WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,117
Date uploaded in London – – 19 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
(சாவர்க்கரின், அரிய படங்கள், லண்டன் பல்கலைக்கழக நூலக புஸ்தகங்களிலி ருந்து எடுக்கப்பட்டன.)
விநாயக் தாமோதர் சவர்கார்!
ச.நாகராஜன்
இந்தியாவில் ஹிந்துத்வத்தை வலியுறுத்திய மாபெரும் மனிதர் விநாயக் தாமோதர் சவர்கார்.
காங்கிரஸை மிக கடுமையாக எதிர்த்ததால் அவரை சுதந்திரத்திற்குப் பின்னால் வந்த காங்கிரஸ் அரசு சரியாகக் கண்டு கொள்ளவில்லை.
மஹாத்மா காந்திஜியின் அஹிம்ஸை கொள்கையை அவர் ஆதரிக்கவில்லை. வலிமையாக எதிர்த்தார்.
காந்திஜி கோட்ஸேயால் கொலை செய்யப்பட்டவுடன், சவர்கார் மும்பையில் அவர் இருந்த வீட்டில் கைது செய்யப்பட்டார்.
ஆனால் பின்னர் நடந்த விசாரணையில் அவருக்கும் காந்திஜி கொலைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது. விடுதலையானார்.
1883ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி நாசிக் அருகில் உள்ள பாகூர் என்ற கிராமத்தில் மராத்திய சித்பவன் பிராமண குடும்பத்தில் சவர்கார் பிறந்தார்.
1903ஆம் ஆண்டு மித்ர மேளா என்ற ஒரு புரட்சி இயக்க சங்கத்தைத் தன் சகோதரருடன் சேர்ந்து அவர் ஆரம்பித்தார். பிரிட்டிஷ் ஆட்சியை அப்புறப்படுத்தி ஹிந்து கௌரவத்தைக் காக்க வேண்டும் என்ற கொள்கையில் பிறந்தது இந்த இயக்கம்.
மக்களின் ஆதரவை அவர் வெகுவாகப் பெற்றார். ஆனால் பிரிட்டிஷ் அரசு அவரைக் கைது செய்து இரட்டை ஆயுள் தண்டனையை வழங்கியது.
தீவாந்தர தண்டனை விதிக்கப்பட்டவுடன் அவரது 28ஆம் வயதில் 1911 ஜூலை 4ஆம் தேதி அந்தமானுக்குக் கொண்டு செல்லப்பட்டார் அவர்.
அங்கு மாடு போல செக்கு இழுக்க வைக்கப்பட்டார்.
இன்னும் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்தார்.
1924ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி ரத்னகிரியை விட்டு அகலக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
மக்களிடம் எழுச்சி ஊட்ட அவர் ஏராளமான கட்டுரைகளை எழுதினார்; கூட்டங்களை நடத்தினார்.
ஹிந்து மஹா சபா என்ற மாபெரும் இயக்கத்தை ஆரம்பித்தார். பல்லாயிரக் கணக்கில் அவரது பேச்சைக் கேட்க மக்கள் அவரது கூட்டத்திற்குத் திரண்டு வந்தனர்.
1948ஆம் ஆண்டு ஜனவரியில் நாதுராம் கோட்ஸேயால் காந்திஜி சுடப்பட்டவுடன் அந்தக் கொலையில் இவருக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று அவர் கைது செய்யப்பட்டார்.
கொலை செய்வதற்கு முன்பு ஜனவரி 17, 1948 இல் நாதுராம் கோட்ஸே சவர்காரின் ஆசிர்வாதம் பெற அவர் இல்லம் சென்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் தீவிர விசாரணையிலும், அவரது நெருங்கிய நண்பர்களுடனான அவரது உரையாடல்களிலும் ஒரு போதும் அவர் காந்திஜி கொலை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டதில்லை என்பது உறுதியானது.
மக்களே பூரண அஹிம்சை என்ற கொள்கையை நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது முடிந்த முடிவான கருத்தாக இருந்தது.
1963ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள் அவரது மனைவி யமுனாபாய் மறைந்தார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் தனது மரணத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்தார்.
ஆத்ம ஹத்யா ஆனி ஆத்ம சமர்பண் என்ற தலைப்பில் சஹ்யாத்ரி என்ற மராத்தி மாத இதழில் ஜூலை 1964இல் ஒரு கட்டுரையை அவர் எழுதினார்.(Aatma hatya aatma samarpan – Suicide and self-sacrifice)
அந்தக் கட்டுரை அற்புதமான ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
தன்யோஹம் தன்யோஹம் கர்தவ்யம் மே ந வித்யதே கிஞ்சித்
தன்யோஹம் தன்யோஹம் ப்ராப்தவ்யம் சர்வமத்யா சமர்பணம்
“Blessed am I, Blessed am I, I know of no duty now,
Blessed am I, Blessed am I, I have fulfilled what I wished to achieve”
தன்யனானேன், தன்யனானேன், எனக்கு ஒரு கடமையும் இப்போதில்லை
தன்யனானேன் தன்யனானேன் நான் எதை அடைய வேண்டும் என்று விரும்பினேனோ அதை அடைந்து விட்டேன்.
இந்தக் கட்டுரையில் குமாரில பட்டர், சைதன்ய மஹா பிரபு, த்யானேஸ்வர், சமர்த்த ராமதாஸர், ஏகநாத், துகாராம் ஆகியோரின் இறுதியை அவர் விவரித்து எப்படி அவர்கள் தங்கள் ஆத்ம சமர்ப்பண மனோபாவத்துடன் தங்கள் உடலை உகுத்தார்கள் என்பதை விவரமாகத் தெரிவித்திருந்தார் அவர்.
ஆத்ம சமர்ப்பணம் என்ற கருத்து வந்தவுடன் அவர், உணவு உண்பதை நிறுத்தி விட்டார். அவருக்கு ஜீரணக் கோளாறுக்கான மருந்துகள் தரப்பட்டிருந்தன. அதையும் எடுக்க மறுத்து விட்டார்.
நாளுக்கு நாள் உடல் பலஹீனமாயிற்று. 1966இல் பிப்ரவரி மாதத்திலிருந்து அவர் வழக்கமாக அருந்தும் தேநீரையும் அருந்தவில்லை.
1966, பிப்ரவரி 24ஆம் நாள் அவர் உடல் நிலை மிக மோசமாக ஆனது.
26ஆம் தேதி காலை சுமார் 8.30க்கு எழுந்த அவர் ஜுரத்தால் பீடிக்கப்பட்டிருந்தார். கீமாடியிலிருந்து ழே இறங்கி வந்தார். அங்கு அவரது மகண் விஸ்வாஸ், மருமகள் சுந்தர், மகள் ப்ரபாத், மாப்பிள்ளை மாதவராவ் சிப்லுங்கர் பேரக் குழந்தைகள் விதுலா, மாதுரி ஆகியோர் கவலையுடன் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
11.10 மணிக்கு அவரது ஆவி பிரிந்தது.
சவர்கார் ஒரு நாத்திகர்.
தனது உயிலில் அவர் பல கருத்துக்களைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
தன் மறைவை ஒட்டி ஒரு ஹர்த்தாலோ அல்லது கடைகள் மூடப்படுதலோ கூடாது என்றும் மின்சார மயானத்தில் தன் உடல் எரிக்கப்பட வேண்டும் என்றும், (10ஆம் நாள், 13ஆம் நாள் உள்ளிட்ட) எந்த ஒரு இறுதிச் சடங்கும் நடத்தப்படக் கூடாது என்றும் வேத மந்திரங்கள் மட்டும் முழங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
.
சவர்கார் சதனில் அவரது உடல் மால 4.30 மணியிலிருந்து மறு நாள் மதியம் 3.30 மணி வரை வைக்கப்பட பல்லாயிரக்கணக்கானோர் வரிசையாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அவர் உடலை ஊர்வலமாகக் கொண்டு செல்ல ராணுவ பீரங்கி வண்டி ஒன்றை அரசிடம் அனைத்து மக்களும் கோரினர். அரசு மறுத்து விட்டது.
பிரபல டைரக்டர் சாந்தாராம் உடனே தனது ஸ்டுடியோவிலிருந்து அதே போன்ற வண்டி ஒன்றைக் கொண்டு வந்தார்.
பிப்ரவரி 27ஆம் நாள் இறுதி யாத்திரை ஊர்வலம் கிளம்பியது. மும்பை வீதிகளின் வழியே சென்ற ஊர்வலம் மின் மயானத்தை அடைய 6 மணி நேரம் ஆனது.
50000 முதல் ஒரு லட்சம் பேர் வரை அதில் கலந்து கொண்டனர்.
ஸ்வாதந்த்ர்ய வீர் சவர்கார் அமர் ரஹே, ஹிந்து ராஷ்ட்ர கி ஜெய் என்றும் கோஷங்கள் தொடர்ந்து முழங்கிக் கொண்டே இருந்தன.
அவரது இறுதி விருப்பப்படி அவரது அஸ்தி சௌபாத்தி, தாதர் கடலில் கரைக்கப்பட்டது.
1965ஆம் ஆண்டு ஆர்கனைஸர் தீபாவளி இதழுக்காக அவரை ஶ்ரீதர் தேல்கர் என்பவர் ஒரு பேட்டி எடுத்தார்.
அதில் அவர் மிக விவரமாகத் தன் கருத்துக்களை எடுத்துரைத்தார்.
“சுதந்திரம் அடைந்தவுடன் நமது புரட்சி ஒரு முடிவுக்கு வந்து விட்டது. நமது நாடு அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டதைப் பார்க்க உயிரோடிருப்பதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். உலகு உள்ள வரை இந்த புராதனமான தேசம் – நமது உயரிய பாரதவர்ஷம் – – தனது அனைத்துப் புகழுடன் விளங்கும்.”
என்ற இந்தக் கருத்துடன் அவர் பேட்டியை முடித்திருந்தார்.
வாஜ்பாயி பிரதமரானவுடனும் மோடி பிரதமரானவுடனும் இவருக்கு உரிய மரியாதைகள் தரப்பட ஆரம்பித்தன.
இந்திய அரசு 1970இல் அவர் நினவாக ஒரு விசேஷ தபால்தலையை வெளியிட்டது.
2002 இல் அந்தமான் நிகோபார் விமானநிலையத்திற்கு வீர் சவர்கார் பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது.
2003இல் அவரது உருவப்படம் இந்திய பாராளுமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது.
அந்தமானில் செல்லுலர் ஜெயிலில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஹிந்து ராஷ்டிரத்திற்காகப் பாடுபட்ட வீர சவர்காரைப் பற்றிய சரித்திரத்தை ஒவ்வொரு ஹிந்து மகனும் அறிய வேண்டியது தலையாய கடமை அல்லவா?!
****
TAGS- சாவர்க்கர் , சவார்க்கர் , ஹிந்து ராஷ்ட்ரம், ஹிந்து மஹா சபை
புத்தக அறிமுகம் – 2
ஆலயம் அறிவோம்!
( இரண்டாம் பாகம்)
30 திருத்தலங்கள் யாத்திரை
ச.நாகராஜன்
பொருளடக்கம்
என்னுரை
அத்தியாயங்கள்
1) புதுவை மணக்குளத்து விநாயகர் ஆலயம்
2) சூரியனார் கோவில்
3) திங்களூர்
4) திருவெண்காடு
5) திருஇரும்பூளை என்னும் ஆலங்குடி
6) திருக்கஞ்சனூர்
7) திருநள்ளாறு
8) திருநாகேச்சரம்
9) ஸ்ரீ காளஹஸ்தி
10) ஸ்ரீ சைலம்
11) தஞ்சை பிரஹதீஸ்வரர்
12) சீர்காழி
13) திருவிடைமருதூர்
14) மயிலை கபாலீஸ்வரர்
15) திருவையாறு
16) சிருங்கேரி ஸ்ரீ சாரதா தேவி
17) கூத்தனூர் ஸ்ரீ சரஸ்வதி தேவி
18) திருநின்றவூர்
19) திருக்கருகாவூர்
20) ஆஜ்மீர் புஷ்கரில் மணிபந்த் சக்திபீடம்
21) கல்கத்தா காளி
22) திருப்பரங்குன்றம்
23) திருச்செந்தூர்
24) பழநி
25) திருத்தணி
26) குக்கி சுப்ரமண்யர்
27) திருமாலிருஞ்சோலை
28) ஸ்ரீரங்கபட்டிணம்
29) திருவள்ளூர்
30) அஞ்சனா பர்வதம்,
வாரந்தோறும் இனிமையாக இதை ஞானமயம் ஒளிபரப்பில் வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றவர் திருமதி ப்ரஹன்நாயகி சத்யநாராயணன் அவர்கள்.
திருமதி ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்
நூலில் என்னுரையாக நான் தந்திருப்பது இது:
என்னுரை
ஆலயம் தொழுவது சாலவும் நன்று!
கொன்றைவேந்தனில் உள்ள 91 பாக்களில் இரண்டாவது பாடலில் ஔவையார் தரும் அன்புரை இது!
உலகநாத பண்டிதர் இயற்றிய உலக நீதியில் அவர் தரும் அறிவுரை இது – ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’.
இன்னும் ஆலயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் பாடல்கள் தமிழில் ஏராளம்.
ஆலயம் அகவாழ்வு மற்றும் புறவாழ்வு ஆகியவற்றின் மையம். அதை வைத்தே நமது வாழ்க்கை சுழன்றது. சுழல்கிறது. சுழலப் போகிறது.
இந்திய நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள கோவில்களின் எண்ணிக்கை எண்ணுக்கு அடங்காதது.
இப்படிப்பட்ட கோவில்கள் இருக்கும் திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு தம் ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டு வாழ்ந்தனர் அறிவு சால் நம் பாரத மக்கள்.
கன்யாகுமரியிலிருந்து கைலாயம் வரை உள்ள கோவில்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு.
அன்பர்கள் குடும்பத்தோடும், சுற்றத்தோடும் தலம் தலமாக யாத்திரை மேற்கொண்டு அங்கு இருக்கும் சிறப்புகளை அறிந்து அவற்றை எங்கும் பரப்பி வந்தனர்; அருளாளர்கள் பல நூல்களின் வாயிலாக அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்தனர்.
இப்படிப்பட்ட ஆலயங்கள் பற்றிய சிறப்புகளைச் சொல்வதற்கான அரிய வாய்ப்பு லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியின் வாயிலாகக் கிடைத்தது.
நிகழ்ச்சியை இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் உள்ள அன்பர்கள் கேட்டனர்; பாராட்டினர்.
அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.
ஞானமயம் நிகழ்ச்சியை நடத்தும் திரு சுவாமிநாதன் அவர்களுக்கும் திரு கல்யாணசுந்தர சிவாச்சாரியார் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.
ஆலயம் அறிவோம் உரைகளை 2019 செப்டம்பர் இறுதியில் தொடங்கி தொய்வின்றி வாரந்தோறும் லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் இனிய குரலில் வழங்கியவர் திருமதி பிரஹன்நாயகி சத்யநாராயணன். அவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
Facebook.com/gnanamayam மற்றும் YOUTUBEஇல் ஆலயம் அறிவோம் தொடரை வாரந்தோறும் கேட் பல அன்பர்களும் இந்த உரைகளை அப்படியே நூல் வடிவாக வெளியிட வேண்டும் என்று கூறவே இந்த நூல் இப்போது வெளி வருகிறது.
முதல் பாகத்தில் 30 திருத்தலங்கள் பற்றிப் பார்த்தோம். இப்போது இந்த இரண்டாம் பாகத்தில் இன்னும் அடுத்த 30 தலங்களைப் பற்றிய வியத்தகும் செய்திகளைப் பார்க்கப் போகிறோம்.
இதை வெளியிட முன்வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!
வாருங்கள், திருத்தலங்களுக்குச் செல்வோம்..
சான்பிரான்ஸிஸ்கோ ச.நாகராஜன்
23-6-2022
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்.
***