மூன்று மந்திரங்களை உலகிற்கு வழங்கிய நாடு (Post No.11,108)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,108

Date uploaded in London – –    16 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

5-7-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்று மந்திரங்களை உலகிற்கு வழங்கிய நாடு!

ச.நாகராஜன்

எனக்கு பிரான்ஸ் தேவையாய் இருப்பதை விட பிரான்ஸுக்கு நான் அதிக தேவையாக இருக்கிறேன் – நெப்போலியன்

உனது எதிரி தவறுகளைச் செய்யும் போது குறுக்கிடாதே,

முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில் மட்டுமே உள்ளது – இப்படி ஏராளமான முத்துப் போன்ற பொன்மொழிகளை உதிர்த்த மாவீரன் நெப்போலியன் நேசித்த பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைவோம்!

பிரான்ஸ்

ஆறு கோடியே ஐம்பத்தைந்து லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள பிரான்ஸ் நாட்டின் பரப்பளவு 211413 சதுர மைல்களாகும்.

பிரான்ஸ் என்ற வார்த்தை ஜெர்மானிய பழங்குடி மக்கள் கூறிய ப்ராங்க் (frank) என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு அவர்கள் மொழியில் பொருள் சுதந்திரம் (free) என்பதாகும்.

மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், வடகிழக்கில் பெல்ஜியம் மற்றும் லக்ஸம்பர்க், கிழக்கில் ஜெர்மனி ஸ்விஸ் மற்றும் இத்தாலி, தெற்கில் மத்தியதரைக் கடல், ஸ்பெயின் மற்றும் அண்டோரா, மேற்கில் பிஸ்கே வளைகுடா வடமேற்கே இங்லீஷ் சானல் ஆகியவற்றைக் கொண்டு அறுகோண வடிவில் இருப்பதால்  ஹெக்ஸகன் என்று அழைக்கப்படுகிறது.

இதன் தலைநகர் உலக பிரசித்தி பெற்ற பாரிஸ் நகரம்! 17ஆம் நூற்றாண்டிலிருந்தே நிதி, வர்த்தகம், ராஜதந்திரம், ஃபேஷன், அறிவியல் உள்ளிட்ட பலவற்றின் தலைமையகமாகத் திகழும் இதை, ஒரு காலத்தில் உலகின் தலை நகரம் என்றே சொல்லி வந்தார்கள்.

ஒரு கோடியே முப்பது லட்சம் பேர் பாரிஸ் நகரத்திலும் அதைச் சுற்றிலும் வசித்து வருகின்றனர். இவர்களில் 52 லட்சம் பேர்கள் அன்றாடம் பாரிஸ் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துகின்றனர்!

இங்கு வாழ்க்கைச் செலவு உலகின் அதிகபட்ச செலவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

பிரெஞ்சு புரட்சி

உலகிற்கே மூன்று தாரக மந்திரங்களை வழங்கியது பிரெஞ்சு புரட்சி. லிபர்டி, ஈக்வாலிடி, ப்ரேடர்னிடி எனப்படும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று மந்திரங்களை வழங்கிய பிரெஞ்சு புரட்சி 1789இல் நடைபெற்ற ஒன்று. பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்ட இந்த மூன்று மந்திரங்கள் 1958இல் பிரெஞ்சு அரசியல் சட்டத்திலேயே இடம் பெற்று விட்டன.

பதினாறாம் லூயி காலத்தில் மக்கள் வறுமையில் மிதமிஞ்சி வாடி வதங்கவே மக்கள் எழுச்சி உருவாகி புரட்சி வெடித்தது. மக்கள் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற மூன்று அடிப்படைக் கொள்கைகளை வைத்து வெற்றி பெற்று உலகெங்கும் முடியாட்சியை அகற்றி குடியரசை நிறுவ வழி வகுத்தனர்.

ஈஃபில் டவர்

பாரிஸ் என்றவுடனேயே நினைவுக்கு வரும் ஒரு இடம் ஈஃபில் டவர் தான்!

1889ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி கஸ்டாவ் ஈஃபில் என்ற வடிவமைப்பாளர் தந்த வடிவமைப்பை ஏற்றது பிரெஞ்சு அரசாங்கம். அது தான் ஈஃபில் டவர்! சேனி நதியில் தெற்குப் பக்கம் உள்ள இந்த டவர் உலகின் அதிக மக்களால் விரும்பி பயணிக்கப்படும் ஒன்று!

2018ஆம் ஆண்டில் மட்டும் (கோவிட் தொற்றுகுக்கு முன்பாக) சுமார் ஒன்பது கோடி சுற்றுலா பயணிகள் இங்கு வந்துள்ளனர்.

பதினேழு அடி உயரமுள்ள அடித்தளத்தின் மேல் கம்பீரமாக நிற்கும் இதன் உயரம் 984 அடி. வலுவான இரும்பினால் கட்டப்பட்டது இது. கோபுரத்தின் மேல் ஒரு டெலிவிஷன் ஆண்டெனாவும் உள்ளது. ஆக இதன் மொத்த உயரம் 1063 அடி!

சுற்றுலாப் பயணிகளுக்காக இது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  முதல் இரு பகுதிகளில் உணவு விடுதிகள் உள்ளன. மூன்றாம் மட்டத்தில் அதாவது தரை மட்டத்திலிருந்து 906 அடி உயரத்தில் உள்ள ஒரு மேடையிலிருந்து பாரிஸைப் பார்க்க முடியும். டிக்கட் உண்டு.

லிப்ட் மூலம் இங்கு செல்லலாம்.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் ஈஃபில் டவரைப் பார்க்க ஆசையோடு வந்தான். ஆனால் அவனைப் பார்க்க விடாமல் செய்ய டவரில் உள்ள லிப்டின் கேபிள் கம்பிகள் அறுத்து விடப்பட்டன. ஆகவே டவரின் உச்சிக்குச் செல்ல அவன் படி வழியே ஏறிச் செல்ல நேர்ந்தது!

சேனி நதியில் சொகுசுக் கப்பல் பயணம்

ஈஃபில் டவர் பார்த்து முடித்தவுடன் சேனி நதியில் சொகுசுக் கப்பலில் (Cruise) பயணம் செய்து மகிழலாம். பாரிஸ் நகரப் பாலங்களின் அடி வழியாகச் சென்று நகர் முழுவதையும் பார்ப்பது ஒரு பெரிய சுகமான அனுபவமாகும்.  ரிகார்டு செய்யப்பட்ட விரிவுரை ஒலிபரப்பப்பட ஒரு மணி நேரப் பயணத்தை  அனைவரும் விரும்பி மேற்கொள்கின்றனர்.

இரவு நேரத்திலோ ஒளிரும் மின் விளக்குகளால் தேவ லோகம் போல அமையும் இந்தப் பகுதி!

இரவு நேர உணவுடன் ஒரு பயணம், பாரிஸ் பகுதிகளைப் பார்க்கும் பயணம் என பல்வேறு பயணங்கள் நடந்து கொண்டே இருப்பதால் நமது நேரத்திற்கும் விருப்பத்திற்கும் தக ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளலாம்! ஆயிரம் ரூபாய் முதல் இருபதினாயிரம் ரூபாய் வரை டிக்கட் உண்டு. பட்ஜெட்டுக்குத் தக நமது பயணம் அமையும்!

லூவர் அருங்காட்சியகம்

லூவர்  மியூஸியம் உலகின் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களுள் ஒன்று. 35000 கலைப் பொருள்கள் 73000 சதுர மீட்டர் பரப்பில் இங்கு உள்ளன. மூன்று பகுதிகள் கொண்ட இதில் ஒவ்வொரு பகுதியிலும் எழுபதுக்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. அரும் வண்ண ஓவியங்கள், சிற்ப வேலைப்பாடுகள் உள்ளிட்ட அனைத்து கலைப் பொருள்களும் இங்கு அற்புதமாகக் காட்சிப் படுத்தப்படுள்ளன.

மாடி பஸ் டூர்

டபிள் டெக்கர் பஸ்ஸில் அமர்ந்து 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரம் டூரை மேற்கொள்ளலாம். பாரிஸில் பார்க்க வேண்டிய அனைத்து இடங்களையும் இந்த டூரில் (கப்பல் பயணம் உட்பட இதில் உண்டு) கண்டு மகிழலாம்.

சுற்றுலாப் பயணிகளுக்காக வகுக்கப்பட்ட திட்டம் இது.

ஏராளமான வாகனப் போக்குவரத்து இங்கு உண்டென்றாலும் ஸ்டாப், டூ நாட் எண்டர் போன்ற போக்குவரத்து அறிவிப்புப் பலகைகளே இங்கு கிடையாது. அவ்வளவு கட்டுப்பாட்டை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்கின்றனர்!

வேர்செல்ஸ் அரண்மனை

பாரிஸில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களுள் ஒன்று வேர்செல்ஸ் பாலஸ்! பதிமூன்றாம் லூயி மன்னனால் 1623ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது இது. பாரிஸுக்கு தென்மேற்கே பத்து மைல் தொலைவில் இது உள்ளது. மன்னர்களால் பெரிதும் விரும்பப்பட்ட அரண்மனை இது. தலைநகரின் அருகில் இருந்த போதிலும் சந்தடி இல்லாத தனிப்பட்ட ஒரு அமைதியைத் தந்ததால் 1789 பிரெஞ்சு புரட்சி ஏற்படும் வரை இது மன்னர்கள் விரும்பித் தங்கும் அரண்மனையாகத் திகழ்ந்தது.

பதிமூன்றாம் லூயிக்கு வேட்டையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வேட்டையாடுவதற்காக தனது தந்தையுடன்  சிறு பையனாக இந்தப் பகுதிக்கு வந்த லூயி இதன் அழகில் மயங்கினார். இங்கே தங்கி வேட்டையாடினால் சிறப்பாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. 1610இல் தந்தை இறக்கவே  லூயி முடி சூடினார். 1623இல் இதை வேட்டையாடும் ‘ஹண்டிங் லாட்ஜாக’ முதலில் கட்ட ஆரம்பித்தார். இவரை அடுத்து வந்த இவரது மகனான பதிநான்காம் லூயி இதை பிரம்மாண்டமாக அழகுற மேம்படுத்தினார்.

பின்னால் வந்த பதினாறாம் லூயி மற்றும் அவரது மனைவியான மேரி அண்டாய்னெட்டைப் பற்றிய வரலாறு மிகப் பெரியது. இவர்களது கொடுங்கோன்மை முடியாட்சியை வெறுத்த மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர்; 1789இல் ஏற்பட்ட பிரெஞ்சு புரட்சியில் அரச குடும்பத்தினர் அரண்மனையிலிருந்து விரட்டப்பட்டனர்.

புரட்சிவீரர்களில் சிலர் இதை அழிக்க நினைத்தாலும், ஒரு வழியாக அழிவிலிருந்து இது தப்பிப் பிழைத்தது. 1793இல் மேரி அண்டாய்னெட்டின் தலை கில்லடீனில் துண்டிக்கப்பட்டது. அரண்மனையோ பின்னால் ஒரு ஆயுதக் கிடங்கானது.

இப்போது சுற்றுலாப் பயணிகளுக்குத் தன் வரலாறைச் சொல்லிக் கொண்டிருக்கிறது இது! உலகின் பாரம்பரிய இடங்களுள் ஒன்றாக இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிசய இடங்கள்!

‘க்ளியோபாட்ரா நீடில்’ எனப்படும் சதுரக் கூம்பகத் தூண் பாரிஸில் பார்க்க வேண்டிய ஒன்று. நாட்டர்டாம் கதீட்ரல், கர்னாவலெட் மியூஸியம், ரோடின்ஸ் கார்டன் உள்ளிட்ட ஏராளமான இடங்கள் இங்கு பார்ப்பதற்கு உள்ளன.

இதையடுத்து இன்னொரு அதிசய வடிவமைப்பு நான்கு பரிமாண க்யூப் ஆகும். பிரெஞ்சு புரட்சியின் 200 ஆண்டு நிறைவை ஒட்டி டேனிஷ் கட்டிட விற்பன்னரான ஜோஹன் ஆட்டோ வான் ஸ்ப்ரெக்கெல்ஸன் இதை வடிவமைத்தார். நாம் வாழும் மூன்று பரிமாண உலகில் நான்கு பரிமாணத்தைக் காட்டும் ஒரு அதிசய முயற்சி இது!

பாரிஸில் நைட் க்ளப்

பாரிஸ் என்றவுடனேயே நினைவுக்கு வருவது ஒய்னும் இரவு க்ளப்புகளும் அங்கு நடக்கும் கேளிக்கை பார்ட்டிகளும் தான்.

21 வகையான ஒய்ன் வகைகள் பாரிஸில் மட்டுமே கிடைக்கும்.

மலைக்க வைக்கும் 112 கோடி க்ளாஸ் மது பானம் ஆண்டிற்கு இங்கு மக்களால் அருந்தப்படுகிறது. பிரான்ஸ் நாட்டின் ஷாம்பெய்ன் பகுதியிலிருந்து வரும் ஒரிஜினல் ஷாம்பெய்ன் இங்கு மட்டுமே கிடைக்கும் என்பது கூடுதல் செய்தி!

அத்துடன் பாரிஸ் நகரில் அமைந்துள்ள ஏராளமான நைட் கிளப்புகள் அந்தி வேளையில் விளக்குகள் ஒளிர ஆரம்பித்தவுடன் சுறு சுறுப்பாக இயங்க ஆரம்பிக்கும். விதவிதமாக நடக்கும் பார்ட்டிகள், இப்படிப்பட்ட பார்ட்டிகளை விரும்புவோருக்கு உற்சாகம் தரும் இடமாக அமையும்.

ஒவ்வொரு உணவு வேளையிலும் முன்னாலோ அல்லது பின்னாலோ அருந்தாமல் உணவுடன் இணைந்து ஒய்னை அருந்துவது பிரான்ஸ் தேசப் பழக்கம்!

என்ன வாங்கலாம்? எங்கே வாங்கலாம்?!

பாரிஸ் செல்பவர்களுக்கு வாங்குவதற்கான சிறப்பு நினைவுப் பரிசுப் பொருள்கள் பல உண்டு. ஈஃபில் டவரின் மாதிரி அமைப்புகள், தலையில் அணிவதற்கான விதவிதமான தொப்பிகள், வாசனை திரவியங்கள் மற்றும் செண்ட் பாட்டில்கள் (100 நாடுகளுக்கு இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன), சீஸ் (இங்கு 450 சீஸ் வகைகள் உள்ளன), பாதாம் பருப்புகள், ஒய்ன், ஸ்கார்ஃப் போன்றவை பயணிகள் விரும்பி வாங்குபவை. பெண்களுக்கோ என்றால் விதவிதமான நகைகளும். மேக்-அப் சாதனங்களும் மேக்-அப் பொருள்களும் கிடைக்கும்; குறிப்பாக பெண்மணிகள் இங்கு ஹாண்ட் பேக்  வாங்காமல் திரும்புவதில்லை.

அனைவரும் விரும்பிச் செல்லும் 15 பெரிய மால்கள் பாரிஸ் நகரிலேயே உள்ளன.

பிரான்ஸ் நாட்டின் சிறப்புகள்

டின் கேன், ஹேர் ட்ரையர், ஹாட் ஏர் பலூன் போன்ற பல விசித்திரமான கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்ததே பிரான்ஸ் தான்

இன்னொரு விசித்திரம், இந்த நாட்டில் பிரான்ஸ் நாட்டின் சட்டத்தால் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதும் அதிர்ச்சி தரக் கூடியதுமான ஒரு விதி என்னவெனில், விரும்பினால், இறந்த ஒருவரை அதிகாரபூர்வமாக மணம் செய்து கொள்ளலாம். உயிரோடிருந்த போது அவர் மணம் செய்து கொள்ள விரும்பினார் என்று காரணத்தையும் காட்ட வேண்டும்! காதலுக்கு முதல் இடம் தருவது பிரான்ஸ் என்பதை அனைவரும் அறிவர்!

கார்களுக்கு நம்பர் பிளேட் போட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உலகில் முதன் முதலாக 1893இல் கொண்டு வந்ததும் பிரான்ஸ் தான்!

விற்காத உணவுப் பொருள்களையும் மளிகைப் பொருள்களையும்

சூப்பர் மார்கெட்டுகள் அழிக்கவோ அல்லது குப்பையில் போடவோ கூடாது, அவற்றை தர்ம ஸ்தாபனங்களுக்கோ, உணவு வங்கிகளுக்கோ தர வேண்டும் என்று பிரான்ஸ் அரசு 2016இல் கூறி உலக நாடுகளுக்கு ஒரு புது வழியைக் காட்டி இருக்கிறது.

உலகில் பொது இடத்தில் அனைவருக்கும் சினிமாவை முதலில் காட்டிய நாடும் பிரான்ஸ் தான்! 1895, டிசம்பர் 28ஆம் தேதி லூயி நிக்கலஸ் மற்றும் அவர் சகோதரர் லூயி ஜேன் ஆகியோர் பாரிஸில் முதன்முதலாகத் திரைப்படத்தை அனைவருக்கும் திரையிட்டுக் காட்டினர்!

கான் (Cannes) திரைப்பட விழா ஆண்டு தோறும் இங்கு கான் நகரில் 1946லிருந்து நடந்து வருவதை அனைவரும் அறிவர். உலகின் மதிப்பு மிக்கத் திரைப்படத் திருவிழாவான இந்த நிகழ்வில் உலகின் சிறந்த ஆவணப்படங்கள் உள்ளிட்ட அனைத்தும் திரையிடப்படுகின்றன. சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டுக் கவிஞரும் பிரெஞ்சு தேசீய கீதமும்

பிரான்ஸ் நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்கும் ஒரு முக்கியமான தொடர்பு உண்டு.

மஹாகவி பாரதியார் பிரெஞ்சு மொழியை நன்கு அறிந்தவர். புதுவையில் அவர் தங்கி இருந்த போது பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதமான ‘லா மார்செலேஸ்’ என்ற கீதத்தை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ‘அன்னை நன்னாட்டின் மக்காள் ஏகுவம்

மன்னு புகழ் நாளிதுவே” என்று ஆரம்பிக்கும் அந்த கீதம்,

“போர்க்கோலம் பூணுவீர்! வகுப்பீர் அணிகளை!

செல்வோம் செல்வோம்!

நாம் போம் பாதையில்

பாய்ச்சுவோம் அவரிரத்தத்தை”

என்ற வீர வரிகளுடன் முடிகிறது.

ஆன்மீகப் புதுவையும் பிரான்ஸும்

பாரிஸ் நகரில் பிறந்த மிரா அல்பாசா (தோற்றம் 21-2-1878 சமாதி 17-11-1973) புதுவையில் ஆன்மீகத்தில் ஈடுபட்ட மஹரிஷி அரவிந்தரால் ஈர்க்கப்பட்டு அவரிடம் தன்னை ஒப்படைத்து ஆசிரமப் பணியை மேற்கொண்டார். அன்னை என்றும் மதர் என்றும் பல்லாயிரக்கணக்கானோரால் அழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆன்மீக நெறியை போதித்தார். ஆக பிரான்ஸ் நாடு புதுவைக்கு ஒரு ஆன்மீகச் செல்வத்தை அளித்ததும் குறிப்பிடத்தகுந்த ஒரு சுவையான செய்தி!

ஒரு வரியில் பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன் என்றால் பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் தாய்நாடு எதிர் கொண்ட சவால்களையும் அதை அது சமாளித்து முன்னேறும் நிலையையும் நினைத்துக் கூறுவது இது தான் : ”அலைகளால் அவள் அடித்துச் செல்லப்பட்டாலும் ஒரு நாளும் அவள் மூழ்கி விட மாட்டாள்.” (Tossed but not sunk)!

**

tags-பிரான்ஸ்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: