Post No. 11,163
Date uploaded in London – – 4 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
தொண்டை மண்டல சதகம் பாடல் 30
ச.நாகராஜன்
களப்பாளன் என்னும் செல்வந்தர் தமிழில் வல்லவர். வேளாள குலத்தைச் சேர்ந்த அவர் நெற்குன்றூர் என்னும் தலத்தில் வாழ்ந்து வந்தார்.
திருப்புகலூரில் உறைகின்ற சிவபிரான் மீது அடி மடக்கும், சொல் இன்பமும், இலக்கண இன்பமும் பொருந்தும் படி அற்புதமான ஒரு கலித்துறை அந்தாதியை (நூறு பாடல்கள் கொண்டது அந்தாதி) அவர் பாடினார்.
‘பூக்கமலம்’ என்ற சொல்லை முதலாகக் கொண்டு அமைந்தது அந்த அந்தாதி.
பூக்கமலத்து விழிவளர்வானென்றும் போற்றியவூர்
மாக்கமலத்து மகிழ்கின்றவூர்மது வானிறைந்த
தேக்கமலத்து வழியேபரக்குந் திருப்புகலூர்
நோக்கமலத்துயர் சோதிநெஞ்சே நம்மை நோக்குதற்கே
என்ற அற்புதமான பாடலே அது.
அவையடக்கமாக அவர் பாடிய பாடல் இது:
வளப்பாடிலாத வெருக்குமிதழி மலருமன்ப
ருளப்பாடுறைபுக லூரருக்காதலி னோதிமிக்க்கோர்
தளப்பாடிது தமிழ்க் கென்னிலுஞ் சாற்றுவன் சந்திரன் சொற் களப்பாளனெற்குன்ற வாணனந்தாதிக் கவித்துறையே
இந்தப் பாடல் மூலம் அவர் அந்தாதி பாடியது தெரிய வருகிறது.
படுபருந்துஞ் சூர்ப்பேயும் பல் விலங்கும் நாயும்
கொடியுங் கழுகுமிவை கூடி – வடிவுடைய
கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு
போமாறு போமாறு போம்
என்ற பாடல் மூலம் இவனது வெற்றித் திறத்தை அறிய முடிகிறது.
இப்படிப்பட்ட களப்பாளன் வாழ்ந்த மண்டலம் தொண்டை மண்டலமே என தொண்டைமண்டல சதகம் தனது 30 வது பாடலில் பாடி அவனைப் புகழ்ந்து கூறுகிறது.
பாடல் வருமாறு:-
கிளப்பார் கிளப்ப வடிமடக்காகக் கெழுமிய சொல்
லளப்பா மதுரத் துடன்பூக் கமலமென் றாய்ந்தெடுத்த
களப்பாள னெற்குன்ற வாணனந்தாதிக் கலித்துறையே
வளப்பார்புகழை வளர்ப்பிக்கு மாற்றொண்டை மண்டலமே
பாடலின் பொருள் : நெற்குன்றூரில் வாழ்கின்ற களப்பாளன் என்னும்
வேளாண் தலைமகன் – செல்வத்தாலும் வெற்றியாலும் அன்றிக் கல்வியாலும் கூடச் சிறந்தோன் என்பதை – பிறிது ஒன்றையும் வியந்து சொல்லாத புலவர்களும் வியந்து பாடி பாராட்டும் படி – திருப்புகலூர் என்னும் திருத்தலத்தில் உறைகின்ற சிவபிரான் மேல்
அடி மடக்கும் சொல் இன்பமும் இலக்கண இன்பமும் பொருந்த, முதற் பாடலில் முதலிலே “பூக்கமலம்” என்னும் சொல்லை மங்கலம் முதலியவற்ற்கு இயையும் பாடி ஆராய்ந்து எடுத்து முடித்த கலித்துறை அந்தாதியே எடுத்துக் காட்டியது. இந்த எடுத்துக்காட்டு வளப்பம் பொருந்திய பூவுலகின் கண் தொண்டை மண்டல வேளாண் மக்களது புகழை வளரச் செய்ய வல்லது!
தொண்டை மண்டலத்தில் வாழும் வேளாளர் செல்வச் சிறப்பு, கொடைச் சிறப்பு, வெற்றிச் சிறப்பு ஆகியவற்றுடன் தமிழில் அழகுற நூல்கள் இயற்றும் தமிழ்ச் சிறப்பையும் கொண்டவர்கள் என்பதை இந்தப் பாடல் அழகுற விளக்குகிறது.
***
புத்தக அறிமுகம் – 18
புராணத் துளிகள் – பாகம் 2
பொருளடக்கம்
முதல் பகுதி
புராணம் பற்றிய ஒரு நூல் : புராணக் களஞ்சியம்
18 புராணங்களையும் எளிதில் நினைவில் கொள்ள ஒரு ஸ்லோகம்
இரண்டாம் பகுதி
சுகம் எது, துக்கம் எது?சத்ரு எவர், நண்பர் எவர்?
வியாஸரின் ஆசிரமம் இருக்கும் இடம்!
ஸ்ரீமத் பாகவதத்தின் இன்னொரு பெயர்!
ஒருவர் அர்க்யம் விடுவது எதற்காக?
அம்பிகைக்குப் பிரியமான விரதங்கள் எவை?
கிருஷ்ணர் வில்லை முறித்த சம்பவம்!
காயத்ரி ஸ்தோத்ரம் கூறுவதால் ஏற்படும் பயன்
மீன் போல பார்வையாலேயே ரக்ஷிக்கும் தேவி
சரஸ்வதி ஸ்தோத்ரம் / ஸ்துதி பற்றிய ஒரு தொகுப்பு
வைரத்தைப் பரிசோதித்த பின்னரே அணிய வேண்டும்?
சுகருக்கு ஜனக ராஜன் கூறிய ரகசியம்!
மெதுவாகச் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!
அஹிம்சையே தர்மங்களுக்குள் உயர்ந்த தர்மம்
சிவனைத் துதிக்கும் பாக்கியம் ஏன் ஏற்படுகிறது?
தேவர்களை சந்தோஷம் அடையச் செய்பவை!
நாராயணன் என்று பெயர் வரக் காரணம்!
தூய்மை (சௌசம்) எதனால் ஏற்படும்?
நான்கை வைத்து ஒரு மனிதனை எடை போடு!
மேலே உள்ள லோகங்கள் ஏழு! கீழே உள்ள லோகங்கள் ஏழு!!
*
அணிந்துரை
என்னுடைய அருமை நண்பர் சந்தானம் நாகராஜன் அவர்கள் இறை உணர்வும் நாட்டுப்பற்றும் தன் இரண்டு கண்களாகக் கொண்டவர்.அன்னை மீனாட்சியின் அருளாசியுடன் மதுரை மாநகரில் தனது இளமை பிராயத்தைக் கழித்தவர். இவருடைய தந்தையார் சந்தானம் அவர்கள் தினமணி ஆசிரியராக பணியாற்றி தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து விளங்கிய பத்திரிகையாளர். சுதந்திர போராட்டக் களத்தில் திரு ஏ.என்.சிவராமனுடன் இணைந்து போராடிய தேசபக்தர். அவரே இவருக்கு வழிகாட்டி! அவருடன் நற்பணி மன்றங்களில் பணியாற்றி தேசியத்துக்கும் தெய்வீகத்துக்கும் அடியேனும் இணைந்து பயணித்த காலங்கள் இன்றும் பசுமையாக எனது எண்ணத்தில் நிழலாடுகின்றன.
சந்தானம் நாகராஜன் சிறந்த எழுத்தாளரும் பேச்சாளரும் ஆவார்.
“நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல் இமைப்போதும் சோராதிருத்தல்” என்ற மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளை சிந்தனையில் கொண்டு இன்றுவரை சோர்வின்றி தேசியத்துக்கும் தெய்வீகத்துக்கும் அரும்பணியாற்றி வருகிறார்.
இதுவரை அவர் ஆன்மிகம் தேசியம் அறிவியல் முதலான பலதுறைகளில் உன்னதமான கருத்துக்களுடன் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.” பாக்யா” இதழில் பல்வேறு கட்டுரைகள் எழுதி விழிப்புணர்வுக்கு வித்திட்டிருக்கிறார்.
பாரதியின் ஞானப்பாடல் வரிகளான “ஊருக்கு உழைத்திடல் யோகம்! நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்! போருக்கு நின்றிடும்போதும் உளம் பொங்கலில்லாத அமைதி மெய்ஞானம்!” என்ற கவிதை வரிகளே இவரை “புராணத்துளிகள்” படைக்க அடித்தளமாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்
புராணங்கள் என்பவை வேதங்களில் உள்ள கருத்துகளை தெளிவாக கூறுவதாகும். புராணம் என்ற சொல்லிற்கு பழமை வாய்ந்தது என்று பொருள். நெடுங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த வேத உபநிடதங்கள் வியாச மகரிஷியால் வகுக்கப்பட்டன. இதன் அடிப்படையில்தான் இதிஹாச புராணங்கள் மலர்ந்தன. இவற்றில் வேதவியாசரே தொகுத்த பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
“சநாதன தர்மம்” என்ற வேத சாகரத்திலிருந்து பேரலையாக எழுந்த இதிகாச புராணங்களின் ஆன்மிக அமுதத்தின் திவலைகளை எளிய நடையில் இன்றைய இளைய சமுதாயத்துக்கு புரியும் படியாக தொகுத்து எழுதியுள்ளார் எனது நண்பர் சந்தானம் நகராஜன் அவர்கள்.
புராணம் என்றால் தொன்மையானது. புரா, நவம் என்ற இரு சொற்களின் கலவையே புராணம். புரா என்றால் தொன்மை, நவம் என்றால் புதுமை. அதாவது தொன்மையில் புதுமை என்பர் ஆய்வாளர்கள்.அந்த வகையில் தொன்மையான சநாதன தர்மத்தை எளிமையாக புரிந்துகொள்ள புதுமையான புராணங்களை இயற்றினர் மகரிஷிகள்.
அறம் பொருள் இன்பம் வீடு என்ற நால்வகை புருஷார்த்தங்களை விளக்கி இந்த மாநிலத்து மாந்தரெல்லாம் சநாதன தர்மத்தின் வழியில் வாழ்ந்து நற்பேறு அடைய வழிகாட்டும் கலங்கரை விளக்கமே புராணக் களஞ்சியங்கள்.
ஏற்கனவே புராணத்துளிகள் முதல்பாகம் பதிவு செய்து மகத்தான பணியினை செய்த நண்பர் நாகராஜன் இப்போது இரண்டாம் பாகம் இயற்றியுள்ளார்.
அது இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது.
முதல் பகுதியில் “புராண மஹிமை”யினை ஸ்வாமி விவேகானந்தரின் சொற்பொழிவு மூலம் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். பதினெண்புராணங்களை விளக்கியும் அவைகளை நினைவில் கொள்ள ஒரு ஸ்லோகத்தையும் எழுதியுள்ளதும் அருமை.
அடுத்த பகுதியில் “புராணக் களஞ்சியம்” என்ற தலைப்பில் தனது இரண்டாவது பாகத்தினை பதிவிட்டுள்ளார். இந்த பாகத்திலும் உன்னதமான பாகவத புராணம் முதலானவைகளில் உள்ள புருஷார்த்த விஷயங்களை தெளிவாக அழகாக வரிசைப்படுத்தி விளக்குகிறார். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகளையும் பரம்பொருளை அடைய நாம் செய்ய வேண்டிய கிரியைகளையும் செவ்வனே எடுத்துரைக்கிறார். விஞ்ஞான ரீதியாகவும் புராணங்களில் உள்ள கால நிர்ணயம் உள்ளிட்ட பஞ்சாங்க விஷயங்களையும் விவரமாக விளக்குவது அருமை!
ஞான சாகரத்தில் ஆழ்ந்து அவர் அனுபவித்து எடுத்த நல்முத்துக்களை நமக்கு வரிசைப் படுத்தி அழகிய அணிகலனாக பதிவிட்டுள்ளார். இவருக்கு இவ்வளவு திறமையும் ஊக்கமும் விளைந்துள்ளது பகவத் பாகவத கடாட்சமே! மொத்தத்தில் “புராணத்துளிகள்” இரண்டாம் பாகம் ஒரு திரண்ட கருத்துப் பொக்கிஷமே!
நண்பர் சந்தானம் நாகராஜனின் நற்பணி பாரத சமுதாயத்துக்கு மட்டுமில்லாமல் உலகளாவிய சநாதனதர்மத்துக்கும் பரவட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் ஆச்சார்யரையும் வேண்டி வணங்கி அவரை பாராட்டி மகிழ்கிறேன்.
அடியேன்
என் ஸ்ரீனிவாசன் BSc FCA
ஆடிட்டர் மதுரை 625014
29-12-2021
*
நூலில் நான் தந்துள்ள என்னுரையில் ஒரு பகுதி இது:-
என்னுரை
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் புராணத் துளிகள் – இரண்டாம் பாகம் மலர்கிறது.
பதினெட்டு புராணங்களிலும் உள்ள லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் உள்ள அறிவுப் பொக்கிஷத்தைப் பரப்பும் பணி மிகவும் குறைந்து விட்ட இந்த நாட்களில் ஒரு சில கருத்துக்களையேனும் தொகுத்துத் தரும் பாக்கியம் இறைவனின் அருளாலேயே ஏற்பட்டுள்ளது.
இந்த நூலுக்கு நல்லதொரு அணிந்துரை வழங்கி என்னை கௌரவித்திருக்கும் ஆடிட்டர் திரு என். ஸ்ரீனிவாசன் அவர்களுடன். ஐம்பது ஆண்டுகளாக தெய்வீகப் பணியிலும் தேசீயப் பணியிலும் இணைந்து பணியாற்றியதால் இவரைப் பற்றி நன்கு அறிவேன். மிகச் சிறந்த ஆடிட்டரான இவர் ஏராளமான பெரிய நிறுவனங்களுக்கு ஆடிட்டர். நிதி ஆலோசகர். தனிப்பட்டவர்களின் வாழ்க்கை வளம் பெற வழி கோலியவர். அத்துடன் மட்டும் நின்று விடாமல் சமூகப் பணியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத்
தமியர் உண்டலரும் இலரே; முனிவிலர்
துஞ்சலும் இலர்: பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்” பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலை
என்ற கடலுள் மாய்ந்த இளம் பெரும் வழுதி கூறிய இலக்கணப்படி தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்பவர். இளைஞர் நற்பணி மன்றம் என்ற ஒரு அரும் மன்றத்தின் தலைவராக இருந்து பாரதியார் பாடல்கள் மூலமாக இளைஞர்களிடையே தேச பக்தியை ஊட்டியவர். வேதாந்த தேசிகர் பக்த சபை, தாம்ப்ராஸ் உள்ளிட்ட முக்கிய ஆன்மீக சபைகளில் பொறுப்பு வகிப்பதோடு ஆன்மீக இயக்கங்களில் முன்னின்று பொறுப்பேற்று வழி நடத்தியவர், வழி நடத்துபவர்.
அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த நூலை அழகிய முறையில் மின்னணு நூலாகத் தயாரிக்க முன் வந்த புஸ்தகா டிஜிடல் மீடியா பிரைவேட் லிமிடட் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ்அவர்களுக்கும் மற்றும் இந்தப் புனிதமான பணியில் ஈடுபட்டு உதவியாற்றும் அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
ச.நாகராஜன்
பங்களூர்
மின்னஞ்சல் முகவரி : snagarajans@gmail.com
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**
Tags- களப்பாளன், அந்தாதி,