
Post No. 11,196
Date uploaded in London – – 15 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
முதல் ஓசை நாளிதழில் வெளி வந்த கட்டுரை!
விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 2
ச.நாகராஜன்
விண்யுகத்தின் ஆரம்பம்
1957ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி விண்வெளி யுகம் ஆரம்பமானது. அன்று தான் சோவியத் யூனியனின் ஸ்புட்னிக் முதன் முதலாக விண்ணில் பறந்தது. 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதிம் ரஷிய வீரரான யூரி ககாரின் விண்வெளியில் பூமியைச் சுற்றி வலம் வந்து முதல் விண்வெளி வீர்ர் என்னும் மாபெரும் புகழைப் பெற்றார். இந்த தேதிக்குப் பின்னர் உலகில் பிறந்த அனைவரும் விண்வெளி யுகத்தைச் சேர்ந்தவர்கள் என பொதுவாக அழைக்கப்படுகின்றனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா தனது ஆராய்ச்சிகளைத் தொடரவே ஏராளமான கலங்கள் விண்ணில் செல்ல ஆரம்பித்தன. இதனால் விண்வெளி பற்றிய திரைப்படங்களுக்கு ஒரு புதுப் பொலிவு ஏற்பட்டது. விண்வெளியை மையமாகக் கொண்டு ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களும் உருவாக ஆரம்பித்தன. அனைத்திற்கும் ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக இருந்தது விண்வெளிச்சாலை படங்களில் மேலும் சிலவற்றைப் பார்ப்போம்:
மிஸைல் டு தி மூன் (Missile to the Moon) :- 1958ஆம் ஆண்டு வெளியான படம் இது. கேட் உமன் ஆஃப் தி மூன் படம் அடைந்த வெற்றியைப் பார்த்து அதே படத்தின் ரீ-மேக்காக உருவான படம் இது.
நியூட் ஆன் தி மூன் (Nude on the Moon):- 1960ஆம் ஆண்டு வெளிவந்த படம் இது. ராக்கெட் விஞ்ஞானி ஒருவர் விண்கலத்தை அமைத்து சந்திரனை நோக்கி நண்பருடன் புறப்படுகிறார். சந்திரனில் இயற்கையாக வாழும் ஆதிவாசிகளைக் காண்கிறார். இதைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களை விவரிக்கிறது படம்.
கான்க்விஸ்டேடர் டி லா ல்யூனா (Conquistador de la Luna) :- 1960 ஆம் ஆண்டு மெக்ஸிகோவிலிருந்து வெளிவந்த காமடி படம் இது. ராக்கெட் விஞ்ஞானி ஒருவரின் ராக்கெட்டில் தப்பான விசையை ஒரு எலக்ட்ரீஷியன் அமுக்கி விடுகிறான். ராக்கெட் சந்திரனை நோக்கிப் பறக்கிறது. அங்கு அவன் விஞ்ஞானியின் மகள் மீது காதல் கொள்ள காதலர்கள் சந்திரனில் உள்ள ஆதிவாசிகளைச் சந்தித்து ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டு பின்னர் தப்பி வருகின்றனர்.
12 டு தி மூன் (12 to the Moon) :- இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஆர்கனைசேஷனிலிருந்து (ISO) ஒரு குழு சந்திரனை நோக்கிப் பறக்கிறது. குழுவின் நோக்கம் சந்திரன் மனித குலத்தின் பொதுவான சொத்து என்பதை நிரூபிப்பதே. ஆனால் அங்கு கிடைக்கும் வரவேற்பு பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகிறது. இந்தப் படம் ஃபர்ஸ்ட் ஸ்பேஸ்ஷிப் ஆன் வீனஸ் என்ற படத்தை ஒத்திருக்கும் ஒரு படம்.
டாக்டர் நோ (Dr No):- 1962ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம். உலகளாவிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஊர்ஸுலா ஆண்ட்ரெஸ் பிகினி உடையில் கடல் தேவதையாகத் தோன்றி ரசிகர்களைக் கிறக்கத்தில் ஆழ்த்தி கிளிகிளுப்பூட்டினார். அமெரிக்க விண்வெளித் திட்டத்தை நாசமாக்க முயலும் வில்லன் ஒருவனிடமிருந்து திட்டத்தைக் காப்பாற்றுவது தான் கதை. புதன் கிரகத்திற்கு அமெரிக்க விண்கலம் ஏவுவதில் நடுவே புகுந்து வில்லன் சதி செய்கிறான். ஜேம்ஸ் பாண்ட் ஜமைக்காவிலிருந்து வெற்றிகரமாக நியூக்ளியர் ரீஆக்டரைத் தகர்த்து சதியை முறியடிக்கிறார்.
மூன் பைலட் (Moon Pilot):- 1962ஆம் ஆண்டில் வெளியான ஒரு டிஸ்னி கதை இது. ஒரு இளம் பெண்ணால் தூண்டப்பட்டு விண்வெளி வீர்ர் ஒருவர் சந்திரனுக்கு அப்பால் சென்று விட்டதைச் சித்தரிக்கும் கதை இது.
மவுஸ் ஆன் தி மூன் (Mouse on the Moon):- 1963ஆம் ஆண்டு வெளியான படம் இது. பன்னாட்டு அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில். ஒரு ஐரோப்பிய நாடு, வல்லரசுகளை விஞ்சி ஒரு ரகசிய பார்முலாவை வைத்து ஒரு ராக்கெட்டைத் தயாரித்து சந்திரனுக்கு அனுப்புகிறது இதை மையமாக வைத்துக் கதை சுழல்கிறது.
ஃபர்ஸ்ட் மென் இன் தி மூன் (First Men in the Moon):- பிரபல ஆங்கில நாவலாசிரியரான ஹெச்.ஜி.வெல்ஸின் நாவலை வைத்து எடுக்கப்பட்ட பிரமாதமான படம் இது.1964ஆம் ஆண்டு வெளிவந்து சக்கை போடு போட்டது. ஸ்பெஷல் எபெக்ட் மன்னன் ரே ஹாரிஹ்யூஸன் தன் திறமையை இதில் காட்டியுள்ளார். இதே படம் மீண்டும் 2008இல் உருவாக்கப்பட்டது.
யூ ஒன்லி லிவ் ட்வைஸ் (You Only Live Twice) :- இன்னொரு பிரபலமான ஜேம்ஸ் பாண்ட் படம் இது. 1967ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஜெமினி விண்கலத்தை விண்ணிலேயே கடத்தும் படம் இது. பின்னாலேயே பறக்கும் இன்னொரு விண்கலம் முன்னால் இருந்த விண்கலத்தில் இருந்தவற்றை அப்படியே கபளீகரம் செய்கிறது. அதில் விண்வெளியில் நடக்கும் விண்வெளி வீர்ர் அப்படியே விண்வெளியோடு அனுப்பப்பட்டு கொல்லப்படுகிறார். ஜேம்ஸ் பாண்ட் தனது கமாண்டோக்களுடன் அங்கு சென்று சதியை முறியடித்து உலகைக் காப்பாற்றுகிறார். ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கே உரித்தான அனைத்து மசாலாக்களும் அடங்கிய படம் இது என்பதால் இன்றும் கூட ரசிகர்கள் இதை விரும்பிப் பார்க்கின்றனர்.
கவுண்ட்டவுன் (Countdown):- 1967ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ‘தி பில்க்ரிம் ப்ராஜெக்ட்’ என்பதை அடியொட்டி எடுக்கப்பட்ட படம். “முதன் முறையாகப் பறக்கப் போகிறீர்கள் என்றால் திரும்பி வர முடியாத ஒரு வழிப் பயணத்தை மேற்கொண்டு சந்திரனுக்குச் செல்ல நீங்கள் விரும்புவீர்களா?” என்ற கேள்வியை மையமாக வைக்கிறது இந்தப் படம்.
******************* (தொடரும்)
புத்தக அறிமுகம் – 29
முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள்!
பொருளடக்கம்
டிம் ப்ரவுன்ஸன் : ஒரு அறிமுகம்
அத்தியாயங்கள்
2. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கேள்விகள் இரண்டு!
3. இந்த உலகில் உங்களுக்கு மிகவும்
4. ஒப்பிட்டுப்பார்ப்பது திருப்தியை அளிக்காது
5. நீங்கள் திறந்த மனதுடன் இருப்பவரா?
7. விமரிசனம் இல்லை, பின்னூட்டம் தான் எதற்கும் உண்டு!
8. உங்களால் அதைச் செய்ய முடியும், ஆனால் நீங்கள் அதை அறியத் தான் இல்லை!
9. மாற்றங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும்!
10. அடுத்தவரால் முடியும் என்றால் உங்களாலும் முடியும்!
11. நீங்கள் புரிந்து கொண்டீர்களா?
12. நீங்கள் கற்பனை செய்து கொண்டீர்கள் என்றால், அதை அடைந்து விடலாம்!
14. சந்தோஷத்தைத் துரத்திக் கொண்டு ஓடாதீர்கள்!
15. உங்கள் தலைவிதியை நிர்ணயிப்பது எப்படி?
17. கற்க வேண்டியதைக் கற்று முன்னேறுங்கள்!
வாழ்த்துரை
இணையதளத்தில் இடையறாது உலவி வரும் எனக்கு ஒரு நாள் ‘Don’t Ask Stupid Questions’ என்ற நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தலைப்பும் என்னைக் கவரந்தது. அதில் கூறியுள்ள கருத்துக்களும் நடையும் கூட அருமையாக இருந்தது,ஆரோக்கியம் பற்றிய செய்திகளையும் சுய முன்னேற்றம் பற்றிய கருத்துக்களையும் கவனித்து வரும் எனக்கு இந்த நூலின் கருத்துக்கள் மிகவும் பிடித்திருக்கவே இதைத் தமிழில் ஹெல்த்கேர் வாசகர்களுக்கு மொழிபெயர்த்துத் தர வேண்டும் என்ற ஆர்வம் உந்தியது.உடனே இதை எழுதிய டிம் ப்ரவுன்ஸன் (Tim Brownson) அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அவர் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான வழிகளைக் கூறுவதோடு கற்றுத் தரும் ஒரு பயிற்சியாளரும் கூட. அவர் உடனே தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து தமிழாக்கம் செய்து பிரசுரிக்க ஒப்புதலையும் தந்தார்.
இதைத் தமிழாக்கம் செய்ய அருமையான, நன்கு தமிழாக்கம் செய்யக் கூடிய ஒரு எழுத்தாளர் வேண்டுமே! உடனே என் மனதில் திரு சந்தானம் நாகராஜன் ஐயா அவர்கள் தான் தோன்றினார்.
வாழ்க்கையில் முன்னேற விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த நூல் உதவும் என்பதில் ஐயமில்லை. அவரது மொழியாக்கமும் சரி, கட்டுரைப் படைப்புகளும் சரி தனியாக அமைந்துள்ள ஒரு நடையில் இருக்கும். அவரை அணுகிய போது அவர் ஒப்புதல் தர, இந்தத் தொடர் 2015இல் எனது ஹெல்த்கேர் மாத இதழில் வெளிவரத் தொடங்கியது.
ஆயிரக்கணக்கான வாசகர்கள் இதனால் பயன் பெற்றனர். திரு டிம் ப்ரவுன்ஸனுக்கும் திரு சந்தானம் நாகராஜன் அவர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.
நூலைப் படிக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
திருநெல்வேலி
26-1-2022
R.C. ராஜா
ஆசிரியர், ஹெல்த்கேர்
*
நூலில் நான் வழங்கிய என்னுரை இது :-
என்னுரை
‘முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள்’ என்ற இந்த நூல் திரு டிம் ப்ரவுன்ஸன் (Tim Brownson) அவர்கள் எழுதிய ‘Don’t Ask Stupid Questions’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கச் சுருக்கம்.
திருநெல்வேலியிலிருந்து மாதம் தோறும் வெளிவரும் தமிழ் இதழான ஹெல்த்கேர் பத்திரிகை ஆரோக்கியம் பற்றிய அபூர்வமான, தேவையான கருத்துக்களையும் அறிவுரைகளையும் செய்திகளையும் தாங்கி வரும் இதழ்.
இதன் ஆசிரியர் R.C. ராஜா சுறுசுறுப்பு மிக்க, சமூக ஆர்வம் கொண்ட ஒரு இளைஞர்.
பத்திரிகை நடத்துவதும், அதை விநியோகித்து வரவுக்கும் செலவுக்கும் ஈடு கட்டுவதுமே ஒரு அபூர்வமான விஷயம் என்ற நிலை இருக்கும் இந்த நாளில் 2008இல் ஆரம்பித்து கடந்த 13 ஆண்டுகளாக மாதந்தோறும் இந்த இதழை ஒரு தவம் செய்வது போல அவர் உருவாக்கி வெளிக் கொணர்கிறார்.
இதற்கான உந்துகோல் சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள அக்கறையே.
ஒரு சமூகம் உயிர்த்துடிப்புடன் இயங்கி பண்பாட்டை வழிவழியாக அடுத்த தலைமுறைகளுக்குத் தர வேண்டும் எனில் அந்த சமூகம் சார்ந்த மக்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் பண்பாட்டுடனும் இருத்தல் அவசியம்.
இதை உறுதிப்படுத்தி அனைவரும் ஆரோக்கியம் பெற உதவும் வகையில் ஹெல்த்கேர் இதழில் ஆரோக்கியம், ஆன்மீகம், சுயமுன்னேற்றம் ஆகியவற்றை மேம்படுத்தும் கட்டுரைகள் மட்டுமே வெளியாகும். இது வியக்க வைக்கும் ஒரு சாதனை.
இவருக்குப் பலரும் வாழ்த்துரைகளும் விருதுகளும் வழங்குவதில் வியப்பில்லை.
சென்னயில் நடந்த பெரும் விழாவில் இவருக்கு 1-1- 2012ஆம் ஆண்டு மன்னை ஸ்ரீ பார்த்தசாரதி டிரஸ்ட் சார்பில் ‘மருத்துவ இதழியல் சாரதி’ என்னும் விருது வழங்கப்பட்டது.இவர் கிராபிக்ஸ் வடிவமைப்பில் வல்லுநர். ஆன்மீகத்தில் திளைப்பவர்.
இந்த நூலைப் படைத்ததோடு மட்டுமின்றி இதைத் தமிழாக்கம் செய்ய அனுமதி அளித்த சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் திரு டிம் ப்ரவுன்ஸன் அவர்களுக்கு எனது நன்றி
இந்த நூல் உருவாகக் காரணமாக அமையும் திரு ராஜா அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக!
தொடராக வெளிவந்த போது இதைப் படித்து பேராதரவு தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி.
வாழ்வில் முன்னேற்றம் அடைய விரும்பும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காமல் நல்ல வினாக்களை எழுப்ப விரும்பும் தமிழ் நெஞ்சங்களே நூலைப் படிக்க வாருங்கள் என அழைக்கிறேன். நன்றி.
பங்களூர்
26-1-2022
ச.நாகராஜன்
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852