Post No. 11,151
Date uploaded in London – – 30 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ராக்கெட்ரி: மாதவனின் அருமையான படம்
ச.நாகராஜன்
25-7-2022 சான்பிரான்ஸிஸ்கோவில் ஆன் லைனில் பார்க்க முடிந்த படம் ராக்கெட்ரி!
Rocketry the Nambi effect!
R. மாதவனின் அருமையான படம் என்று ஒரு வரியில் சொல்லி விட்டால் இந்தப் படத்திற்கு நியாயமான ஒரு விமரிசனத்தை வழங்கியதாக ஆகாது.
இதை எடுக்க எவ்வளவு உழைப்பு, கஷ்டம், உற்சாகம், பணம், ஏராளமானோரின் ஒத்துழைப்பு, அநீதி இழைக்கப்பட்டவருக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டுமென்ற துடிப்பு – எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளார்ந்த, எதையும் எதிர்பார்க்காத தேச பக்தி இருக்க வேண்டும்!
அந்த வகையில் அரிய சாதனையைச் செய்து வெற்றி பெற்றிருக்கும் R. மாதவன் பாராட்டப்பட வேண்டியவர்.
அவர் திரைத்துறையில் செய்த சாதனைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல விளங்கும் இந்தப் படம் அவரது வாழ்க்கை ஏணியில் அவர் உயர ஏறி நிற்கும் சிகரம் என்றும் கூடச் சொல்லலாம்.
நம்பி நாராயணன்!?
யார் இவர்?
1994களில் இஸ்ரோ எனப்படும் நமது இந்திய விண்வெளி ஆய்வு மையம் பிஎஸ் எல் வி ராக்கெட்டைச் செய்ய மிக்க முனைப்புடன் ஈடுபட்டிருந்தது.
அப்போது அதற்கு க்ரையோஜெனிக் எஞ்ஜினின் தொழில் நுட்பம் தேவையாக இருந்தது.
அதை உருவாக்க வெறியுடனும் துடிப்புடனும் நமது இளம் விஞ்ஞானிகள் செயலாற்றி வந்தனர்.
அவர்களுள் முக்கியமான ஒருவர் நம்பி நாராயணன்.
இறை பக்தி, தேச பக்தி இரண்டும் கொண்ட இவருக்கு ஒரு வாழ் நாள் சோதனை வந்தது.
அவர் ராக்கெட் தொழில்நுட்பத்தை பாகிஸ்தானிற்கு விற்க முயன்று பணம் பெற்றதாக ஒரு அபாயகரமான குற்றச் சாட்டு. மாலத்தீவு உளவுப்பிரிவைச் சேர்ந்த மரியம் ரஷீதா, பவுசியா உசேன் மூலமாக இந்தச் செயலை அவர் செய்ததாக வழக்கு.
அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டு அடிக்கப்பட்டார்; சித்திரவதை செய்யப்பட்டார். 50 நாட்கள் சிறைவாசம்!
இந்தச் செய்தியை அளவுக்கு அதிகமாக ஆச்சரியமூட்டும் விதத்தில் ஊடகங்கள் ஊதி ஊதிப் பரப்பின.
அவரது வீட்டில் கல் எறியப்பட்டது.
அவரது மீனா என்ற மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் அவமானத்திற்கு உள்ளாயினர்; பழிச்சொல்லுக்கு ஆளாயினர்.
அவர் இந்த அபாண்ட குற்றச்சாட்டை த்னி ஒரு ஆளாகத் தனித்து எதிர்த்து நின்றார்.
குற்றச்சாட்டு சொல்லப்படும் ஜனவரி 24ஆம் தேதி, தான் சொல்லப்படும் இடத்தில் இல்லவே இல்லை என்று ஆதாரத்துடன் நிரூபித்தார்.
ஆனால் மரியம் ரஷீதாவே அவர் முன்னால் விசாரணையின் போது தன்னை இப்படி செய்யச் சொல்லி நிர்பந்திப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு போலியானது, திட்டமிட்ட சதியால் உருவாக்கப்பட்டது என்பதை நிரூபித்த அவருக்கு 2012இல் கேரள அரசாங்கம் கேரள உயர்நீதி மன்ற உத்தரவின் படி பத்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாகத் தந்தது.
2018இல் ஐம்பது லட்ச ரூபாய் அவரை மனதளவில் கொடுமைப்படுத்தியதற்காக நஷ்ட ஈடாகத் தரப்பட்டது.
1998இல் அவரை நிரபராதி என்று அறுதியிட்டுத் தீர்ப்பு வழங்கியது சுப்ரீம் கோர்ட்.
அவருக்கு 1.3 கோடி ரூபாய் தரவேண்டும் என்று ஆணையிடவே அதுவும் தரப்பட்டது.
2021இல் ஒரு விசேஷ கமிட்டி, அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்று கூறவே கேரள போலீஸின் 18 அதிகாரிகள் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டிருக்கிறது.
1969இல் பிரின்ஸ்டனில் கல்வி பயின்ற இளம் வயது நம்பி நாராயணன், தனது சாமர்த்தியத்தால் வெவ்வேறு விதமாக பல்வேறு தொழில் நுட்பங்களைப் பெற்ற விதம் படத்தில் நன்கு சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
விக்ரம் சாராபாய் அவரை எப்படி நன்கு மதித்தார், திடீரென்று உயிரிழந்த அவரது இழப்பால் நம்பி நாராயணன் எப்படி துயருற்றார் என்பதெல்லாம் வரலாறு.
விண்வெளியிலும் மண்ணகத்திலும் விக்ரம் சாராபாய் என்றும் புகழுடன் விளங்கும் படி தான் உருவாக்கிய எஞ்சினுக்கு விகாஸ் என்ற பெயரை (அவரது பெயரிலிருந்து எடுக்கப்பட்ட எழுத்துக்களால் அமைக்கப்பட்ட, பொருள் பொதிந்த பெயர்) நம்பி சூட்டுகிறார்!
12-12-1941இல் பிறந்த நம்பி நாராயணனுக்கு இப்போது வயது 81.
மாதவன் அவரிடம் பல நாட்கள் அமர்ந்து பேசி திரைக்கதையை நன்கு அமைத்திருக்கிறார்.
தமிழில் சூர்யா, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் சாருக் கான் ஆகியோர் நம்பி நாராயணனை ஒரு பேட்டி காண்பதாகப் படம் ஆரம்பிக்கிறது.
அதில் அவரது வரலாறு சொல்லப்படுகிறது.
சிம்ரன் அவரது மனைவியாக நடிக்கிறார். தமிழில் விக்ரம் சாராபாயாக ரவி ராகவேந்திரா நடிக்கிறார்.
அளவான வசனம்; அற்புதமான காட்சிகள்!
முதலில் உடல் எடை கூடிய படி முதிர் வயது நம்பி நாராயணனாக மாதவன் நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டன.
பின்னர் இளம் வயது அட்டகாச நம்பி நாராயணனாக மாதவன் நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டன.
படத்தின் இறுதிக் காட்சியில் நிஜ நம்பி நாராயணனே காட்சி தருகிறார்.
உள்ளத்தை நெகிழ வைக்கும் காட்சிகள்!
எந்த ஒரு தேசபக்தருக்கும் வரக்கூடாத பழி – தேசத் துரோகக் குற்றம் – அவர் மீது என்கின்ற போது உள்ளம் வேதனைப்படுகிறது!
அவருக்கு மோடி அரசால், 2019ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
படம் உலகெங்கும் உற்சாகமாக வரவேற்கப்பட்டிருப்பது ஒரு நல்ல செய்தி!
மாதவனுக்குள் இவ்வளவு திறமை இருக்கிறது என்பதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது!
ஒவ்வொரு காட்சியைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். நீங்களும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமல்லவா!
ஆகவே இத்தோடு நிறுத்துவதே சரி.
படத்தை குடும்பம், நண்பர்கள் சூழப் பார்த்து விடுங்கள்!
***
புத்தக அறிமுகம் – 13
பகவான் ரமணரின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்
பொருளடக்கம்
3. அனைவருக்கும் சமமான ரமணரின் கருணை மழை!
4. ரமண பக்தை மா பிரோஜா தலயார்கானைக் காத்த நாகம்!
5. ரமண தரிசனத்தின் போது கண்களில் நீர் வருவது ஏன்?
6. பூவைக் கிள்ளுவதற்குப் பதில் உன் தோலைக் கிள்ளேன்!
7. பகவான் ரமணர் முன்னுரை மாற்றிய ஒரே ஒரு வார்த்தை!
9. பகவான் ரமணரின் வாழ்வில் நகைச்சுவை!
10. சிலையை வைத்து வழிபடலாமா – இஸ்லாமியரின் கேள்வி – ரமண மஹரிஷியின் பதில்!
11. நிழலைக் குழியில் புதைக்க முயன்ற கதை போல!
12. பகவான் ரமண மஹரிஷி வாழ்வில் அற்புத சம்பவங்கள்!
14. பெர்த் கண்ட்ரோலும் டெத் கண்ட்ரோலும்! ரமணரின் அறிவுரை!
16. ரமண மஹரிஷி பற்றி அரவிந்தர்!
17. காந்திஜி ஆசிரமத்திலும் ரமணாஸ்ரமத்திலும் திருட வந்தவர்கள்!
18. சனத்குமாரர், சாக்ரடீஸ், பகவான் ரமணர்!
19. பகவான் ரமணரின் வாழ்க்கை : சில முக்கிய குறிப்புகள்!
*
புத்தகத்தில் நான் தந்த என்னுரை இது:
என்னுரை
இந்தக் கலியுகத்தில் மஹரிஷி எவர் ஒருவரையேனும் காட்ட முடியுமா, அவர் வாக்கும் நடை உடை பாவனையும் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா என்று யாரேனும் கேட்டால் அண்மைக் காலத்தில் பகவான் ரமண மஹரிஷியை அனைவரும் சுட்டிக் காட்டினர்.
அப்படி ஒரு அற்புத வாழ்க்கை அவருடையது.
அவரது வாழ்க்கை நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவரது அணுக்க சீடர்களாக அமைந்தோர் பலர் அன்றாடக் குறிப்புகளை எழுதி பெறுதற்கு அரிய ஆன்மீக பொக்கிஷத்தை சந்ததியினருக்கு அளித்துள்ளனர். அவர்களுக்கு நமது நன்றி.
இந்த ஆவணங்கள் அனைத்தும் பல்வேறு புத்தகங்களாக திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் வாயிலாக அழகுற வெளியிடப்பட்டுள்ளன.
பகவான் ரமணர் எளிய உபதேசம் ஒன்றை உலகுக்கு அருளினார்.
‘நான் யார்’ என்ற ஆத்ம விசாரத்தை மேற்கொள் என்பது தான் அது!
அவர் பால் பெரும் மதிப்பும் பக்தியும் கொண்டு அவரது உபதேச உரைகளைக் கேட்டுப் பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவிலும் பல வெளிநாடுகளிலும் பயனடைந்துள்ளனர்.
அவரது வாழ்க்கையில் நடந்துள்ள சுவையான சம்பவங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை அவ்வப்பொழுது பத்திரிகைகளிலும் இணையதளத்திலும் கட்டுரைகளாக எழுதி வந்தேன். அவற்றின் தொகுப்பே இது.
இந்த நூலை அழகுற மின் நூலாக வெளியிட முன் வந்த ‘Pustaka Digital Media’ உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரமணர் காட்டிய பாதையில் நடப்போம்! உயர்வோம்!!
நன்றி
26-12-2021
ச.நாகராஜன்
பங்களூர்
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852