Post No. 11,125
Date uploaded in London – – 20 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
இதன் முதல் பகுதி நேற்று வெளியானது
இலக்கணம் ஒரு கடல் – பகுதி 2
பாமஹர் மீண்டும் ஒரு கடல் உருவகத்தை நம் முன் வைக்கிறார்.
சாலாதுரீயரின் (பாணினியின்) இலக்கண விதிகளை யார் முழுவதும் சரியாக விளக்க முடியும் ?
ஆகையால் இதுபற்றி நான் மேலும் எதுவும் சொல்லப்போவதில்லை .
ஓருவர் இலக்கணக் கடலைக் கடந்து அடுத்த கரையை அடைவது அதிசயமே. அது கொந்தளிப்பு நிறைந்த கடல்.
இதோ அந்த ஸ்லோகம்
சாலாதுரீயமதமேதத் அநுக்ரமேன
கோ வக்ஷ்யதீதி விரதோஹம் அதோ விசாராத்
சப்தார்ணவஸ்ய யதி கஸ் சித் உபைதி பாரம்
பீமாம்பச ஸ்ச ஜலதெரிதி விஸ்மயோ செள ஹு
சப்த என்பதை பாமஹ இலக்கணத்துக்குப் பயன்படுத்துகிறார். சப்த சுத்தி என்னும் தலைப்பில் கடைசியாக வரும் ஸ்லோகம் இது . இலக்கணத்தைப் புகழ்வதோடு மஹா மேதாவியான பாணினியையும் புகழும் ஸ்லோகம் இது உலகிலேயே மெச்சத்தக்க கருத்து பாணினியுடையது ஒன்றுதான் என்று வேறு ஒரு இடத்தில் செப்புகிறார்.
ச்ரத்தேயம் மதம் ஹீ பாணினீயம்
Xxx
க்ஷேமேந்திரர் , ஹேமசந்திரர் ஆகியோரும் இவ்வாறே இலக்கணத்துக்கு முதலிடம் தருகின்றனர்.
ஹேமசந்திரர் எழுதிய ‘விவேக’ என்னும் உரையில் சொல்கிறார் —
“என்னிடம் இரண்டு எருதுகள்/ மாடுகள் இருக்கின்றன ; நாங்கள் தம்பதிகள்தான் எங்கள் வீட்டில் எப்போதும் செலவுக்குப் பஞ்சம் . ஆகையால் ஓ மனிதா ! வேலை செய்யத் துவங்கு ; அபோதுதான் நிறைய நெல்லுக்குச் சொந்தக்காரர் ஆகலாம்
இந்தக் கவிதை உண்மையில் ஆறுவகை சமாசங்களை நினைவிற் கொள்ள உதவும் வேடிக்கைக் கவிதை ஆகும் ; நாம் வானவில்லின் 7 நிறங்களை நினைவிற்கொள்ள விப்ஜியார் VIBGYOR என்ற ஆங்கிலச் சொல்லைப்ப பயன்படுத்துவது போல இது த்விகு , த்வந்த்வ , அவ்யயீ பாவ, தத் புருஷ, கர்மதாரய , பஹுவ் ரீஹீ என்னும் ஆறு சமாசங்களை நினைவில் வைத்துக்கொள்ள பயன்படும் .
இதோ அந்தக் கவிதை :
சப்தானுசாசனம் வ்யாகரணம் ததோ ஹி சப்த சுத்திஹி
தன்னைபுண்யம் யதா த்விகுரபி சத்வந்த்வோ
ஹம் க்ருஹே ச மே சததமவ்யயீபாவஹ
தத்புருஷ கர்மத்தாராய யே னாஹம் ஸ்யாம் பஹுவ் ரீஹி
ஒரு மொழியைக் கற்பதை எப்படி சுவையாக மாற்றி எல்லோரையும் தன பால் இழுக்கவைக்க முடியும் என்பதை சம்ஸ்க்ருத ஆசாரியர்களிடமிருந்து அறியவேண்டும்.
சமாசம் என்றால் என்ன ?
பகவத் கீதையில் கூட கிருஷ்ண பரமாத்மா இலக்கணம் பற்றிப் பேசுகிறார். விபூதி யோகத்தில் எழுத்துக்களில் நான் அகாரம் ; ஸமாஸங்களில் நான் த்வந்த்வ ஸமாஸம் — (பகவத் கீதை 10-33)
இதற்கு விளக்க உரை எழுதிய ராமகிருஷ்ண மடத்தின் ‘அண்ணா’ அவர்கள் எழுதுகிறார் —
சொற்களின் புணர்ச்சி ஸம்ஸ்கிருதத்தில் நான்கு வகை
அவ்யயீ – உதாரணம் – அதிஹரி
தத் புருஷ – உதாரணம் – ஸீதாபதி
பஹு வ்ரீஹி – உதாரணம் – பீதாம்பரஹ
த்வந்த்வ — உதாரணம் — ராம லக்ஷ்மணவ்
த்வந்த்வ ஸமாஸத்தில் புணரும் பதங்கள் இரண்டும் ஸமப்ரதானம் .
xxxxx
கவிஞராக விரும்பும் ஒருவர் என்ன என்ன பாடங்களை பயில வேண்டும் என்று வாமனரும் பகர்கிறார் :-
சப்த ஸ்ம்ருதி /இலக்கணம் , அபிதான/அகராதி, கோச /தொகை நூல், சந்தோவிசிதி / யாப்பு, கலா/ கலைகள், காமசாஸ்த்ர /இன்பநுகர்ச்சி நூல், தண்ட நீதி/அரசியல் . இந்தப் பட்டியல் வாமனரின் காவ்யாலங்கார சூத்ர விருத்தியில் வருகிறது. அவர் முதல் முதலில் இலக்கணத்தைக் குறிப்பிடுவது கருத்திற்கொள்ள வேண்டிய விஷயம்.
Xxx
ஆனந்த வர்த்தகர் எழுதிய த்வன்யாலோக உரை நூலிலும் இலக்கணம் புகழப்படுகிறது. அவர் சொல்கிறார் –
ப்ரதமே ஹி வித்வாம்ஸோ வையாகரணஹ வ்யாகரண மூலத்வாத் ஸர்வ வித்யானாம்
இதன் பொருள்
கற்றறிந்த அறிஞர்களில் முதலிடம் வகிப்பவர்கள், இலக்கணத்தைப் படைத்தவர்கள்தான்; ஏனென்றால் எல்லா விஷயங்களும் இலக்கணத்துக்குக் கடமைப்பட்டுள்ளன .
இன்னும் ஒரு இடத்தில் ஆனந்த வர்த்தனரின் வியாக்கியானம் சொல்கிறது–
சப்த ப்ரஹ்மனை எவரும் மாசுபடுத்த முடியாது அறிஞர்கள் இதை நன்கு உணர்ந்துள்ளனர்
Xxx
செய்யுட்களை இயற்றுவதற்கு ஒருவருக்கு என்ன என்ன தெரிய வேண்டும் என்று காவ்யா மீமாம்ஸா என்னும் நூலில் ராஜசேகரரும் சொல்கிறார் –
நாம தாது பாராயணே
“பெயர் சொற்களையும் வினைச் சொற்களையும் மனப்பாடம் செய்க”
மதுசூதன் மிஸ்ரா போன்ற வியாக்கியானக்காரர்கள் சித்தாந்த கெளமுதி என்னும் எளிய இலக்கண நூல்களைக் கற்பிப்பதைக் குறிப்பிடுகின்றனர்
Xxx
எனது அனுபவம் My Experience
இதை எழுதும்போது நாங்கள் (I and my younger brother) சிறு வயதில் சம்ஸ்க்ருதம் படித்தது நினைவுக்கு வருகிறது. மாலை வேளையில் , விருப்பப்படும் குழந்தைகளுக்கு மட்டும் ஸம்ஸ்க்ருதம் கற்பிக்க மதுரையில் மேலச் சித்திரை வீதியில், ஒரு ஆடிட்டர் வீட்டின் வறாண்டாவில், ஏற்பாடாகியிருந்தது. நாங்கள் அங்கே போய் அமர்வோம். ராமகிருஷ்ண சாஸ்திரிகள் என்னும் சம்ஸ்க்ருத ஆசிரியர் வந்தவுடன் எழுந்து நிற்போம். அவர் உட்காருங்கள் என்று சைகை செய்தவுடன் அமர்வோம். ‘ராம சப்த’த்தில் துவங்கி வரிசையாக சப்தங்களை சொல்லுவோம். பிறகு ராமோதந்தம் என்னும் எளிய ராமாயண செய்யுட்களை அவர் சொல்லச் சொல்லத் திரும்பிச் சொல்லுவோம். இறுதியில் அமர கோசம் என்னும் உலகப்புகழ் பெற்ற நிகண்டுவை உருப்போட வைப்பார் . பின்னர் காளிதாசரின் ரகு வம்சத்தில் பத்து ஸ்லோகம் வரை பதம் பிரித்து அர்த்தம் சொல்லுவார். இவைகளை எல்லாம் நோட்டுப் புஸ்தகத்தில் எழுதுவோம். ஒரு பாட புஸ்தகத்தில் (Text Book) சின்னச் சின்ன கதைகள் இருக்கும் அதைப் படித்து அர்த்தம் சொல்லுவார்.
இதில் கற்ற அமரகோசம் நிகண்டுவையும் சப்தங்கள் என்னும் இலக்கணத்தையும் நீண்ட காலம் மறக்கவில்லை. கிட்டத்தட்ட தாது பாடாவலியைக் கற்பிக்கும் போது அவ உடல் நிலை குன்றி வகுப்புகள் தடைப்பட்டன. நான் சம்ஸ்க்ருதம், பிரெஞ்சு , ஜெர்மன் எல்லா வகுப்புகளிலும் பிற்காலத்தில் சேர்ந்தேன் . தமிழையும் ஆங்கிலத்தையும் பள்ளி , கல்லூரிகளில் பயின்றேன். எந்த மொழி பாடத்திலும் ஸம்ஸ்க்ருதம்போல இலக்கணத்தையும் அகராதியையும் உருப்போட வைக்கவில்லை. உலகில் ஸம்ஸ்க்ருதம் கற்பிக்கும் முறைதான் சிறந்தது என்பது இப்போது புரிகிறது. ஆங்கிலம் கற்பிக்கச் செல்லும் சிறுவனுக்கு முதல் நாள் வகுப்பில் ஷேக்ஸ்பியரை மனப்பாடம் செய்யச் சொல்லுவதில்லை. ஆனால் முதல் நாள் சம்ஸ்க்ருத வகுப்பிலேயே உலகப் புகழ் பெற்ற ரகு வம்ச காவியத்தை ஒரு குறிப்பிட்ட ராகத்தில் சிறுவர்களை மனப்பாடம் செய்ய வைக்கின்றனர். தமிழ் கற்பிக்கப்போகும் மாணவனுக்கு தொல்காப்பியம், நன்னூல் என்பதெல்லாம் அரிதே தெரியும். ஆனால் ஸம்ஸ்ருத வகுப்பிலோ சப்த மஞ்சரி என்பதுதான் முதல் புஸ்தகம் . இதனால்தான் அத்தனை ஸம்ஸ்க்ருதக் கவிஞர்களும் இலக்கணத்தை முதல் பாடமாகப் புகழ்கின்றனர் போலும். வேத பாட சாலைகளில் வியாகரணம் / இலக்கணம் ஆறு துணைப்பாடங்களில் ஒன்று என்பதை முன்னரே குறிப்பிட்டேன்.. இது எல்லாம் 60 அல்லது 65 ஆண்டுகளுக்கு முன்னர் என் பள்ளிப்பருவத்தில் நடந்த நிகழ்ச்சிகள் .
ஒவ்வொரு விஷயமும் சுமார் 10 நிமிடங்கள்தான். முழு நூலும் அல்ல . நாளடைவில் 200, 300 வரிகள் மனப்பாடம் ஆகிவிடும் . முதலில் அவர் சொல்ல, நாங்கள் திரும்பிச் சொல்லுவோம். பின்னர் மனப்பாடம் ஆன பகுதிவரை எல்லா மாணவர்களும் ராகத்தோடு சொல்லுவோம். புதிய 10, 20 வரிகளை அவர் மாதம் தோறும் துவங்குவார். எனக்கு நினைவு தெரிந்தவரை எல்லா முக்கிய சப்தங்களையும் , 200 அமர கோச வரிகளையும் சொல்லி வந்தேன். பின்னர் 20 ஆண்டுகளுக்கு முன்னர், லண்டனில் நேஷனல் லாட்டரியிலிருந்து (National Lottery Funding) 5000 பவுண்டு உதவி நிதி பெற்று சம்ஸ்க்ருத வகுப்புகளை நடத்தினேன். பத்துப் பேர்தான் வந்தனர்!!! அதற்குப்பின்னர் லணடன் ஹென்டனில் உள்ள சின்மயா மிஷனில் சம்ஸ்க்ருதம் கற்றேன் . எல்லாம் ஒரு கட்டத்தில் தடைப்பட்டது. கடலில் நீந்தப் போனேன்; ஆனால் கடற்கரையை மட்டும் பார்த்துவிட்டு வியந்து போய் நிற்கிறேன். அது மஹா சமுத்திரம் என்பது உண்மையே. அதைச் சொன்ன பாமஹர் வாழ்க !!
XXXX
–சுபம்—
Tags- இலக்கணம், சமாசம் , ராஜ சேகரர், வாமனர், பாமஹர் , க்ஷேமேந்திரர் , பாணினி , ஹேம சந்திரர் , கவிதை , வியாகரணம்