மூன்று English திரைப்படங்கள் (Post No.11,149)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,149

Date uploaded in London – –    29 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மூன்று திரைப்படங்கள் 1) A TWELVE-YEAR NIGHT! 2) ARGO 3) A CALL TO SPY!

ச.நாகராஜன்

சமீபத்தில் சான்ஃபிரான்ஸிஸ்கோ வந்ததால் எனக்கு திரைப்படம் பார்க்க ஓய்வு நேரம் சற்று கிடைத்திருக்கிறது.

அதில் மூன்று நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

மூன்றும் உண்மைச் சம்பவங்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட படங்கள்.

முதல் படம் A TWELVE-YEAR NIGHT.

2018ஆம் ஆண்டு வெளியான படம் இது. கெய்ரோ 40வது பன்னாட்டு திரைப்பட விழாவில் கோல்டன் பிரமிட் விருதைப் பெற்றா படம் இது. இதன் இயக்குநர் ஆல்வாரோ ப்ரெஸ்னர்.

1973ஆம் ஆண்டு சர்வாதிகார ராணுவ ஆட்சியின் பிடியில் உருகுவே அகப்பட்டது. இடதுசாரி டுபாமாரோஸ் குழு அதை எதிர்த்தது.

இந்தப் புரட்சியில் டுபாமாரோஸில் முக்கியமாக விளங்கிய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு 12 வருடங்கள் சிறையில் வாடினர்.

ஜோஸ் பெபே முஜிகா, மௌரிசியோ ரோஸன்காஃப் மற்றும் எலுடெரியோ ஃபெர்னாண்டஸ் ஹுய்டோப்ரோ ஆகிய மூவர் எப்படி இந்த சிறைவாசக் கொடுமைகளைத் தாங்கினர் என்பதைப் படம் சித்தரிக்கிறது.

சிறை அதிகாரிக்கு ரோஸன்காஃப் காதல் கடிதம் எழுதிக் கொடுப்பது, சிறையில் சுவரைத் தட்டித் தட்டி ஒரு கோட் லாங்வேஜ் மூலமாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது போன்ற சுவாரசியமான காட்சிகள் உள்ளன.

12 ஆண்டு கால சிறைவாசம். வெவ்வேறு இடங்களுக்கு இவர்கள் மாற்றப்பட்டனர்; மிகக் கொடூரமாக நடத்தப்பட்டனர்.

அதைச் சித்தரிக்கிறது இந்தப் படம்.

ராணுவம் அவர்களைக் கொல்ல முடியவில்லை – சர்வதேச நாடுகளின் அழுத்தத்தினால்.

பெபேயின் தாயார் அவரது நிலையைக் கண்டு அதிர்ந்து போனது உள்ளத்தை உருக வைக்கும்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில் பின்னால், பெபே முஜிகா, உருகுவேயின் 40வது ஜனாதிபதியாக ஆனார என்பது தான். 2010 முதல் 2015 வரை அவர் இந்தப் பதவியை வகித்தார்.

ஒரு 12 வருட சிறைவாசத்தை சுவாரசியமாகக் காட்ட முடியும் என்பதற்கு இந்த 122 நிமிட நேரம் ஓடும் இந்த ஸ்பானிஷ் படம் ஒரு எடுத்துக்காட்டு.

2) ARGO

ஆர்கோ 2012ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கப் படம்.

பென் ஆஃலெக்கால் தயாரிக்கப்பட்ட இந்த படம் அமெரிக்க சி ஐ ஏயின் (ஏஜண்ட்) டெக்னிகல் ஆபரேஷன் மானேஜரான டோனி மெண்டஸ் எப்படி இரானில் சிக்கிய ஆறு அமெரிக்க தூதரக அதிகாரிகளை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தார் என்பதைச் சித்தரிக்கிறது.

1979ஆம் வருடம் நவம்பர் 4ஆம் தேதி ஈரானிய இஸ்லாமியர்கள் டெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தைத் தாக்கினர்.  அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டர் ஈரானிய ஷாவிற்கு கான்ஸர் நோய்க்கு சிகிச்சை அளிக்க அவருக்கு அமெரிக்காவில் புகலிடம் தந்ததை எதிர்த்து இந்த தாக்குதல் நடந்தது.

66 பேர் தூதரகத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டனர். அதில் தப்பிய ஆறு பேர்களைப் பற்றிய கதை தான் இது. அவர்கள் கனடிய தூதரான கென் டெய்லர் வீடில் பத்திரமாக ஒளித்து வைக்கப்பட்டனர்.

கனடிய அரசு அமெரிக்க அரசுடன் எப்படி மிகவும் ஒத்துழைப்புக் கொடுத்து அவர்களை மீட்க உதவுகிறது என்பதை திரைப்படம் நன்கு சித்தரிக்கிறது.

வெறி பிடித்த ஈரானிய கும்பல் கத்தியால் வெட்டிக் கொலை செய்ய வேண்டும் என்ற வெறியுடன் அவர்களைத் தேடுகிறது. அவர்களை பத்திரமாக தனி ஆளாக டோனி மீட்கிறார்.

கனடாவைச் சேர்ந்த ஒரு திரைப்படக் குழுவினர் போல ஒரு போலிக்குழு அமைக்கப்பட்டு அவர்கள் ஈரானில் படம் எடுக்க அனுமதி பெறுகின்றனர். இதற்காக போலியாக ஆனால் நிஜம் போல இருக்கும் திரைக்கதை தயாரிக்கப்படுகிறது. காமராமேன், நடிகர்கள், இயக்குநர் உள்ளிட்ட குழு அவர்களைப் பற்றிய பிரசுரங்கள், அவர்கள் தங்கி இருக்கும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் மிகக் கவனமாகத் தயாரிக்கப்படுகிறது.

ஈரானில் இந்த விவரங்கள் எல்லாம் சரி பார்க்கப்படும் போதெல்லாம் படம் பார்ப்பவர்கள் அந்தக் காட்சிகளை ஆவலுடன் பார்ப்பது நிச்சயம்.

ஒரு வழியாக விமானத்தில் ஏறி ஈரானிய எல்லையைக் கடந்த பின்னர் விமானத்திலேயே அவர்கள் அடையும் மகிழ்ச்சி…..!

1999இல் வெளியான ஒரு புத்தகமே திரைக்கதைக்கு அடிப்படை. சில காட்சிகள் திரைப்பட விறுவிறுப்பிற்காக உண்மையிலிருந்து சற்று மாறுபட்டிருப்பதாக சில விமரிசகர்கள் கருதினாலும் படம் நல்ல வெற்றியை அடைந்தது.

ஆஸ்கார் விருது பெற்ற இந்தப் படத்தின் கதாநாயகனான டோனி மெண்டஸ் 19-1-2019இல் மரணமடைந்தார்.

3. A CALL TO SPY

இரண்டாவது உலக மகாயுத்தத்தில் ஹிட்லர் மின்னல் வேகத் தாக்குதலில் பல நாடுகளைக் கைப்பற்றினான்.

அவன் கைப்பற்றிய இடங்களிலெல்லாம் இருந்த யூதர்கள் பல  கொடுமைகளுக்கு உள்ளாயினர்.

கெடுபிடியான நாஜி ராணுவம் எல்லையில்லா வெறித் தனத்துடன் ஆட்டம் போட்டது.

அந்தக் காலத்தில் அமெரிக்க உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ., உளவு பார்க்க பெண் உளவாளிகளைத் தேட ஆரம்பித்தது.

அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது, அவர்களைத் தங்களுக்குத் தேவையான இடங்களில் சேர்ப்பது, வயர்லெஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட செய்திகளை கோட் லாங்வேஸ் மூலம் பெறுவது உள்ளிட்டவற்றை சிஐஏ அதிகாரிகள் செய்கின்றனர்.

இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட உண்மைக் கதை தான் ‘எ கால் டு ஸ்பை’.

124 நிமிடம் ஓடும் இந்த அமெரிக்கப்படம் 2019இல் வெளி வந்தது.

சாரா மெகன் தாமஸால் தயாரிக்கப்பட்டது. இயக்குநர் : லிடியா டீன் பிட்சர்.

மூன்று பெண்மணிகள் பிரான்ஸ் நாட்டில் எப்படிப்பட்ட சாகஸ வேலைகளில் ஈடுபட்டனர் என்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. இதில் ஒரு பெண்மணிக்கு ஒரு கால் தான்! இன்னொரு கால் செயற்கைக் கால்!

வயர்லெஸ் ஆபரேடரான நூர் (இந்திய நடிகை ராதிகா ஆப்தே இந்தப் பாத்திரத்தில் நடிக்கிறார்) என்ற ஓரு இளம் பெண் தன் உயிரையே தியாகம் செய்கிறார். ஜெர்மானிய ராணுவத்தினரால் அவர் சுடப்படும் காட்சி நம்மை உருக வைக்கிறது.

செயற்கைக் காலுடன் உள்ள வர்ஜினியா ஹால் பனி மலைகள் மற்றும் காடுகள் வழியே தப்பி அமெரிக்கா மீள்கிறார். சி ஐ ஏ யின் ஏஜண்டுகளின் குழுவில் முதல் பெண்மணியாக அவர் பின்னால் ஆகிறார்.

ஸ்பை த்ரில்லர் வரிசையில் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

 உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாரிக்கும் திரைப்படங்களை ரசிகர்கள் எப்போதுமே வரவேற்கின்றனர்.

வரலாறு சம்பந்தமாக அது புகட்டும் பாடங்களை அறிய இந்தத் திரைப்படங்கள் பெரிதும் உதவுகின்றன.

அந்த வகையில் கதை, தயாரிப்பு, வசனம், நடிப்பு, கேமரா, அளிக்கப்பட்ட விதம் ஆகியவற்றால் சிறந்து விளங்கின்றன.

இந்த மூன்று வெற்றிப் படங்களை யார் வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம்.

***

புத்தக அறிமுகம் – 12

சம்ஸ்கிருதச் செல்வம்

பொருளடக்கம்

முன்னுரை

என்னுரை

சிவனுக்கு இணை இல்லை!

யார் மிக மிகக் கீழானவன்?

நல்லவர்களை யாருடன்தான் ஒப்பிடுவது?

பணக்காரனுக்கும் கவலை! யாசகனுக்கும் கவலை!!

புலவரின் வேதனை – சிவன் இப்படிச் செய்யாமல் விட்டு விட்டானே!

சிதையும் சிந்தையும்!

தாயர், தந்தையர் யார் யார்?

மூர்க்கனை எப்படிக் கண்டுபிடிப்பது?

கவிஞருக்குத் துன்பம் தரும் ஏழு விஷயங்கள்!

அனைத்தும் பெற ஆறு கேள்விகள்!

காக்க காக்க ரகசியம் காக்க!

மண் தின்ற வாயைக் காட்டிய மாயக் கண்ணன்!

வீணான அக்ஷரமோ வேரோ கிடையாது! வீணான மனிதனும் இல்லை!

சரஸ்வதி இருக்குமிடத்தில் லக்ஷ்மி ஏன் வருவதில்லை! ரகசியம் இதோ!

எந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது?

கருமமே கண்ணாயினார்!

முன்னேறுவதற்கு உள்ள ஆறு தடைகள்!

தீரர்கள் நியாயமான வழியை விட்டு ஒரு அடி கூடப் பிறழ மாட்டார்கள்!

யமராஜனின் சகோதரரான வைத்யராஜரே! நமஸ்காரம்!!

தன்னையே அழிக்கும் கோபம்!

யாருக்கு எது அலங்காரம்?

பணமும் படிப்பும்

கண்ணனின் பக்தி அறம், பொருள், இன்பம், முக்தி தரும்!

சூரியோதயம், சூரியாஸ்தமனம் கண்டு உத்வேகம் பெறலாம்!

அறிவு வளரும் விதம்!

ஐந்து பெயர்களின் பெயரைக் கூறாதே! ஐந்து விதமாகப் பேசாதே!!

ஐந்து ‘ஜ’ காரமும் ஐந்து ‘வ’ காரமும்!!

ஐந்து ‘ல’ கர மனைவியும் பெண்ணைப் பாதுகாக்கும் பொறுப்பும்!

மனைவிகளின் பெருமையும், லேக தோஷமும்!

பசுவும் பாம்பும்!

எதற்கு எது அழகு?

அஹிம்சையே பரம தர்மம்!

ஸ்லோக முதற்குறிப்பு விவரணம்

சுபாஷித நூல்கள்

முன்னுரை

தமிழும் சம்ஸ்கிருதமும் பாரத நாட்டின் இரண்டு கண்கள்.

இவைகளில், பழமை, புதுமை, பெருமை, அருமை ஆகிய நான்கு குணங்களைப் பெற்றது சம்ஸ்கிருத மொழி. அந்த மொழியின் ஆழமான கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ள உதவுவது சுபாஷிதங்கள் எனப்படும் பழமொழி அல்லது பொன்மொழிகள். பலாப் பழத்தையோ ஆரஞ்சுப் பழத்தையோ ஒருவர் தனித் தனி சுளைகளாகக் கொடுக்கும்போது நாம் உடனே கையில் வாங்கி வாயில் போடுகிறோம். சம்ஸ்கிருத செல்வம் என்ற தொடரில் வந்த கட்டுரைகள் இத்தகைய பழச் சுளைகள். அதை நாகராஜன் அவர்களின் எழுத்து வடிவில் காணும் போது கொஞ்சம் சர்க்கரையும் தோய்த்துச் சாப்பிட்டது போல் இருக்கிறது. கூடுதல் இனிப்பு! ஆயினும் திகட்டாமல் மேலும் மேலும் சுவைக்கத் தோன்றுகிறது.

பழமை

உலகில் இப்போது பயன்படுத்தப்படும் மொழிகளில் எந்த மொழியையும் விட மிகப் பழமையான சான்று கிடைத்த மொழி சம்ஸ்கிருதம். துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் பொகாஸ்கோய் பகுதியில் கிடைத்த சம்ஸ்கிருதக் கல்வெட்டில் (கி.மு 1400) வேதகால தெய்வங்களான மித்ரன், வருணன் முதலியோரைக் காண்கிறோம். அதற்குப் பின் மிட்டனி வம்ச அரசர்களின் (கி.மு.1300) பெயர்களில் தசரதன், பிரதர்தனன் முதலிய பெயர்களைப் படிக்கிறோம். எகிப்தில் உள்ள அமர்னா கடிதங்களில் தசரதன் எழுதிய உருக்கமான கடிதங்களைக் காண்கிறோம். 3000 ஆண்டுகளுக்கு முன் கிக்குலி எழுதிய அஸ்வ (குதிரை சாத்திரத்தில் சம்ஸ்கிருதத்தில் 1,2,3,4 முதலிய எண்களைப் பார்க்கிறோம். இவ்வளவு பழமை வேறு எந்த இந்திய மொழிக்கும் இல்லை.

அருமை

சம்ஸ்கிருதத்தில் இல்லாத விஷயங்கள் இல்லை. இயல் இசை நாடகம் ஆகியவற்றோடு அறிவியல், தர்க்கவியல், உளவியல், மானுடவியல் கதைகள் முதலிய எல்லா இயல்களுக்கும் நூல்கள் கிடைக்கின்றன. இவைகள் எல்லாம் நாளந்தா, தட்சசீலப் பல்கலைக்கழகங்கள் தீக்கிரையாக்கப்பட்ட பின்னரும் எஞ்சிய நூல்கள்! இப்போதுள்ள பழைய நூல்களின் பட்டியலை மட்டும் வெளியிட்டாலேயே அது பல நூறு தொகுதிகளாக வெளியாகும். கி.மு 800-ல் கிரேக்க நாட்டில் ஹோமர் என்ற கவிஞன் இலியட், ஆடிசி காவியங்களை எழுதுவதற்கு முன்னரே வேத சம்ஹிதைகள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷத்துகள் என பிரம்மாண்டமான இலக்கியத் தொகுதிகளை உருவாக்கிவிட்டனர் சம்ஸ்கிருதம் பேசிய ரிஷி, முனிவர்கள்.

பெருமை

“வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே” என்றும் “பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே, பார்மிசை ஏதொரு நூல் இது போலே” என்றும் சொற்தேரின் சாரதியாம் பாரதியால் போற்றப்பட்ட பெருமைமிகு நூல்கள் உடையது சம்ஸ்கிருதம்..காலத்தால் அழியாத ராமாயண, மஹாபாரதம் உடையது இம்மொழி. நாலு லட்சம் புராண ஸ்லோகங்களில் உள்ள கருத்துகள் மனித சமுதாயம் எல்லாவற்றுக்கும் பயன்படும். நாட்டியம் என்றால் பரதம், வைத்தியம் என்றால் சரக சம்ஹிதை, சோதிடம் என்றால் ப்ருஹத்ஜாதகம், வான சாத்திரம் என்றால் ஆர்யபட்டீயம், யோகம் என்றால் பதஞ்சலி, தத்துவம் என்றால் சங்கரன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

புதுமை

உலகோர் வியக்கும் பாணினியின் இலக்கண நூல் உடைத்தது இம்மொழி. கம்ப்யூட்ருக்குள்ளும் எளிதில் பயன்படுத்தப்படும் வகையில் செம்மை செய்யப்பட்ட செம்மொழி. பாரதியும் வியக்கிறான்:

கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்து அளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்
நம்பருந்திறலோடு ஒரு பாணினி
ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு
உண்மையின்
இயல்புணர்த்திய சங்கரன்
ஏற்றமும்

என்று பாடி ஆனந்தம் அடைகிறான். நமக்கு சம்ஸ்கிருத அறிஞர்களின் பட்டியலையும் தருகிறான்! சம்ஸ்கிருதத்தில் உள்ள விடுகதைகள், புதிர்கள் எல்லாம் ஒரு தனி இலக்கியக் களஞ்சியம். அதைப் பற்றி எழுதி மாளாது. முதலில் கையில் கிடைத்த காசா லட்டைச் சாப்பிடுவோம். மேலும் பல தொகுதிகள் வெளிவர வாழ்த்துவோம்.

16-12-2021
ச.சுவாமிநாதன்
லண்டன்

*

*

புத்தகத்தில் நான் தந்த என்னுரையில் ஒரு பகுதி இது:

என்னுரை

சம்ஸ்கிருத இலக்கியம் ஒரு பெரும் கடல். பெரும் பாண்டித்யம் இல்லாமல் அதில் நான் புகுந்து சம்ஸ்கிருத செல்வத்தைப் பகிர்ந்து கொள்வது கம்பனுடைய சொற்களால் ‘ஆசை பற்றி அறையலுற்ற’ கதை தான். .

சுபாஷிதங்களின் சிறப்பைக் கண்டு ஆயிரக்கணக்கில் அவற்றைச் சேர்க்கும் பாக்கியம் கிடைத்தது. அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து அளிக்கிறேன்.

இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய எனது சகோதரர் திரு ச. சுவாமிநாதனுக்கு எனது நன்றி. இன்று இழுத்த இழுப்புக்கெல்லாம் போகும் ஒரே துறை இண்டாலஜி தான். மனதிற்குத் தோன்றியவற்றை எல்லாம் மேலை நாட்டு அறிஞர்களும், தங்களை ஸ்வயமாக “செகுலரிஸ்ட் அறிஞர்கள்” என்று கூறிக் கொள்வோரும் இதில் இதுவரை ஏற்படுத்திய சேதத்திற்கு உலகின் வேறு எந்த சேதத்தையும் இணையாகக் கூற முடியாது. அப்படிப்பட்ட துறையில் அத்திப் பூ போல அபூர்வமான நுட்பமான தனது அறிவாலும் ஆழ்ந்த ஆராய்ச்சிப் புலமையாலும் லண்டன் சுவாமிநாதன் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அர்த்தமுள்ள ஆராய்ச்சிக்கட்டுரைகளை இண்டாலஜியில் எழுதி வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒரு புதையல். அவர் இந்த நூலுக்கு தக்க ஒரு முன்னுரை வழங்கியுள்ளார். மீண்டும் அவருக்கு என் நன்றி.

சம்ஸ்கிருதத்தில் ஆர்வம் கொண்டு நூற்றுக்கணக்கான நல்ல நூல்களை இனம் கண்டு தரவிறக்கம் செய்து எனக்குத் தந்து கொண்டிருக்கும் எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்ரிநாதன் அவர்களுக்கும் எனது நன்றியை இங்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இது ஒரு முதல் முயற்சியே. அடுத்து பல பாகங்களில் இன்னும் அரிய சம்ஸ்கிருதச் செல்வத்தை வழங்க இறைவனின் அருளை வேண்டுகிறேன்.

.

16-12-2021
மின்னஞ்சல் முகவரி
snagarajans@yahoo.com
ச.நாகராஜன்
பங்களூரு.

*.

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: