செயற்கை அறிவின் சிறப்பு நகரம் சியோல்! (Post No.11,051)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,051

Date uploaded in London – –    26 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மாலைமலர் 7/6/2022 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

செயற்கை அறிவின் சிறப்பு நகரம் சியோல்!

ச.நாகராஜன்

ஹலோ!

ஆன்யோஹஸயோ? (கொரிய மொழியில் ஹலோ! என்று பொருள்!)

அறிவியல் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேகம் பிரமிக்க வைக்கும் ஒன்று. இந்த வேகத்தில் உருவாகும் நவீன சாதனங்களை எப்படிப் புரிந்து கொள்வது? பயன்படுத்துவது?

ஒரு பாராசூட் எப்போது வேலை செய்து தன் பயனைத் தரும்? அது விரிந்து திறந்த போது தான், பத்திரமாகப் பறந்து தன்னைப் பிணைந்து கொண்டிருப்போரைக் கீழே இறக்கும். அது போல மனது திறந்து விரிந்தால் தான்  சிறப்பான பணியை அது செய்து அனைத்தையும் புரிந்து கொள்ளும். இப்படித் திறந்த மனதுடன் செல்ல வேண்டிய செயற்கை அறிவின் சிகர நகரம் சியோல்!

இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் எவை என்று தனியே திட்டமிடவே வேண்டாம். தென் கொரியாவின் தலை நகரமான சியோல் விமான நிலையத்தில் இறங்கியது முதல் அனைத்தையும் பார்த்து வியப்படைய வேண்டியது தான்.!

நவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாண்டமான ஹோட்டல்கள் நம்மை வரவேற்கும். உள்ளே குளியலறையின் விளக்குகள் சென்ஸார் அடிப்படையில் தானே இயங்கி ஆள் இல்லை எனில் தானே இணைப்பைத் துண்டிக்கும். நீங்கள் பாத்டப்பில் இருந்து திரையைப் போட்டு குளிக்கும் போது விளக்கு அணைந்தால் திரையிலிருந்து கையை மட்டும் வெளியில் நீட்டி சென்ஸரை நோக்கிக் காண்பித்தால் விளக்கு எரியும்.

அடுத்து பழைய காலம் போல கழிவறையில் சுத்தம் செய்து கொள்ள இந்திய பாணியில் இடது கையைப் பயன்படுத்தவே வேண்டாம். அதி நவீன டாய்லெட்டிற்கான கண்ட்ரோல் பானல் மட்டும் இருபது பட்டன்களைக் கொண்டிருக்கும். அதில் தேவையானதை அமுக்கினால் நீர் பீச்சி அடித்துப் பாய்ந்து சுத்தத்தைச் செய்து விடும்!

கையில் கட்டி இருக்கும் கடிகாரம் போன்ற ஒரு வளையத்தில் அனைத்து விதமான கட்டளைகள் உள்ளன. அது தான் எல்லாமே – லிப்டை இயக்க, கதவைத் திறக்க, வீட்டில் உள்ள குடும்பத்தினர் எங்கு இருக்கிறார்கள் என்று அறிய.

கார் உள்ளே நுழையும் போது அதன் நம்பர் பிளேட் ஸ்கேன் செய்யப்பட்டு வீட்டில் உள்ளவர்களுக்குக் கார் வந்து விட்டது என்பதை அறிவிக்கிறது.

வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன்னர் வெளியில் கால நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிவிக்கும் கருவி ஒன்று குடையை எடுத்துக் கொள்ளுங்கள், மழை வரப் போகிறது என்று அன்பான அறிவுரையைத் தருகிறது.

பெற்றோர்களோ, உறவினர்களோ வீட்டிற்கு வருகை புரிந்தால் அவர்களது ‘முகத்தைப் பார்த்து’ அடையாளம் கண்டு கொண்டு அவர்களது போட்டோக்களை வீட்டிற்குள்ளே அனுப்புகிறது; அவர்களை அனுமதிக்கிறது.

சமையலறையில் உள்ள நவீன் சாதனங்கள் தாய்க்குலத்தை வியப்பின் உச்சிக்கே இட்டுச் செல்லும். அதி ருசியான பண்டத்தை எப்படிச் சமைப்பது என்பதை டெமோவாக ஒரு கருவி காட்டும்; சமைப்பதையோ சில கருவிகள் சில நிமிடங்களில் முடித்து விடும். குப்பைகளைப் போட உள்ள தோட்டிகளில் கையை மேலே காண்பித்தால் தொட்டியின் மூடி திறந்து கொள்ளும். குப்பைகளை முறத்திலிருந்து கொட்டியவுடன் மூடிக் கொள்ளும்.

ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு, தகவல் தரும் தொழில்நுட்ப உத்திகள், ஸ்கேனிங், வயர்லெஸ் ஆபரேஷன் நடைமுறைகள் என அத்தனையும் கொண்டுள்ள வீடுகள், ஹோட்டல்கள் அடங்கியது சியோல்.

இதெல்லாம் உண்மை தானா என்று ஆராய ரஷியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய அமெரிக்க எழுத்தாளரான கேரி ஷ்டின்கார்ட் (Gary Shteynngart)  அங்கு சென்றார். பல விருதுகள் பெற்ற பிரபல எழுத்தாளரான அவர் சியோலை நன்கு பார்த்த பின் அதை செயற்கை அறிவின் தலைநகரம் என்று சொல்லிப் புகழாரம் சூட்டி விட்டார்.

தென்கொரிய தொலைக்காட்சித் தொடர்கள்

இதையெல்லாம் எப்படி நம்புவது என்று அவரைப் போலவே திகைக்கும் அனைவரும் தென்கொரிய தொலைக்காட்சி சீரியல்களை வீட்டில் இருந்த இடத்திலிருந்தே பார்த்தால் போதும். க்ராஷ் லேண்டிங் ஆன் யூ, ஸ்டார்ட் அப், மேரியேஜ் காண்ட்ராக்ட்,39 உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நினைத்த உயரத்திற்கு பட்டனை அமுக்கினால் உயரும் கணினி டேபிள், இரண்டாக மடியும் செல் போன், அதைத் திருப்பினால்  கணினியாக மாறும் அதன் வடிவமைப்பு, எந்தக் கேள்வியைக் கேட்டாலும் உடனே பதில் அளிக்கும் வாய்ஸ் அஸிஸ்டண்ட் கருவி என்பன உள்ளிட்ட பல சாதனங்களை மிக சாதாரணமாகப் பார்க்கலாம். தென்கொரிய சீரியல்களில் செண்டிமெண்டும் உண்டு. தமிழில் உள்ள அம்மா என்ற சொல் தான் தென் கொரிய மொழியிலும்; அதே போல அப்பா என்ற அதே சொல் தான் தென் கொரிய மொழியிலும்! ஸ்க்யுட் கேம் (Squid Game)  என்ற தொலைக்காட்சி சீரியல் உலகினரின் கவனத்தை ஈர்க்க, பல்லாயிரம் பேர் அதைப் பார்த்து வருகின்றனர்.

இன்னும் ரொபாட்டுகளின் பயன்பாடு அங்கு அதிகமாகி வருகிறது. லட்சக் கணக்கான டேடா எனப்படும் தரவுகளைக் கொண்டு சியோல் உலகின் முதல் தரமான ஸ்மார்ட் சிடி ஆகப் போகிறது.

இப்படி அதி நவீனமாக உள்ள சியோல் பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட ஒரு பழம்பெரு நகரமாகும்.

இங்கு பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. முக்கியமான சிலவற்றை இங்கே பார்ப்போம்:

கையாங்போகுங் அரண்மனை

பண்டைய காலத்தில் கொரியாவை ஆண்ட ஜோஸியன் வம்சத்தில் கட்டப்பட்ட கையாங்போகுங் அரண்மனை அனைவரையும் ஈர்க்கும் பிரம்மாண்டமான நான்கு வாயில்களைக் கொண்ட அரண்மனை.

நம்சென் டவர்

சியோல் நகரின் முக்கிய கவர்ச்சி நம்சென் சியோல் டவர் ஆகும். நம்சென் மலையின் மீதுள்ள இது ஆண்டுக்கு 120 லட்சம் பயணிகளை ஈர்க்கிறது. கேபிள் கார் மூலம் உச்சியை அடைந்து அங்கிருந்து சியோல் நகரைப் பார்ப்பது ஒரு கண் கொள்ளாக் காட்சி. பல்வேறு படங்களில் இடம் பெற்ற கோபுரம் இது. கடல் மட்டத்திலிருந்து 479.7 மீட்டர் உயரம் உள்ளது இது.

இன்னும் இரு வானளவிய ஸ்கைஸ்க்ரேபர்கள் இங்கு உள்ளன. 123 அடுக்குமாடிகள் உள்ள லோட்டே வோர்ல்ட் டவர் 555 மீட்டர் உயரம் உள்ளது. 63 ஸ்குயர் என்ற கட்டிடம் 249 மீட்டர் உயரம் உள்ளது.

பக்ஹான் ஹனாக் கிராமம்

பாரம்பரியமான கட்டிடங்களைக் கொண்டுள்ள பக்ஹான் ஹனாக் கிராமம் 600 வருடங்களுக்கு முன்பு உருவான ஒரு கிராமம். பார்க்க வேண்டிய ஒரு இடம் இது. இதன் அருகில் உள்ள சியாங்கே நீரோடைக்குச் சென்று ஓய்வெடுப்பதோடு உணவையும் முடித்துக் கொள்ளலாம்.

நம்டாமுன் மார்கெட்

10000 கடைகள் உள்ள மார்கெட் நம்டாமுன் மார்கெட்டில் கிடைக்காத பொருளே இல்லை. துணிகள், மேக் அப் சாதனங்கள், உணவு வகைகள் என்று அனைத்தும் கொண்ட இது தென் கொரியாவின் மிகப் பெரிய சந்தையாகும். 1414இல் தொடங்கிய இந்த சந்தை பழம் பெரும் சந்தை என்ற பெயரைப் பெற்ற ஒன்றாகும்.

போங்குன்ஸா ஆலயம்

புத்த மத துறவியான யான் ஹோ என்பவரால் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ஆலயம் போங்குன்ஸா ஆலயம். இந்த ஆலயத்தில் அற்புதமான கலை அம்சங்களைப் பார்த்து மகிழலாம். இங்கு தங்குவதற்கான ஒரு விசேஷ ஏற்பாடும் உண்டு. புத்த மத துறவியைப் போல ஆடை அணிந்து இங்கே ஒரு நாள் தங்கி ஆன்ம பலத்தை அடைய வழி வகுக்கும் திட்டம் இது. இங்குள்ள துறவிகளைச் சந்தித்து அவர்களுடன் பேசி யார் வேண்டுமானாலும் ஆன்மீக சம்பந்தமான தங்கள் சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளலாம்.

டீ ஹவுஸ்

சியோல் வந்தவர்கள் அருகில் உள்ள இன்ஸாடாங் சென்று டீயை அருந்தாமல் திரும்ப முடியாது. பாரம்பரியமான தேநீரை அதற்குரிய தனிச்சுவையுடன் தர, அதை அருந்துவதில் தான் தேநீர் மகிழ்ச்சி உள்ளது.

நார்யாங்ஜின் மீன் சந்தை

தென் கொரியா கடல் உணவு வகைகளுக்கான தனிப் புகழ் பெற்றது.  நார்யாங்ஜின் மீன் சந்தையில் மட்டும் 700 கடைகள் உள்ளன. வகை வகையான கடல் வகை உணவுகள் சமைத்து பரிமாறப்படும் இந்த சந்தையில் அதிகாலையில் சந்தை ஏலம் உண்டு. அதைப் பார்க்கவும் கூட்டம் கூடும்.

பக்ஹான்ஸன் தேசிய பூங்கா

பக்ஹான்ஸன் தேசிய பூங்கா 1300 வகையான தாவர வகைகளைக் கொண்டுள்ள ஒரு அரும் பூங்கா ஆகும்.

இன்னும் மாஜிக் ஐலேண்ட், பான்போ பிரிட்ஜ் உள்ளிட்ட ஏராளமான இடங்களை நாம் அங்கு தங்கி இருக்கும் காலத்திற்கு ஏற்றபடி திட்டமிட்டுப் பார்க்கலாம்.

கொரியாவின் சமீப கால வரலாறு

இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த கொரியா 1945, செப்டம்பர் 2ஆம் தேதி ஜப்பான் சரணாகதி அடைந்ததை ஒட்டி தென் கொரியா, வட கொரியா என்று இரண்டாகப் பிரிந்தது. 72 வருடங்களுக்கு முன் வட கொரியாவுடன் போரிட்டு அதன் காரணமாக உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக ஆனது. பின்னர் அது பல்வேறு அரசியல் மாற்றங்களைக் கண்டு அறிவியலில் முன்னேற ஆரம்பித்து தற்போது உலகின் கவனத்தை ஈர்க்கிறது.

கிழக்காசியாவில் உள்ள நாடான தென் கொரியா 38741 சதுர மைல் பரப்பைக் கொண்டது. ஜனத்தொகை ஐந்து கோடியே பதினைந்து லட்சம். இந்த ஜனத்தொகையில் இருவருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் சியோலிலோ அல்லது அதன் சுற்றுப்புறத்திலோ வசிக்கின்றனர். வயதானவர்களை அதிகமாகக் கொண்டுள்ள நாடு இது. அத்துடன் உலகில் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களின் நாடு என்ற பெருமையையும் இது பெறுகிறது.

உலகின் பிளாஸ்டிக் சர்ஜரியின் தலை நகரம் என்று சியோலுக்கு ஒரு செல்லப் பெயர் உண்டு. அவ்வளவு பேரும் இளமையாக இருக்கலாம்! கண் இமைகளுக்கு சர்ஜரி, தொங்கும் கழுத்துகளுக்கு சர்ஜரி, தோலை பளபளப்பாக்கும் ஊசி – இப்படி உடலை இளமையாக்கும் விந்தைகள் இங்கு  மட்டுமே உண்டு!

ரோபோ நாடு

உலகின் அதி சிறந்த ரோபோ இருக்குமிடம் கொரியாவின் அட்வான்ஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கட்டிடத்தில்.

அதன் பெயர் ஹ்யூபோ! (Hubo)!

ரொபாட்டுகள் தோன்ற ஆரம்பித்ததிலிருந்து பார்த்தால் இது ஐந்தாம் தலைமுறை ரோபோவாகும். இலேசு ரக விமானத்தை உருவாக்கும் அலுமினியத்தால்   உருவாக்கப்பட்டு   வெள்ளி போல ஜொலிக்கும் ஹ்யூமனாய்ட் தான் ஹ்யூபோ. இதன் உயரம் ஐந்து அடி, எடை 200 பவுண்டு.

அதற்கு இரண்டு கைகள்,இரண்டு கால்கள் உண்டு. தலைக்குப் பதிலாக  அதி நவீன லேஸர் தொழில்நுட்பம் அடங்கிய ஒரு காமராவும் உண்டு. ஒவ்வொரு கணத்திலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முப்பரிமாணத்தில் அறியும் சக்தி கொண்டது அது   

உலகின் தலை சிறந்த ரொபாட் எது என்பதற்கான போட்டி ஒன்று 2015ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

   தென்கொரியாவின் கொடியை தனது பின்னால் ஏந்திக்  கொண்டிருக்கும் ஹ்யூபோ செங்கல் அடுக்குகளால் கட்டப்பட்டுள்ள படிக்கட்டுகளின் மீது சர்வ சாதாரணமாக ஏறுகிறது.  அதன் கேமரா, படியை ஸ்கேன் செய்கிறது. தவழும் சின்னக் குழந்தை போல அது ஒவ்வொரு படியாக ஜாக்கிரதையாக ஏறுகிறது.

மற்ற ரொபாட்டுகள் எல்லாம் கீழே விழுந்த நிலையில்  ஹ்யூபோ மட்டும் அனைத்துத் த்டைகளையும் வென்று முன்னேறியது ஹ்யூபோ ஜாக்கிரதையாக காரை ஓட்டுகிறது.எதிரே உள்ள சாலையை நன்கு ஸ்கேன் செய்கிறது.  கதவைத் திறக்கிறது. வால்வைத் திறந்து மூடுகிறது.

இதையெல்லாம் செய்து காட்டி, இறுதியில் போட்டியில் வென்றது ஹ்யூபோ தான்!

இதனால் தென்கொரியாவை உலக நாடுகள் புதிய பார்வையுடன் பார்க்க ஆரம்பித்தன.

தமிழகத்தில் உள்ளோர், குறிப்பாக 14 முதல் 24 வயது வரை உள்ள இளம் பெண்கள், இளைஞர்கள் தென் கொரியாவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

முடிந்தவர்கள் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு அங்கு சென்று பார்த்து உத்வேகத்தைப் பெறலாம். தமிழ்கத்தையும் உலகின் தலை சிறந்த முதல் தரமான அறிவியல் நகரமாக உருவாக்க முயற்சி மேற்கொள்ளலாம்.

தென் கொரியப் பயணம் மனதிற்கு உற்சாகம் தரும் பயணம் மட்டும் அல்ல; அறிவியல் சிகரத்தில் நம்மை ஏறவைக்கும் ஒரு பயணமாகவும் அமையும்!

குமாவோ! (கொரிய மொழியில் நன்றி என்று பொருள்!)

***

tags- கொரிய மொழி, தென்கொரியா

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: