Post No. 11,097
Date uploaded in London – – 12 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள் – 27
ச.நாகராஜன்
1
கொசுக்கள் பற்றிய புள்ளிவிவரம் தேவையா?!
1937இல் சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரியாக இருந்தார் ராஜாஜி. ஏழைகளிடம் அநியாய வட்டி வசூலிக்கும் அநியாய வட்டிக்காரர்களிடமிருந்து ஏழைகளைக் காப்பாற்ற நினைத்த அவர், அதற்காக ஒரு சட்டத்தைக் கொண்டு வர நினைத்து அவை முன்னே அதை சமர்ப்பித்தார்.
அப்போது டி.டி.கிருஷ்ணமாச்சாரி அவையில் பேசும் போது இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சட்டம் கொண்டு வருவதற்கு முன்னால் எத்தனை ஏழைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் எடுக்கப்படவேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.
உடனே ராஜாஜி, “எனது அருமை நண்பர் கொசுக்கடியால் அவதிப்பட்டு கொசுவலை வாங்க வேண்டும் என்று நினைக்கும் போது நிச்சயமாக அவர் எத்தனை கொசுக்கள் தன்னைக் கடிக்கின்றன, அவை மைலாப்பூரிலிருந்து ஜார்ஜ் டவுன் வரை எந்த விகிதத்தில் பரவிப் பரந்திருக்கின்றன என்பன உள்ளிட்ட புள்ளி விவரங்களை எடுக்கமாட்டார் என்று நம்புகிறேன்” என்று பதில் அளித்தார்.
2
மெஜாரிடியும் லாஜிக்கும்!
ராஜாஜி உள்துறை மந்திரியாக இருந்த போது அந்நிய வெளி விவகார கமிட்டிக்கு சில பரிந்துரைகளை அளிப்பதற்காக ஒரு குழுவின் கூட்டம் கூடியது. ராஜாஜி தன் கருத்துக்களை முன் வைத்தார். ஆனால் குழுவிலிருந்த ஜவஹர்லால் நேருவிற்கு அந்தக் கருத்துக்கள் பிடிக்கவில்லை. அவர் அதை ஏற்கவில்லை. அவருடன் இரண்டு மந்திரிகளும் சேர்ந்து கொண்டனர். ராஜாஜியோ விடாது தன் கருத்துக்களை வற்புறுத்தினார்.
நேரு, “ராஜாஜி, மெஜாரிட்டி என் பக்கம் தான் இருக்கிறது” என்று கூறினார்.
உடனே ராஜாஜி, “ஆனால் லாஜிக் என் பக்கம் இருக்கிறதே” என்று பதில் கூறினார்.
3
டீயே மதுரம்!
பிரபல எழுத்தாளரான கல்கி கிருஷ்ணமூர்த்தி ஒரு முறை பிரபல நகைச்சுவை நடிகரான என்.எஸ். கிருஷ்ணனைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
என்.எஸ். கிருஷ்ணனுக்கும் அவர் மனைவியான டி.ஏ. மதுரத்திற்கும் ஒரே சந்தோஷம்.
மிக்க மகிழ்ச்சியுடன் இருவரும் அவரை வரவேற்றனர்.
என்.எஸ். கிருஷ்ணன் அன்புடன், “ எது, காப்பியா, டீயா?” என்று உபசரித்துக் கேட்டார்.
உடனே கல்கி சொன்னார் : “டீயே மதுரம்”
T.A.மதுரமும் என்.எஸ். கிருஷ்ணனும் வெகுவாகச் சிரித்து மகிழ்ந்தனர்.
4
டைம் அண்ட் ஸ்பேஸ்
TIME AND SPACE
பிரபல விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு முறை ஒரு அறிவியல் கூட்டத்திற்குச் சற்று தாமதமாக வந்தார். அந்தக் கூட்டத்தில் அவர் ஒரு ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க -‘present’ செய்ய – வேண்டி இருந்தது.
தான் தாமதமாக வந்ததற்கு நிகழ்ச்சிப் பொறுப்பாளரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் ஐன்ஸ்டீன். தனது பேப்பரை எடுத்து அவரிடம் கொடுத்தார்.
ஆனால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர், அவர் நேரம் கழித்து வந்ததைக் குறிப்பாகச் சுட்டிக்காட்ட விரும்பி, “It is about Time..”
என்றார்.
“AND SPACE” என்று முடித்தார் ஐன்ஸ்டீன்.
அவரது ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு TIME AND SPACE!
5
பெர்னார்ட் ஷா ஒரு இசைப் பிரியரா?
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா இளைஞராக இருந்த சமயம் அவரை ஒரு குடும்பத்தினர் விருந்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அவர்களின் வீட்டிற்கு அவர் சென்ற போது குடும்பத் தலைவரின் பெண் பியானோ வாசித்துக் கொண்டிருந்தாள்.
பெர்னார்ட் ஷாவைப் பார்த்த அந்தப் பெண், சந்தோஷத்துடன், “உங்களுக்கு இசை என்றால் மிகவும் பிடிக்குமாமே” என்று கேட்டாள்.
அதற்கு பெர்னார்ட் ஷா, “அதனால் பரவாயில்லை, நீங்கள் தொடர்ந்து வாசியுங்கள்” என்றார்.
6
டிக்ஷனரியை ஜான்ஸன் தொகுத்தது எப்படி?
பிரம்மாண்டமான ஆங்கில அகராதியைத் தொகுத்தவர் சாமுவெல் ஜான்ஸன். ஒருமுறை அவரது உழைப்பை எண்ணி வியந்த ஒருவர் அவரிடம், “அவ்வளவு பெரிய அகராதியை எப்படித் தொகுத்தீர்கள்?” என்று வியப்புடன் கேட்டார்.
உடனே ஜான்ஸன் சிரித்தவாறே, ஓ! அதுவா? என் மனைவியுடன் சண்டை போடும் போது ஒரு வார்த்தை இன்னொரு வார்த்தைக்குக் கொண்டு போவது போலத் தான் அது!” என்றார்.
7
வாழ்க்கையில் நகைச்சுவை முக்கியம்!
மனித வாழ்க்கையில் நகைச்சுவை மிக முக்கியம்.
நகைச்சுவை உணர்வு இல்லாத ஒரு மனிதன் ஸ்பிரிங் இல்லாத வாகனம் போல. சாலையில் கிடக்கும் ஒவ்வொரு கூழாங்கல் மேலும் அந்த வாகனம் போகும் போது பயங்கரமாகக் குலுங்கி ஆடும் என்று சொன்னார் ஹென்றி வார்ட் பீச்சர். (Henry Ward Beecher)
ஆப்ரஹாம் லிங்கன் தன் மேஜையின் மீது எப்போதும் ஒரு ஜோக் புத்தகத்தை வைத்திருப்பாராம்!
பெரிய மனிதர்களின் முதிர்ச்சிக்கு இன்றியமையாத காரணம் அவர்களின் நகைச்சுவை உணர்வே தான்.
நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்கு இல்லை என்றால் நான் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என்றார் மஹாத்மா காந்திஜி!
உண்மை தான் – சிரிப்பவனே சிறந்து வாழ்வான் என்பது பழமொழி.
சிரித்து மகிழ்வோம்; சிறந்து வாழ்வோம்!!
நன்றி.
**
முற்றும்
tags- டீயே மதுரம், என்.எஸ். கிருஷ்ணன், நடந்தவை தான் நம்புங்கள் – 27