.
ருத்ராட்சத்தின் அர்த்தம்
ருத்ர + அக்ஷ = ருத்ராக்ஷம் (ருத்ராட்சம்)
அதாவது ருத்ரனின் கண்களிலிருந்து விழுந்த துளிகளே ருத்ராட்சமானது. சிவனின் கண்களுக்கு விருப்பமானது என்றும் சொல்வர். ருத்ராட்ச மலைகளில் காணப்படும் ருத்ராட்சம் மரங்களிலிருந்து கிடைக்கிறது. இதை ஆங்கிலத்தில் Elaco carpus seeds என்பர். ருத்ராட்ச பழங்கள் அல்லது விதைகள் சுத்தப்படுத்தப்பட்டு, நடுவிலே உள்ள துவாரங்களின் வழியே நூலால் இணைக்கப்பட்டு மாலையாக்கி அணிவது மரபு.
ருத்ராட்சத்தில் ஒரு முகம் என்பதிலிருந்து 28 முகங்கள் வரை இருப்பது பொதுவாகக் காணப்படுகிறது.
முகம் என்றால் என்ன?
ருத்ராட்சத்தில் உள்ள பிரிவு ஆகும். உதாரணமாக ஐந்து முகம் என்றால் ஆரஞ்சு சுளைகள் போல ஐந்து பிரிவுகளை ஐந்து முக ருத்ராட்சம் கொண்டிருக்கும். இதே போல ஆறுமுகம் என்றால் ஆறு பிரிவுகளைக் காணலாம். சிவனுடைய உடுக்கையிலிருந்து எழுந்த ஒலிகள் அல்லது சப்தங்கள் அல்லது எழுத்துக்கள் 14. இவற்றிற்கும் ருத்ராட்சத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆகவே 14 முகம் வரை உள்ள ருத்ராட்சங்களின் பலன்களைத் தெளிவாக நமது நூல்களில் காணலாம்.
ருத்ராட்சம் : உயிரியல் பெயர் ( Biological name)
ELAEOCARPUS GANITRUS ROXB.( latin name)
விளையும் இடம்
ருத்ராட்ச மரங்கள் காணப்படும் இடங்கள் :
இமய மலைச்சாரல், குஜ்ராத், பீஹார், மத்திய பிரதேசம்
நேபாளம் , தென் கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியா, மலேசியா,
ஜாவா, தைவான் , முக்கியமாக இந்தோனேஷியா, சைனா.
ருத்ராட்சம் :இரசாயன சேர்க்கை
கார்பன் (CARBON). 0.024%
ஹைட்ரஜன் (HYDROGE) 17. 798%
நைட்ரஜன் (NITROGEN) 9.9461%
ஆக்ஸிஜன் (OXYGEN) 0.4531%
அலுமினியம், கால்சியம், க்ளோரின், தாமிரம், கோபால்த், நிக்கல், மக்னீஷியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொடாசியம், சோடியம், துத்தநாகம், சிலிகான் ஆக்ஸைட் உள்ளிட்டவையும் கூட ருத்ராட்சத்தில் இருந்தாலும் அவை மிகக் குறைந்த அளவே உள்ளன.
ருத்ராட்ச பலன்கள்
ருத்ராட்சத்தில் உள்ள பல வகைகளுக்கான ப்லன்களை உபநிடதம் தெரிவிக்கிறது.
:
ஒரு முகம் : இந்திரிய சுகம் பெற்று பர தத்துவத்தில் லயிப்பர்
இரு முகம் : அர்த்த நாரீஸ்வர சிவ ஸ்வரூபம். இதை அணிபவரிடம் அர்த்த நாரீஸ்வரர் அருள் இருக்கும்
மூன்று முகம் : மூன்று அக்னிகளின் ஸ்வரூபம். இதை அணிந்தால் அக்னி தேவனின் அருள் கிடைக்கும்.
நான்கு முகம் : பிரம்மாவின் வடிவம். இதை அணிந்தால் பிரம்ம ப்ரீதி
ஐந்து முகம் : பஞ்ச பிரம்ம ஸ்வரூபம். பிரம்மஹத்தி பாவத்தைப் போக்க வல்லது.
ஆறு முகம் : கார்த்திகேயரை அதி தேவதையாக உடையது. இதை அணிந்தால் பெருஞ் செல்வமும், சிறந்த ஆரோக்கியமும் ஏற்படும். நல்ல புத்தி, சிறந்த ஞானம், ஸம்பத்து, தூய்மை அனைத்திற்கும் இடமானது. புத்திமான் இதைத் தரிக்க வேண்டும். விநாயகர் முதலிய தெய்வங்களும் அருள் புரிவர் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஏழு முகம் : சப்த மாதாக்களை அதி தெய்வமாகக் கொண்டது. இதைத் தரிப்பதால் செல்வ வளம், உடல் நலம், சிறந்த ஞானம் ஏற்படும்.
எட்டு முகம் : எட்டு மாத்ருகா தேவிகளின் உறைவிடம். இதைத் தரிப்பவர்கள் ஸ்த்தியவாதிகளாவர். அஷ்ட மாதாக்களின் ப்ரீதியையும் அஷ்ட வசுக்களின் ப்ரீதியையும் கங்கா தேவியின் அருளையும் பெறுவர்.
ந்வ முகம் : நவ சக்திகளின் உறைவிடம். இதை அணிவதால் நவ சக்திகளின் அருள் ஏற்படும்.
தச முகம் : யமனை அதி தேவதையாக உடையது. இதை அணிவதால் ந்வ கிரக தசைகளின் சாந்தி ஏற்படும்.
11 முகம் : ஏகாதச ருத்ரர்களை தெய்வமாக உடையது. எப்போதும் ஸௌபாக்கியத்தை வளர்க்கும்.
12 முகம் : மஹா விஷ்ணு ஸ்வரூபம். 12 ஆதித்யர்களையும் தன்னுள் கொண்டது.
13 முகம் : விரும்பிய சுப சித்திகளை அளிப்பது. இதை அணிவதால் காம தேவன் அருள் ஏற்படும்.
14 முகம் : ருதர நேத்திரத்திலிருந்து தோன்றியது. எல்லா வியாதிகளையும் போக்கி எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.
இப்படி பலன்களைக் குறிப்பாகச் சொல்லி அருளுவது ருத்ர ஜாபால உபநிடதம் ஆகும்.
இந்த அட்டவணையிலிருந்து படைப்பாற்றல் திறனை பெற விழைவோர் ஒரு முகத்தையும், பாலியல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்க விரும்புவோர் 13 முகத்தையும், செல்வ வளம் விரும்புவோர் 6 முகத்தையும், மரண பயம் நீங்க விரும்புவோர் 10 முகத்தையும் முக்தி பெற விரும்புவோர் ஏக முகத்தையும் அணிய வேண்டும் என்பது தெளிவு.
ஜன்ம ராசிக்கு உகந்த ருத்ராட்ச வகை
இனி மனிதராயப் பிறந்தோர் ஒவ்வொருவரும் கிரகங்கள் சஞ்சரிக்கும் 12 ராசிகளில் ஏதேனும் ஒரு ராசியில் பிறந்திருப்பதை ஒட்டி எந்த ராசியில் பிறந்தோர் எந்த வகை ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்றும் நம் ரிஷிகள் கூறி அருளியுள்ளனர்.
