Post No. 11,156
Date uploaded in London – – 1 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
விண்வெளி நிலையத்தில் வீரர்களின் வாழ்வில்..!
ச.நாகராஜன்
1
தலை கீழாகத் தொங்கப் பழகு!
ஃப்ராங்க் கல்பெர்ட்ஸன் (Frank Culbertson) விண்வெளி பயணத்திற்குத் தயாராகும் விண்வெளிப்பயணக் குழுவினருக்கு ஒரு சின்ன அறிவுரையை வழங்கினார்.
என்ன அது?
முடிந்தமட்டும் தலைகீழாகத் தொங்கிப் பழகுங்கள் – ஜிம்னாஷியத்தில் சின் – அப் (chin-up bar) பாரில் இருப்பது போல!
எதற்காக என்று கேட்டால் இரண்டே வார்த்தைகளில் பதில் : ஃப்ளூயிட் ஷிஃப்ட்! (Fluid Shift).
புவி ஈர்ப்பு விசை இல்லாததால் உடலில் இருக்கும் திரவங்கள் நினைத்தபடி அங்கும் இங்குமாக ஓட ஆரம்பிக்கும்! இதனால் உடலில் நெருக்கி அடித்தாற் போல ஒரு திணறல் இருந்து கொண்டே இருக்கும்!
சிலருக்கு வயிறு குமட்டும். வாந்தி வரும். சிலருக்கோ வெஸ்டிப்யூல் அமைப்பு எனப்படும் அங்கண மண்டல கோளாறுகள் வரும்.
இதற்கு ஒரு தனிப் பெயரே உண்டு. ஸ்பேஸ் அடாப்டேஷன் சிண்ட் ரோம் – விண்வெளி வாழ்க்கைக்குத் தயார்படுத்திக் கொள்ளும் நோய் என்று! சுருக்கமாக விண்வெளி வியாதி என்று இதைச் சொல்லலாம்.
எப்படிப்பட்ட உடல் வலு கொண்டவராக இருந்தாலும் இது அவரை ஒரு புரட்டு புரட்டி விடும்!
வயிறு குமட்டுவது போனாலும் கூட இந்த ஃப்ளூயிட் ஷிப்ட் போகாது.
அது நுகர்ந்து பார்க்கும் சக்தியுடன் விளையாடும்; அதனால் சுவை தெரியாது; பசி எடுக்கும் உணர்வும் தெரியாது.
ஸ்காட் கெல்லி (Scott Kelly) என்ற விண்வெளி வீரர் தான் கர்ப்பமுற்றது போன்ற உணர்வு ஏற்பட, பலவற்றிற்குக் கர்ப்பிணிகள் ஏக்கமுறுவதைப் போல ஏக்கம் கொண்டார்.
பூமியில் அவ்வளவாக அவருக்கு இனிப்பு பிடிக்காது. ஆனால் விண்வெளியிலோ சாக்லட் சாப்பிட வேண்டும் என்ற ஆசை பிறந்தது!
ஒரு வருடம் விண்வெளியில் இருந்தால் உடலில் இருக்கும் காற்று அறைகள் எல்லாம் அடைத்துக் கொண்டது போல இருக்கும்!
சாப்பாடோ சுவையற்றதாகத் தான் இருக்கும். ராணுவத்தில் பரிமாறப்படுவது போல் உணவு வகைகள் இருக்கும்; சில சமயம் புதிதாக உள்ள பழ வகைகள் பூமியிலிருந்து வரும். அல்லது எப்போதாவது அத்தி பூத்தாற் போல வீட்டிலிருந்து அனுப்பப்படும் உணவு வகைகள் வரும்.
முன்னாள் நாஸா விண்வெளி வீரர் ஜிம் வாஸ் (Jim Voss) ரஷிய உணவு சப்ளை ஒன்று வந்த போது ஒரு சடங்கையே செய்து அந்த உணவு வந்த பாக்கிங்கை பிரித்ததை நினைவு கூர்கிறார். உள்ளிருந்து வரும் வாசனை பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும்.
பூமியில் வருமே, சமையல் வாசனை அது போலப் பெட்டியைத் திறந்தவுடன் கமகமக்கும். ஒருவழியாக விண்வெளி ஸ்டேஷனில் அடிக்கும் அந்த நாற்றம் போல இருக்காது என்று ஒரு ஆறுதல் தான்!
இந்த நாற்றம் சகிக்க முடியாது போனதால் விண்வெளி வீரரான வந்தே ஹெய் (Vande Hei) தனது ஒவ்வொரு உணவு வகை மீது உள்ளிப்பூண்டு மசாலாவைத் தடவி விடுவார்! இன்னும் சிலருக்கோ ஶ்ரீரச்சா (Sriracha Sauce) சாஸ் ஒரு வரபிரசாதமாக அமையும்!
நிகோல் ஸ்டாட் (Nicole Stott) என்ற விண்வெளி வீ ராங்கனைக்கோ பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் கிடைக்கும் பலவகை உணவு ரகங்கள் மிகவும் பிடிக்கும். ரஷியர்கள் அருமையான சூப் வகைகளைத் தருவார்கள். ஜப்பானிய விண்வெளி வீரர்களோ அரிசி, கறிகாய் வகைகளைத் தருவார்கள். அவரது குடும்பம் அவருக்கு மிகவும் பிடித்ஹ்த இஞ்சி பூச்சுடன் கொண்ட சாக்லட்டை அனுப்பி வைப்பார்கள் அவருக்காக! சீஸ் கூட அவருக்கு ஓகே தான்! ஆனால் அவர் தனக்கென ஒரு எல்லையை வகுத்துக் கொண்டார். அதிகமாகச் சாப்பிடமாட்டார்!
ரெஸ்ட் ரூம் போவதில் இருக்கும் சவாலை விட உணவு உண்ணப் போவது பெரும் சவால் தானாம்!
சிறுநீர் பூமியில் போவது போல போக முடியாது. ஒரு டியூப் வழியாக உறிஞ்சி எடுக்கபப்டும். அதே போலத் தான் மலக் கழிவும் கூட!
ரிச்சர்ட் காரியாட் (Richard Garriot) என்ற பயணி விண்வெளியில் இரு வாரம் இருக்கும் படியாக ஒரு பயணத்தை மேற்கொண்டார். அதற்காக மூன்று கோடி டாலர் பணத்தைக் கொடுத்து அந்தப் பயணத்தை மேற்கொண்டார். “அது ஒட்டிக் கொள்ளும் தன்மை உள்ளது தானே! அதனால் அது உங்களை ஒட்டிக் கொண்டே இருக்கிறது” என்று கிண்டல் செய்தார் அவர். “ஆகவே தான் அது உங்களை விட்டுப் பிரியாமல் வெளியே வரத் தயங்குகிறது” என்றார் அவர்.
மூன்று முறை விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ஸ்வான்ஸன் (Swanson) என்ற விண்வெளி வீரருக்கு விண்வெளியில் பாத் ரூம் போகவே பிடிக்கவில்லையாம். “தினசரி திகில் ஊட்டும் விஷயம் அது” என்கிறார் அவர்.
விண்வெளி நிலையத்தின் உஷ்ணநிலை மிதமான 72 டிகிரி ஃபாரன்ஹீட். ஈரப்பதமும் மிதமாக (Humidity) இருக்கும்.
ஆனால் எலும்பு அடர்த்தியையும் (bone density) தசை திணிவையும் (Muscle Mass) சீராக வைத்திருப்பதற்காக விண்வெளி வீரர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து கொண்டே இருப்பர். அதாவது உடலிலிருந்து நிறைய வேர்வை வந்து கொண்டே இருக்கும். நல்லவேளையாக, அது உடலிலிருந்து சொட்டு சொட்டாக விழுவதில்லை. தோலிலேயே இருக்கும். ஆனால் தலையைச் சிலிர்த்தாலோ உடலிலிருந்து வேர்வைத் துளிகள் தூறல் போல விழும்.
ஆகவே எப்போது பக்கத்தில் ஒரு துண்டு தயாராக இருக்க வேண்டும்.
இப்படி ஏராளமான அனுபவங்களை விண்வெளி வீரர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விண்வெளி வாழ்க்கை என்பது சுலபமல்ல; அதற்கு ஏராளமான பயிற்சிகள் தேவை.
உடல் பலம் மட்டும் போதாது; மனோபலமும் வேண்டும்!
இவை இருந்தால் வாய்ப்புக் கிடைக்கும் போது நீங்களும் ஒரு விண்வெளி வீரர் / வீராங்கனை தான்!
***
வீரர்/ வீராங்கனை பற்றிய குறிப்பு :-
ஃப்ராங்க் கல்பெர்ட்ஸன் அமெரிக்க முன்னாள் கடற்படை அதிகாரி. விண்வெளி எஞ்சினியர். (தோற்றம் 15-5-1949)
ஸ்காட் கெல்லி அமெரிக்க விண்வெளி வீரர் (தோற்றம் 21/2/1964) நான்கு முறை விண்வெளிக்குச் சென்றிருக்கிறார். இப்போது ஓய்வு பெற்று விட்டார்.
ஜிம் வாஸ் அமெரிக்க விண்வெளி வீரர். (தோற்றம் 3/3/1949). ஐந்து முறை விண்வெளிக்குச் சென்றிருக்கிறார்.
வந்தே ஹெய் : தற்போதைய விண்வெளி வீரர். (தோ 10/11/1966) 523 நாட்கள் இது வரை இவர் விண்வெளியில் இருந்திருக்கிறார்.
நிகோல் ஸ்டாட் அமெரிக்க விண்வெளி வீராங்கனை (தோற்றம் 19/11/1962) நான்கு முறை விண்வெளிக்குச் சென்றிருக்கிறார். 27 வருட நாஸா வாழ்க்கைக்குப் பின்னர் இப்போது ஓய்வு பெற்றிருக்கிறார்.
ரிச்சர்ட் காரியாட் விண்வெளி சுற்றுலாப் பயணி. (தோற்றம் 4/7/61) இவர் ஒரு கேம் டிஸைனர். இவரது தந்தை ஓவன் காரியாட் ஒரு விண்வெளி வீரர்.
ஸ்வான்ஸன் அமெரிக்க விண்வெளி வீரர். (தோற்றம் 3/12/1960) மூன்று முறை விண்வெளிக்குச் சென்றிருக்கிறார்.
xxx
புத்தக அறிமுகம் – 15
நோயில்லா வாழ்வு பெற சில ரகசியங்கள்!
பொருளடக்கம்
1. ஆரோக்கியம் பெற அருமையான வழி!
2. ஆரோக்கியம் என்றால் என்ன? அதை எப்படி அடைவது?!
3. 100 இரகசியங்கள் – நல்ல வாழ்க்கையைக் கவர்ந்து இழுத்து அமைத்துக் கொள்ள!
4. நூறு ஆண்டு ஆயுளை ஆரோக்கியத்துடன் தரும் அதர்வ நிதி!
5. ஆக்ஸிஜன் அதிகமாக உள்ள காற்றை சுவாசிப்போம்!
6. ஒரு கிராம் வைரஸ் : 750 கோடி மக்களின் பயத்திற்குக் காரணம்!
7. பலாப்பழம் சாப்பிடலாம், டயபடீஸ் இருந்தாலும்!
8. கொரானா பற்றிய அறிய வேண்டிய சில உண்மைகள்!
9. ஆசார்ய சரகர்: ஆயுர்வேத நூல் அருளிய மஹான்!
10. கொரானா காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மைகள் சில!
12. மூளைக்கு வல்லாரை, முடி வளர நீலிநெல்லி : அருமையான மூலிகைப் பாட்டு!
13. ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்!
14. சைவ உணவு சாப்பிடுவது தப்பா?
15. நீடித்த ஆயுளைத் தரும் கார்போஹைட்ரேட்!
16. பேரீச்சம்பழங்கள் தரும் அற்புத ஆரோக்கியம்!
17. நோய்களைத் தீர்க்கும் நவரத்தினங்கள் : பதார்த்த குண சிந்தாமணி
18. ஆரோக்கியமான மனம்! ஆரோக்கியமான உடல்!! – 1
20. அற்புத சிகிச்சை முறை அகு பிரஷர்! – 1
21. அற்புத சிகிச்சை முறை அகு பிரஷர்! – 2
22. 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ… அறிவியல் உரசிப் பார்த்து அதிசயிக்கும் யோகா!
23. நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 1
24. நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 2
25. உங்களின் ஜீரண மண்டல அமைப்பு உங்களை நோயுறச் செய்கிறதா, பருமனாக ஆக்குகிறதா? – 1
26. உங்களின் ஜீரண மண்டல அமைப்பு உங்களை நோயுறச் செய்கிறதா, பருமனாக ஆக்குகிறதா? – 2
27. உங்களுக்கு குளூட்டன் ஒவ்வாமையா? இதோ நிவாரணம்!
28. மலர் மருத்துவம் பற்றிய சில உண்மைகள்!
30. நல்ல வாழ்க்கையின் அடிப்படை இரகசியம்!
31. காலையில் பனித்துளி படர்ந்த புல்வெளியில் வெறும் காலுடன் நடப்பதால் ஏற்படும் நற்பலன்கள்!
அணிந்துரை
திரு. ச. நாகராஜன் எழுதிய ‘நோயில்லா வாழ்வு பெற சில இரகசியங்கள்’ என்ற இந்த நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற மூன்று பாகங்களைத் தொடர்ந்து இது நான்காவது பாகமாக அமைகிறது.
நமது வழக்கப் பிரகாரம் பெரியோர்களை நாம் வணங்கும் போது எல்லோரும் எப்படி ஆசீர்வாதம் பண்ணுவார்கள்? தீர்க்காயுஷ்யமான் பவ –
நீண்ட ஆயுளுடன் வாழ்வாயாக;
தீர்க்க சுமங்கலி பவ – நீங்கள் கணவனுடன் நீடித்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று இப்படி ஆசீர்வதிப்பர்.
ஆனால் தற்காலத்தில், இந்த வாழ்த்துக்கள் எல்லாம் பயன் பெறாது; நடைமுறையில் ஒத்து வராது. ‘ஆரோக்யவான் பவ’ – ‘ஆரோக்கியத்துடன் வாழ்வாயாக’ என்ற ஆசீர்வாதமே தற்சமயம் நமக்குத் தேவைப்படுகிறது.
நூற்றுக்கு 95 பேர்கள் இன்று மாத்திரை மூலமாகவே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம் நமது உடலும் மனமும் தான். இதனைப் பல்வேறு விதமான ஆங்கில ஆசிரியர்களின் கட்டுரைகள் மூலமாக விளக்குகிறார் ஆசிரியர்.
உடல் ஆரோக்கியம் என்றால் என்ன, என்னென்ன காரணங்களினால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது என்பதை விளக்கி முடித்த பிறகு உடலையும் மனதையும் ஆரோக்கியமாக நாம் வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார்.
இதையும் மீறி நமக்கு வியாதிகள் வந்து விட்டால் நாம் என்ன செய்வது?
முதலில் ஆயுர்வேதத்தை விளக்கிய பின் அந்த ஆயுர்வேத முறைப்படி வியாதிகளை எப்படி எல்லாம் தீர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.
எனக்கு ஆயுர்வேதம் பிடிக்காது; சித்த வைத்தியம் தான் பிடிக்கும் என்றால் அப்படி சித்த வைத்தியம் மூலமாக நோய்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்பதை ‘பதார்த்த குண சிந்தாமணி’ என்ற புத்தகத்தை முதலில் விளக்கி விட்டு, எந்த வியாதி வந்தாலும் சரி, அதன் மூலமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்று சித்த வைத்தியத்தின் படி சொல்கிறார்.
ஆயுர்வேதமும் வேண்டாம்; சித்த வைத்தியமும் வேண்டாம்; மருந்து முறைகளே வேண்டாம் என்றாலும் வர்ம முறையின் படி – அகுபிரஷர் மூலமாகவும் வியாதியைத் தீர்த்துக் கொள்ளலாம் என மிக அருமையாக விளக்குகிறார்.
இதைவிட அருமையாக வேறு யாராலும் சொல்ல முடியாது.
இது போக, ஆங்கில (BACH) பாச் மலர் மருந்து என்று ஒன்று இருக்கிறது. அந்த மலர் மருந்துகளை உபயோகித்து நமது வியாதிகளை மட்டுமல்ல; மனம் மட்டுமல்ல; ஆரோக்கியம் மட்டுமல்ல; நமது வாழ்க்கை முறை எப்படி சிறப்பாகச் செயல் பட அந்த மருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.
அதில் மிக முக்கியமான ஒன்று ரெஸ்க்யூ ரெமடி (RESCUE REMEDY) அது ஒன்று இருந்தாலே போதும்; அது எப்படிப்பட்ட வியாதியையும் தீர்க்கும் கை கண்ட மருந்து. இதில் ஆபரேஷன் இல்லை; பின் விளைவு இல்லை. அப்படிப்பட்ட மலர் மருந்தை வைத்துக் கொண்டால் போதும்; நாம் சுகமாக வாழலாம் என்பதும் கூறப்பட்டிருக்கிறது.
ஆரோக்கியத்திற்கான இந்த வேத புத்தகம் நம் கையில் இருந்தால் நமக்கு எந்த விதமான வியாதியும் வராது; வந்தாலும் அதை உரிய முறையில் போக்கிக் கொள்ள வழிகள் உண்டு; இதை நாம் கடைப்பிடிப்பதோடு நமது நண்பர்களிடமும் கூறினால் இந்த சமுதாயமே சிறப்பாக வாழ முடியும் என்ற குறிக்கோளுடன் இதை ஆசிரியர் எழுதி இருக்கிறார்
ஆகவே, ‘நோயில்லா வாழ்வு பெற சில இரகசியங்கள்’ என்ற இந்த ஆரோக்கிய வழிகாட்டி ஒன்று இருந்தாலே போதும், சிறப்பான முறையில் வாழலாம் என்பது உறுதி!
ஆகவே ஒவ்வொருவரும் இந்தப் புத்தகத்தைத் தம்மிடம் வைத்திருப்பதோடு, தங்கள் நண்பர்களிடமும் சிபாரிசு செய்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற எனது நல்லெண்ணத்தை நானும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
வாழ்க வளமுடன்!
சென்னை ச. சீனிவாசன்
7-1-2022
*
புத்தகத்தில் நான் தந்த என்னுரையில் ஒரு பகுதி இது:
என்னுரை
நோயற்ற வாழ்க்கைக்கான சில அடிப்படை உண்மைகளை பல ஆண்டுகளாக கட்டுரைகளாக பல பத்திரிகைகளிலும் இணையதள இதழ்களிலும் எழுதி வருகிறேன். ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ என்ற முதல் மூன்று பாகங்களைத் தொடர்ந்து இந்த நூல் வெளியாகிறது.
இந்தக் கட்டுரைகளை வெளியிட்டு என்னை கௌரவித்த தினத்தந்தி அதிபர் திரு S.பாலசுப்ரமணியன் ஆதித்தன் அவர்களுக்கும், http://www.tamilandvedas. Com திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களுக்கும், ஹெல்த்கேர் ஆசிரியர் திரு R.C. ராஜா அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். அவர்களுக்கு எனது நன்றி.
இந்த நூலுக்கு நல்லதொரு அணிந்துரையை நல்கி என்னைக் கௌரவித்திருக்கும் திரு ச. சீனிவாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
தொழில் துறையில் அவர் ஒரு டெக்ஸ்டைல் எஞ்ஜினியர்; தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரும் நூற்பாலையில் மனித வள மேம்பாட்டிற்கான பயிற்சியாளராகத் திகழ்ந்து ஓய்வு பெற்றார்.
கடந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் அவர் பிரமிக்க வைக்கும் எண்ணிக்கையில் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கும் மேலாக, உயர் நிறுவனங்களின் மேலாளர்களிலிருந்து சாமானிய தொழிலாளர் வரை, அவர்கள் மேம்படுவதற்கான பயிற்சி தந்து அவர்களை உயர்த்திக் காட்டிய வழி காட்டி. பல்லாயிரக் கணக்கில் ஜோக்குகளைத் தொகுத்து வைத்திருப்பவர். நூற்றுக் கணக்கில் நகைச்சுவை நூல்களைச் சேகரித்திருப்பதோடு அவற்றை அவ்வப்பொழுது உரிய முறையில் பயன்படுத்தும் நகைச்சுவை நிபுணர். சித்த வைத்தியம் உள்ளிட்ட பல கலைகளைக் கற்ற பன்முகப் பரிமாணம் கொண்ட வித்தகர். பண்பாளர். சித்த மருத்துவப் பட்டம் பெற்ற டாக்டர். மூலிகைகளையும் மருந்து வகைகளையும் ஆராய்ந்தவர்.
அத்துடன் மட்டுமின்றி ஒருவரை நேரில் பார்த்தவுடன் அவருடைய ஜாதகம் உள்ளிட்ட எதையும் கேட்காமலேயே face reading என்னும் முகம் பார்த்து அனைத்தும் அறியும் சாஸ்திரப் படி, அவருடைய குறை என்ன, பிரச்சினை என்ன என்பதை உள்ளுணர்வாற்றலால் கண்டு அதைச் சொல்லி அதை தீர்க்கும் வழிகளையும் பரிந்துரைப்பவர்.
அச்சன்கோவில் ஸ்வாமிஜி கிருஷ்ணாஜியின் அனுக்ரஹத்தைப் பெற்றதோடு அவர் உபதேசத்தின் படி அறுபது ஆண்டுகளாக தினமும் காலையில் தவறாது கணபதி ஹோமம் செய்து மஹா கணபதியின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவர். இதில் மிகச் சிறப்பான அம்சம் என்னவெனில் இதற்காக ஒரு பைசா கூட யாரிடமும் எப்போதும் பெறாதவர். எப்போதும் அவரது இல்லத்தில் அவரை அணுகி அவரிடம் அவரது அறிவுரையைக் கேட்க திரளான மக்கள் குழுமி இருப்பதில் வியப்பே இல்லை; டெலிபோன் மணி இடைவிடாது ஒலிப்பதிலும் ஆச்சரியம் இல்லை.
அத்துடன் துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அவர் விஜயம் செய்யும் போதெல்லாம் அவருக்கு ஆர்வமுடனான வரவேற்பு இடம் பெறுவதிலும் வியப்பில்லை.
தனது அனுபவத்தின் அடிப்படையிலான அணிந்துரையை இந்த நூலுக்கு அவர் அளித்திருக்கிறார்; அவருக்கு மீண்டும் எனது நன்றி.
இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்டுரைகளைப் படித்து என்னை எழுத ஊக்குவித்த அனைத்து வாசகர்களுக்கும் பெரியோர்களுக்கும் எனது நன்றி. அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நன்றி.
சென்னை ச.நாகராஜன்
7-1-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852