Post No. 11,087
Date uploaded in London – – 7 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
நேற்று இதன் முதல் பகுதி “ஈழத்துப் பாவலர்கள் இயற்றிய ஊர்-இடப்பெயர் கவிதைகள் ” என்ற தலைப்பில் இங்கு வெளியிடப்பட்டது
Part 2
19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த உடுவில் முத்துக்குமார கவிராயரும், இருபாலை சேனாதிராய முதலியாரும் ஈழத்து இலக்கியத்தின் இரு கண்களாக விளங்கினார்கள். இருவரும் உற்ற நண்பர்களும் கூட.
ஒரு சமயம் கவிராயரின் குலதெய்வக் கோயிலான மாவை எனும் மாவிட்டபுர ஆலயத்தின் வேட்டைத் திருவிழாவில் முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் ஊர்வலம் வருகையில், சேனாதிராயரும் உடனிருந்தார்.
அப்போது அவர் கவிராயரைப் பார்த்து, உமது சுவாமியின் பவனியை வர்ணித்துப் பாடும்” என்றார். உடனே கவிராயரும் பின்வரும் நாமாந்தரிதையைப் பாடினார்…….
முடிவி லாதுறை சுன்னாகத் தான்வழி
முந்தித் தாவடிக் கொக்குவின் மீதுவந்
தடைய வோர்பெண்கொ டிகாமத் தாளசைத்
தானைக் கோட்டைவெ ளிகட் டுடைவிட்டாள்
உடுவி லான்வரப் பன்னாலை யான்மிக
உருத்த னன்கடம் புற்றமல் லாகத்தில்
தடைவி டாதணை யென்றுப லாலிகண்
சார வந்தனள் ஓரிள வாலையே
பதவுரை: முடிவிலாதுறை………..வழி=ஆதியும் அந்தமுமில்லாத வெள்ளிமலையாகிய கைலாயத்தில் உறைகின்ற ஈசனின் பிள்ளை (வழி) யாகிய கந்தசுவாமி,
முந்தித் தாவு……..வந்தடைய=முந்தித் தாவுகின்ற கால்களையுடைய குதிரை (கொக்கு) வாகனத்தில் பவனி வர,
ஓர் பெண்கொடி காமத்தாள்=காதல் கொண்ட ஒரு பெண், அசைத்து ஆனைக் கோட்டை….உடைவிட்டாள்=தன் நிலை மறந்து மார்பகத்தை மறைத்திருக்கும் மேலாடையையும் நெகிழவிட்டாள்,
உடுவிலான் வர=அப்போது நட்சத்திரத்தை மனைவியாகக் கொண்ட ( உடு =நட்சத் திரம், இல்=மனைவி) சந்திரன் உதித்தான்,
பன்னாலையான் மிக உருத்தனன்= கரும்பு வில்லையுடைய (ஆலை=கரும்பு) மன்மதன் கோபம் கொண்டான், ஓர் இளவாலை= முருகனைக் காதலித்த அந்த ஒப்பற்ற இளம் பெண்,
கடம்பு உற்ற மல் ஆகத்தில்=கடம்பணிந்த மல்யுத்தம் செய்கின்ற மார்போடு, தடை விடாது அணையென்று= குறிக்கீடு ஏதுமின்றி அணைத்துக் கொள்ள வேண்டுமென்று,
பல ஆலி=நிறைய நீர்த்துளி, கண்சார வந்தனள்= கண்களிலிருந்து சொரிய, கந்த சுவாமிக்கு எதிரே அவனது திருவடிகளே சரணமென்று வீதியில் ஊர்வலத்தை எதிர்கொண்டாள்.
இங்கு சுன்னாகம், தாவடி, கொக்குவில், கொடிகாமம், ஆனைக்கோட்டை, கட்டுடை, உடுவில், பன்னாலை, மல்லாகம், பலாலி, இளவாலை ஆகிய ஊர்ப்பெயர்கள் வேறு பொருளில் கையாளப் பட்டுள்ளன.
கவிராயரின் தோழர் சேனாதிராயரின் குலதெய்வக் கோயில் நல்லூர் கந்தசுவாமி ஆலயமாகும். அந்நாட்களில் மாசி மாதத்தில் நல்லூர் கோயிலின் கொடியேற்றத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
ராயரின் வேண்டுகோளுக்கிணங்க முத்துக்குமாரர் திருவிழாவில் கலந்து கொண்டார். இப்போது கவிராயர் கேட்டு முதலியார் அவர்கள் பாடல் இயற்றுவதுதானே முறை! அப்படியேதான் நடந்தது.
சேனாதிராயர் பின்வரும் பிரேளிகையைக் கவிராயர் மனங்குளிரப் பாடினார்…..
திருவாரும் நல்லைநகர்ச் செவ்வேற் பெருமானார்
இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ரம்மானை
இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ராமாயின்
தருவாரோ சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை
தருவார்காண் சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை
நல்லூர் செவ்வேள் மீது இயற்றப்பட்டக் குறவஞ்சிப் பாடல் இது. இதில் புலவர் தான் வசிக்கும் இடம் இருபாலை மற்றும் நல்லூர் நகரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மற்றவை அப்பொருட்களைக் குறிக்கின்றன.
பதவுரை: திருவாரும்……..பெருமானார்=திருவருள் நல்கும் நல்லூர் உறை கந்தசுவாமி, இருபாலை=இரண்டு இளம் கொங்கைகளை உடைய, குயத்தியரோடு=பெண்களுடன் ( வள்ளி, தெய்வானை), (குயத்தி=மண்பாண்டம் தயாரிக்கும் பெண்) இன்பமுற்றார் அம்மானை= உல்லாசமாய் இருந்தார் அல்லவோ,மகளீரே, இருபாலைக்…………முற்றார் ஆமாயின்= அப்படி அவர்களுடன் மகிழ்வுடன் இருந்தார் என்றால், தருவாரோ சட்டி……அம்மானை= பழச் சாறு/ரசம் சேகரித்து வைக்க மண் சட்டி /குடம் தருவாரோ, பெண்ணே, தருவார் காண்…………அம்மானை= கிருபாநிதியாகிய முருகவேள் நிச்சயம் தந்து அருளுவார், பெண்ணே!
குயவ சம்பந்தம் வைத்துள்ளவர், சாறு வைக்கச் சட்டி, குடம் கேட்டால் தரத்தானே, வேண்டும்? இது வெளிப்படைக் கருத்து. உட்கருத்தோ வேறு விதம். சட்டி=சஷ்டி திதி, குடம்=கும்ப மாசி மாதம், சாறு= திருவிழா என்று ஒரு பொருள். அதாவது கும்ப மாதம் சஷ்டி திதியில் ஆண்டு உற்சவம் தொடங்க (கொடியேற்றம் செய்ய) கார்த்திகேயன் அநுக்கிரகிப்பார் என்பதாகும்.
முடிவாக உடுவில் முத்துக்குமார கவிராயர் இயற்றிய மிகவும் பிரசித்திப் பெற்ற ஒரு செய்யுளுடன் இப்பதிவை நிறைவு செய்வோம். இது அனைத்துப் பண்டிதர் களாலும் போற்றிப் புகழப்பட்ட ஒரு பாடலாகும்
கவிராயரின் குலதெய்வமான “கோதை குறமாது குணதேவ மடமாது இருபாலும் உற வீறிவரு குமரேசன்” மாவிட்டபுரக் கந்தன் ஊரைப் பவனி வருகையில் நாமாந் தரிதையில் ஒரு பாடலை அவன் மீது பாடினார். அதில் இச்சா சக்தியான வள்ளி சூடியிருக்கும் ஓர் அணிகலனின் சிறப்பையும் புகழ்ந்திருக்கிறார். மேலும், மல்லாகம், மாதகல், சுன்னாகம், ஈவினை, துன்னாலை, சில்லாலை, கொடிகாமம் எனும் ஊர்ப் பெயர்கள் ஏழும் கருதியப் பொருளை மறைத்திருக்கும் பெயர்களாகும். இதோ அந்தப் பாடல்……
மல்லாக மாதகலான் மருகன்சுன் னாகத்தான்
மகன்பா வாணர்
சொல்லாச்சீ ரீவினையான் துன்னாலை யானத்தான்
சுரும்ப ரோதிச்
சில்லாலை யிருள்வென்ற குறக்கொடி கா மத்தானைச்
சிகண்டி மாவூர்
வல்லானை மாவிட்ட புரநகரத் திடைப்பவனி
வரக்கண் டேனே
பதவுரை: மல்லாக மாதகலான் மருகன்=வலிமையான மார்பில் அனவரதமும் லக்ஷ்மி தேவியை அகலாமல் இருத்தி வைத்திருக்கும் மகாவிஷ்ணுவின் மருகன்,
சுன்னாகத்தான் மகன்=கயிலைமலை அரசராகிய ஈசனின் மகன், பாவாணர் சொல்= பாக்கள் இயற்றும் திறன் மிக்கவர்களுக்கு, சீர் ஈவினையான்= செல்வம் வழங்கும் குணமுடையவன்,
சுரும்பு ரோதி= கரு வண்டுகள் ரீங்காரமிட்டு மொய்க்கும் நாண் கொண்ட,துன்னாலையானத்தான்= வளைந்த கரும்பு வில்லையுடைய மன்மதனின் மைத்துனன் (ஈசனின் மகள் ரதியின் சகோதரன் முருகன் ஆவான்), சில்லால் ஐ இருள்வென்ற= வியக்க வைக்கும் தகட்டணியால் (வள்ளியின் ஜடைபில்லை) இருளை விரட்டியடித்த, குறக்கொடி காமத்தான்=வள்ளி நாயகியின் மேல்
ஆசைக் கொண்டவன், சிகண்டி= சேவல் கொடி, மயில் வாகனம் உடைய, மாவூர் வல்லானை==மாவூரில் உறையும் பெருமானை, மாவிட்ட…………டேனே= மாவை நகர வீதிகளில் ஊர்வலம் வரக் காணும் பேறு பெற்றேனே!.
சுரும்பு=வண்டு, சிகண்டி= கோழி, மயில். இங்கு பாவலர் வள்ளி அணிந்திருக்கும் ஒரு நகையின் குணாதிசயத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், அதன் பிரகாசம் இருளை விரட்டக் கூடியது என்கிறார்.
சில்=தகட்டணி. இது கூந்தலின் உச்சியிலிடப்படும் ரத்தினங்கள் இழைத்த ஒரு வகை ஆபரணம். இக்காலத்தில் ஜடைபில்லை என வழங்கப்படுகிறது. இதிலுள்ள ரத்தினங்களிலிருந்து எழும் பிரகாசமான ஒளி இருளை விலக்கக் கூடியது எனக் கூறுகிறார் கவிராயர்.
இதைப் பற்றிய வர்ணனையைக் கவி கம்பர், தமிழறிஞர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோர் தங்கள் பிரபந்தங்களில் விவரித்துள்ளனர். மேலும், தமிழ் இலக்கியத்தில் பெயர் பெற்றக் காவியமான மேருமந்திரப் புராணம் எழுதிய சமணசமய தத்துவ ஞானி வாமனாச்சாரியா (விஜயநகர மன்னர் ஹரிஹரர்-2 ஆட்சிகாலம்) தனதுநூலில் 50-வது பாடலில் இதைப் பற்றி விவரிக்கிறார்,
50. சஞ்ச யந்த னெனும்பெய ரானவ
னஞ்சு தாயர்தங் கைவழி யந்திவாய்
மஞ்சி லாமதி போல வளர்ந்தபி
னஞ்சி லோதியர்க் கின்னமிர் தாயினான்.
அஞ்சிலோதி” என்பதை “அம் – சில் – ஓதி” எனப்பிரித்து ‘அழகிய தகட்டணியை அணிந்த கூந்தல்” எனப் பொருள் கொண்டனர் பண்டைய உரையாசிரியர்கள் பெரும் பாலார்..
அஞ்சிலோதியர்க்கு – ஐந்துவகைப் பாகுபாட்டில் அமைந்த (முடி, கொண்டை,சுருள், குழல், பனிச்சை) கூந்தலையுடைய ஸ்த்ரீமார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
கவிபாடும் வன்மையில் மிகச் சிறந்தவரான நாமாந்தரிதை பிரேளிகைப் புகழ் முத்துக்குமாரரின் கவிதைகளைக் கேட்டுணர்ந்த அறிஞர்கள் பலரும் இவரைக் கவிராசர் என அழைத்ததில் எந்த அதிசயமும் இல்லை எனலாம்!
— subham—-
Tags- ஊர்-இடப்பெயர், நாமாந்திரிதை பிரேளிகை—3, சேனாதிராயர், நல்லூர் கந்தசுவாமி, மாவிட்டபுரம்