
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,105
Date uploaded in London – – 15 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
29-2-22 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
உலக வலத்தில் இன்று நாம் செல்லவிருக்கும் நாடு எகிப்து!
உலகின் முக்கிய அதிசயத்தைக் கொண்ட நாடு!
ச.நாகராஜன்
ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றைக்கொண்டு அனைவரையும் ஈர்க்கும் நாடு எகிபது.. ஆம், இங்கு தான் க்ரேட் பிரமிட் உள்ளது.
நெப்போலியனின் அனுபவம்!
மாபெரும் வீரனான நெப்போலியன் பிரமிடின் மஹிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான். ஆவல் உந்த அவன் க்ரேட் ப்ரமிட் எனப்படும் பெரிய பிரமிடை அடைந்தான். அதன் முக்கிய உள்ளறையில் (Main Chamber) பல வருடங்கள் பயிற்சி பெற்ற சீடர்களே அனுமதிக்கப்படுவர் என்றும் தியானம் மற்றும் ரகசிய சித்திகளில் பயிற்சி பெறுபவர் அந்த உள்ளறையில் ஒரு இரவு முழுவதும் தங்கி இருந்து உள்ளொளி பெறுவர் என்றும் அவன் கேள்விப் பட்டிருந்தான்.
அற்புதமான நுணுக்கமான கணிதம் மூலம், இடம், திசை, ஒழுங்கு, நேர்த்தி ஆகியவற்றைப் பரிசீலித்து அமைப்பட்டிருக்கும் அந்த அறை பிரமாதமான ‘சக்தி கேந்திரம்’ என்று அறிந்திருந்த அவன் அந்த அறையில் ஒரு நாள் இரவு முழுவதும் தங்கினான்.
மறு நாள் காலை அதிசயம் மற்றும் ஆச்சரியத்தைக் காட்டும் முகத்துடன் வெளியே வந்த அவனை நோக்கி, “என்ன நடந்தது” என்று அனைவரும் கேட்டனர். தனது சக்தி மயமான அனுபவங்களை வெளியே சொல்லத் தயங்கிய அவன், நான் நடந்ததைச் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்’ – (You won’t believe me, if I tell you) என்றான்.ஆம், நம்ப முடியாத அதிசயங்களைத் தருவது பிரமிட்!
நெப்போலியன் மட்டுமல்ல, அவனுக்கு முன்னாலும் பின்னாலும் இன்று வரையில் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் பிரமிட் தரும் பிரமிப்பூட்டும் பலன்களை அனுபவித்து வருகின்றனர்.
எகிப்து நாடு
பத்து கோடியே எழுபத்தாறு லட்சம் ஜனத்தொகையைக் கொண்ட எகிப்து நாட்டின் பரப்பளவு 3,90 121 சதுர மைல்களாகும்.
வடகிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து தென்மேற்கு ஆசியா வரை பரந்துள்ள நாடு இது.
உலகின் பழைய நாகரீகங்களுள் ஒன்றான நைல் நதி நாகரிகத்தைக் கொண்ட எகிப்து மிக மிகப் பழமையான வரலாறைக் கொண்ட நாடாகும்.
பிரிட்டிஷின் ஆதிக்கத்திலிருந்து 1922ஆம் ஆண்டில் விடுபட்ட எகிப்து நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறத் தொடங்கியது.
எண்ணெய் வளமும் இயற்கை வாயுவையும் கொண்டுள்ள எகிப்து ஆப்பிரிக்காவிலேயே அதிக
அளவு எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட நாடாகும்.
ஆண்டுக்கு சுமார் ஒரு கோடியே 28 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நாடு இது என்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை. ஏனெனில் பழைய உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றான பிரமிடைக் கொண்டிருக்கும் நாடு அல்லவா இது!
பெரிய பிரமிட் மர்மம்!
‘பைரா’ என்றால் நெருப்பு என்று பொருள். ‘மிட்’ என்றால் நடுவே என்று பொருள். சாதாரணமாக கூறப்படும் இந்த அர்த்தத்தை விட உண்மையான அர்த்தத்தை ஜெரால்ட் மாசே (Gerald Massey) தனது ஏன்ஷியண்ட் ஈஜிப்ட்; தி லைட் ஆஃப் தி வோர்ல்ட் (Ancient Egypt: The light of the world’) என்ற புத்தகத்தில் கூறுகிறார். ‘பைர்’ என்றால் அக்னி என்றும் ‘மெட்’ என்று உச்சரிக்கப்பட வேண்டிய அடுத்த வார்த்தை பத்து மடங்கு என்ற பொருளைத் தரும் என்றும் அவர் கூறுவதோடு, பிரமிடானது அக்னியின் பத்து வித அபூர்வ சக்திகளைத் தருகிறது என்கிறார். பிரமிட், ‘புனிதமான சக்திகளைத் தன்னுள்ளே தக்க வைக்கும் ஊற்று’ என்கிறார் அவர்.
‘க்ரேட் பிரமிட்’ என்று அழைக்கப்படும் பெரிய பிரமிட் 13 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பரப்பின் மேல் மட்டம் அதிசயப்படும் அளவு சமதளமாக இருக்கிறது.
23 லட்சம் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது பிரமிட்! அதன் ஒவ்வொரு கல்லின் எடையும் 2 டன் முதல் 50 டன் வரை இருக்கிறது. இந்தக் கற்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட இடம் மயிரிழை அளவு கூட இடைவெளி இன்றி செய்யப்பட்டுள்ளது! இந்த பிரமிடில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள கற்களைக் கொண்டு அமெரிக்காவின் வானளாவிய கட்டிடமான எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போல 30 கட்டிடங்களைக் கட்டலாம்!
இது மட்டுமல்ல, பிரபஞ்சத்திற்கும் பிரமிடுக்கும் பெரிய அளவில் தொடர்பு உள்ளது.
பிரமிட், பூமியின் ஸ்கேல் மாடலாக இருப்பது ஒரு வியப்பூட்டும் விஷயம்! அதனுடைய லாடிட்யூட் மற்றும் லாங்கிட்யூட் ஆகிய இரண்டும் வெட்டிக் கொள்ளும் இடம் 30 டிகிரி வடக்கு மற்றும் 31 டிகிரி கிழக்கு! இந்த ரேகை மற்ற எல்லா ரேகைகளையும் விட அதிகமான பூமிப் பரப்பின் வழியே செல்கிறது என்பது ஒரு அதிசயமான விஷயம்!
பிரமிடின் மொத்தக் கற்களின் எடையான ஐம்பத்திமூன்று லட்சம் டன்னை 1,000,000,000,000,000 – Ten to the power of 15 என்ற எண்ணால் பெருக்கினால் வெவ்வேறு அளவுகளின் விகிதாசாரங்கள், ‘ பை’ எனப்படும் 3.142 என்ற அளவையும் ‘தங்க விகிதம்’ எனப்படும் 1.618 என்ற அளவையும் ஆங்காங்கே காண்பிக்கிறது.
பிரமிடில் உள்ள கிங் சேம்பரின் தெற்கு மற்றும் வடக்கு முனைகள் முறையே ஜீடா ஒரியன் நட்சத்திரத்தையும் ஆல்ஃபா ட்ராகோனிஸ் நட்சத்திரத்தியும் காண்பிக்கின்றன. க்வீன் சேம்பரின் தெற்கு மற்றும் வடக்கு முனைகள் சிரியஸ் நட்சத்திரத்தையும் ஓரியன் நட்சத்திரத்தையும் நோக்கி இருக்கின்றன. நமது புராணங்கள் பெரிதும் போற்றும் விஸ்வாமித்திர நட்சத்திரமே சிரியஸ்! இது பெரும் மர்மங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது.
பிரமிடின் சரியான அளவுகளே அதற்குச் சக்தியைத் தருவதாக விஞ்ஞானிகள் தங்கள் சோதனைகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.
போவிஸ் (BOVIS) என்ற பிரெஞ்சுக்காரர் பிரமிடைப் பார்க்கச் சென்ற போது பூனைகளும் மற்ற சிறு மிருகங்களும் வழி தவறி ஆங்காங்கே செத்துக் கிடப்பதைப் பார்த்தார். மீண்டும் பல மணி நேரம் கழித்து தான் வந்த வழியில் திரும்புகையில் அவை அழுகி நாற்றம் எடுக்காமல் இருந்ததைப் பார்த்து வியந்தார். உடனே பிரமிடின் ஸ்கேல் மாடலைத் தயார் செய்து அதில் பல்வேறு பதார்த்தங்களை வைத்துச் சோதனை செய்தார். அவை கெடவே இல்லை.
தொடர்ந்து செக்கோஸ்லேவிகியாவைச் சேர்ந்த காரெல் ட்ரபெல் (Karel Drabal) என்ற ரேடியோ எஞ்ஜினியர் பிரமிடின் சிறிய ஸ்கேல் மாடலில் ஒரு பிளேடைத் தெற்கு வடக்காக காம்பஸின் உதவி கொண்டு வைத்தார். பிளேடின் கூர்மையான பகுதிகள் கிழக்கு மேற்காக இருந்தன. இதை பிரமிடின் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரம் இருக்குமாறு வைத்தார். ஆறு நாட்களுக்குப் பிறகு பிளேடின் மழுங்கிய முனைகள் கூர்மையுடையதாக ஆகியிருந்தன.
அமெரிக்க டாலர் மர்மம்!
இது ஒருபுறமிருக்க, உலகையே தங்கத்திற்கு நிகராக ஆட்டிப் படைக்கும் அமெரிக்க டாலர் மறைமுக ஆற்றலைக் (அக்கல்ட் பவரை) கொண்டதாய் அமைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. அமெரிக்க டாலரின் செல்வாக்கிற்குக் காரணம் அதில் உள்ள பிரமிடே! அதில் உள்ள பூர்த்தியாகாத பிரமிட் எப்போதும் அமெரிக்கா வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதை உணர்த்துகிறது. பிரமிடின் மேலே உள்ள எதையும் ஊடுருவும் கண் அமெரிக்காவிற்கு தெய்வீக வழிகாட்டுதல் கிடைப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.
பிரமிடைத் தன் டாலரில் கொண்டுள்ள அமெரிக்கா பொருளாதாரத்தில் தலை சிறந்து விளங்கும். என்றும் செல்வச் செழிப்பில் திகழும்!
.பிரமிட் டூர்
பிரமிட் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிய உதவுவது பிரமிட் டூர். குறைந்த பட்சம் நான்கு மணி நேரம் என்பதில் ஆரம்பித்து சில நாட்கள் வரை இருந்து பார்த்து அறிய வேண்டிய அதிசயம் பிரமிட் என்பதால் தகுந்த ஒரு திட்டத்துடன் எகிப்து பயணத்தை வகுத்துக் கொள்ள வேண்டும்.
கிஜா மற்றும் குஃபு பிரமிடின் உள்ளேயே செல்லலாம். ஒட்டகம் அல்லது குதிரை சவாரி இதற்கென உண்டு. நடந்து சென்றும் பார்க்கலாம்.
அடுத்து எகிப்து மியூஸியம்,மெம்பிஸ், சகாரா என்ற பல இடங்களையும் பார்க்கும் போது மேலே கூறிய விவரங்கள் அனைத்தையும் பெறலாம்.
வெற்றி நகர் கெய்ரோ!
எகிப்தின் தலை நகரமான கெய்ரோ ஆப்பிரிக்காவிலேயே பெரிய நகரம். கெய்ரோ என்றால் வெற்றி நகர் என்று பொருள். நைல் நதியின் இரு புறங்களிலும் அமைந்துள்ள இந்த நகரம் 5000 வருட பழமை வாய்ந்த ஒன்று. பல நூறு புகழ் பெற்ற அரசர்களைப் பார்த்த நகர் இது. ஒரு கோடி பேர் இங்கு வாழ்கின்றனர்.
கோடைகாலத்தில் சுட்டெரிக்கும் 40 டிகிரி செல்ஸியஸ் உஷ்ணநிலையும் குளிர்காலத்தில் 14 டிகிரி செல்யஸ் குறைந்த பட்ச உஷ்ணநிலையும் இங்கு நிலவும். பயணிகள் பயப்படாமல் நடமாட, பாதுகாப்பான நகரம். செலவு குறைந்த நகரம்.
மால் ஆஃப் அரேபியா கெய்ரோவில் உள்ள பெரிய மால். இன்னும் ஆடை அணிகளை வாங்க பட்ஜெட்டுக்குத் தக ஃப்ரண்ட்லி மால்களும் பத்துக்கு மேல் உண்டு.
சொகுசுக் கப்பல் பயணம்
உலகின் பழம் பெரு நதியான நைல் நதியில் படகில் சொகுசு கப்பலில் (Cruise) பயணம் செய்து மகிழ முடியும். ஒரு நாள் முதல் ஆறு நாட்கள் வரை இந்தப் பயணங்கள் பயணிகளின் விருப்பத்திற்குத் தக்கவாறு அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் செங்கடலை ஒட்டி உள்ள கடற்கரைகளிலும் பயணிகள் திரளாகக் குழுமுகின்றனர். பவழப் பாறைகள் உள்ளிட்டவற்றைப் பார்க்கலாம். நீச்சல் தெரிந்தவர்கள் நீச்சல் விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
அலெக்ஸாண்டர் நிர்மாணித்த அலெக்ஸாண்ட்ரியா
சினால் மற்றும் செங்கடல் கடற்கரையில் சூரிய உதயம், அஸ்தமனத்தைப் பார்த்து இயற்கை ஆர்வலர்கள் மகிழும் போது பழைய பண்பாடு, நினைவுச் சின்னங்களில் ஆர்வமுள்ளோர் லக்ஸார், அஸ்வான், அலெக்ஸாண்ட்ரியா ஆகிய இடங்களுக்குச் சென்று மகிழலாம்.
கெய்ரோவிலிருந்து லக்ஸார் 660 கிலோமீட்டர் தொலைவிலும் அலெஸ்டாண்ட்ரியா 218 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மா பெரும் மன்னனான அலெக்ஸாண்டரால் நிறுவப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா, பழங்கால வடிவமைப்பிலான கட்டிடங்களைக் கொண்டுள்ளது. தோட்டங்களும், அழகிய நீர்நிலைகளும், இங்குள்ள ஸ்டான்லி பாலமும், பழைய கால கோட்டையும், அரசியர் அணிந்த நகைகளைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியங்கங்களும் மக்களை இங்கு ஈர்க்கின்றன.
எகிப்துக்கு வருக, மகிழ்ச்சியை ஏந்திச் செல்க!
நைல் நதியின் நன்கொடை என்று புகழப்படும் எகிப்து கனவுகள், மர்மங்கள், மலரும் நினைவுகளைத் தரும் நாடு என புகழப்படுகிறது.
இங்கு வாழ்பவர்கள் கூறுவது : இங்கு வாருங்கள், உங்கள் கால் தடங்களைப் பதியுங்கள். மலரும் நினைவுகளை அள்ளிச் செல்லுங்கள் என்பது தான்!
பிரமிடின் அபூர்வ ஆற்றல்
பிரமிடின் அபூர்வ ஆற்றல்கள்
பிரமிட் பல அபூர்வ ஆற்றல்களைக் கொண்டுள்ளது.
இதன் உள்ளே வைக்கப்பட்ட பால் மற்றும் தண்ணீர், சிறிது நேரத்திலேயே சக்தி ஊட்டப்பட்டதாக ஆகிறது.
பெரிய அளவில் கார்ட்போர்டில் கூட செய்து உருவாக்கப்பட்ட பிரமிடில் அமர்ந்து படிக்கும் மாணவ மாணவியரின் அறிவுத் திறன் கூடுகிறது. ஞாபக சக்தி கூடுகிறது.
பிரமிடில் தியானம் செய்தால் சாந்தி ஏற்படுகிறது. இப்படிப் பல்வேறு பயன்களைத் தருவதாக பல நூறு புத்தகங்கள் விளக்குகின்றன.
பிரமிடாலஜி என்ற பிரமிட் பற்றி ஒரு தனி இயல் உருவாகி இருப்பதோடு பிரமிட் என்சைக்ளோபீடியாவும் புத்தக சந்தைக்கு இப்போது வந்து விட்டது.
மாக்ஸ் டாத் மற்றும் க்ரெக் நியல்ஸன் (Max Toth & Greg Nielson) இணைந்து எழுதிய பிரமிட் பவர் என்ற புத்தகம் பிரமிடின் உள்ளே வைக்கப்படும் விதைகள் வீரிய விதைகளாக மாறுவதாகக் குறிப்பிடுகிறது.
உலகையே பரபரப்புக்குள்ளாக்கிய புத்தகமான சைகிக் டிஸ்கவரீஸ் பிஹைண்ட் தி அயர்ன் கர்டன் (psychic discoveriesh behind the iron curtain) என்ற புத்தகத்தை எழுதியுள்ள ஷீலா ஆஸ்ட்ராண்டர் பிரமிடின் உள்ளே காய்கறிகள், முட்டை வைத்தால் அவை கெட்டுப் போகாது என்பதைக் குறிப்பிடுகிறார்.
தலைவலி உள்ளவர்கள் பிரமிட் தொப்பியை மாட்டிக் கொண்டால் தலைவலி தீர்கிறது. இதை அணிந்து உலகில் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்.
சரியான பிரமிடின் அளவுகள்
கடைகளிலும் பிளாட்பார ஓரங்களிலும் விற்கும் பிரமிடுகளை வைத்து பிரமிட் சக்தியைப் பற்றிச் சந்தேகப்படுவோர் சரியான அளவுடன் பிரமிட் இருக்கிறதா என்பதை சோதனை செய்து பார்க்க வேண்டும். இந்த அளவுகளைக் கண்டுபிடிக்க ஒரு சிறிய ஃபார்முலா இருக்கிறது. பிரமிடின் ஒவ்வொரு அலகு அதாவது UNIT உயரத்திற்கும் அதன் அடிப்பக்கம் 1.5708 மடங்காக இருக்க வேண்டும். அதன் பக்க அளவு 1.4945 மடங்காக இருக்க வேண்டும். உதாரணமாக ஐந்து அங்குலம் உயரம் உள்ள பிரமிடின் அடிப்பக்கம் 7.85 அங்குலமாகவும் பக்கம் 7.47 அங்குலமாகவும் இருக்க வேண்டும்.
பிரமிடை சோதனை செய்து பார்ப்பது எப்படி?
பிரமிட் சக்தியை நீங்களே சோதனை செய்து பார்க்கலாம். நான்கு முக்கோணங்களை கார்ட்போர்டில் வெட்டிக் கொள்ளுங்கள். இதன் அடிப்பக்க அளவு 9 3/8 அங்குலமாகவும் இரு பக்கங்களின் அளவு 8 7/8 அங்குலமாகவும் இருக்க வேண்டும். நான்கு முக்கோணங்களை டேப் வைத்து ஒட்டிவிட்டால் பிரமிடின் உயரம் சரியாக ஆறு அங்குலம் இருக்கும். இதில் வடக்கு தெற்கு திசைகளை காம்பஸ் உதவியுடன் நிர்ணயித்து இரண்டு அங்குல உயரத்தில் ஒரு கட்டையின் மீது பிளேடின் நுனிகளை தெற்கு வடக்காக வைக்க வேண்டும். இப்போது பிளேடின் கூர்மையான பகுதிகள் கிழக்கு மேற்காக இருக்கும். ஆறு முதல் பத்து நாட்கள் கழித்து பிளேடை எடுத்துப் பார்த்தால் மழுங்கிய முனைகள் கூர்மையாகி இருக்கும். குறைந்த பட்சம் 50 முறைகள் இதைக் கூர்மையாக்கி உபயோகிக்கலாம்.
பிரபலமான பிரமிட் கட்டிடங்கள்
மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோவில் பிரமிட் அமைப்பில் உள்ளது.
பங்களூரு அருகில் உள்ள பிரம்மாண்டமான பிரமிட் தியான மண்டபம் 28 ஏக்கர் பரப்பளவில் குன்றுகளுக்கும் பசுமை வயல்களுக்கும் நடுவில் அமைக்கப்பட்ட ஒன்று. 100 அடி உயரமுள்ள பிரமிடில் பல்வேறு தியான நிகழ்ச்சிகள் அவ்வப்பொழுது நடைபெறுகின்றன.
கோவையில் உள்ள பிரமிட் செண்டர், அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் வடக்கு தெற்கு அச்சில் 9206 சதுர அடி பரப்பில் 89 அடியை அடிப்பக்கத்திலும் 63 அடியை உயத்திலும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பிரமிட் சர்ச் உள்ளிட்ட ஏராளமான பிரமிட் கட்டிடங்கள் உலகெங்கும் உருவாக்கப்பட்டு மக்களுக்குப் பலன் அளித்து வருகின்றன.
ஆர்வமுள்ளோருக்கு ஆற்றல் தருவது பிரமிட்!
**
tags- பிரமிட், எகிப்து