சுவரின் மறுபக்கம்! (Post No.11,036)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,036

Date uploaded in London – –    21 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சுவரின் மறுபக்கம்!

ச.நாகராஜன்

ஒரு அழகிய இளம் பெண் தோட்டத்துடன் கூடிய பிரம்மாண்டமான வீட்டில் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு பூத்துக் குலுங்கும் மலர்களின் மீது அளவிலா ஆசை. ஆகவே விதவிதமான மலர்ச் செடிகளை வாங்கி தன் தோட்டத்தில் நட்டு, நீர் பாய்ச்சி வளர்த்து வந்தாள்.

அவளது பாட்டி அவளை மிகவும் ஊக்குவித்து வளர்த்து வந்தாள். நல்ல காரியங்களுக்கு எப்போதுமே பயன் உண்டு என்றும் பலனை எதிர்பார்க்காமல் எதையும் செய்யக் கற்றுக் கொள் என்றும் அவள் அடிக்கடி கூறுவது உண்டு.

பகவத் கீதையின் முக்கியமான தத்துவங்கள் இவை என்பதை அவள் அறிவாள்.

ஒரு நாள் பாட்டி அவளிடம் ஒரு மலர்ச் செடியின் படத்தைக் காண்பித்தாள். அதை வாங்கிப் பார்த்த இளம் பெண் அது பூத்துக் குலுங்கியவுடன் ஏந்தி நிற்கும் அழகிய மலர்களின் படத்தைப் பார்த்து மயங்கி ந்ன்றாள்.

அப்படி ஒரு வர்ண ஜாலம். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றியது.

மனமெல்லாம் உற்சாகத்தால் நிறைய நாள் முழுவதும் அவளால் ஏராளமான பணிகளை  வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது.

ஒரு தீர்மானத்திற்கு வந்தாள் அவள்.

நிச்சயமாக அந்த மலர்ச் செடியை வாங்கித் தன் தோட்டத்தில் பயிரிட்டு வளர்ப்பது என்பது தான் அவளது  முடிவான தீர்மானம்.

உடனே கடைக்குச் சென்றாள். தேடிப்பிடித்து அந்தச் செடியை வாங்கி தன் தோட்டத்தில் காம்பவுண்டு சுவருக்கு அருகே பயிரிட்டாள்.

தினமும் கவனமாக அதற்கு நீர் ஊற்றி வளர்த்து வந்தாள். செடி மெல்ல மெல்ல வளர்நதது. உயரமானது.

முன் பக்கம் பச்சைப் பசேலென இலைகள்; கிளைகள். ஆனால மலர்களைக் காணோம்.

இளம்பெண் கவனமாக உற்றுக் கவனிப்பாள். ஏதேனும் ஒரு ம்லராவது அரும்பி இருக்கிறதா என்று பார்ப்பாள்.

ஊஹூம். ஒன்றைக் கூடக் காணோம்.

சற்று ஏமாற்றம் தான் அவளுக்கு.

இருந்தாலும் விடவில்லை. நீரை கவனமாக வேரில் ஊற்றி வந்தாள்.

ஒரு நாள் காலை விரக்தியோடு அந்தச் செடியின் அருகில் வந்து நின்றாள், பார்த்தாள், ஒரு அரும்பு கூடக் காணோம்.

அப்போது ஒரு குரல் கேட்டது.

“மேடம், தேங்க் யூ, தேங்க் யூ வெரி மச்!”

அடுத்த வீட்டுக்காரரின் குரல் காம்பவுண்டின் அந்தப் பக்கத்திலிருந்து வந்தது.

அவர் புன்சிரிப்புடன் மலர்ச்சியுடன் உற்சாகமாகத் தொடர்ந்தார்.

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. இன்று உங்களை நேரில் சந்தித்து எனது  மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்க ஆசை. எப்போது வரலாம்?”

இளம் பெண்ணுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அடுத்தவீட்டில் இருப்பவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரைப் பார்க்கத்தான் கூட்டம் கூடும்; அவரது அப்பாயிண்ட்மென்ட் யாருக்குமே கிடைக்காது. இளம் பெண்ணுக்கே இத்தனை காலமாக அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்ததில்லை.

அப்ப்டி இருக்க, அவர் எதற்கு தனக்கு நன்றி சொல்ல வேண்டும். அவருக்கு தான் ஒன்றுமே செய்யவில்லையே!

குழம்பி நின்றாள் இளம் பெண்.

“என்ன.. என்ன.. எப்போது வேண்டுமானாலும் வரலாம். என்னை சந்திக்க நீங்கள் நேரம் கேட்பதாவது. நான் என்ன செய்தேன்?” திக்கித் திணறி ஒருவாறு பேசி முடித்தாள் அவள்.

“என்ன செய்தீர்களாவது? இதோ இந்தப் பக்கம் வந்து பாருங்கள்” என்று அழைத்தார் அவர்.

தனது வீட்டு வாயில் கதவு வழியே வெளியேறி இத்தனை நாள் வரை போகாத அந்த பிரபலத்தின் வீட்டின் கதவைத் தாண்டி உள்ளே சென்றாள் அவள்.

அங்கிருந்த வாட்ச்மேன் மரியாதையுடன் அவளை வணங்கி அவளை அழைத்துச் சென்றான்.

காம்பவுண்டிற்கு இந்தப் பக்கம் தன் செடியின் பல கிளைகள் சாய்ந்திருந்ததைக் கண்டாள் அவள்.

அடடா! என்ன ஒரு அற்புதம். மலர்கள், வண்ண மலர்கள், பூத்துக் குலுங்கும் புது மலர்கள்!

உற்சாகத்தின் ஊற்று!

“இது நீங்கள் இல்லாமல் இப்படி வளர்ந்து அழகிய காட்சியைத் தருமா? இதைக் காலையில் பார்த்து நான் எதைச் செய்தாலும் அது வெற்றி தான். சமீப காலமாக எனது புகழ்  மேலோங்கி வருவதற்கு காரணமே இந்த மலர்களின் காட்சி தான். அதற்கு மூல காரணமே நீங்கள் தான். நன்றி. வீட்டிற்குள்ளே வர முடியுமா?”

பிரபலத்தின் பேச்சைக் கேட்டு விக்கித்து நின்றாள் இளம் பெண்.

வண்ணமயமான மலர்களைக் கண்டாள், புன்சிரிப்புடன் தன்னை குதூகலமாக வரவேற்ற பிரபலத்தையும் பார்த்தாள்.

காலையில் பேச்சுக்குரல் கேட்டு வெளியே வந்த அவளது பாட்டி காம்பவுண்டின் தனது பக்கத்தில் இருந்து இளம் பெண்ணைப் பார்த்து மெதுவாகத் தலை அசைத்து புன்சிரிப்பு ஒன்றை நழுவ விட்டார்.

அந்தத் தலையசைப்பு, ‘அது அப்படித்தான்’ என்று கூறியது.

நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்திற்கும் ஒரு மறு பக்கம் உண்டு என்ற மாபெரும் ரகசியத்தை அந்தப் பெண் அப்போது தான் உணர்ந்தாள்.

சுவரின் மறுபக்கத்தில் அது இருக்கக்கூடும்; நம்மால் உடனே பார்க்கமுடியாதபடி கூட அது இருக்கக்கூடும்.

செய்தல் உன் கடனே – அறம்

செய்தல் உன் கடனே அதில்

எய்துறும் பயனில் எண்ணம் வையாதே! – (மஹாகவி பாரதியார்)

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: