WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,032
Date uploaded in London – – 20 JUNE 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
உலகையே அதிர வைத்த ஒரு விவசாயி!
ச.நாகராஜன்
ஆஸ்திரேலியாவில் உருளைக்கிழங்கைப் பயிரிட்டு வாழ்ந்து வந்த 61 வயதான ஒரு சாதாரண விவசாயி சிட்னியிலிருந்து மெல்போர்ன் வரை ஓடும் அல்ட்ரா – மாடர்ன் போட்டியில் கலந்து கொண்டு உலகையே அதிசயிக்க வைத்தார்.
அவரது பெயர் க்ளிஃப் யங்! (Cliff Young)
விக்டோரியாவில் பீச் காடுகளில் அவரது குடும்பம் ஒரு பண்ணையைக் கொண்டிருந்தது. 2000 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தப் பண்ணையில் 2000 ஆடுகளை அவர் வளர்த்து வந்தார்.
தினசரி இந்த 2000 ஆடுகளையும் இவ்வளவு பெரிய பரப்பளவில் கண்டுபிடித்து அதைக் கணக்கிடும் வேலை அவருடையது. ஓடி ஓடி ஒவ்வொன்றாகப் பிடிக்கும் இந்த வேலையில் சில ஆடுகளை இரண்டு மூன்று நாட்கள் ஓடிப் பிடிக்க வேண்டியிருக்கும்.
அவர் சிட்னி- மெல்போர்ன் போட்டியில் கலந்து கொள்ள வந்தார்.
சிட்னிக்கும் மெல்போர்னுக்கும் இடையே உள்ள தூரம் 544 மைல்கள்.
கிட்டத்தட்ட சுமார் 150 உலக மகா வீரர்கள் அதில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் சிறந்த பயிற்சி பெற்ற ஓட்டப்பந்தய வீரர்கள்.
இவர்களுக்கு இணையாகக் கலந்து கொண்ட வந்த இவருக்கு பயிற்சியாளர் இவரது 81 வயதான அம்மா தான்!
முதல் நாள் மெதுவாக ஓட ஆரம்பித்த க்ளிஃப் மற்ற எல்லோருக்கும் பின்னால் தான் வந்தார்.
ஆனால் அன்று இரவு அனைத்து வீரர்களும் இரவில் நான்கு முதல் ஆறு மணி நேரம் தூங்கும் போது அவர் ஒரு இரண்டு மணி நேரத் தூக்கத்தைத் தவிர்த்து மற்றவர்களுக்கு முன்னால் எழுந்தார். ஓட ஆரம்பித்தார்.
அவரைப் பார்த்த தேசமே வியந்தது. குடிக்க நீர் அருந்துவதற்காக நின்ற அவரை, தொலைக்காட்சி நிருபர்கள் பேட்டி கண்டனர். “நீங்கள் எப்படிப்பட்ட ஓட்டப்பந்தய வீரர்” என்று அவர்கள் அவரைக் கேட்ட போது, “எனக்கு ஒரு முன் அனுபவமும் இல்லை. நான் வயலிலே பிறந்து புதரிலே வளர்ந்தவன்” என்றார் அவர்.
இரண்டாம் நாள் ஓட்டத்தில் இடைவிடாது ஓடிய க்ளிஃப் ஒரு மணி நேரம் தூங்கினார், எழுந்தார், ஓடலானார்.
மூன்றாம் நாள் செய்தித்தாள்களில் முதல் பக்கத்தைப் பிடித்தார் க்ளிஃப்.
மக்கள் அவரை உற்சாகப்படுத்தினர். நான்காம் நாள் உலக மீடியாக்கள் அனைத்தும் தம் கவனத்தை அவர் மீது திருப்பின. அடுத்த நாள் அவர் கடைசி எல்லைக் கோட்டைத் தாண்டினார். வென்றார்! அவருக்கு அடுத்தாற் போல வந்த வீரரை விட அவர் பத்து மணி நேரம் முன்னால் வந்திருந்து வெற்றியைப் பெற்றிருந்தார்.
544 மைல் தூரத்தை அவர் கடக்க எடுத்துக் கொண்ட காலம் 5 நாட்கள், 14 மணி 35 நிமிடங்கள். இது முந்தைய ரிகார்டை விட இரண்டு நாட்களுக்கும் முன்னதாக இருந்தது!
ஓட்டத்தின் போது அவர் தூங்கலாம் என்பதை அறியாத அவர் தனது பண்ணையில் புயல்காலத்தில் ஆடுகளைத் துரத்துவதாக மனதில் கற்பனை செய்து கொண்டு ஓடிக் கொண்டே இருந்தார்.
போட்டியில் வென்றதற்காக பத்தாயிரம் டாலர் பரிசு அவருக்குத் தரப்பட்டது. ஆனால் அந்தப் பணம் முழுவதையும் அவர் கொடுத்து விட்டார். ஒரு டாலரைக் கூட தான் எடுத்துக் கொள்ளவில்லை.
தன்னை விட அதிகம் கஷ்டப்பட்ட ஐந்து பேருக்கு ஆளுக்கு 2000 டாலர் வீதம் அவர் அதைப் பிரித்துக் கொடுத்து விட்டார்.
அவரது இந்த செய்கை ஆஸ்திரேலியாவையே உருக வைத்து விட்டது. மக்கள் மனதில் அவர் நிரந்தர இடத்தைப் பெற்றார்.
1997இல் தனது 76ஆம் வயதில் ‘அரவுண்ட் ஆஸ்திரேலியா’ என்ற போட்டியில் அவர் கலந்து கொண்டார். ஆனால் 4000 மைல்களைக் கடந்து விட்ட நிலையில் தனது குழு மெம்பர் ஒருவரின் உடல்நலக் குறைவு காரணமாக அவர் விலக நேர்ந்தது.
2000ஆம் ஆண்டில் விக்டோரியாவில் ஆறு நாள் ஓட்டப் பந்தயத்தில் மறுபடியும் ஒரு உலக சாதனையை அவர் படைத்தார்.
ஐந்து வருட காலம் கான்ஸருடன்போராடிய அவர் 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி தனது 81ஆம் வயதில் காலமானார்.
அவர் உருவாக்கிய ஸ்டைல் ‘யங் ஷபில்’ (Young Shuffle) என்ற பெயரைப் பெற்றது. மாரதான் ஓட்டப்பந்தய வீரர்கள் சாதாரணமாக ஓடுவது போல இல்லாமல் வேறு விதமாக அவர் கால்களை உந்தி எடுத்த உத்தி வெகு விரைவில் பிரசித்தமானது. அவரது இந்த உத்தி இன்னும் அதிக ஏரோடைனமிக்ஸ் உள்ளதாக இருப்பதாகவும் குறைந்த சக்தியைப் பயன்படுத்துவதாகவும் நிபுணர்கள் பின்னால் அறிவித்தனர்.
ஒரு சாமானிய விவசாயி உலகையே புதிய உத்தியால் அயர வைத்த சம்பவம் தான் க்ளிஃப் யங்கின் அல்ட்ரா – மாடர்ன் ஓட்டம்!
***