WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,028
Date uploaded in London – – 19 JUNE 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
முடா! முரா! முரி!
ச.நாகராஜன்
டொயொடோ உற்பத்தி செய்முறையின் தந்தை என்று புகழப்படுபவர் தாய்ச்சி ஒஹ்னோ. அவர் அந்த உற்பத்தி முறைக்கான விதிமுறைகளை வகுத்து ஒரு வாடிக்கையாளரின் தேவை என்ன என்பதைப் புரிந்து கொண்டு தரமான தயாரிப்பை உரிய காலத்தில் அளிக்க ஆரம்பித்தார். இந்த முறையில் முக்கியமான ஒன்று கழிவுகளை அறவே தவிர்ப்பதாகும்.
இந்த முறையில் கழிவைத் தவிர்க்க நாம் அறிய வேண்டியவை முக்கியமான மூன்று சொற்கள்.
முடா, முரா, முரி, (அதாவது கழிவு, சமமற்ற தன்மை அல்லது உரிய ஸ்டாண்டர்ட் இல்லாதிருப்பது, அதிகச் சுமை)
இந்த மூன்றையும் நாம் தவிர்க்க வேண்டும்!
முடா (WASTE –கழிவு)
ஒரு தயாரிப்பில் அதன் மதிப்பைக் கூட்டாத எந்த ஒரு செயலும் முடா எனப்படும். செய்முறையில் ஏற்படும் எந்த ஒரு வீணான வேலையும் கழிவும் அங்கு பணிபுரிபவர்களுக்கோ அல்லது வணிகத்திற்கோ நிச்சயம் உதவப் போவதில்லை. அவை தயாரிப்புச் செலவை கூட்டுவதோடு பொருளைத் தயாரிக்க ஆகும் காலத்தையும் அதிகரிக்கிறது.
பொருளுக்கான டிமாண்ட் சந்தையில் இல்லை என்ற சமயத்தில் உற்பத்தியை அதிகமாகச் செய்து குவிப்பது.
பொருளைத் தயாரிக்கத் தேவையான உரிய நேரத்தை விட அதிகமாகப் பணி புரிந்து அதை உருவாக்குவது.
பொருளைத் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை அதிகமாக வாங்கி ஸ்டாக் செய்வது அல்லது பற்றாக்குறை ஏற்படும் வண்ணம் குறைவாக வைத்திருப்பது. இது தயாரிப்புச் செலவை மிக அதிகமாகக் கூட்டி விடும். அது மட்டுமல்ல, அதை சேகரித்து ஓரிடத்தில் வைத்திருப்பதால் அதிகப்படியான இடமும் தேவைப்படும்.
பொருளை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் போக்குவரத்து.
பொருளைத் தயாரிக்க உதவும் மெஷின்களைக் கொண்டு செல்வது,
பணியாளர்களை தயாரிக்கும் இடத்திற்குக் கொண்டு செல்வது,
ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு காத்திருப்பது,
தயாரிப்பில் ஏற்படும் தவறுகளால் மீண்டும் மீண்டும் அதைச் சரிபார்க்க வேலை செய்வது
இவையெல்லாம் ஊன்றி கவனிக்கப்பட வேண்டிய அமசங்கள்.
இப்படி தேவையற்ற அனைத்தையும் களைந்து விட்டோமானால்,
தயாரிப்புச் செலவு குறையும்.
தரம் கூடும். வேலைத் திறன் கூடும். லாபம் அதிகமாகும்.
முரா (சமமற்ற தன்மை – UNEVENNESS)
அடுத்து முடாவுடன் கூடவே பார்க்க வேண்டியது முரா!
ஒரு பொருள் எந்தவிதமாகத் தயாரிக்கப்பட வேண்டும் என்ற தர நிர்ணயங்கள் இருத்தல் வேண்டும். ‘ஸ்டாண்டர்ட்ஸ்’ (STANDARDS) என்று சொல்லப்படும் இந்த தர நிர்ணயங்கள் இல்லை எனில் வேஸ்ட் எனப்படும் கழிவு அதிகமாக ஏற்படும். தரமில்லாததைக் குப்பையில் தானே கொட்ட வேண்டும்? வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு இல்லை என்ற போதிலும் கூட அந்த மாதத்திற்கான இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக அவசரம் அவசரமாக பொருளைத் த்யாரித்து கோடவுனில் கொண்டு சேர்ப்பது ஒரு நிறுவனத்திற்கு எந்த விதத்தில் உதவும்?
விற்பனைப் பிரிவு அதிகாரிகள் மீது அதிக பளு சுமத்தப்பட்டு எப்படியாவது விற்க முற்பட்டு அவசரம் அவசரமாகத் தரமற்று தயாரிக்கப்பட்ட பொருள்களை அவர்கள் சந்தையில் கொண்டு சென்றால் அவை வாடிக்கையாளர்களால் நிராகரிக்கப்படும்.
ஆகவே முரா என்பதைக் கவனித்து தரமற்று இருப்பதால் வரும் கழிவுகளைத் தவிர்த்தல் வேண்டும்.
அடுத்து வருவது முரி!
முரி (அதிகச் சுமை OVERBURDEN)
முரி என்பது செய்முறைகளில் அதிக சிக்கலாக உள்ளவற்றைத் தொழிலாளர்கள் மீது ஏற்றி அவர்களை அதிகமாக சிரமப்படுத்துவதாகும். இதன் விளைவு தரமற்ற பொருள்களைத் தயாரிப்பதிலும் அதிக கழிவையும் ஏற்படுத்தும்!
இதைக் களைய பணியாளர்களுக்கு தங்கள் தங்கள் பணியில் நல்ல பயிற்சி தரப்பட வேண்டும்.
தர நிர்ணயம் செய்யப்பட்டு எந்தத் தரம் எதிர்பார்க்கப்படுகிறது என்பதை பணியாளர்கள் புரிந்து கொள்ளும்ப்டி செய்ய வேண்டும்.
அவர்களுக்குச் சரியான கருவிகள் தரப்படுகின்றனவா, அவை சரியாக வேலை செய்யும்படி உள்ளனவா என்பது சரிபார்க்கப்பட வேண்டும்.
ஒரு சிறிய சுத்தியல் ஆனாலும் சரி, ஸ்குரூ டிரைவர் ஆனாலும் சரி அது சரியாக வேலை செய்யும் விதத்தில் இருத்தல் வேண்டும்.
இப்படி முடா, முரா, முரியை அறிந்து கொண்டு தரமான பொருளைத் தயாரித்தால் அது சந்தையில் எப்படி ஒரு பிரமாதமான வரவேற்பை பெறும்?
இதைத் தான் டொயொடா உற்பத்தி முறை தந்தது; வரவேற்பைப் பெற்றது.
சரி இந்த முடா, முரா, முரி தொழிலகங்களுக்கு மட்டும் தான் பொருந்துமா என்ன?
இப்போது சாஃப்ட்வேர் டெவ்லப்மெண்டிற்கும் இதைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
சற்று யோசித்துப் பார்த்தால்,
அன்றாட வாழ்க்கையில் பல்வேறு அம்சங்களுக்கும் உரிய முறையில் இதை நமக்கு ஏற்றபடி மாற்றி இந்த முறையை நாம் கடைப்பிடிக்க முடியும்.
தேவையறற இ-மெய்ல்களைக் குவித்து வைத்துத் திண்டாடுவது, சமையலுக்குத் தேவையானவற்றை உரிய காலத்தில் உரிய அளவில் உரிய விலையில் வாங்காமல் இருப்பது, நமது அன்றாட வாழ்வில் தரமற்ற பொருள்களை உபயோகித்து நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வது இப்படி ஒரு பட்டியலைப் போட்டால் நாமே அயர்ந்து போவோம்.
அட நாமே முடா, முரா,முரியை பல்வேறு அம்சங்களில் பார்க்க வேண்டும் போல் இருக்கிறதே என்ற முடிவுக்கு வந்து விடுவோம்.
முடா, முரா, முரி என்பது நல்ல வாழ்க்கை முறைக்கான அருமையான ஒரு உத்தி என்பதை அறிவோம். நமக்குத் தேவைக்கேற்றபடி மாற்றிக் கொண்டு கடைப்பிடிப்போம்!
**
tags- முடா, முரா, முரி