Post No. 11,035
Date uploaded in London – – 20 JUNE 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
குஜராத்தில் வட்நாகர் என்னும் இடத்தில் சுமார் 2000 ஆண்டுகளாக நகர் / நாகர பிராமணர்கள் வசித்து வந்தனர். அவர்களைப் பற்றிய சில கதைகள் இதோ :-
ஒரு சமயம் மொகலாய சக்கரவர்த்தி அக்பர் குஜராத்துக்கு வந்தார். அப்பொழுது தானா, ரீரி என்ற இரண்டு பெண்கள் மலஹரி ராகத்தை அழகாகப் பாடினார்கள். அதில் மயங்கிப் போன அக்பர் அவர்களை டில்லிக்கு வந்து ஆஸ்தானப் பாடகிகளாக பதவி ஏற்க வரவேற்றார். ஆனால் நாகர பிராமணர்கள அதற்கு இசைவு தெரிவிக்க மறுத்தனர் . முகலாயர்களின் தீய எண்ணங்கள் அவர்களுக்கு தெரியும். பெரிய போர் மூண்டது. ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இரண்டு பெண்களும் தங்களால் சமூகத்திற்கு ஏற்பட்ட அழிவை எண்ணி வருந்தி தீக்குளித்து இறந்தனர். இன்றும் வட்நாகர் சுடுகாட்டில் அவர்களுக்கு நினைவுச் சின்னம் இருக்கிறது
அக்பரின் அவைக்கள புலவர் தான்சேன் உலகப் புகழ்பெற்றவர். தீக்குளித்து உயிர்நீத்து தியாகம் செய்த இரண்டு பெண்களின் நினைவாக அவர் ஒரு ராகத்தை இயற்றி அதற்கு ‘தான ரீரி’ என்றே பெயரிட்டார். இதனால் காலத்தால் அழியாத இடம் பெற்றுவிட்டனர் அவ்விரு பெண்களும்.
xxx
மற்றொரு சம்பவம்
நாகர பிராமணர்கள் பல்கலை வித்தகர்கள்; அரசாட்சி நிர்வாகம், அமைச்சர் வேலை, ராஜ தந்திரம், போர்க்கலை ஆகிய அனைத்தும் அறிந்தவர்கள். மாதவ் என்பவர் கடைசி ராஜபுத்திர மன்னர் கரண் கேலாவிடம் வெளி பார்த்து வந்தார். ஒரு சமயம் அரசாங்க வேலை நிமித்தமாக வெளியூர் சென்றார். அந்த சமயத்தில் மன்னரின் கொடிய பார்வை மாதவின் மனைவி பக்கம் திரும்பியது. அவளுடைய சகோதரர் கேசவ் என்பவர் மன்னரைத் தடுத்தார். அப்போது நடந்த சண்டையில் கேசவ் கொல்லப்பட்டார். மாதவ், ஊருக்குத் திரும்பியவுடன் நடந்ததை அறிந்தார். ரத்தம் கொதிக்க வெகுண்டு எழுந்தார். அப்போது டில்லியை அரசாண்ட மஹா பாவி, கொடுங்கோலன், கொள்ளைக்காரன், மத வெறியன் அலாவுதீன் கில்ஜி ஆவான். தென்னாட்டுக் கோவில்களை சூறையாடி, தரைமட்டமாக்கி , தங்கம் முழுவதையும் அள்ளிச் சென்றவன். அவனிடம் போய் உதவிகேட்டார் மாதவ். பாலுக்கு பூனையை காவலுக்கு அழைத்தது போல அவனை அழைத்தார். அவனும் படைகளுடன் வந்து கரண் கேலா என்ற மன்னரைத் தோற்கடித்தான். அத்தோடு நில்லாமல் மாதவின் மனைவி, மகளை கடத்திச் சென்று முஸ்லீம் மதத்துக்கு மாற்றினான் . பின்னர் நடந்ததை எழுத்தில் வடிக்கத் தேவையே இல்லை.
Xxx
மூன்றாவது சம்பவம்
அனார்த்த என்ற இடத்தை ஆண்டு வந்த சமத்கார் என்னும் மன்னர் ஒரு முறை வேட்டை ஆட வந்தார். குட்டிக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்த தாய் மானைக் கொன்றார். அந்த மான் அவரைச் சபிக்கவே, மன்னருக்கு வெண்குஷ்ட நோய் வந்தது . அத ஊர் பிராமணர்கள் மூலிகை மருத்துவம் மூலம் மன்னரைக் குணப்படுத்தினார்கள் . மனம் மகிழ்ந்த மன்னன், பிராமணர்களுக்கு நிலம், பொருள் ஆகியவற்றைத் தானமாக அளித்தான். ஆனால் தானத்தை வாங்க பிராமணர்கள் மறுத்தனர். பின்னர் மஹாராணி கெஞ்சிக் கேட்டதன் பேரில் 72 பிராமண குடும்பங்களில் 68 பேரின் மனைவியர் தானத்தை ஏற்றனர். இறுதிவரை மானம் , மரியாதையுடன் வாழ்ந்த 4 பிராமணர்கள், குடும்பத்துடன் இமயமலைக்குச் சென்றுவிட்டனர். தானம் வாங்கி வாழ்ந்த 68 குடும்பங்களின் பேரில் 68 கோத்திரங்கள் உருவானதாக ஒரு கதை.
மற்றொரு கதையும் உண்டு. நோயைத் தீர்த்த பிராமணர்களுக்காக அரசன், அவர்கள் வணங்கும் ஹத்கேஸ்வருக்கு ஒரு கோவில் கட்டி, சமத்கார்பூர் என்ற நகரையும் உருவாக்கியதாகவும் அதுவே பல பெயர்களாக மாறி, இறுதியில் வட்நாகர் என்று அழைக்கப்பட்டதாகவும், அங்கு வசித்த பிராமணர்களுக்கு ‘நாகர பிராமணர்கள்’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவார்கள்.
இவர்கள் ஆதிகாலத்தில் தற்போது, லடாக் என்று அழைக்கப்படும் ஹட்டாக் என்ற இடத்திலிருந்து குஜராத்தில் குடியேறினராம். வெளிநாட்டினரின் படை எடுப்புகளால் இவர்கள் இடம்பெயர்ந்து பல மாநிலங்களுக்கும் குடியேறினர். இவர்களின் குல ஒழுக்கத்தை நிலை நாட்ட கி.பி.347-ல் சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டதாக கந்த புராணத்தின் ‘நாகர் காண்டம்’ கூறும்.
குஜராத்தில் முதல் முதலில் பெண் பட்டதாரிகளான (1901) பெண்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே. பெண்களுக்கு அதிக உரிமைகளைக் கொடுத்தவர்கள் நாகர பிராமணர்கள். இப்போது குஜராத்துக்கு வெளியேயும் இவர்கள் வாழ்கின்றனர்.
-சுபம்-
Tags- குஜராத், வட்நாகர், நகர் / நாகர, பிராமணர்கள், அக்பர், தானா, ரீரி, தான்சேன், ராகம்