அதைக் கீழே காணலாம்:
ஜன்ம ராசி ராசி அதிபதி அணிய வேண்டிய ருத்ராட்சம்
மேஷம், விருச்சிகம் செவ்வாய் மூன்று முகம்
ரிஷபம், துலாம் சுக்ரன் ஷண்முகம்
மிதுனம், கன்னி புதன் நான்கு முகம்
கடகம் சந்திரன் இரண்டு முகம்
சிம்மம் சூரியன் ஏகமுகம் அல்லது த்வாதச முகம்
தனுசு, மீனம் ப்ருஹஸ்பதி ஐந்து முகம்
மகரம், கும்பம் சனி சப்த முகம்
நட்சத்திரங்களுக்கு உரிய ருத்ராட்ச வகைகள்
இனி 27 நட்சத்திரங்களுக்கான அதி தேவதையையும் அணிய வேண்டிய ருத்ராட்சத்தையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அந்தப் பட்டியல் வருமாறு:-
நட்சத்திரம் அதி தேவதை அணிய வேண்டிய ருத்ராட்சம்
அசுவனி கேது நவமுகம்
பரணி சுக்ரன் ஷண்முகம்
கார்த்திகை சூர்யன் ஏக முகம், த்வாதச முகம்
ரோஹிணி சந்திரன் இரண்டு முகம்
மிருகசீரிஷம் செவ்வாய் மூன்று முகம்
திருவாதிரை ராகு எட்டு முகம்
புனர்பூசம் ப்ருஹஸ்பதி ஐந்து முகம்
பூசம் சனி சப்த முகம்
ஆயில்யம் புதன் நான்கு முகம்
மகம் கேது நவ முகம்
பூரம் சுக்ரன் ஷண்முகம்
உத்தரம் சூர்யன் ஏக முகம், த்வாதச முகம்
ஹஸ்தம் சந்திரன் இரண்டு முகம்
சித்திரை செவ்வாய் மூன்று முகம்
சுவாதி ராகு எட்டு முகம்
விசாகம் ப்ருஹஸ்பதி ஐந்து முகம்
அனுஷம் சனி சப்த முகம்
கேட்டை புதன் நான்கு முகம்
மூலம் கேது நவ முகம்
பூராடம் சுக்ரன் ஷண்முகம்
உத்தராடம் சூரியன் ஏக முகம், த்வாதச முகம்
திருவோணம் சந்திரன் இரண்டு முகம்
அவிட்டம் செவ்வாய் மூன்று முகம்
சதயம் ராகு எட்டு முகம்
பூரட்டாதி ப்ருஹஸ்பதி ஐந்து முகம்
உத்தரட்டாதி சனி சப்த முகம்
ரேவதி புதன் சதுர் முகம்
ருத்ராட்சம் எப்படி தோன்றியது : புராண வரலாறு
ருத்ராட்சம் தோன்றியது பற்றி நமது புராணங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன.
தேவி பாகவதம் கூறும் வரலாறு இது:
ஒரு காலத்தில் திரிபுரன் என்னும் அசுரன் திருமால் பிரமன் உள்ளிட்ட அனைவராலும் ஜயிக்க முடியாதபடி இருந்து அனைவரையும் துன்பப்படுத்தி வந்தான்.
அக்கினி போலச் சுடர் விட்டு எரிப்பதாயும், சகல தேவ சொரூபமாயும் உள்ள அகோரம் என்னும் திவ்ய அஸ்திரத்தைப் பற்றி சிவபிரான் பல்லாயிரம் வருடம் சிந்தித்திருந்து கண் விழித்தார். அவரது அஸ்திரத்தால் அசுரன் அழிந்தான்.
அப்போது அவரது மூன்று கண்களிலிலிருந்தும் நீர்த்துளிகள் கீழே விழுந்தன. அதிலிருந்து ருத்ராட்ச மரங்கள் உண்டாயின. அவரது ஆணையின் பொருட்டு அந்த மரங்களிலிருந்து முப்பத்தெட்டு பேதமாயுள்ள ருத்ராட்சங்கள் தோன்றின. வலக்கண்ணாகிய சூரிய நேத்திரத்திலிருந்து தோன்றிய பன்னிரெண்டு பேதங்கள் கபில நிறமாயின.
இடக்கண்ணாகிய சந்திர நேத்திரத்திலிருந்து தோன்றிய பதினாறு பேதங்கள் வெண்ணிறமாயின.
அக்னி நேத்திரத்திலிருந்து தோன்றிய பத்து பேதங்கள் கறுப்பு நிறமாயின.
ருத்ராட்சம் என்றால் ருத்ரனின் கண்கள் எனப் பொருள். (அக்ஷம் – கண்கள்)
எங்கு வாங்குவது, எப்படி வாங்குவது
ருத்ராட்சங்களை எப்படித் தேர்ந்தெடுத்து வாங்குவது?
நல்ல விஷயம் தெரிந்த, உங்கள் நலனில் அக்கறையுள்ள நண்பர் அல்லது நிபுணர் மூலம் வாங்குவதே சிறந்தது.
ஏக முகம் கிடைப்பது அரிது. பஞ்ச முகம் சுலபமாகக் கிடைக்கும்.
அரிதாகக் கிடைக்கும் ஏக முகம் லட்ச ரூபாய் என்று சொல்லும் போது பஞ்ச முகம் இரண்டு அல்லது மூன்று ரூபாய்க்குக் கூடக் கிடைக்கும். சில ருத்ராட்சங்களின் விலை இருபது லட்சம் என்று சொல்லும் போது மலைக்க வேண்டி இருக்கும்.
108 மணிகள் அல்லது 54 மணிகளைச் சேர்த்து மாலையாக அணிவது பொதுவாக அனைவரும் கடைப்பிடிக்கும் மரபாகும்.
எப்படி சோதிப்பது?
ருத்ராட்சம் வாங்குவதில் சுலபமாக ஏமாற்றப்படலாம்.
ஆகவே நல்ல ருத்ராட்சமா எனச் சோதித்து உறுதியான பின்னரே வாங்கி அணிய வேண்டும். இல்லையேல் பயன் இருக்காது.
ருத்ராட்சம் நல்ல தரமானதா என்பதை எப்படி அறிவது?
முதலில் பார்வையால் சோதனையிட வேண்டும். ருத்ராட்சம் அனைத்தும் ஒரே போல ஒரு வித வேறுபாடுமின்றி இருந்தால் அது மோல்டிங் எனப்படும் அச்சில் வார்க்கப்பட்ட செயற்கை மணிகள்- சிந்தடிக் – என்பதைச் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம். இயற்கை ருத்ராட்சங்கள் நிச்சயம் ஒன்றுக்கொன்று சிறிது வேறுபாட்டுடன் துளைகளுடன் இருக்கும்.
அடுத்து அதன் ஸ்பெஸிபிக் கிராவிடி எனப்படும் அடர்த்தி எண் அல்லது ஒப்படர்த்தி 1.1 முதல் 1.6 வரை இருக்கலாம்.
தாமிரக் காசுகளின் இடையே மிகவும் தரமான ருத்ராட்ச மணியை வைத்தால் அது சுழலும்.
இன்னும் ஒரு எளிய வழி – ருத்ராட்சத்தை நீரில் போட்டால் நல்ல ருத்ராட்சம் மூழ்கும். போலிகள் மிதக்கும்.
ருத்ராட்சங்களை எப்படி அணிவது
ருத்ராட்சங்களை அதற்குரிய பட்டு நூலில் இணைத்து அணிவது மரபு. பித்தளையிலும், வெள்ளியிலும், தங்கத்திலும் இணைத்து அணிவது அவரவர் வசதியைப் பொறுத்தது.
முதலில் அணியும் போது ருத்ராட்சங்களை கங்கை ஜலம் அல்லது பசும்பாலில் அல்லது கோமூத்திரத்தில் நனைத்து அணிதல் வேண்டும்.
சுத்தமான நிலையில் அணிவது நல்ல பயனைத் தரும்.
புஷ்ய நட்சத்திரமும் வியாழக்கிழமையும் கூடிய நாளில் இதை அணிந்தால் அதிகப் பலனைப் பெறலாம் என அற நூல்கள் கூறுகின்றன. (வருடத்திற்கு இந்த அமைப்பு இரு தடவை வரலாம்)
பெண்கள் அணியலாமா?
ருத்ராட்சங்களைப் பெண்கள் அணியக் கூடாது என்ற தவறான கருத்து நிலவுகிறது.
பெண்களும் ருத்ராட்சத்தை அணியலாம். (மாதவிலக்குக் காலம் தவிர) சிவ புராணத்தில் சிவன் பார்வதியிடம் , “அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும்,பெண்களும் இதை அணியலாம்” என்று கூறி அருள்கிறார் (சிவ புராணம் அத்தியாயம் 25, சுலோகம் 47)
ருத்ராட்சம் பற்றிய நமது இதிஹாஸ, புராணங்கள் மற்றும் அறநூல்கள் தரும் சுவையான செய்திகளில் ஒரு சிலவற்றையே மேலே பார்த்தோம். சிவ ரகசியம், திருமூலரின் திருமந்திரம் உள்ளிட்ட ஏராளமான நூல்களில், இதன் அருமை பெருமைகளைப் படித்தால் வியந்து பிரமிப்போம்.
இன்னும் ருத்ராட்சத்தில் நிபுணர்களாக உள்ளவரை அணுகி அவரவருக்கு உரிய வகையைத் தேர்ந்தெடுத்து அணிந்தால் அவரவர் பிரச்சினைகள் களையப்பட்டு அனைத்து நலன்களையும் பெறுவது உறுதி.
சுற்றமும் நட்பும் சூழ அனைவரும் ருத்ராட்சம் அணிந்து சகல மேன்மைகளையும் பெற வாழ்த்துக்கள்!
***
tag- ருத்ராட்சம்