ஊர்-இடப்பெயர் நாமாந்திரிதை பிரேளிகை—2 (Post No.11,074)

WRITTEN BY B. KANNAN, DELHI

Post No. 11,074

Date uploaded in London – 2 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

உதாரணத்துக்கு கொட்டாம்பட்டி கருப்பையப் பாவலரின் (19-ம் நூற்றாண்டு) தனிப்பாடல் ஒன்றைப் பார்ப்போம். அவர் இயற்றியப் பாடலின் மூலம் இதோ… (பார்க்க, சித்திரக்கவிக் களஞ்சியம், வ.ஜெயதேவன், சென்னைப் பல்கலைக் கழகம்)

திருமயிலை வான்மியூர் முகிலையென சாயற்

       றிகழ்கோதைத் திருவல்லிக் கேணிலமை யுற்ற

  வொருமுல்லை வாயினகை யாலங்காட் டுவிழி

       யொற்றியூர் வதவசமோ வெனநொந்துன் மயலால்

  வருமணிமே கலைகாஞ்சித் துகில்வளைகள் நழுவ

       மலைத்தண்ணா மலைமுலையின் வார்கிழிய வந்தாள்

  தருமதுரை யேசெந்தில் வேலரசே யன்னா

       டனைப்புலியூ ருக்கனுப்பிற் சார்பாக்க முனதே

மேலோட்டமாகப் பார்த்தால் இதில் பல ஊர்ப்பெயர்கள் இடம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் இதிலுள்ளச் சொற்களை வேறுபடுத்திப் பார்த்தோமானால் கிடைப்பதோ வேறு பொருள்.

அதைக் காண்போம்

   திரு மயிலை வான் மி ஊர் முகிலை அன சாயல்

      திகழ் கோதை திருவல் இக்கு ஏணில் ஐமை உற்ற

  ஒரு முல்லை வாயின்நகை ஆலம் காட்டும் விழி

      ஒற்றி ஊர்வது அவசமோ என நொந்து உன் மயலால்

  வரு மணி மேகலை காஞ்சித் துகில் வளைகள் நழுவ

      மலைத்து அண்ணா மலை முலையின் வார் கிழிய வந்தாள்

  தரும துரையே! செந்தில் வேல் அரசே! அன்னாள்

      தனைப்புலி ஊருக்கு அனுப்பில் சார்பு ஆக்கம் உனதே

பத உரை : தரும துரையே= தர்ம வழியில் செல்லும் தலைவனே, செந்தில் வேல் அரசே=திருச்செந்தூரில் அமர்ந்திருக்கும் வேலாயுதக் கடவுளே,

திரு மயிலை அன சாயல்=பார்ப்பவர் மனதைக் கவரும் மயிலின் மென்மைத் தோற்றத்தையும், மி வான்= மேலே ஆகாயத்தில், ஊர்முகில்=தவழ்கின்ற மேகத்தின்

ஐ=எழில், அழகு, திகழ்=பெற்று விளங்கும், கோதை=கூந்தலையும், முல்லைவாயின் நகை=முல்லை அரும்புகளின் வரிசையைப் போன்ற புன்முறுவலையும், ஆலம் காட்டும் விழி=விஷத்தையொத்த கருமை நிறத்தாலும், எதிராளியைக் கவர்ந்துத் துன்புறுத்தும் திறமையுடைய, கண்களைக் கொண்டவளும்,ஒரு திரு=லட்சுமி தேவி போன்ற ஓர் அழகி, உன் மயலால்=உன் மீது கொண்ட காதலால், வல் இக்கு= வலிமையானக் கரும்பு, ஏணில்=வில்லிலிருந்து மன்மதன் அம்பு எய்வதால், ஐமை=தளர்ச்சி, உற்று=அடைந்து, வரும் மணிமேகலை காஞ்சி துகில் வளைகள் நழுவ=இரத்தினங்களாலான மேகலை,காஞ்சி ஆகிய இடையணிகளும்,சேலையும், கைவளையல்களும் நழுவி விழ, ஒற்றி ஊர்வது அவசமோ என நொந்து=உன்னை நெருங்கித் தழுவுவது தன் திறமைக்கு அப்பாற்பட்டச் செயலோ என்று எண்ணி வருந்தி, அண்ணா=மேற்புறம் கட்டப்பட்டுள்ள, மல்=மெல்லிய இழைகளால் நெய்த , ஐ=அழகிய, முலையின்= ஒன்றோடொன்று நெருங்கி மோதுகின்ற மார்பகங்களின்,

வார் கிழிய= (ஏக்கப் பெருமூச்சால்) மார் கச்சு கிழிந்துவிடவும், மலைத்து வந்தாள்= என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போய் உன்னிடம் வந்துள்ளாள்,

அன்னாள்=அத்தகைய மங்கையை, தனைப்புலி= அரவணைத்து உன்னுடையவள் ஆக்கிக் கொண்டு, ஊருக்கு அனுப்பில்=அவளது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பா யெனில், உனது சார்பு=அவள் உனக்குப் பொருத்தமான, ஏ =அரியப் பொக்கிஷமாக, ஆக்கம்= விளங்குவாள்.

காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் மேனி அழகை வர்ணிக்கும் பாவலர், அவள் இருக்கும் அவல நிலையைச் சொல்கிறார்.

அணிந்திருக்கும் புடவை, வளையல், இடையணிகள் நழுவி விழ, ஏக்கப் பெருமூச் சால் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் நகில் (முலை) களின் மேலுள்ள மெல் லிய நூலிழைகளால் நெய்த மார்புக்கச்சு கிழிந்து விட, அந்நிலையில் தலைவனை தழுவி அணைப்பது ஏற்புடையது ஆகுமா எனத் திகைக்கிறாளாம். அந்த மங்கையை மனதார தாரமாக ஏற்றுக் கொண்டு அவளைத் தலைவன் அவள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தால் அவனுக்குப் பொருத்தப் பெருஞ்செல்வமாக விளங்குவாள்….. என்பது இதன் பொருள்.

இச்செய்யுளில் திருமயிலை, (திரு)வான்மியூர், திருவல்லிக்கேணி, (திரு) முல்லை வாயில், (திரு) ஆலங்காடு, (திரு)ஓற்றியூர், காஞ்சி, (திரு)ஆண்ணாமலை, மதுரை, புலியூர்(தில்லை), ஆகியத் தலப் பெயர்கள், வெளிப்படையாகத் தன் பொருளில் அல்லாமல் மறைமுகமாக வேறு பொருளில் கையாளப் பட்டுள்ளதால் நாமாந்திரப் பிரகேளிகை ஆயிற்று! பாவலரின் சொல்வன்மையை என்னவென்று சொல்வது!

இதோ இன்னுமொன்று……..

மல்லை எனும் மன்னாகம் புலவர் நமச்சிவாய பிள்ளை அவர்கள் இயற்றிய ஒரு பாடல்…

    முன்னீ வினைப்பருத் தித் துறை மேவிய மூளையர்தா

    மன்னாரில் வாழ்விற் றனங் கிளப் பார்புல வஞ்சரைமெய்

    துன்னாலை யிட்டு வறுத்தலை மேவிச் சுழிபுரம் போய்

    பன்னா லையணி யத்வாம் புலத்திற் பழகுவரே.

முற்பிறவியில் செய்த புண்ணிய மேலீட்டை உடைய புத்திமான்கள் இப்பிறவியிலே இல்லற வாழ்வில் நாட்டமில்லாதவர்களாய்ப் புலன்களை அடக்கி, உடம்பை நீங்கிச் சிவத்துடன் ஐக்கியமாவார்கள் என்பதே இப்பாடலின் பொருள். இதில் சுட்டப்பட்டுள்ள ஊர்களின் மூலம் எடுத்துக் காட்டப்பெறும் தத்துவப் பேருண்மையைக் காண்போம்…

பத உரை: முன்னீவினை பருத்து=முற்பிறவியில் செய்த நல்வினை அதிகரித்து, இத்துறை மேவிய மூளையர்= இப்பூமியில் பிறந்துள்ளப் புத்திசாலி மகான்கள், மன்னார் இல்வாழ்வில்= இல்லற வாழ்க்கையில் ஈடுபட மாட்டார்கள், தனங்கிளப்பார்= பொருளீட்ட மாட்டார்கள், புலவஞ்சரை=நம்மை ஆட்டுவிக்கும் ஐம்புலன்களாகியப் பாவிகளை, மெய்துன் ஆலையிட்டு= ஞானமெனும்

இயந்திரத்தில், வறுத்தலை மேவி= போட்டு வறுத்தெடுத்து, சுழிபுரம் போய்= தீயகுணங்களுக்கு இடமான இவ்வுடம்பு நீங்கப் பெற்று, பன் ஆலயம் நண்ணி= அவர்களுடைய ஆன்மா சிவத்தில் ஒன்றிணைந்து, அத்வாம்புலத்திற் பழகுவர்= இரண்டறக் கலப்பதாகிய அத்துவைத வெளியை அடைவர்.

மேற்கண்டப் பாடலில், ஈவினை, பருத்தித்துறை, மூளாய், மன்னார், தனங்கிளப்பு, துன்னாலை, வறுத்தலை, சுழிபுரம், பன்னாலை, அத்துவாம்புலம் ஆகிய ஊர்ப்பெயர் களும், இடப்பெயர்களும் கொடுக்கப் பட்டுள்ளன.  முன்+ஈவினை= முன்னீவினை ஆகியது. பருத்தித்துறை=பருத்து+இத்துறை எனப் பிரிந்துள்ளது. மூளாய்= மூளை எனத் திரிபுற்றுள்ளது.

இப்படிப் பல செய்யுட்களைப் பாவலர் பெருமக்கள் நாமாந்திர பிரகேளிகைஅணியில் யாத்திருக்கிறார்கள். அவை எல்லாமே படித்து ரசிக்கத் தக்கவை. தமிழகக் கவிஞர் களைப் பாராட்டும் இவ்வேளையில் அண்டை நாடான ஈழத்துவாழ் யாழ்ப்பாணத்துக் கவிஞர்களின் கை-சொற் வண்ணத்தை இப் பிரகேளிகை அணியலங்காரத்தில் இயற் றப் பெற்றுள்ளப் பிரசித்தியானச் சில பாடல் விளக்கங்களுடன் இப்பகுதியைஅடுத்தப் பதிவில் நிறைவு செய்வோம்.

 (தொடரும்)

tags–  Tags – நாமாந்திர , பிரகேளிகை, கொட்டாம்பட்டி,  கருப்பையப் பாவல

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: