கண்ணைக் கவரும் நயாகரா நீர்வீழ்ச்சி (Post No.11,159)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,159

Date uploaded in London – –    2 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

19-7-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

இரு நாடுகளில் கொட்டும் ஒரு நீர்வீழ்ச்சி!

கண்ணைக் கவரும் நயாகரா!

ச.நாகராஜன்

கவர்ந்திழுக்கும் நயாகரா

மனித மூளையைப் பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூலை எழுதிய பியர்ஸ் ஜே.ஹோவர்ட், ஒரு நீர்வீழ்ச்சிக்குச் சென்று அதைப் பார்க்கும் போது மனித மனதில் ஏற்படும் சோர்வு, மயக்கம், மன இறுக்கம், மன அழுத்தம் ஆகியவை எல்லாம் போய் புத்துணர்ச்சியும் உற்சாகமும் பிறக்கும் என்று கூறுகிறார்.

ஆக மனதிலுள்ள எல்லா பாரத்தையும் இறக்கி புத்துணர்ச்சி பெற சிறந்த டூர் ஒரு அருவியை நோக்கிச் செல்வது தான்.

இந்த வகையில் உலகின் அதிசய நீர்வீழ்ச்சிகளுள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் நீர்வீழ்ச்சி எது என்று கேட்டால் உடனடியாக வரும் பதில் – நயாகரா நீர்வீழ்ச்சி என்பது தான்!

உலகில், கிட்டத்தட்ட  நூறு நீர்வீழ்ச்சிகள் நயாகராவை விட அதிக உயரத்தைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் இரண்டு அருவிகள் நயாகராவை விட இன்னும் அதிக நீரை கொட்டு கொட்டென்று கொட்டுகிறது. என்றாலும் எந்த அருவியும் நயாகரா போல ஒரு அற்புதமான கவர்ச்சியைத் தரவில்லை.

இரு நாடுகளில் கொட்டும் நீர்வீழ்ச்சி

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இருநாடுகளில் கொட்டும் நயாகரா நீர்வீழ்ச்சி பிரம்மாண்டமானது. இந்த நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது இது.

இங்கு செல்ல அமெரிக்க மற்றும் கனடிய விசா வேண்டும்.

கனடியன் ஃபால்ஸ் எனப்படும் குதிரைலாட அருவி, அமெரிக்கன் அருவி மற்றும் ப்ரைடல் வெய்ல் அருவி ஆகிய மூன்று நீர்வீழ்ச்சிகளாக இது அமைந்துள்ளது.

அமெரிக்க பகுதியில் சுமார் 184 அடி உயரமும்  1060 அடி அகலமும் உள்ளது. கீழே பெரும் பாறைகள் பெருமளவில் ஆங்காங்கே உள்ளதால் நீர் வீழ்ச்சியின் உயரமும் அதற்குத் தக மாறுகிறது. அமெரிக்க பகுதியில் வரும் நீர் நயாகரா நதியின் நீரில் பத்து சதவிகிதம் தான்.

மீதமுள்ள நீரெல்லாம் கனடிய பகுதியில் ஹார்ஸ் ஷூ அருவியாக – குதிரை லாட அருவியாக உருவெடுக்கிறது. இங்கு உயரம் 188 அடி. அகலமோ 2215 அடி!

மூன்று அருவிகளில் சிறியது நியூயார்க் மாகாண பகுதியில் அமைந்துள்ள ப்ரைடல் வெய்ல் அருவி தான்; ஆனால் பார்ப்பதற்கு இங்கு ஏராளமான ஆர்வமூட்டும் பகுதிகள் உள்ளதால் அனைவரும் இங்கு வரத் தவறுவதில்லை.

இது இருக்குமிடம் :லாங்கிட்யூட் 79 W லேடிட்யூட் 43.1 N

நயாகரா அருவி கொட்டுகின்ற அமெரிக்க பகுதியில் நியூயார்க்கும் கனடிய பகுதியில் அண்டாரியோவும் இருக்கின்றன.

அண்டாரியோவில் உள்ள அண்டாரியோ ஏரியையும் அதற்கு 320 அடி மேலே உள்ள ஈரி ஏரியையும் இணைத்து உருவாகும் நயாகரா ஆறு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு நீரை வெள்ளமெனச் சுமந்து செல்கிறது தெரியுமா? ஒவ்வொரு விநாடியும் மலைக்க வைக்கும் அளவான 280 லட்சம் லிட்டர் அல்லது ஏழு லட்சம் காலன் நீரைக் கொண்டு செல்கிறது!

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வட அமெரிக்காவில் இருந்த பிரம்மாண்டமான பனிப்பாறைகள் உருக ஆரம்பித்து மிஸிஸிபி நதியாக மாறி ஐஸ் யுகத்தில் நயாகரா நதியாக பரிணமித்தது.

கால வெள்ளம் உருண்டோட இன்று நாம் காணும் நயாகரா நீர்வீழ்ச்சி சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது.

இப்போதுள்ள நீர்வீழ்ச்சி சுமார் 11 கிலோமீட்டர் நகர்ந்து இந்த இடத்திற்கு வந்து விட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கனடாவின் டொரொண்டோ

வட அமெரிக்காவில் அமைந்துள்ள கனடா நாட்டின் ஜனத்தொகை மூன்று கோடியே எண்பத்தேழு லட்சம். பரப்பளவு முப்பத்தைந்து லட்சத்து பதினொன்றாயிரம் சதுர மைல்.

கனடாவின் மிக அழகிய நகர் டொரொண்டோ. கண்களில் மாயாஜாலத்தை உருவாக்கும் இல்லூஷன் மியூஸியம், அண்டோரியோ அருங்காட்சியகம், பேடா ஷூ மியூஸியம்,, ஆர்ட் காலரி, ரிப்ளியின் அக்வேரியம், உள்ளிட்ட பல கண்கவரும் இடங்கள் இங்கு உள்ளன. சி என் டவர் என்ற 1122 அடி உயரமுள்ள வானளாவிய கட்டிடத்தில் ஏறி டொரொண்டோவைப் பார்ப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சி!

கனடாவின் டோரொண்டோ நகரிலிருந்து 80 மைல் தொலைவில் உள்ள நயாகராவை படகு, கார், ரயில் மூலம் அடையலாம்

அமெரிக்கப் பகுதியில் உள்ள நயாகரா ஃபால்ஸ் ஸ்டேட் பார்க்

அமெரிக்காவின் மிகப் பழைய பூங்காவான ஸ்டேட் பார்க் நயாகராவின் அமெரிக்கப் பகுதியில் அமைந்துள்ளது.

இங்கு கேவ் ஆஃப் தி வின்ட்ஸ் என்னும் குகை, நயாகரா அட்வெஞ்சர் தியேட்டர், நயாகரா வீழ்ச்சியை உயரத்திலிருந்து பார்ப்பதற்கான பார்வை கோபுரம் உள்ளிட்ட ஏராளமான இடங்கள் உள்ளன.

வழிகாட்டுதலுடன் கூடிய திட்டமிட்ட பயணமும் இதற்கென உண்டு.

இந்த பார்க்கிற்கு ஆண்டு தோறும் வருகை புரிவோரின் எண்ணிக்கை 80 லட்சத்தையும் தாண்டுகிறது

நயாகரா நதியருகே 14 வகையான அரிய தாவர வகைகள் உள்ளன. நியூயார்க் நகர் அருகே 1901ஆம் ஆண்டு 170 அரிய வகை மரங்களில் 140 வகைகள் நயாகரா பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நயாகரா பகுதியில் அரிய வகை மலர்ச் செடி வகைகள் சுமார் அறுநூறுக்கும் மேற்பட்டவை உள்ளன.

ஆகவே நயாகரா அமெரிக்காவில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் பெரிதும் விரும்பும் பகுதியாக அமைந்து விட்டது.

தேன் நிலவுக்கான இடம்

வெள்ளமெனக் கொட்டும் நீர் கண்கொள்ளாக் காட்சியைத் தர உலகெங்கும் உள்ள மக்கள் நயாகராவை நோக்கிக் கவர்ந்திழுக்கப்படுகின்றனர்!

அதிகமான பனியையும் அற்புதமான வர்ணஜால வானவில்லையும் கொண்டிருக்கும் நயாகரா காதலர்களைக் கவர்ந்திழுக்கவே, அது காதலர் உல்லாசப் பயணம் போகத் தகுந்த இடமாக ஆனது; புதிதாக மணமான இளம் தம்பதிகள் தேன்நிலவு செல்ல உகந்த இடமாகவும் ஆனது.

நயாகராவின் பெருமை உலகெங்கும் பரவவே சக்கரவர்த்தி நெப்போலியனின் தம்பியான ஜெரோம் போனபார்ட் தான் மணந்து கொண்ட மணப்பெண்ணான தனது இளம் மனைவி எலிஸபத் பாட்டர்ஸனுடன் இங்கு 1803இல் தேநிலவுப் பயணம் மேற்கொண்டார். முதன் முதலாக ஆவணப்படுத்தப்பட்ட பயணம் இது தான்.

இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் இளம் தம்பதிகள் இங்கு வந்து குதூகலமாக தேநிலவைக் கொண்டாடவே ஐரிஷ் எழுத்தாளரான ஆஸ்கார் வைல்ட் கிண்டலாக, “அமெரிக்க மணப்பெண்ணுக்கு இரண்டாவது ஏமாற்றமாகத் திகழ்வது நயாகரா” என்றார். குறும்பான இந்த வாக்கியம் பெருமளவில் அனைவரையும் நகைக்க வைத்தது.

ஒரு காதலன் காதலியிடம் சொல்ல சிறந்த வாக்கியமாகச் சொல்லப்படுவது இது: “உன் மேல் நான் கொண்டிருக்கும் அன்பு நயாகராவைக் காட்டிலும் ஆழமானது; அகன்றது; உயர்ந்தது!”

சாகஸ வீரர்களுக்கான சரியான இடம்!

இந்த அகலமான நீர்வீழ்ச்சியே தங்களின் சாகஸத்தைக் காட்ட சரியான இடம் என்று இதை சாகஸ வீரர்கள் தேர்ந்தெடுத்து, தங்கள் சாகஸங்களைக் காட்ட ஆரம்பித்தனர். பிரான்ஸை சேர்ந்த சார்லஸ் ப்ளாண்டின் என்னும் 34 வயதே ஆன இளைஞர் நயாகராவில் 1600 அடி நீளமும் இரண்டு அங்குல குறுக்களவும் உள்ள கயிறை எடுத்து இரு புறமும் இணைக்கும் விதத்தில் கட்டினார். 1859ஆம் ஆண்டில், அதில் நடந்து காண்பித்து உலகையே பிரமிக்க வைத்தார். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்க நான்கு நிமிடங்களில் அவர் நயாகராவை  நடந்து கடக்கவே கூட்டம் ஆரவாரித்தது.  சில நாட்கள் கழித்து இன்னும் அதி சாகஸ செயலாக கண்ணைக் கட்டிக் கொண்டு வேறு அவர் நடந்து காண்பித்தார்.

இதுவரை ஒரு பெண்மணி, பத்து ஆண்கள் ஆக மொத்தம் பதினோரு பேர்கள் இப்படி நயாகராவில் கயிற்றின் மீது (tight rope walk)  நடந்துள்ளனர்.

https://tamilandvedas.files.wordpress.com/2020/07/d1164-nia5.jpg

ஹௌடினியின் சவால்!

உலகின் ஆகப் பெரிய மாஜிக் நிபுணரான ஹௌடினி (தோற்றம் மார்ச் 24, 1874 மறைவு அக்டோபர் 31, 1926) தன்னை நன்கு கட்டிப் போட்டு, சீல் செய்யப்பட்ட பெட்டியில் வைத்து ஆற்றில் தூக்கி எறியப்பட ஒரு சில நிமிடங்களில் மீண்டு வருவார். அவரது சாகஸங்களிலேயே அனைவரையும் பிரமிக்க வைக்கும் சாகஸம் இது.

‘தி மேன் ஃப்ரம் பியாண்ட்’ என்ற படத்தில் நடிப்பதற்காக 16 பேர் அடங்கிய குழுவுடனும் இயக்குநர் பர்டனுடனும் நயாகராவுக்கு 1921 மே மாதம் முதல் வாரத்தில் வந்த ஹௌடினி அருமையான ஒரு காட்சியைப் படமாக்கினார். படகில் போகும் காட்சி அது. ஒரு படகு  நீர்வீழ்ச்சியின் வேகத்தில் சுக்கு நூறானது. இன்னொன்றில் ஹௌடினி நயாகராவில் நீந்திய காட்சி நன்கு படமாக்கப்பட்டது.

அப்போது அவர் தன்னைக் கட்டி சீல் வைக்கப்பட்ட பெட்டியில் வைத்து நயாகராவில் தூக்கி எறியப்பட தான் தப்பிக்கும் மேஜிக்கை செய்யப்போவதாக அறிவித்தார். உலகமே பிரமித்தது. உடனே போலீஸார் அவரை அது போன்ற சாகஸ செயலை செய்யக் கூடாது என்று தடை விதித்தனர்.

படகுக் காட்சி எடுக்கப்பட்ட சில மணி நேரத்திற்கு முன்னர் இன்னொரு அதிசய தற்செயல் ஒற்றுமை நிகழ்வு நடந்தது.  அன்னி எட்ஸன் டெய்லர் என்னும் பெண்மணி தனது 63ஆம் வயதில் காலமானதாக ஒரு செய்தி வந்தது. இந்த சாகஸப் பெண்மணி தான் முதன் முதலாக ஒரு பீப்பாயில் நயாகரா நீர்வீழ்ச்சியில் சென்று உயிரோடு திரும்பியவர்.

இந்தச் செய்திகளை எல்லாம் நயாகரா டூரின் போது தெரிந்து கொள்ளலாம்.

அத்துடன் நாமும் நயாகரா டூரின் போது நான்கு மணி நேர படகுப் பயணத்தை மேற்கொண்டு மெய் சிலிர்க்கலாம்.

முக்கிய விஷயம் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்க உகந்த காலம் ஜூன் முதல் ஆகஸ்ட் முடிய உள்ள கோடைக்காலமே..

நயாகராவில் உள்ள க்ளிப்டன் ஹாலில் ஒரு ஸ்கை வீல் ராட்டினம் உள்ளது. 175 அடி உயரமுள்ள ஸ்கைவீல் ராட்டினத்தில் பத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் அமர்ந்து பத்து நிமிடத்தில் மூன்று சுற்றுக்கள் சுற்றலாம்; நயாகரா பகுதி முழுவதையும் பார்த்து மகிழலாம்.

‘பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்’ என்ற பிரபல ஹாலிவுட் திரைப்படத்தின் சில காட்சிகள் நயாகராவில் படம் பிடிக்கப்பட்டு உலக ரசிகர்களைக் கவர்ந்தது.  

நயாகரா தங்கும் இடங்கள்

பகல் நேர பிரம்மாண்டத்தோடு கூட இரவு நேர வண்ண மய விளக்கு வர்ணஜாலத்தையும் பார்த்து மகிழ்ந்து விட வேண்டும் என்று திட்டமிடுவோர் நயாகராவில் ஒரு நாள் தங்க வேண்டும் அல்லவா? கவலை இல்லை, நயாகராவில் பத்துக்கும் மேற்பட்ட பெரிய தங்கும் விடுதிகள் உள்ளன.

இப்படிப்பட்ட அதி ஆற்றல் வாழ்ந்த நீர் வீழ்ச்சியை சும்மா இருக்க விடலாமா? இந்த நீரை உபயோகித்து கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது நயாகரா தரும் மின்சக்தி 49 லட்சம் கிலோவாட் ஆகும்!

இரண்டே வரிகளில் நயாகரா!

1842ஆம் ஆண்டு நயாகராவிற்கு வந்த உலகின் மிகப் பெரிய எழுத்தாளரான சார்லஸ் டிக்கன்ஸ், “ தேவதைகள் உகுக்கும் கண்ணீரில் என்ன சொர்க்க சத்தியம் மிளிர்கிறதோ” (what heavenly promise glistened  in those angel’s tears) என்று வியந்து  கூறினார்.

நீங்கள் பார்த்த நயாகராவைப் பற்றி இரண்டு வரிகள் சொல்லுங்கள் என்று கேட்டால் சாமானியரும் நூறு வரிகள் சொல்வர்.

மாதிரிக்கு இரண்டு வரிகள்:

அற்புதங்களையே நம்பாதிருந்த நான் உலகில் அற்புதங்கள் உண்டு என்பதை நயாகராவைப் பார்த்தவுடன் உணர்ந்தேன்.

நீங்கள் உயிரோடிருப்பதை நிஜமாகவே உணர நயாகரா தான் சிறந்த இடம்!

****

புத்தக அறிமுகம் – 16

மகான்களின் சரிதம் – பாகம் 1

பொருளடக்கம்

அணிந்துரை

என்னுரை

அத்தியாயங்கள்

1. ஸ்வாமிஜி கிருஷ்ணா!

2. பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி!

3. ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்!

4. குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர்!

5. ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்!

6. ஸ்ரீ அப்பைய தீட்சிதர்

7. ஸ்ரீ நீலகண்ட தக்ஷிதர்

8. திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்!

9. பகவந்நாம போதேந்திரர்

10. ஸ்ரீ சமர்த்த ராமதாஸ்

11. ஸ்ரீ துளஸிதாஸர்!

12. பக்த மீராபாய்

13. ஸ்ரீ ஜெயதேவர்

14. ஸ்ரீ சைதன்ய மஹா ப்ரபு!

15. ஸ்ரீ நாராயண தீர்த்தர்!

16. சேக்கிழார்!

17. ஸ்ரீ குமரகுருபரர்!

18. திரு அருட்பிரகாச வள்ளலார்

அணிந்துரை

ல ஆயிரக்கணக்கான தமிழ் உள்ளங்கள் பெரிதும் ஆவலுடன் ஞானமயம் ஒளிபரப்பில் பார்த்தும், கேட்டும் ரசித்த பாரததேச மகான்களின் சரிதத்தைப் புத்தக வடிவில் அனைவரும் படித்து மகிழும் வகையில் திரு.ச.நாகராஜன் அவர்கள் அளிக்க முன்வந்திருப்பது போற்றுதற்குரியதாகும். அவர் ஒரு பன்முகம் கொண்ட வித்தகர்.

இதழியல் எழுத்தாளர், வானொலி, தொலைக்காட்சி விரிவுரையாளர், நிர்வாக இயல், அறிவியல், இசை மற்றும் சுயமுன்னேற்றக் கட்டுரையாளர், தேசியவாத சிந்தனையாளர்.

இதழியல் எழுத்தாளர், வானொலி, தொலைக்காட்சி விரிவுரையாளர், நிர்வாக இயல், அறிவியல், இசை மற்றும் சுயமுன்னேற்றக் கட்டுரையாளர், தேசியவாத சிந்தனையாளர்.

ஆன்மிகமும், தேசியமும் தன் இரு கண்கள் என பாவித்த தேவர் ஐயாவைப் போல் இவரும் விஞ்ஞானத்தையும், ஆன்மிக நெறியையும் தனது இரு நயனங்களாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறார். “ஜாக் ஆஃப் ஆல் டிரேடு, (ஆல்ஸோ) ஈக்வெலி

மாஸ்டர் ஆஃப் எவ்வெரிதிங்” என்றுதான் இவரைப் பற்றிச் சொல்ல வேண்டும்!

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருத மொழிகளில் புலமைப் பெற்றவர். மொழி மாற்றம் செய்து வெளியான அவரது கட்டுரைகள் கொம்புத் தேனில் தோய்த்து எடுத்தப் பலாச்சுளையைக் கண் மூடி அனுபவித்து ருசிக்கும் ரசனையைத் தருகின்றன, மேன்மேலும் படித்தாலும் திகட்டாமல் சுவைக்கத் தோன்றுகிறது என்பது என்னவோ, உண்மை தான்!

“ஒருவன் முதலில் தன் தாயிடமிருந்து கொஞ்சம், பின்னர் தந்தையிடமிருந்து கொஞ்சம், அடுத்து ஆச்சாரியாரிடமிருந்து கொஞ்சமும் கற்கிறான். ஆனால் அவன் பூரண அறிவைப் பெற நன்கு கற்றறிந்தப் பெரியோர்களின் அனுக்ரகம் வேண்டும்” என்ற (நீலகண்ட தீட்சிதரின்) வாக்குப்படி இந்நூலாசிரியரின் வாழ்க்கை அமைந்திருப்பது தான் அற்புதம். பல மகான்களின் அருளாசியும் கிட்டியிருக்கிறது.

சங்கம் வளர்(ந்த) மதுரையில் வசித்ததும், சுதந்திரப் போராட்டத் தியாகியும், பத்திரிகைத் துறை அனுபவம் வாய்ந்த தன் தகப்பனார் தெய்வத்திரு சந்தானம் அவர்களின் பேராற்றலும் இயல்பாகவே அவரிடம் வேரூன்றி விட்டதை அவரது எழுத்துக்களில் காணலாம். எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் நிபுணர்.

அதை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் மூலம் அறியலாம்.

இனிய வாக்கு எதையும் வெல்ல வல்லது.

“ஹுவே வாசம்” எனும் ஸாமகானம் இனிய சொற்களைப் பேசவும், கேட்கவும் அறிவுறுத்துகிறது. மகான்கள் இதைத்தான் உபதேசிக்கிறார்கள் என்பது இங்குக் கோடிட்டுக் காட்டப்படுகிறது.

குரு வணக்கக் கட்டுரையுடன் தொடங்கி மொத்தம் 18 மகான்களின் மகோன்னத வாழ்க்கைச் சரிதையை எங்கும் தொய்வின்றிச் சுவாரசியமாக எடுத்துச் சொல்லியி ருக்கிறார். தற்போதையச் சூழ்நிலையில் நம் கலாச்சாரம், பாரம்பரியத்தை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வது மிக மிக அவசியமாகிறது.

இப்போது இவையெல்லாம் பள்ளிப் பாடப் புத்தகத்தில் இடம் பெறாத நிலை உள்ளது நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்துகிறது. இத்தொகுப்பைப் படிப்பவர்கள் தங்கள் சந்ததியினருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது அவர்களின் கடமைகளுள் ஒன்றாகும்.

அப்போதுதான் இந்நூலாசிரியரின் எதிர்பார்ப்பும் நிறைவேறும். வருங்காலச் சந்ததியினரின் வாழ்வும் நலம் பெறும்.

துல்யம் கர்ஷந்தி ப்ரதிவீம்
துல்யம் சாஸ்த்ராணி அதீயதே
உன்மஜ்ஜந்தி நிமஜ்ஜந்தி
தைவஸ்யைகஸ்ய சேஷ்டயா”

விவசாயிகள் பலர் ஒரே மாதிரியே பாடுபட்டு நிலத்தை உழுது பயிரிடுகிறார்கள். அதே போல் பலர் மிகச் சிரமப்பட்டுச் சாஸ்திரங்களை நன்கு கற்கிறார்கள். ஆனாலும் சிலர் தங்கள் வாழ்க்கையில் முன்னேறி வெற்றிப் பெறுகின்றனர். மற்றவர்கள் பெரும் தோல்வியையே சந்திக்கிறார்கள். இதுதான் விதியின் விளையாட்டு.

இந்த விதியின் விளையாட்டில் புறம் பார்க்காமல் முன்னேறிக் கொண்டிருக்கிறார் திரு ச.நாகராஜன் அவர்கள்.

அது தொடரட்டும். மகான்கள் அருளிய ஆசிகள் அவருக்கு என்றும் நல்வழி காட்டிடும். அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

வாழ்க தமிழ், வெல்க தமிழ்.

டிசம்பர் 22, 2021

பா.கிருஷ்ணன்
புது டில்லி

*

நூலில் நான் தந்துள்ள என்னுரையில் ஒரு பகுதி இது:-

என்னுரை

லண்டனிலிருந்து வாரந்தோறும் ஒளிபரப்பாகும் ஞானமயத்தில் பங்கு கொள்ளுமாறு லண்டன் திரு சுவாமிநாதன் மற்று சிவஸ்ரீ கல்யாண்ஜி அழைப்பு விடுத்த போது அதை ஏற்றுக் கொண்டு வாரந்தோறும் ஒரு மகானின் சரிதத்தைக் கூறும் பாக்கியம் கிடைத்தது.

அந்த உரைகளில் ஒரு பகுதியே இந்த நூலாக அமைகிறது. ஆகவே திரு சுவாமிநாதன், திரு கல்யாண்ஜி ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்..

.இந்த நூலில் 18 மகான்களின் சரிதத் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.

இந்த நூலுக்கு அணிந்துரை கொடுத்து என்னை கௌரவித்திருப்பவர் பிரபல எழுத்தாளர் திரு டில்லி பா.கண்ணன் அவர்கள்.

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய பல்மொழி வல்லுநரான இவர் வால்சந்த் நகர் கனரகத் தொழிற்சாலை, புனேயிலும் டாடா ஸ்டீல் டின்பிளேட், ஜாம் ஜெட்பூரிலும் உயர் பதவிகளை வகித்துள்ளார். தற்சமயம் ஓய்வு பெற்று புது தில்லியில் வசித்து வருகிறார்.

கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், தீபம், ஞான ஆலயம் உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளில் அருமையான கட்டுரைகளை ஆன்மீகத்தில் தோய்த்து அளித்து வந்தார்; அளித்து வருகிறார். இவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக!.

22-12-21                                                                                           ச.நாகராஜன்
பங்களூர்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: