நடந்தவை தான் நம்புங்கள்! – 23 (Post No.11,089)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,089

Date uploaded in London – –    8 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள்! – 23

ச.நாகராஜன்

1

கல்லறை கால்கள்!

இடுகாடு வேலையில் நிபுணரான ஆல்மன் ப்ரௌன் ஸ்ட்ரோவ்கர் கான்ஸாஸில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். அவர் பிணங்களுக்கான இறுதிச் சடங்கைச் செய்வதில் வல்லவர். ஆனால் தனது பிஸினஸ் நாளுக்கு நாள் குறைந்து வருவதைக் கண்ட அவர் அதிர்ந்து போனார். அவருக்கு வரும் பிஸினஸ் அவருக்குப் போட்டியாக ஆரம்பித்த இன்னொருவருக்குத் தவறாமல் போய்க் கொண்டிருந்தது. இது என்ன விசித்திரமாக இருக்கிறதே என்று ஆராய்ச்சியில் இறங்கினார். அப்போது தான் தெரிய வந்தது உள்ளூர் டெலிபோன் ஆபரேடர் போட்டி கம்பெனியை வைத்திருந்தவரின் மனைவி என்று! அவருக்கு வரும் கால்கள் அனைத்தையும் அந்த ஆபரேடர் தனது கணவருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

அந்தக் காலத்தில் ஓரிடத்திலிருந்து இன்னொருவருக்குச் செய்யப்படும் தொலைபேசி அழைப்பு ஒரு ஆபரேட்டருக்குச் செல்லும். அவர் தான் இணைப்பை உரிய நம்பருக்கு வழங்குவார். ஆக இடுகாட்டு இறுதிச் சடங்கிற்காக ஆல்மன் ஸ்ட்ரோவ்கர் நம்பரைக் கேட்டவர்களுக்கு எல்லாம் அவர் தனது கணவரின் நம்பரோடு இணைப்பைத் தந்து கொண்டிருந்தார்.

உடனே ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கிய ஆல்மன் ஸ்ட்ரோவ்கர் ஒரு எக்ஸ்சேஞ்ஜ் ஸ்விட்சைக் கண்டுபிடித்தார். அது கேட்ட நம்பருக்கு ஆபரேடர் உதவியின்றி, தானே இணைப்பைத் தந்து விடும்!

1892இல் லா போர்ட், இண்டியானாவில் முதல் ஆடோமேடிக் ஸ்விட்ச் நிறுவப்பட்டது.

பின்னர் தான் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் ஸ்ட்ரோவ்கர் உட்பட!

ராங் கனெக்‌ஷன் இல்லாமல் நினைத்த நம்பருடன் அப்போது முதல் தான் பேச முடிந்தது! இது உலகெங்கும் பின்னர் பரவியது!

2

வீதியில் கூட்டம்! வெலவெலத்துப் போன அதிகாரிகள்!

1810ஆம் ஆண்டு ஒரு நாள் லண்டனில் உள்ள பெர்னர் வீதியில்

கூட்டம் வந்து கொண்டே இருந்தது. வந்தவர்கள் அனைவரும் 54 என்று இலக்கமிட்ட ஒரு குறிப்பிட்ட வீட்டிற்குச் சென்று கொண்டே இருந்தனர்.

அவர்கள், பாடகர்கள், பாதிரியார்கள், கல்லறையில் இறுதிச் சடங்கு செய்வோர், வக்கீல்கள் என அனைத்துத் துறைகளையும் சேர்ந்தவர்கள்.

அவர்கள் கொண்டு வந்த சாமான்களும் வெவ்வேறு விதமானவை.

லண்டனின் பாதிப் போக்குவரத்து அந்த வீதியில் இருந்ததால் லண்டன் வாழ்க்கையே கிட்டத்தட்ட ஸ்தம்பித்து விட்டது.

அதிகாரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கு வந்து அனைவரையும் ஒழுங்குபடுத்துவதில் களைத்துப் போனார்கள் அந்த அதிகாரிகள்!

குறிப்பிட்ட வீட்டின் சொந்தக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த வீட்டின் வேலைக்காரியும் வந்த ஒவ்வொருவரையும் திருப்பி அனுப்பிக் கொண்டே இருந்தாள்.

கடைசியில் தான் விஷயம் என்னவென்று தெரியவந்தது.

தியோடர் ஹூக் என்பவர் ஒரு எழுத்தாளர், இசை அமைப்பாளர். (Theodre Hook) . அவர் தனது நண்பரான சாமுவேல் பீஸ்லியிடம்(  Samuel Beazley) ஒரு பந்தயம் வைத்தார். எந்த ஒருவரையும் தன்னால் பிரபலப்படுத்த முடியும் என்று. சாமுவேல் அதை நம்பவில்லை.

விளைவு தியோடர் மும்முரமானார். ஆயிரக் கணக்கான கடிதங்களை லண்டனில் உள்ள ஏராளமானோருக்கு அனுப்பி, குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு வேண்டிக் கொண்டார்.

அனைவரும் ஏதோ ஒரு பெரிய வேலை தமக்குக் கிடைத்த சந்தோஷத்தில் சாரிசாரியாக வந்து கொண்டிருந்தனர்.

ஹூக்கும் பீஸ்லியும் ஒரு இடத்தில் அமர்ந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பீஸ்லி திகைத்துப் போனார். பந்தயத்தில் தோற்றும் போனார்.

பின்னால் தான் நடந்தது என்ன என்று கண்டுபிடிக்கப்பட்டது.

பத்திரிகைகள் அதை வெளியிட்டன!

3

ஜோதிடருக்கே ஜோஸ்யம்!

பிரபல எழுத்தாளரான ஜொனாதன் ஸ்விப்டை (Jonathan Swift) அறியாதவர் இருக்க முடியாது. உலகப் புகழ் பெற்ற கலிவர்ஸ் டிராவல்ஸ் (Gulliver’s Travels)  என்ற நாவலை எழுதியவர் அவர் தான். இன்னும் பல புகழ்பெற்ற படைப்புகளையும் அவர் படைத்தவர்.

ஆசாமி குறும்புக்கார ஆசாமி.

வாழ்நாள் முழுவதும் ஏதாவது குறும்புகள் செய்து கொண்டே இருப்பது அவர் வழக்கம்.

அந்தக் காலத்தில் ஜான் பார்ட்ரிட்ஜ் என்று ஜோதிடம் சொல்வதில் வல்லவராக இருந்த பிரபல ஜோதிடர் ஒருவர் இருந்தார்.

அவருக்கே ஜொனாதன் ஸ்விப்ட் ஒரு ஜோதிடம் கூறினார்!

அவர் 1708ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி இறந்து விடுவார் என்பது தான் அவர் ‘கணித்த’ ஜோதிடக் குறிப்பு!

மார்ச் 30 வந்தது. ஜோதிடர் இறக்கவில்லை.

ஆனால் ஸ்விப்டோ ஜோதிடர் இறந்ததாக அறிவித்து விட்டார்.

பார்ட்ரிட்ஜ் தான் இறக்கவே இல்லை என்றும் உயிரோடு தான் இருப்பதாகவும் எவ்வளவோ கூறினாலும் மக்கள் ஜோனாதனைத்

தான் நம்பினர்!

4

ஒரு உண்மையான ஜோதிடக் குறிப்பு

ஜோதிடர் ஒருவர் தனது அன்றைய மாதக் குறிப்பு நிச்சயம் பொய்யாகப் போகாத கணிப்பு என்று கூறி அதை மாதத்தின் முதல் நாளில் வெளியிட்டிருந்தார்.

குறிப்பு இது தான்:

இந்த மாதம் உங்கள் மனைவியிடமிருந்து திட்டு வாங்குவது வழக்கத்தை விட நிச்சயமாகக் குறைச்சலாகவே இருக்கும்!

அது பிப்ரவரி மாதம்! அதற்கு 28 நாட்கள் தானே!

***

tags-  நடந்தவை தான் நம்புங்கள்! – 23

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: