Post No. 11,070
Date uploaded in London – – 1 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ஊர்-இடப்பெயர் நாமாந்திரிதை பிரேளிகை—1
Written By B.KANNAN, NEW DELHI
அன்புள்ளத் தமிழ் நெஞ்சங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.
இந்தப் பகுதியில் ஊர்ப்பெயர், இடப்பெயர் ஆகியவற்றைக் கொண்டு எப்படிப் பாவலர்கள் அரிய விஷயங்களைத் தெள்ளத் தெளிவாக நாமாந்திரிதை அணி மூலமாக எடுத்திக் காட்டியுள்ளார்கள் என்பதைப் பார்க்கப் போகிறோம்.
இதற்கு முன்பு சொல்லியதைச் சற்று கவனத்தில் கொள்வதற்காக மீண்டும் கூற நினைக்கிறேன். ஓர் இலக்கிய ஆக்கத்தில் அமைக்கப்படும் சொற்கள் வெளிப் படையாக ஒரு பொருளைக் குறித்து நிற்க, அகத்தே வேறு பொருளைச் சுட்டி நிற்கும் பண்பு புலவர்கள் கையாளும் இலக்கிய உத்தியாகும். இதுவே பிரேளிகை அணியின் ஓர் அங்கமான நாமாந்திரிதை எனப்படும். நாம் முன்பே இதன் கீழ் பலசரக்கு,மற்றும் தின்பண்டங்கள் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டிருந்தோம். அவ்வரிசையில் இப்போது ஊர்ப்பெயர்களின் பின்னணியில் புலவர்கள் எடுத் துரைக்கும் சமய-வேதாந்தக் கருத்துகளை அலசுவோம்.
அதற்கு முன் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் சில பிரேளிகைகளைக் காண்போமே….
தமிழில்:
நால் எழுத்துப் பூடு= (செடி) நடுவே நரம்பு இருக்கும். தலையும்,காலும், கடைச் சாதி.-மேலாக ஒட்டு முதல் எழுத்தும், ஓதும் மூன்றாம் எழுத்தும் விட்டால் பரமனுக்கு வீடு. அது எது?
விடை: புகையிலை. இலை காரம், கசக்கும். அதன் நடுவில் தடித்த நரம்பு உண்டு.
தலையும், காலும் = பு+லை= புலையன் சாதி. மேலும், முதல், மூன்றாம் எழுத்து களை நீக்கினால் வருவது ஈசனின் இருப்பிடமான கைலை மலை.
இந்தி மொழியில்:
साढ़े तीन अक्षर नाम में आये। यह एक बहुत अच्छा वृक्ष कहलाये।।
दवाइयों के यह काम आता । फिर भी यह जंगल कहा जाता।।
சாடேதீன் அக்ஷர் நாம் மே ஆயே| யெஹ்(யெ) ஏக் பஹூத் அச்சா வ்ருக்ஷ் கஹ்லாயே| தவாய்யோங் கே யெ காம் ஆதா| ஃபிர் பீ யெ ஜங்கல் கஹா ஜாதா||
மூன்றரை எழுத்துகள் கொண்ட சொல். இது ஒரு மிகச் சிறந்த மரம் என்று புகழப் படுகிறது. நாட்டு வைத்தியத்தில் பயன்படும் பத்து மூலிகைகளில் ஒன்று. இருந்தாலும் இதைக் காட்டுமரம் (வனஸ்பதி) என்றே அழைக்கிறார்கள். அப்படியானால் அது யார், சொல்லுங்களேன்!
விடை: गंभारी-(கம்பாரீ)– உமி தேக்கு, குமடி
சம்ஸ்கிருதம்:
ஓரே வகையான எழுத்துகள் பலவிதச் சொற்களுக்குப் பொருள் காட்டும் அணியை (அனுபிராஸ்) இங்குக் காணப் போகிறோம். தமிழில் இதை மோனை என்போம். பறவையினத்தின் சிறப்பைக் கவிஞர் தனக்கே உரிய கவிதை ஆற்றலுடன் எப்படி இச்சுலோகத்தில் அமைத்திருக்கிறார், பாருங்கள்.
तार तार तरेरेतैरुत्तरोत्तरतोरुतैः ।
रतार्ता तित्तिरी रौति तेएरे तेएरे तरौ तरौ ॥
இங்கு கவிஞர் குறிப்பிடுவது ஆற்று உள்ளான் (SANDPIPER)பெண் பறவை. ஈர, மணற் பாங்கான ஆற்றங்கரை/ கடற்கரை அருகில் வசிக்கும். அலகின் விசேஷ உணர்திற னால் மணல், சேற்றில் தோண்டி புழு, பூச்சிகளைத் திண்ணும். இதனால்தான் இதற்கு SANDPIPER எனப் பெயர். துணைக்காக ஏங்கும் வேளையில், கரையிலும், மரங்களிலும் பறந்து சென்று அழைப்பு விடுக்கும். நீரில் முங்கி எழுந்து, படகு போல் வழுக்கிச் சென்று, ஈரமான நனைந்த வண்ணமய உடலுடன் (இனப்பெருக்கக் காலத்தில் நிறங்கள் மாறும்) பறந்து திரியும். அப்போது அது படிப்படியான ஏற்ற, இறக்கமுடன் கூடிய “கிறீச்” என்ற அழும் குரலில் ஒலியை எழப்பும். இதைத்தான்
மோனை அணியில் அழகாக விவரிக்கிறார் புலவர்.
तार तार =நீர்நிலைக் கரை / கிறீச் ஒலி, तेएरे= சுற்றிப் பறந்து, तरौ तरौ = தடாகக் கரை / மரங்கள், रतार्ता = முயற்சியில் முழு ஈடுபாடு, तित्तिरी = உள்ளான் பறவை, रौति = அழுகை முதல் வரியிலுள்ள மூன்றாவது சொல்லை இப்படிப் பிரிக்க வேண்டும்– தரை:, ஏதை:, உத்தரிட்டார்த்த:, உதை: இதன் பொருள் மேலே இரண்டாம் வரியில் உள்ளது.
புலவரின் இந்த அற்புத சொல்லாடலுடன் மேலே செல்வோம்………
தமிழ் மொழியின் சிறப்புகள் எனக் குறிப்பிடுவதில் அதன் இடப்பெயர்களும் அடங்கும். மொழி ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுவது போல், எங்கே வரலாறு மௌனமாகி விடுகிறதோ அங்கே இடப் பெயர்களும், ஊர்ப்பெயர்களும் தம் வாய்த்திறந்துப் பேசத் தொடங்கி விடும்! ஆம், சங்ககாலத் தமிழக வரலாறு இவ்விஷயத்தில் மௌனம் சாதிப்பதைச் சங்கப் பாடல்கள் எடுத்துக் காட்டும் இடம்-ஊர்ப்பெயர்கள் தம் வாய் திறந்து பேசுகின்றன. புலவர்கள் அப்படிப் பாடும் போது அவற்றின் பொருளை நேர் முகமாகவும்,மறைமுகமாகவும் கொடுத்துள்ளனர். ஊர் அமைப்போடும், தொழிலோ டும் மக்கள் வாழ்க்கை முறையோடும் ஊர்ப்பெயர்கள் ஒன்றிணைந்துக் காணப்படு வதைச் சங்கநூல்களிலிருந்தே அறிய முடிகிறது. (பார்க்க, இலக்கியத்தில் ஊர்ப் பெயர்கள், ஆர். ஆளவந்தார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி சென்னை-600113)
உரையாசிரியர் நச்சினார்க்கினியர், ஊர்ப்பெயர்களின் விகுதியாக (SUFFIX) அமைந்த சொற்கள் குறிப்பிட்ட நிலத்திற்குரியவை என்றும், அந்நிலங்களின் பெயர்களிலேயே சில ஊர்ப்பெயர்கள் அமைந்திருப்பதையும், அவற்றின் பெருமை, செழுமைகளைப் பின்புலனாகக் கொண்டு தலைவன், தலைவியோரின் குணாதிசயங்களைப் புலவர்கள் மறைமுகமாகப் பாடியுள்ளனர் என்கிறார்.
அதாவது, முல்லைக் குரியது- பாடி,சேரி, பள்ளி. ஊர்-முல்லை மங்கலம், ஏணிச்சேரி, இலந்திகைப் பள்ளி
குறிஞ்சிக்குரியது– சிறுகுடி, குறிச்சி, குறிஞ்சிப் பாறை, ஆலங்குடி
மருதம்–ஊர். மருதத்தூர், முனையூர், விரியூர்
நெய்தல்–பட்டினம், பாக்கம். நெய்தல் வாயில், மருவூர்ப் பாக்கம்
பாலை–பறந்தலை. வெண்ணிப் பறந்தலை, சிறுபாலையூர், என்பனவாம்.
அகப்பொருள் பற்றிக் கூறும் இலக்கியப் பாடல்களில்,தலைவியின் நலம் பாராட்டப் பெறும் இடங்களில் ஊர்ப்பெயர்கள் பல இடம் பெற்றிருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. அகநானூற்றுப் பாடல் 326-ல் (புலவர் பரணர்,மருதம் திணை)அட்டவாயில் எனும் ஊர்ப்பெயர் இடம் பெற்றுள்ளது.
ஊரல் அவ்வாய் உருத்த தித்திப்
பேர் அமர் மழைக்கண் பெருந்தோள்
……………………
நெடுங்கொடி நுடங்கும் அட்டவாயில்
இருங்கதிர்க் கழனிப் பெருங்கவின் அன்ன
நலம்பாராட்டி, நடை எழில் பொலிந்து
விழவில் செலீ இயர் வேண்டும்……..(அகம் 326:)
நீண்ட நெடுங்கொடி அசைந்து பறக்கும் ஊர் என்றும், அங்குள்ள கழனிகள் அழகியப் பசுங்கதிர்களைத் தாங்கி வளமுடன் நிற்பவை என்றும், அப்படிப்பட்ட அழகானவள் தலைவி என்றும் கூறி அவளின் நலம் பாராட்டப் பெற்றுள்ளது. இதன் வாயிலாக அந் நகரின் வளமும் தெரிய வருகிறது.
நுடங்கும்=அசைந்து பறக்கும், பெருங்கவின்= அழகான / வளமான, செலீ இயர்= செலீ இ= செல்வது கட்டாயம்=சொல்லிசை அளபெடை= (அழகானத் தலைவியுடன்)பாட்டுடைத் தலைவன் விழாவுக்குச் செல்ல வேண்டும்.
சங்கப் பாடல் இப்படியென்றால் தற்காலக் கவிஞர்கள் சமய, வேதாந்தக் கருத்துகளை ஊர் மற்றும் இடப் பெயர்களில் புகுத்தி வார்த்தை ஜாலம் காட்டுவது வேறு விதம்.
To be continued……..
(தொடரும்)
Tags- நச்சினார்க்கினியர், ஊர்-இடப்பெயர், நாமாந்திரிதை ,பிரேளிகை,
santhanam nagarajan
/ July 1, 2022அருமை! தொடர்க!!