WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,039
Date uploaded in London – – 22 JUNE 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள் – 20
ச.நாகராஜன்
1
மார்க் ட்வெயினின் குடை
மார்க் ட்வெய்ன் (Mark Twain – 1835-1910) தனது ஓட்டையாகிப் போன குடையை எப்படியாவது விட்டெறிய வேண்டும் என்று முயன்றார்.
தன்னால் எப்படி அந்தக் குடையை ஒரு வழியாக கை கழுவி விட முடிந்தது என்ற கதையை அவர் இப்படிச் சொன்னார்!
அந்தப் பழைய குடையை அவர் முதலில் குப்பைத் தொட்டியில் போட்டார். ஆனால் அவர் மேல் மிகுந்த அக்கறையுள்ள ஒரு மனிதன் அதை அவரிடம் பத்திரமாகக் கொண்டு வந்து கொடுத்தான் : “சார், இதோ உங்கள் குடை” என்று.
அடுத்து அவர் அதை ஒரு கிணற்றில் தூக்கிப் போட்டார். ஆனால் கிணறை ரிப்பேர் செய்ய வந்த ஒருவன் அதைப் பார்த்து எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து விட்டான்.
பார்த்தார் ட்வெய்ன். இன்னும் பல வழிகளில் முயன்றார் அதை அகற்ற!
ஊஹூம், ஒன்றும் பலிக்கவில்லை. குடை பத்திரமாக ஒவ்வொரு முறையும் அவரிடமே வந்து சேர்ந்தது.
இறுதியில் அவர் தன் குடையை ஒரு நண்பருக்குக் கடனாகத் தந்தார் – நிச்சயம் திருப்பித் தந்து விட வேண்டுமென்ற நிபந்தனையுடன்!
குடை திரும்பி வரவே இல்லை!
2
தனித்து விடப்பட்ட தீவில் செஸ்டர்னுக்குப் பிடித்த புத்தகம்!
பிரபல எழுத்தாளரான ஜி.கே.செஸ்டர்டன் (G.K. Chesterton – 1874-1936) ஒரு முறை தனது இலக்கிய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர், ‘திடிரென்று தனித்த தீவில் அகப்பட்டுக் கொண்டால் நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படிப்பீர்கள்?’ என்று ஒரு கேள்வியை நண்பர்களிடையே கேட்டார்.
ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த எழுத்தாளரையும் கவிஞரையும் குறிப்பிட ஆரம்பித்தனர் – ஷேக்ஸ்பியர், பைபிள் என்று இப்படி!
ஆனால் செஸ்டர்டன் கூறினார் “ தாமஸ் கைடின் ப்ராக்டிகல் ஷிப் பில்டிங்கைத் தான் படிப்பேன் என்று. (Thomas’s Guide to Practival Shipbuilding)
3
ஹெச். ஜி.வெல்ஸின் கடைசி வார்த்தைகள்!
பிரபல எழுத்தாளரான ஹெச். ஜி.வெல்ஸ் (H.G.Wells 1866-1946) மரணப்படுக்கையில் இருந்தார்.
அவரது நண்பர்களும் உறவினர்களும் அவரிடம் கடைசியாக ஏதாவது கூறுமாறு வேண்டினர்.
“நான் சாவதில் பிஸியாக இருக்கிறேனே” என்றார் அவர்.
(I am busy dying!)
4.
அம்மாவும் அப்பாவும்!
ஒரு மிக மிக வயதான பணக்காரக் கிழவரை மணக்க விரும்பினாள் ஒரு இளம் பெண்.
“குழந்தைகளைக் கூடப் பெற்றுக் கொள்ளலாம்” என்றாள் அவள்.
ஆனால் பணக்காரரோ, “எனது பெற்றோர் அதற்கு விட மாட்டார்களே” என்றார்.
திடுக்கிட்டுப் போன அந்த இளம் பெண், “உங்கள் பெற்றோர் யார்?” என்று கேட்டாள்.
அதற்கு அவர் கூறினார் : “என் அம்மா இயற்கைத் தாய். அப்பா காலம்! (Mother Nature and Father Time)
5
சர்ச்சிலின் வார்த்தைகள்
சர் வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill – 1874-1965) 1955இல் அரசுப் பொறுப்பிலிருந்து விலகி விட்டார்.
என்றாலும் கூட அவருக்கு அளிக்கப்பட்ட கௌரவ சலுகையின் காரணமாக அவர் தனக்கு நினைத்த போதெல்லாம் ஹவுஸ் ஆஃப் காமன்ஸுக்கு வருவார், அங்கு நடப்பதைக் கூர்ந்து கவனிப்பார்.
எண்பது வயது தாண்டிய நிலையில் ஒரு நாள் அவர் ஹவுஸ் ஆஃப் காமன்ஸுக்கு வருகை புரிந்தார்.
அவரை அவரது இருக்கைக்கு அழைத்துச் செல்ல இரு உதவியாளர்கள் வந்தனர்.
அவர்கள் இருவரும் தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் மெதுவாக மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தனர்.
ஒருவர் கூறினார் : “இந்த வயசான பெரிசு ரொம்பவும் தளர்ந்து போயிடிச்சி!”
அடுத்தவர் கூறினார் : தளர்ந்தது மட்டுமல்ல; கிறுக்கும் பிடிச்சிடிச்சி!”
முதலாமவர் கூறினார் : “மூளையும் போயிடிச்சின்னு சொல்றாங்க!”
சர்ச்சில் தனது இருக்கையில் வந்து அமர்ந்தார்.
பின்னர் மெதுவாக அவர்களை நோக்கிக் கூறினார்: “அது மட்டுமா சொல்றாங்க! கிழட்டுக்கு சுத்தமா காது கேட்காதுன்னு கூட உங்க கிட்ட சொல்லி இருப்பாங்களே!”
***
tags- சர்ச்சில், ஹெச். ஜி.வெல்ஸ், மார்க் ட்வெய்ன்