சுவையான சமண மத உவமைகள்- கர்ம வினை என்ன செய்யும்? (Post No.11,119)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,119

Date uploaded in London – –    19 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஒருவன் செய்த செயல்கள் என்ன செய்யும் என்பதற்கான இந்துமத உவமையை  திருவள்ளுவர் அளித்தார்.

புத்தமத உவமையை கவுதம புத்தர் அளித்தார்.

வள்ளுவர் சொன்னார்,

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை

வீயாது அடிஉரைந்தற்று (குறள் 208)

பொருள்

தீய செயல்களைச் செய்தவர்கள் தீச்செயலின் பயனை அனுபவித்து அழிவது உறுதி. இது ஒருவனுடைய நிழல் அவனோடு பின் தொடர்ந்து சென்று அவன் அடியில் இருப்பது போன்றது.

ஒருவனுடைய நிழல் ஒருவனை எப்படித் தொடர்கிறதோ அப்படி அவன் செய்த செயல்களும் அவனுடன் வரும்.

புத்தர் சொன்னார்

ஒருவன் கெட்ட எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்குத் துன்பம், வண்டி மாட்டின் மீது அந்த வண்டிச் சக்கரங்கள் எப்படி தொடர்ந்து வருகின்றனவோ அப்படி வரும்.

 ஒருவன் நல்ல எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்கு இன்பம், ஒருவனுடைய நிழல் எப்படி அவனைத் தொடர்ந்து வருகின்றதோ அப்படி வரும்.- தம்மபதம் 1,2

XXX

மஹாவீரர் முதலிய சமண சமய தீர்த்தங்கரர்கள் அளித்த செய்திகளை சமண மதத்தினர் அர்த்தமாகதி மொழியில் செய்யுட்களாகத் தொகுத்து வைத்துள்ளனர்.அவற்றைக் காண்போம்.

(ஸம்ஸ்க்ருதம் அறிந்தவர்கள் பிராகிருத மொழியின் எந்த வகையையும்  எளிதில் புரிந்து கொள்ளுவார்கள். அது கொச்சைமொழி; அதாவது பேச்சு வழக்கு. தமிழிலும் பிராகிருதம் உண்டு. பழந்தமிழ்  இலக்கியங்கள் செம்மொழி.;  இப்பொழுது வரும் தமிழ் நாவல்கள், கதைகள் பிராகிருதம் போன்ற கொச்சைத் தமிழ் மொழி .)

தேணே ஜஹா ஸந்திமுகே  கஹீயே

ஸகம்முணா கிஞ்சஇ  பாவகாரீ 

ஏவம் பயா பேச்ச இஹம் ச லோயே

கடா ண கம் மாண ந மோக்கு அத்தி

பொருள்

வீட்டில் கன்னம் வைத்து திருடும் திருடன் எப்படி அவன் அந்த கன்னத்தா லேயே அழிவானோ அதே போல ஒருவன் செய்த தீ வினையாலேயே அவன் அழிவான் . அவ்வாறே ஒருவர் செய்த கர்மம்/ வினைகள் இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் அவரைத் தொடர்ந்து வரும் ; தப்பிக்கவே முடியாது.

இந்த ஸ்லோகத்துக்கு உரை/ வியாக்கியானம் எழுதிய தேவேந்திரா , நம் மனக் கண் முன்னர், இரண்டு காட்சிகளை வைக்கிறார்.

( வீட்டின் சுவரில் ஓட்டை போட்டுத் திருடுவதைக் கன்னம் வைத்தல் என்பர். இதுபற்றிய விவரங்களை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சூத்ரகர் என்பவர் மிருச்சகடிகம் என்னும் நாடகத்தில் ஸம்ஸ்க்ருதத்தில் எழுதியுள்ளார். அதை பண்டித கதிரேச செட்டியார் மண்ணியல் சிறுதேர் என்று தமிழாக்கம் செய்துள்ளார். அதில் திருட்டு நூல் பற்றிய பல சுவையான விஷயங்கள் வருகின்றன. திருடர் கடவுளான முருகனை அவன் வழிபட்டுவருவதும் , திருடப் போகும் வீட்டின் சுவரைப் பார்த்துவிட்டு அதற்குத் தக்க வடிவத்தை ஆராய்ந்து எடுத்து, ஓட்டை போடுவதும் வருகிறது. எந்தெந்த சுவருக்கு என்ன என்ன வடிவம் சிறந்தது என்பதை அந்த நூல் விளம்புகிறது. திருடன் கூட ஒரு கலைஞன் ; வீட்டிற்குத் தக்க தாமரை, அல்லது பறவை அல்லது மிருகம் வடிவில் ஓட்டை போட்டுத் திருடுவான்.)

xxx

தேவேந்திரா எழுதிய உரை சொல்வதாவது —

திருடர்கள் முதலில் கால்களைக் கன்னம் (ஓட்டை) வழியாக நுழைப்பர்.. சப்தம் கேட்டு வீட்டுக்காரர் வந்துவிட்டால் அவர் அவன் கால்களைப் பிடித்து இழுத்து யார் அவன் என்பதைக் காண முயல்வார். அதே நேரத்தில் அவன் போடும் கூச்சலைக் கேட்டு அவனுடைய கூட்டாளி அவன் தலையைப் பிடித்து இழுப்பான். அந்த நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து மண்ணுக்குள் புதைந்து திருடன் உயிர் இழப்பான்.

இரண்டாவது  காட்சி

ஒரு திருடன்,  வீட்டின் சுவரில் ஒரு சிறிய அழகான சித்திரம் வரைந்து கன்னம் வைத்து வீட்டிற்குள் நுழைந்து திருடிவிட்டுப் போகிறான். மறுநாள் அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் செய்தி பரவிவிடுகிறது. அவர்கள் எல்லாரும்  திருடன் போட்ட சித்திரக் கன்னத்தைப் பார்த்து வியக்கின்றனர். எவ்வளவு அழகான வடிவத்தில் கன்னம் வைத்தான் என்பர் சிலர்; அட, இத்தனை சிறிய ஓட்டைக்குள் அவன் உடல் எப்படி நுழைந்தது என்று வியப்பர் மற்றும் சிலர். நகர காவற்காரரும் திருடனைப் பிடிக்க, தடயம் இருக்கிறதா என்பதைக் காண அங்கு வருவார்கள். அதே நேரத்தில் திருடனுக்கும் தன் திறமை பற்றி ஊர் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கும் ஆசை பிறந்து அங்கே வருகிறான்.

ஒவ்வொருவர் விமர்சனம் செய்யும்போதும் அவன் முக பாவம் மாறுபடுகிறது. இதை எல்லாம், ஊர்க் காவலர்கள் (போலீஸ்) பார்த்து விடுகின்றனர். ஒருவர் இத்தனை சிறிய ஓட்டைக்குள் அவன் உடல் எப்படித்தான் புகுந்ததோ என்று விமர்சிக்கும்போது, திருடனும் தன் உடலைத் தானே அளந்து, வியந்து மகிழ்கிறான். போலீஸ்காரர்கள் அவனைப் பிடித்து உதைத்தபோது அவன் திருடியதை ஒப்புக்கொள்கிறான்  .

இதுதான் இந்த ஸ்லோகத்தின் பொருள் என்கிறார் உரைகாரர்.

இதனால்தான் திருட்டு முழி முழிக்கிறான் பார் என்ற வசனத்தையும், தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற வசனத்தையும் தமிழர்கள் அடிக்கடி பயன்படுத்துவர்.

XXX

இன்னும் ஓரிரு உவமைகளைக் காண்போம் :

ஜஹா மஹாதலாகஸ்ய ஸன்னி ருத்தே  ஜலாகமே

உஸ் சி ஸணா யே தவணா யே கமேண ம்  ஸோ சணா பவே

ஏவம் து ஸஞ்ஜயஸ்ஸா வி  பாவ கம்ம நிராசயே

பாவ கோடீ ஸஞ்சியம் கம்மம் தவஸா நிஜ்ஜ ரிஜ்ஜயி

பொருள்

ஒரு பெரிய ஏரிக்குள் வரும் தண்ணீர் நின்று போனவுடன் (கோடை காலத்தில்) ஏரியிலுள்ள நீரைப் பயன்படுத்துவதாலும், வெய்யிலில் ஆவியாவதாலும் நீர் வற்றிப் போகும். இதே போல கோடிக்கணக்கான பிறவிகளில் ஒரு சந்நியாசி சேர்த்துவைத்த கர்ம வினைகள் யாவும் புதிய கர்மம் செய்யாததால் அழிந்து போகும்.

(இங்கு கர்ம வினைகள் தண்ணீருக்கும், வற்றிப்போவது ஒருவர் செய்யும் தவத்துக்கும் உவமையாக வருகின்றன)

xxx

அடுத்த பாடலில் சுரைக்காய் உவமை, வேர் அற்றுப்போன மர உவமைகள் வருகின்றன..

வேர் அழிந்துவிட்டால், என்னதான் தண்ணீர் ஊற்றினாலும் மரம் வளராது. ஆசை என்னும் மோகம் அழிந்த பின்னர் கர்மங்கள் / வினைகள் துளிர் விடா.

ஒரு காய்ந்த சுரைக் காய் நீரில் மிதக்கும். அதன் மீது மண் படிந்து கனம் ஆகிவிட்டாலோ அது தண்ணீரின் அடிமட்டத்துக்குப் போய்விடும்.. ஒருவர் கர்ம வினைகள் என்னும் மண் படியப்  படிய  கீழ் பிறப்புகளை அடைவர். மண் அடுக்குகள் நீங்கினால் எப்படி சுரைக்குடுக்கை எப்போதும் நீர் மீது மிதக்குமோ அவ்வாறே கர்மவினைகள் விடுபட்டால், சித்தர்கள் வசிக்கும் சித்த சீலாவுக்கு ஆன்மா போகும். மீண்டும் பிறவி ஏற்படாது .

இவற்றைப் படிக்கும்போது, விவேக சூடாமணியில் ஆதி சங்கர் சொல்வதையும் , பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்வதையும் நம் மனம் ஒப்பிட்டுப் பார்க்கும்.

புத்த, சமண, சீக்கிய மதங்கள் , இந்துக்கள் சொல்லும் கர்ம வினைக் கொள்கையை அப்படியே ஏற்கின்றன. யூத , கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் இவற்றை ஏற்பதில்லை. அவர்களுக்கு கர்மா பற்றியோ மறு பிறப்பு பற்றியோ தெரியாது .

–சுபம் –

Tags-  சுவையான, சமண மத, உவமைகள், கர்ம வினை,  கன்னம் வைத்தல், கர்ம வினை,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: