கோலாகல கோலாலம்பூர்! (Book Post.11,154)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,154

Date uploaded in London – –    31 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

26-7-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

கோலாகல கோலாலம்பூர்!

ச.நாகராஜன்

குதூகலம் தரும் கோலாலம்பூர்

தென் கிழக்கு ஆசியாவில் உள்ள மலேசியாவில் உள்ள கோலாகலமான கோலாலம்பூரை அறியாதவர் இருக்க முடியாது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளான பழமை வரலாற்றைக் கொண்ட மலேயாவுடனான இந்திய நாட்டின் பண்பாடு மற்றும் வர்த்தக வரலாறும் மிகப் பழமையானது.

மலாயா என்பது ஹிமாலயா என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்பது தொடங்கி மலாயா என்றால் மலைகள் அடங்கிய பிரதேசம் என்பது வரை பல்வேறு காரணங்கள் இதனுடைய பெயர்க் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

127,724 சதுரை மைல் பரப்பளவுள்ள மலேசியாவின் இன்றைய ஜனத்தொகை மூன்று கோடியே 28 லட்சம். சராசரி உஷ்ணநிலை 27 டிகிரி செல்ஸியஸ்.

பிரிட்டிஷாரின் பிடியில் காலனியாக இருந்த மலாயா 1957 ஆகஸ்ட் 31ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. வட போர்னியோ, சராவக், சிங்கப்பூர் ஆகிய மூன்று காலனிகளாக அமைந்திருந்த இது 1963 செப்டம்பர் 16ஆம் தேதி மலேசியாவாக தனி நாடாக ஆனது.

மலேசியா என்றவுடன் பத்துமலை  முருகன் கோவில் தான் நமது நினைவுக்கு முதலில் வரும் இடம். குன்று தோறும் ஆடி வரும் குமர வடிவேலனைத் தரிசித்து அதிலிருந்து மலேசியா டூரைத் தொடங்குவதே முறை.

பத்துமலை முருகன் கோவில்

மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் பத்துமலை முருகன் கோவில் அமைந்துள்ளது.

அது அமைக்கப்பட்ட காலத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைந்துள்ள மலை என்ற புகழைப் பெற்றது. 140 அடி உயரமுள்ள தெய்வீக முருகன் பல்லாயிரக்கணக்கான மக்களை தன்னிடம் ஈர்த்து அருள் பாலித்தார்; அருள் பாலித்து வருகிறார். (இப்போது சமீபத்தில் சேலம் ஆத்துரை அடுத்த புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள முருகன் 146 அடி உயரமுள்ள முருகனாக அமைந்து உலகிலேயே உயரமானவராக ஆகிறார்.)

இங்குள்ள குகைக் கோவிலின் உள்ளே பல குகைகள் உள்ளன.

அருகிலே பத்து ஆறு ஓடுகிறது. அதன் அடிப்படையில் பத்து மலை முருகன் என்ற சொல் தோன்றியது.

நாகப்பட்டின பக்தர் ஒருவர் 1890இல் அங்கு ஒரு வேலை வைத்து வழிபடலானார். அது பெருமளவில் மக்களை ஈர்த்து பெரும் கோவிலாகக் காலப்போக்கில் உருவானது.

1500 கனமீட்டர் சிமெண்ட், 250 டன் எஃகு கம்பிகள் ஆகியவற்றோடு 300 லிட்டர் தங்கக் கலவையால் அமைக்கப்பட்ட பொன்னொளிர் முருகனின் பக்தர்கள் லட்சோபலட்சம் பேர்கள்.

தைப்பூசத் திருவிழாவில் மட்டும் பத்து லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

தரைமட்டத்திலிருந்து சுமார் 400 அடி உயரத்தில் உள்ள கோவிலை அடைய 274 படிக்கட்டுகளுடன் கூடிய  பாதை உண்டு.

இந்த விழா நடக்கும் போது கோலாலம்பூர் கோலாகலமாகத் திகழும்.

இங்கு நேர்த்திக்கடனாக அலகு குத்துதல் நடக்கும்; காவடிகள் எடுக்கப்படும். தமிழகத்திலிருந்து பலர் இங்கு வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துவதும் உண்டு. மலேசியா வாழ் சீனர்களும் இப்படி தங்கள் வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் அலகு குத்துதல், காவடி எடுத்தலை மேற்கொள்வது குறிப்பிடத் தகுந்தது.

பத்துமலையின் இடப்புறத்தில் இராமாயண குகை உள்ளது. இங்கு செல்லும் வழியில் 50 அடி உயரமுள்ள அனுமார் சிலையைக் காணலாம். அனுமார் கோவிலும் உள்ளது. இந்த குகையில் ராமபிரானின் வாழ்க்கை நிகழ்வுகளை ஓவியங்களாகக் கண்டு மகிழலாம்.

கோலாலம்பூரில் சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு என ஏராளமான இடங்கள் உள்ளன.

துங்கு அப்துல் ரஹ்மான் தேசீயப் பூங்கா

மலேசியாவின் முதல் பிரதம மந்திரியான துங்கு அப்துல் ரஹ்மான் பெயரில் திகழும் இந்தப் பூங்கா ஐந்து தீவுத் தொகுதிகளைக் கொண்டது.

வெள்ளை வெளேரென உள்ள மணலையும் பவழப் பாறைகளையும் கொண்டுள்ள கயா தீவு, அழகிய கடற்கரையைக் கொண்டுள்ள மனுகன் தீவு உள்ளிட்ட இடங்களில் மக்கள் திரளாகக் கூடி மகிழ்வது வழக்கம்.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கூட்டம் அதிகமாகும்.

பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம்

உலகின் உயரமான கோபுரங்களில் ஒன்று பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம். 88 மாடிகளைக் கொண்டுள்ள இதன் உயரம் 1483 அடி. 41 மற்றும் 42 மாடிகளில் இது இரண்டையும் இணைக்கும் வானூர்தி பால இணைப்பைக் கொண்டுள்ளது. இங்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் குறிப்பிட்ட அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதன் மேலிருந்து நகரின் அழகைப் பார்த்து மகிழலாம். அருகில் அமைந்துள்ள பூங்காவான கே எல் எல் சி பூங்காவில் நீர் விளையாட்டுக்கள் உண்டு. இரவு நேரத்தில் வண்ண விளக்குகளால் அது ஒளிரும்.

கே எல் டவர்

பல பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டுள்ள இந்த கோபுரம் மலேசியாவின் தொலைத்தொடர்பு சேவைக்கான இடமாகும். இதன் உயரம் 1381 அடி.

வானளாவிய கோபுரங்கள் பல கொண்ட மலேசியாவில் மிக உயரமான கட்டிடம் மெர்டெகா டவர். இதன் உயரம் மலைக்க வைக்கும் 2227 அடி. இது 118 அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டிடம்!

இங்கு புக்கிட் நானாஸ் காடு என்ற வனப்பகுதி 9 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோலாலம்பூரில் இதயப் பகுதியில் இருக்கும் இது ஜாக்கிங், ட்ரெக்கிங், காட்டு வழிப் பாதை நடை உள்ளிட்ட பயிற்சிகளுக்குச் சிறந்த இடம். இங்குள்ள மூலிகைத் தோட்டம் புகழ் பெற்ற ஒன்று.

பெர்ஜயா டைம் ஸ்குயர்

இந்த தீம் பார்க்கில் சுமார் 24 ரைடுகள் உள்ளதால் இது குழந்தைகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. இங்குள்ள சாகஸ பூங்கா பல அம்சங்களைக் கொண்டு அனைவரையும் கவரும் என்பதால் நிறைய நேரம் ஒதுக்கிக் குழந்தைகளுடன் சென்று மகிழலாம். அத்தோடு இங்கு கடைகளும் உள்ளதால் ஷாப்பிங்கையும் முடித்து விடலாம்.

லிட்டில் இந்தியா

லிட்டில் இந்தியா செல்லாமல் கோலாலம்பூர் பயணம் முடிவுற்றதாக ஆகாது. ஏராளமான கடைகள் நமது தமிழ்நாட்டுக் கடைகளை நினைவூட்டும்.   இங்குள்ள கடைவீதியில் நடந்து சென்று நமக்குத் தேவையானதை வாங்கிக் கொள்ளலாம். தமிழில் பேசும் வியாபாரிகள் அதிகம் உண்டு. உணவு விடுதிகளும் இங்கு உண்டு. இதே போல சீன பாரம்பரியத்தின் அடிப்படையிலான ஒரு இடம் சைனா டவுன்.

கோலாலம்பூரில் உள்ள பெட்டாலிங் வீதியில் சீனாவில் தயாராகும் அனைத்துப் பொருள்களையும் பார்த்து வாங்கலாம். இரவிலும் இயங்கும் இடம் இது.

தரத்தைச் சோதித்து விலை சரியானது தானா என்று பார்க்கும் அடிப்படைத் தகுதி வாங்குபவர்களுக்கு இங்கு தேவை.

புக்கிட் பெண்டாங்

இரவு நேர கிளப்புகளுக்கும் களியாட்டங்களுக்கும் பிரபலமான இடம் புக்கிட் பெண்டாங். பல கேளிக்கை நிகழ்ச்சிகள் இரவைச் சூடாக்கும். பல மால்கள் உள்ள இடம் என்பதால் ஷாப்பிங் செய்ய சரியான இடம் இது.

மூங்கில் மற்றும் தேங்காய் ஓடு உள்ளிட்டவற்றால் செய்யப்பட்டுள்ள இங்குள்ள கைவினைப் பொருட்கள் பயணிகளைக் கவரும். பெண்களுக்கோ எனில் அழகிய வண்ண ஆடைகள் விசேஷமாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அலங்கரிக்கப்பட்ட காலணிகள், நீரைக் குளுமையாக வைத்திருக்கும் மண் ஜாடிகள், இன்னும் மலேசியப் பயண நினைவாக அமையும் நினைவுச் சின்னங்கள் உள்ளிட்டவற்றை ஆங்காங்கே கடைகளில் வாங்க முடியும். விலையும் நியாயமானது தான்!

லங்காவி தீவு

சற்று அதிக நாட்களை மலேசியப் பயணத்திற்கு ஒதுக்க நினைப்பவர்கள் 104 தீவுக் குழுமமான லங்காவி தீவிற்குச் செல்லலாம்.

கை புனைந்தியற்றாக் கவின் பெறு வனப்பு கொண்ட இடம் இது.

(ஹெ)லாங் என்பது ஒரு வகைப் பருந்து. காவி என்பது வண்ணத்தைக் குறிக்கும். காவி வண்ணப் பருந்து ஒன்று ஒரு கல்லை கொத்துவதை மீனவன் ஒருவன் பார்த்தான். அதனால் லங்காவி என்ற பெயரை இந்தத் தீவு பெற்றது.

இன்னொரு காரணமும் கூறப்படுகிறது : பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இதை ஆண்ட லங்காசுக்கா வம்சத்தின் அடிப்படையில் இந்தப் பெயர் உருவானதாம்!

ஃபெர்ரி சர்வீஸ் மூலமாக இதை கோலாலம்பூரிலிருந்து ஒன்றரை மணி நேரத்தில் அடையலாம். விமான தளமும் உள்ளது.

இத் தீவைப் பற்றிய பல மர்மக் கதைகள் உள்ளன. ம(ஹ்)சூரி என்ற ஒரு பெண் பற்றிய நீண்ட கதையைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஏழு தலைமுறையைக் கடந்த கதை இது.

கதையின் சுருக்கம் இது:

தாய்லாந்தில் புக்கெட் பகுதியில் பாண்டக் மாயக் மற்றும் மாக் ஆண்டக்கிற்கு மூன்றாவதாகப் பிறந்த பெண் மசூரி. இந்தக் குடும்பத்தினர் அங்கிருந்து லங்காவி தீவிற்குக் குடி பெயர்ந்தனர். பேரழகியான மசூரி 1762 முதல் 1800 வரை வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அவளை வான் டாரூஸ் என்ற ஒரு போர்வீரன் மணந்தான். அவன் சயாமில் நடந்த ஒரு போரில் பங்குகொண்டு சயாமுக்குச் சென்றான். அந்தக் காலத்தில் மசூரியிடம் ஒரு இளைஞன் பேசலானான்.

மசூரியின் பேரழகைக் கண்டு பொறாமை கொண்ட அவளது மாமியார் அவளது ஒழுக்கத்தைக் குறித்துத் தவறான வதந்தியை ஊர் முழுவதும் பரப்பவே ஊரார் அனைவரும் ஒன்று சேர்ந்து அவளை ஒரு மரத்தில் கட்டினர். அவளை வாளால் வெட்டினர். ஆனால் அவள் இறக்கவில்லை. தன்னை குடும்ப ‘க்ரிஸ்’ என்று சொல்லப்படும் வாளினால் வெட்டினால் மட்டுமே கொல்ல முடியும் என்று அவள் சொல்லவே, அவளது சொல்லைக் கேட்டு அவளது குடும்ப வாளால் அவளை வெட்டினர். அவளது உடம்பிலிருந்து வெள்ளையாக ரத்தம் வழிந்தோடியது. அவள் இறந்தாள். அவள் இறக்கும் போது, செய்யாத ஒரு குற்றத்திற்காக தன் மீது கேவலமான ஒரு பழியைச் சுமத்தித் தனக்கு அநியாயமான தண்டனை கொடுத்ததற்காக,  ‘ஏழு தலைமுறைக்கு இந்த தீவு வளங்குன்றி நாசமுறும்’ என்று சாபம் கொடுத்தாள். அன்றிலிருந்து ஏழு தலைமுறை லங்காவித் தீவு வெறிச்சோடி வளம் குன்றிப் பொலிவை இழந்தது.

இங்கு வரும் பயணிகள் அனைவரும் மசூரியின் கல்லறைக்குச் செல்வது வழக்கம். மசூரியின் கதை உண்மை என்றும் ஏழு தலைமுறையாக வெறிச்சோடி வாடிக் கிடந்த லங்காவி, சாபம் தீரப் பெற்று சென்ற நூற்றாண்டின் இறுதியில் தான் வளமடைய ஆரம்பித்தது என்றும் இந்த தீவில் வாழும் மக்கள் கூறுகின்றனர். அது அவர்களின் திடமான நம்பிக்கை.

சில வார்த்தைகளில் மலேசியா

மலேசியாவைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லுங்களேன் என்று மலேசிய அன்பர்களைக் கேட்டால் அவர்கள் கூறுவது :

சொர்க்கத்தின் வாயில் எங்கிருக்கிறது என்று தெரியாமல் தவித்த நான், அது மலேசியாவில் தான் இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சியுறுகிறேன்.

ஊழிக்காலம் வரும் வரை இங்கு மலேசியாவில் நடக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்!

***

புத்தக அறிமுகம் – 14

செல்வம் செழிக்க – ஜெம்ஸ், வாஸ்து வழிகள்!

பொருளடக்கம்

முன்னுரை

1. பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் நவரத்தினங்கள் – ஒரு அறிமுகம்!

2. கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?

3. செல்வமும் புகழும் தரும் வைரங்கள் – 1

4. செல்வமும் புகழும் தரும் வைரங்கள் – 2

5. செல்வமும் புகழும் தரும் வைரங்கள் – 3

6. முத்தான முத்து, கடவுள் தந்த சொத்து!

7. அச்சம் அகற்றும் பவளம்!

8. வெற்றி தரும் கோமேதகம்!


9. நீலம் செய்யும் ஜாலம்!

10. இசைபட வாழ வைக்கும் வைடூரியம்!

11. தெய்வீக மணி புஷ்பராகம்!

12. மகுடம் சூட்டும் மரகதம்!

13. இல்லத்தில் செல்வம் செழிக்க உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க சுபிட்சமாக வாழ எளிய வழிகள் இதோ!

14. காசு மேலே காசு வரும்!

15. Clutter-ஐ ஒழியுங்கள்!

16. உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க உலகின் தலைசிறந்த மூன்று பெண்மணிகளின் அன்புரைகள்!

17. இப்படி இருக்கிறதா உங்கள் வீடு? வாழ்க்கை வளம்பெற பெங் சுயி வழிகள்!

18. பெங் சுயி லோ ஷு சதுரம்

19. பெங்சுயி காட்டும் மேஜை ரகசியம்!

20. பெங் சுயி ரகசியம்! – கண்ணாடி தரும் நன்மைகள்!

21. சிங்கப்பூர் சீக்ரட்! பா குவா தரும் பெங்சுயி அதிர்ஷ்டம்!

22. சிங்கப்பூரின் செல்வ வளத்திற்குக் காரணம் பெங்-சுயி! ஒரு அதிசய உண்மைச் சம்பவம்!

முடிவுரை

*

புத்தகத்தில் நான் தந்த முன்னுரை இது:

முன்னுரை

மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் வளத்துடனும் செல்வத்துடனும் மனநிம்மதியுடனும் பூரண ஆரோக்கியத்துடனும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்பதுதான் ஹிந்து மதம் கூறும் வாழ்க்கைத் தத்துவம்.

இதற்கென ஏராளமான அருமையான வழிகளையும் உத்திகளையும் வழிகாட்டுதலையும் அது தருகிறது.

ஹிந்து மத சாஸ்திரங்கள் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வு உண்டு என்பதை வலியுறுத்துகின்றன.

சம்ஸ்கிருத சுபாஷித ஸ்லோகம் ஒன்று தரும் அரிய செய்தி இது:

அன்யானி சாஸ்த்ராணி வினோத மாத்ரம்
ப்ராப்தேஷு காலேஷு நதைச்ச கிஞ்சித் |
சிகித்ஸித ஜ்யோதிஷ மந்த்ரஹதா
பதே பதே ப்ரத்யய பாவஹந்தி ||

இதன் பொருள்: உலகில் உள்ள மற்ற சாஸ்திரங்கள் எல்லாம், மனிதருக்கு ஒரு வழியில் விநோதமாத்திரமாகவே இருக்கிறது. ஆனால் ஒருவனுக்கு ஆபத்து வரும்போது எந்த ஒரு வேடிக்கை சாஸ்திரமும் அவனைக் காப்பாற்ற வராது. மனிதனின் கஷ்டத்தைப் போக்கி வைத்தியமோ, ஜோதிடமோ, மந்திரமோதான் ஆபத்திலிருந்து அவனை விடுவிக்கும்.

இவற்றில் ஒரு பகுதியாக மந்திரம், யந்திரம், தந்திரம், மணிகள், மூலிகைகள், வாஸ்து அமைகின்றன.

இத்துடனும் ஜோதிடம், எண்கணிதம், மூச்சுக்கலை, யோகா, தலயாத்திரை வழிபாடு உள்ளிட்ட இன்னும் பல வழிகளையும் ஹிந்து மத அறநூல்கள் தருகின்றன.

பெங் சுயி சீன வாஸ்து சாஸ்திரம்.

நவமணிகளை அவரவர்க்கு உரிய விதத்தில் தேர்ந்தெடுத்து அணிவது, வாஸ்து சாஸ்திரப்படி இல்லங்களையும், அலுவலகங்களையும் அமைப்பது, பெங் சுயி படி பல்வேறு உத்திகளைக் கடைப்பிடிப்பது ஆகிய மூன்றும் எளிய வழிகள்.

அவற்றின் பல வழிகளையும், உத்திகளையும் இந்த நூலில் காணலாம்.

சுருக்கமாக மணி, மந்திர, ஔஷதம் என்பது காலம் காலமாக வழங்கப்பட்டு வரும் சொல் தொடர். இந்த மூன்றில் மணிகளைப் பற்றி இந்த நூல் விளக்குகிறது; நலம்பெற, வளம்பெற உரிய வழிகளைச் சுட்டிக் காட்டுகிறது. அத்துடன் வாஸ்து சாஸ்திரம் மற்றும் சீன வாஸ்து சாஸ்திரமான பெங் சுயி பற்றிய விளக்கங்களையும் தருகிறது.

அன்பர்கள் எந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு என்ற நம்பிக்கையுடன் கூடிய அணுகுமுறையில், இதை ‘உதவும் கையேடாக’ எப்போதும் தம்முடன் வைத்துக்கொண்டு நலம்பெற வாழ்த்துகிறேன்.

இந்தக் கட்டுரைகளை மாலை மலர் பத்திரிகையில் வெளியிட்ட தினத்தந்தி அதிபர் திரு S. பாலசுப்ரமண்யன் ஆதித்தன் அவர்களுக்கும் ஆலயம் ஸ்ரீ ஜோஸியம் பத்திரிகையில் வெளியிட்ட திருமதி மஞ்சுளா

ரமேஷ் அவர்களுக்கும் என் உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டுரைகள் அனைத்தும் வெவ்வேறு காலங்களில் வெளியானவை.

இங்கு ஒரே நூலாகத் தொகுத்துத் தரப்படுகிறது. ஆகவே ஒருசில குறிப்புகள் மீண்டும் வந்திருப்பதைக் காணலாம், என்றாலும்கூட அவை நலம் பயக்கும் முக்கியமான குறிப்புகள் என்பதால் ஒருமுறைக்கு இருமுறை படிப்பதும் நல்லதுதானே!

இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன்வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைப் படிக்கும் அன்பர்கள் வாழ்க்கையில் எல்லா நலங்களையும் பெற்று முன்னேறுவர் என்பதில் ஐயம் இல்லை.

இறைவன் அருள்பாலிப்பானாக!

நன்றி.

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

tag- மலேசியா

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: